மகனை இழந்த வருத்தமும் மறைந்தது

Print Friendly, PDF & Email

கட்டாய இந்தி ஒழிந்தது என் களிப்புக்களவில்லை

வீர நடராஜன் தந்தையார் விண்ணப்பம்


இந்தி எதிர்ப்புப் போரில் சிறை சென்று உயிர் நீத்த தோழர் நடராசன் தந்தையார் தோழர் கோ.லட்சுமணன் பின்வருமாறு எழுதுகிறார்.


திராவிட நாட்டின் தனிப்பெரும் செல்வர்காள்! திராவிட தனிமொழியாம் தமிழைக் கெடுத்து நமது தாய்நாட்டில் ஆதிக்கம் செலுத்த ஆரியர்களால் சூழ்ச்சி செய்து சுமத்தின இந்தியெனும் வடநாட்டு மொழியை தாய்நாட்டின் நலங்கருதி எதிர்த்தொழிக்க எழுந்த திராவிடப் பெரும் போரில் கலந்து உழைக்கப் போவதாக எனது செல்வன் நடராசன் என்னிடம் கேட்டபோது, நான் மன மகிழ்ந்து ஒத்துக்கொண்டேன். அப்பெரும் போர்ப்புயலில் எனது மகன் 15-01-1939இல் மாண்டான் என்ற செய்தி கேட்டு மனம் நொந்து மதி மயங்கி வாழ்ந்து வந்தேன். அந்த துக்கச்செய்திக்குப் பிறகு ஓராண்டுக்கு மேற்சென்றன. அதன் பிறகு தாய்நாட்டில் பல மாறுதல்கள் கண்டேன். எனது மனம் மட்டும்; ஆறுதலடையவில்லை.


02–02-1940 பத்திரிகைச் செய்தியைப் பார்த்தும் நான் எனது வாழ்நாளில் அடைய முடியாததும் அடைந்திராததுமான மகிழ்ச்சியுற்றேன். சர்க்காரின் பிடிவாதத்தை தகர்த்து கட்டாய இந்தியை ஒழித்தது எனது மகனும், அவனைப் போன்ற ஆயிரக்கணக்கான வாலிபர்களும் செய்த தியாகம் அல்லவா என்பதை நினைத்தபோது நான் அடைந்த களிப்பை என்னென்பேன். தெய்வத்தால் ஆகாதெனினும் “முயற்சி தம் மெய்வருத்தக்கூலி தரும்” என்பதற்கேற்ப நமது திராவிட மக்கள் தாய் நாட்டிற்காக வெற்றி காணும் வரை உழைத்து வெற்றி கண்டு மகிழ்வதற்கு கட்டாய இந்தி நுழைவு, தமிழ் அறப்போர், திராவிடர் சிறைபுகல், நடராசன் – தாலமுத்து மரணம், பெரியார் கர்ஜனை, கட்டாய இந்தி ரத்து முதலிய சரித்திர சம்பந்தமான உண்மைகளை மகிழ்ச்சியோடு எடுத்துக்காட்டுகிறேன். நாம் தொடுத்த போராட்டம் முடிந்துவிட்டது. இனி அதில் நுழையவேண்டியதில்லை, என்றிருக்க வேண்டாம். இனியும் போர் இருக்கிறது. அவைகளிலும் தங்களது கட்டுப்பாடும் உழைப்பும் உதவியும் தந்து திராவிடர்களின் வெற்றிக் கொடியை நாட்ட வேணுமாய்க் கேட்டுக்கொள்ளுகிறேன். திராவிடம் வாழ்க! ஆரியம் வீழ்க!


இங்ஙனம் கோ.லட்சுமணன்


குடிஅரசு – செய்தித்துணுக்கு – 03.03.1940

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *