1940-41ஆம் வருஷத்திய சென்னை மாகாண சர்க்காரின் வரவு-செலவு திட்டம் வெளியாய்விட்டது. இந்த வரவு – செலவு திட்டத்தைப் பார்க்கும் யாவரும் மாமூல் பிரகாரம் தயார் செய்யப்பட்ட திட்டமாக இருக்கிறதே தவிர புதிதாக எத்தகைய நல்ல அம்சமும் அதில் இருப்பதாகக் காணமாட்டார்கள் என்பது நிச்சயம். மேலும் இவ்வரவு – செலவு திட்டத்தைப் பார்த்தால் நாட்டிலே இருந்து வரும் கிளர்ச்சிக்கு ஏதாவது பரிகாரம் அளிக்க வேண்டும் என்ற ஒரு எண்ணத்தின் மீது தயாரிக்கப்பட்டிருக்கிறதேயொழிய உருவான திட்டம் யாதும் சேர்க்கப்படவில்லையென்பதும் நன்கு விளங்கும். யுத்தத்தின் காரணமாக வரியை உயர்த்தும் சர்க்கார், மக்களுக்கு வருமானம் கிடைக்க வழி செய்வதாக இத்திட்டத்திலிருந்து ஒன்றும் விளங்கவில்லை. யுத்தத்தின் காரணமாக வாழ்க்கைச் செலவு உயர்ந்துகொண்டு வருகையில் புது வருவாய்க்கு ஏதாவது திட்டம் வகுத்திருப்பதாகத் தெரியவில்லை. இந்த நிலையிலே நாடு போய்க்கொண்டிருந்தால், சர்க்காரும் யுத்தம் முடியும்வரை எந்தவிதமான வருவாய் வரும் திட்டமும் வகுக்காமலிருந்தால், ஏற்கனவே வறுமையில் ஆழந்திருக்கும் இந்நாடும் இனியும் கேவல நிலைக்கு ஆளாகும் என்பதில் சிறிதும் சந்தேகமில்லை. எனவே, நாட்டின் சேமத்தில் சர்க்காருக்கு கவலையிருக்குமேயானால் இம்மாகாணத்தில் வருவாயை உயர்த்தும் சாதனங்களை ஏற்படுத்த முன்வர வேண்டும். அதற்கான திட்டங்களை வகுக்க வேண்டும் என்பதே நமது ஆசை. அடுத்தபடியாக மதுவிலக்கு திட்டத்தில் சர்க்காருக்கு நம்பிக்கையில்லையென்பது இத்திட்டத்திலிருந்து நன்கு தெரிகிறது. அப்படியிருக்க மதுவிலக்கு சட்டத்தின் பெயரைச் சொல்லி மாஜி காங்கிரஸ் சர்க்கார் விதித்த விற்பனைவரி, புகையிலை வரி, பெட்ரோல் வரி, மின்சார வரி, தமாஷா வரி ஆகிய வரிகளை ரத்து செய்யாமல், விற்பனை வரியை மட்டும் அரை சதவிகிதத்திலிருந்து கால் சதவிகிதமாக குறைத்திருப்பது எப்படி பொருந்தக் கூடியது என்பது நமக்கு விளங்கவில்லை. ஆகவே, நியாயமில்லாததும் அவசியமில்லாததுமான வரிகளை சர்க்கார் விதிக்கும் செயலை எதிர்த்துக் கிளர்ச்சி செய்து போர் துவக்க 10-03-1940 ஆம் தேதியை பெரியார் ஈ.வெ.ரா. குறிப்பிட்டு வெளியிட்டிருந்த அறிக்கையை ‘விடுதலை’ மூலமாக வாசகர்கள் அறிந்திருக்கக் கூடும் என நம்புகின்றோம். அந்தப் புகையிலை வரிக் கொடுமையை ஒழிப்பதற்கு புகையிலை வர்த்தகர்களும், விவசாயிகளும், தொழிலாளரும், பொது மக்களும் ஒன்று சேர்ந்து உறுதியுடன் கிளர்ச்சியில் இறங்கி போர் தொடுத்தால் கட்டாயம் நமக்கு வெற்றி உண்டு. கடைசியாக “எவ்வளவு நியாயமான காரியமாக இருந்த போதிலும், சாதகமடைய வேண்டுமானால் பொது மக்கள் ஒற்றுமையாகவும் கட்டுப்பாடாகவும் இருந்து, சகலவிதமான கஷ்ட -நஷ்டங்களையும் அடையத் துணிந்து தீவிரமான கிளர்ச்சி செய்தால்தான் வெற்றியடைய முடியும்” எனப் பெரியார் தமது அறிக்கையில் குறிப்பிட்டிருப்பதையே நாமும் பொது மக்களுக்குச் சமர்ப்பிக்கிறோம்.
– குடிஅரசு – துணைத்தலையங்கம் – 10.03.1940