எது வகுப்பு வாதம்?

Print Friendly, PDF & Email

பார்ப்பனரல்லாதார் கட்சிக்கு நீதிக்கட்சிக்கு இந்நாட்டில் செல்வாக்கிருப்பது உண்மையானால், ஆதரவிருப்பது உண்மையானால், ஏன் வரப்போகும் சென்னை மேல்சபைத் தேர்தலுக்குக் கட்சியின் பேரால் ஆட்களை நிறுத்தி வெற்றிபெறக் கூடாதென்றும், எப்பொழுது போட்டியிட ஆள் கிடைக்கவில்லையோ அப்பொழுதே அக்கட்சிக்கு நாட்டில் செல்வாக்கில்லையென்பது விளங்கவில்லையா என்றும் தோழர்கள் ராஜகோபாலாச்சாரியார் முதல் சாதாரண ஒரு காங்கிரஸ் பேர்வழி வரை கேட்டும், பத்திரிகைகளில் நையாண்டி பண்ணியும் வந்ததற்கு, பெரியார் அவ்வப்போது பல இடங்களில் தக்க பதில் கூறியிருக்கிறார். அதாவது, நீதிக்கட்சியின் பேரால் வரப்போகும் மேல்சபைத் தேர்தலுக்குப் போட்டியிட பயப்படுவதின் காரணம் சர்க்கார் உத்தியோகஸ்தர்களில் பெரும்பாலோர் பார்ப்பனர்களாயும் காங்கிரஸ் அபிமானிகளாயும் இருப்பதினாலேயேயாகும் என்று பதிலளித்திருக்கிறார்.


சர்க்கார் உத்தியோகஸ்தர்கள் காங்கிரஸ் அபிமானிகள் என்பதற்கு நாம் உதாரணத்திற்காக அதிக தூரம் செல்லவேண்டியதில்லை. சென்ற ஆண்டு பெரியார் அவர்கள் கோவை ஜில்லாவைச் சேர்ந்த சென்னிமலையில் இரண்டுநாள் முயன்றும் கூட்டத்தில் காலிகள் பேச விடவில்லையென்பதும், அப்பொழுதிருந்த அவ்வூர் சப்-இன்ஸ்பெக்டரை காலிகளை அப்புறப்படுத்தச் சொன்னதற்கு தாம் ஒரு காங்கிரஸ் அபிமானி என்றும், தம்மால் ஒன்றும் செய்ய முடியாதென்றும் தெரிவித்ததாக செய்திகள் வெளிவந்ததுமே போதும் எனக் கருதுகின்றோம்.


சர்க்கார் உத்தியோகஸ்தர்களில் பெரும்பாலோர் பார்ப்பனர்களாயிருக்கிறார்கள் என்பதற்குப் பிறிதோரிடத்தில் ஈரோட்டிலுள்ள உத்தியோகஸ்தர்கள் பாங்கி நிர்வாகிகள் யார் யார் என்பதைக் குறித்து ஓர் செய்தி வெளிவருகிறது. ரெவினியூ, சிவில் இன்ஜினீயர், பாங்கி, எஜூகேஷனல், எக்சைஸ், ரிஜிஸ்டிரேஷன் முதலாகிய இலாகாக்கள் எல்லாம் பார்ப்பன மயமாகவே இருக்கிறதை நன்கு காணலாம். பார்ப்பனரல்லாதாரில் பெரும்பாலருக்குப் போலீஸிலும், கோர்ட்டிலும், பாங்கியிலும், ரிஜிஸ்திரார் ஆபீசிலும் அதிக சம்பந்தமிருந்து வருகிறதென்பதை யாரும் அறியாமலிருக்க முடியாது. ஆகவே, பார்ப்பனரல்லாதார் ஒருவர் தன்னை ஒரு பார்ப்பனரல்லாதான் என்று வெளிப்படையாக சொல்லிக்கொள்ள வேண்டுமானால் தனது சொந்த காரியங்களில் மேற்கண்ட உத்தியோகஸ்தர்களால் எத்தகைய துன்பங்கள் இடையூறுகள் வந்தாலும் அவைகளைப் பொறுத்துக் கொண்டிருக்கத் தயாராயிருக்க வேண்டும். ஒரு கட்சியில் சேர்ந்து ஒரு தேர்தலுக்குப் போட்டியிட அவ்வளவு பெரிய தியாகங்கள் செய்ய ஒவ்வொருவரும் தயாராயிருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது சுலபமான காரியமல்ல என்றே கருதுகின்றோம்.


எனவே, பார்ப்பனரல்லாத மக்கள் பகிரங்கமாக பார்ப்பனரல்லாத கட்சியின் பெயரைச் சொல்லிக்கொண்டு வெளிவர வேண்டுமானால் முதலாவது உத்தியோக மண்டலம் அடியோடு திருத்தியமைக்கப்பட வேண்டும். பாங்கிகளில் புழங்கப்படுவது பார்ப்பனரல்லாதார் பணம். ஆனால், அதை நிர்வகிப்பவர்களோ பார்ப்பனர்கள். இது எப்படி நியாயமாகும்? எந்த நீதிக்குப் பொருந்தும். என்பது நமக்கு விளங்கவில்லை. இவைகள் எல்லாம் முற்றிலும் திருத்தியமைக்கப்படாதவரை பார்ப்பனரல்லாத மக்கள் நீதிக்கட்சியின் பேராலோ அல்லது வேறு எந்தக் கட்சியின் போராலோ காங்கிரசுக்கு எதிராக நிற்பது சாத்தியமாகாது என்றே சொல்வோம். 100-க்கு 97 பேரைக் கொண்ட பார்ப்பனரல்லாத பெருங்குடி மக்களை நிர்வகிக்கும் சர்க்காரின் இலாகாக்களின் இலட்சணம் இம்மாதிரியாயிருந்தால், இதை எடுத்துக் கூறுவது, விளக்கிக் காட்டுவது வகுப்புவாதமா? என்ற கேட்கிறோம். பார்ப்பனரல்லாதார் சுயமரியாதையுடன் சுதந்திரத்துடன் எப்படி வாழ முடியும்? இந்நாட்டிலே உள்ளபடியாகவே ஜனநாயக ஆட்சி நிலவ வேண்டும் என்ற விருப்பம் கவர்னர் சர்க்காருக்கு இருக்குமேயானால், ஜனநாயக ஆட்சி நிலைத்திருக்குமாறு உத்தியோக மண்டலத்தைத் திருத்தியமைக்கவேண்டிக் கொள்கிறோம். தமிழ் மக்களும் அந்த எண்ணம் பூர்த்தியாகும்வரை அயராது கிளர்ச்சி செய்து வருவார்கள் என்று நாம் எதிர்பார்க்கிறோம்.


– தோழர் பெரியார், குடிஅரசு – தலையங்கம் – 10.03.1940

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *