துப்பாக்கிப் பிரயோகமும் தேசபக்தரும்

Print Friendly, PDF & Email

வாயில்லா பூச்சிகளாக நடைப்பிணங்களாக இருக்கும் தொழிலாளர்கள் பாட்டாளிகள் ஏதாவது சில உரிமைகள் பெற வேண்டுமானால், அதற்கு இன்று ஆயுதமாயிருப்பது வேலை நிறுத்தம் ஒன்றே என்பதை யாவரும் அறிவார்கள். இன்று தொழிலாளர்கள் ஏதாவது சில உரிமைகள் பெற்று வருகிறார்கள் என்றால் அதற்கு இவ்வேலை நிறுத்தம் என்ற ஒரே ஆயுதம்தான் காரணமாகும். நாகரிக உலகம் இதை அனுமதித்தே வந்திருக்கிறது என்பதை யாரும் மறுக்கமாட்டார்கள். இன்று எங்கு பார்த்தாலும் ஆலைத் தொழிலாளர்களும் மற்றுமுள்ள தொழிலாளர்களும் வேலை நிறுத்தம் செய்து வருகிறார்கள் என்பதை யாரும் அறிவார்கள் என்றே நம்புகின்றோம்.


அதுபோலவே, இலங்கையில் சென்ற ஜனவரி மாதத்தில் மூலோயாத் தேயிலைத் (வெள்ளையர்) தோட்டத்திலே தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் செய்தார்கள். குழப்பத்தை அடக்குவதாக அங்கு சென்ற போலீசார் தொழிலாளர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்தார்கள். அதன் காரணமாக கோவிந்தன் என்ற இந்தியத் தொழிலாளி ஒருவன் சுட்டுக்கொல்லப்பட்டான். இந்தத் துப்பாக்கிப் பிரயோகம் சம்பந்தமாக ஒரு விசாரணைக் கமிஷன் நியமிக்கப்பட வேண்டுமென்று அரசாங்க சபையும், கவர்னரும் தீர்மானிததார்கள். அன்றியும் இக்கமிஷன் விசாரணை முடியும் வரையில் குறித்த மூலோயாக் குழப்பம் காரணமாகப் போலீசார் தொடர்ந்திருந்த வழக்குகட்குத் தவணை போட வேண்டுமென்றும் அரசாங்கசபை தீர்மானித்தது. விசாரணைக் கமிஷனும் ஏற்பாடாகி யாழ்ப்பாணம் பெரிய கோர்ட்டு நீதிபதி தோழர் சி. குமாரசாமி கண்டிக்குப் போய் அங்கே விசாரணை நடத்தி வருகிறார்.


வழக்குகட்கு தவணையிட வேண்டுமென்ற அரசாங்க சபைத் தீர்மானத்தின்படி உள்நாட்டு மந்திரி சர். பாரன் ஜயதிலகா தனது ஆதிக்கத்தின் கீழ் உள்ள போலீஸ் அதிகாரி இன்ஸ்பெக்டர் ஜெனரல் தோழர் பாங்க்ஸ்க்கு ஒரு கட்டளையிட்டார்.


இந்தக் கட்டளையைக்கொண்டு நடத்த முடியாது என்று அந்த இன்ஸ்பெக்டர் ஜெனரல் மறுமொழி கொடுத்துவிட்டு “ஒட்டைக்கூத்தன் பாட்டுக்கு இரட்டைத் தாழ்ப்பாள்” என்றதுபோல் உடனே கண்டியில் தனது போலீஸ் கூட்டத்தாருக்கு “வழக்கை எந்த விதத்திலும் தவணையிடச் செய்ய உடன்படாதீர்கள்” என்று கட்டளையிட்டாராம். இம்மாதிரி ஒரு இன்ஸ்பெக்டர் ஜெனரல் தனக்கு மேலதிகாரியான மந்திரியின் கட்டளையை மீறி நடந்ததைக் குறித்து சர். பாரன் ஜயதிலகா கவர்னருக்கு முறையிட்டதற்கு கவர்னர் விடுத்த பதிலில் “தோழர் பாங்ஸ் நடந்து கொண்ட மாதிரி மிக மனவருத்தத்தை உண்டாக்குகின்றது. ஆனால், மந்திரியின் கட்டளையை மீறியவரே என்ற விஷயம் ஆராயப்படத்தக்கது. மந்திரி கட்டளையிடவில்லை; ஆனால், வேண்டிக்கொண்டார். இந்த வேண்டுதல் கட்டளையாகாது. ஆகையால், இது விஷயத்தில் நான் அதிகம் தலையிட விரும்பவில்லை” எனக் குறிப்பிட்டு விட்டார். ஆகவே, போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெனரலின் அடங்காப் பிடாரித்தனத்தைக் கண்டிப்பதற்கு சர்.பாரன் ஜயதிலகா உட்பட இலங்கை சர்க்காரின் 7 மந்திரிகளும் 27 ஆம் தேதி ராஜிநாமா செய்துவிட்டார்கள். அரசாங்க சபை மெம்பர்களும் சபைக்குள்ள அதிகாரங்கள் உரிமைகள் கிடைக்கும்வரை அரசியலை நடத்திக் கொடுக்கப் போவதில்லையென மார்ச் 5ஆம் தேதி தீர்மானிக்கப் போவதாகத் தெரிகிறது.


ஆனால், போலீசார் சர். பாரன் கேட்டுக்கொண்ட வழக்குகட்குத் தவணையிட விரும்பவில்லையென்றாலும், எல்ஜின் தோட்ட வழக்கில் தொழில் கட்டுப்பாடு உத்தியோகஸ்தர் கேட்டுக்கொள்ள அதைத் தவணையிட ஒத்துக் கொண்டிருக்கிறார் என அரசாங்க சபையில் உள்நாட்டு மந்திரி சர். பாரன் ஜயதிலகா குறிப்பிட்டிருப்பதை வாசகர்கள் கவனிக்கக் கோருகிறோம்.


பிரஸ்தாப தோட்டம் வெள்ளையர்களைச் சேர்ந்ததென்பதும் வெள்ளையருக்கு நஷ்டம் விளைவிக்கும் ஒரு காரியத்திற்கு வெள்ளையதிகாரி யொருவர் இடம் கொடுப்பாரா? என்பதைக் குறித்து யாரும் சந்தேகம் கொள்ள மாட்டார்கள் என்றே நம்புகின்றோம். ஏனென்றால், இன்ஸ்பெக்டர் ஜெனரல் தோழர் பாங்ஸ் ஒரே கொள்கையைப் பின்பற்றி வருகிறதாயிருந்தால் எல்ஜின் தோட்ட வழக்கில் தொழில் கட்டுப்பாடு உத்தியோகஸ்தர் கேட்டுக்கொள்ள அதைத் தவணையிட ஒத்துக்கொண்டிருப்பவர் உள்நாட்டு மந்திரி பிரஸ்தாப வழக்குகளைத் தவணையிட வேண்டுமெனக் கேட்டுக்கொண்டதற்கு இணங்க மறுத்திருப்பாரா என்று கேட்கிறோம்.


போலீஸ் அதிகாரிகள் அடங்காப்பிடாரியாக நடந்து வருவதை நாம் என்றும் கண்டித்து வந்திருக்கிறோம். 1930ஆம் வருடத்திலேயே போலீசாரின் ஆணவச் செயல்களை நமது கட்சியின் பத்திரிகையாக விளங்கிய ‘திராவிடன்’ சர்க்காரின் அடக்கு முறையை மீண்டும் “சர்க்காரி பேயாட்டமா?” என்ற தலைப்பின்கீழ் “தம்வினை தம்மைச் சுற்றும் என்பதை அவர்கள் அறிகிறார்கள் இல்லை. குடிகள் மனம் நோவ நடந்த முடிமன்னர்கள் எக்கதியானார்கள் என்பதையும் அவர்கள் உணர்வதில்லை. அதிகார வர்க்கத்தினர் கண்ணிருந்தும் குருடர்களாயும், காதிருந்தும் செவிடர்களாயும், இருக்கிறார்கள். வீண்சண்டை மூட்டி இந்திய நிலைமையைச் சிக்கலாக்கவே அவர்கள் கட்டுப்பாடாகச் சூழ்ச்சிசெய்து வருகிறார்கள்” என்றும், மற்றொரு சந்தர்ப்பத்தில் “பான்வல் துப்பாக்கிப் பிரயோகம்” என்ற தலைப்பின்கீழ் எழுதுகையில், உண்மை நிலையைப் பற்றி தகவல்கள் கிடைக்க வில்லையாயினும், போலீசார் புத்திசாலித்தனமாக நடந்து கொண்டதாகத் தெரியவில்லை. அதிகாரவெறி பிடித்தவர்கள் கையில் சமாதான பரிபாலன வேலையை ஒப்படைத்திருப்பது ஆபத்துக்கிடமானது என்பதைச் சர்க்கார் இனிமேலாவது அறிவார்களா? “வேலியே பயிரை மேய சர்க்கார் பார்த்துக் கொண்டிருக்கலாமா?” என்றும் கண்டித்திருக்கின்றது.


போலிசாரின் யதேச்சாதிகாரத்தை நாம் என்றும் கண்டிக்கத் தவறியதில்லை யென்பதை விளக்குவதற்கே மேற்சொன்ன உதாரணங்களை எடுத்துக் காட்டுகிறோம் என்பதை பொது மக்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்.


நிராயுதபாணிகளான தொழிலாளர்களை, அதிலும் தங்கள் உயிர் வாழ சில சவுகரியங்கள் கோரும் மக்களை, உரிமைகள் பெறப் போராடும் மக்களை, அதிகார வர்க்கத்தினர் இவ்வாறு துப்பாக்கிப் பிரயோகம் செய்வதை நாம் அழுத்தமாகக் கண்டிப்பதோடு, அதை வன்மையாக எதிர்க்கிறோம். ஆனால், இச்செய்கையைத் “தேசிய”த் தாள்கள் என்று சொல்லப்படும் “தினமணி”, “மித்திரன்” போன்ற பத்திரிகைகளும் “தேசிய”வாதிகள் என்று சொல்லிக்கொள்ளும் காங்கிரஸ்காரர்களும் கண்டிப்பதென்பது நமக்கு மிகுந்த ஆச்சரியத்தைக் கொடுத்து வருகிறது. ஏன் நமக்கு அது ஆச்சரியத்தைக் கொடுக்கிறதென்றால் 9 மாகாணங்களில் காங்கிரஸ்காரர்கள் 27 மாதம் ஆட்சி புரிந்த காலையில் கிளர்ச்சி செய்த தொழிலாளர்களைப் போலீசாரைக்கொண்டு அடித்து சுட்டுக்கொன்றதை எந்த காங்கிரஸ்காரர்களாவது கண்டித்தார்களா? அல்லது எந்தத் தேசியத் தாள்களாவது கண்டித்தனவா? என்று கேட்கிறோம்.


உதாரணமாக, காங்கிரஸ் ஆட்சியில் தாராவி, சீராளா, சித்தவலசா, ஆகிய இடங்களில் தொழிலாளர்கள் மீது போலீசார் துப்பாக்கிப் பிரயோகம் செய்த காலையிலும், மதுரை, சூளை, கோவை ஆகியவிடங்களில் தொழிலாளர் மீது போலீசார் தடியடிப் பிரயோகம் செய்த காலையிலும், பம்பாயில் தொழிலாளர் சம்பந்தமாக காங்கிரஸ் சர்க்கார் செய்யவிருந்த சட்டங்களை எதிர்த்துக் கிளர்ச்சி செய்த அதாவது ஊர்வலம் நடத்திய தொழிலாளர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்த பொழுதும், அய்.மா. சிறையில் ஷியாக்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்த காலையிலும், காக்சார் இயக்கத்தை அடக்க ராணுவத்தை கொண்டுவந்த பொழுதிலும் இவைகள் என்ன செய்தன என்று கேட்கிறோம்.


உண்மையிலே, தொழிலாளர்கள் மீது இவைகளுக்குப் பரிதாபமோ அல்லது அதிகார வர்க்கத்தினரின் யதேச்சதிகாரத்தில் வெறுப்போ இருக்குமே யானால், கண்டிப்பாக எவர்கள் ஆட்சியில் இத்தகைய சம்பவங்கள் நடந்தபோதிலும் கண்டித்தே தீரும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை. தங்கள் கட்சியினர் என்ன காரியம் செய்தாலும், எத்தகைய கொடுங்கோலாட்சி நடத்தினாலும் வாய் பொத்திக் கொண்டிருப்பதும், வேறு ஆட்சியினர் செய்யும் காரியங்களை மட்டும் கண்டித்து வருவதும் யோக்கியப் பொறுப்புடைமை ஆகுமா? என்பதைப் பொதுமக்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறோம். எனவே தேசியத் தாள்கள் என்று சொல்லிக்கொள்ளும் மேற்சொன்ன பத்திரிகைகளுக்குப் பிரஸ்தாப விஷயத்தைக் குறித்துக் கண்டிக்க நாக்குண்டா? என்று கேட்கிறோம். எப்படியிருந்த போதிலும் போலீசாரின் அடங்காப் பிடாரித்தனத்தை நாம் வன்மையாகக் கண்டிப்பதோடு மேற்படி காரியத்திற்காக இலங்கை மந்திரிகள் ராஜிநாமா செய்ததைப் பாராட்டுகிறோம்.


குடிஅரசு – தலையங்கம் – 03.03.1940

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *