ஆச்சாரியார் சர்க்கார் புகுத்திய இந்தி உத்தரவை ரத்து செய்து இந்தியை இஷ்டபாடமாக்கி வெளியிட்டுள்ள சர்க்கார் அறிக்கை வருமாறு:- தங்கள் பள்ளிக் கூடங்களில் கட்டாயப் பாடமாக வைக்கப்பட்டிருக்கும் இந்தியை இஷ்டப்பாடமாக்குவது பற்றி சர்க்கார் சிறிதுகாலமாக யோசித்து வந்திருக்கிறார்கள்.
கட்டாய இந்திமுறை, பொதுமக்களில் பெரும்பகுதியினரிடையே எதிர்ப்பையும் அதிருப்தியையம் விளைவித்திருக்கிறது. முடிவாக முதல் மூன்று பாரங்களில் பரீட்சை எதுவுமில்லாமல் இந்தியை கட்டாயப் பாடமாக மட்டும், கற்றுக் கொடுப்பதால் மாணவர்களுக்கு அந்த பாஷையில் போதிய அறிவோ, திறமையோ ஏற்படாதென்றும் சர்க்காருக்குத்தோன்றுகிறது. இந்தியை இஷ்டபாடமாக 4,5,6 பாரங்களிலும் விஸ்தரிக்கவேண்டுமென்றும், அதை ஒரு பரீட்சைப் பாடமாக்க வேண்டுமென்றும் சர்க்கார் கருதுகிறார்கள். இந்தி பேசப்படும் இதரப் பிரதேசங்களிலுள்ளவர்களுடன் சம்பந்தம் வைத்துக்கொள்ள இந்திப்படிப்பு இம்மாகாண வாசிகளுக்கும் பெரிய உதவியாயிருக்குமென்று சர்க்கார் நினைக்கிறார்கள். இப்பொழுது இந்தி கட்டாயப் பாடமாகப் போதிக்கப்பட்டுவரும் பள்ளிக் கூடங்களில் இந்தி வகுப்புகளுக்கு மாணவர்கள் போவது இனி அவர்கள் இஷ்டத்தைப் பொறுத்ததென்று மேற்படி பள்ளிக்கூடங்களுக்கு உடனே உத்தரவிடப்படும்.
வெற்றி! வெற்றி!
தமிழர்களின் சளையாத உழைப்புக்கு தமிழர்களின் தீவிரக் கிளர்ச்சிக்கு, தமிழர்களின் தளராத கட்டுப்பாட்டுக்கு தமிழ்நாட்டுத் தலைவர்களின் முயற்சிக்கு, வெற்றி! வெற்றி! வெற்றி!.
எனவே, வெற்றிகண்ட தமிழரே! வீறுகொண்டெழுங்கள்! வெற்றிவிழா கொண்டாடிக் களியுங்கள்! உங்களது “சக்தி” இதுவென உணருங்கள்! உங்களால்தான் இத்தகைய வெற்றி காணமுடியும் என்பதைத் தெரிந்துகொள்ளுகள். வெற்றி வீரரே உங்கள் உழைப்பின் பலன் கண்டு விட்டீர்கள். இனி தயாராக இருங்கள் அடுத்த போராட்டத்திற்கு! வீரத்தமிழா! வெற்றி நமதே!!
குடிஅரசு – பெட்டிச்செய்தி – 25.02.1940