இந்தி கட்டாயப் போதிப்பு உத்திரவு மாற்றப்பட்ட சர்க்கார் அறிக்கையைப் பார்த்தேன்.
இவ்வளவு நாள் பொறுத்தாவது நமது கவர்னர் இந்தி எதிர்ப்பானது இந்நாட்டுப் பெரும் பகுதியான மக்களின் ஆத்திரத்துடன் கூடிய எதிர்ப்பு என்பதை உணர்ந்து கொண்டதற்கும் இப்போது போதித்துவரும் கட்டாய இந்தி போதனை முறை பயனற்றதும் கூடாததும் என்று உணர்ந்து அந்த முறையையும், கட்டாயப் போதிப்பையும் ரத்துச் செய்ததற்கும் மகிழ்ச்சியடைகிறேன்.
ஆனால் அந்த அறிக்கையின் படி இந்தி இனி இஷ்ட பாடமாக வைத்துக் கொள்ள அனுமதிக்கப்பட்டாலும் அதற்காகப் பொது மக்களின் வரிப் பணம் செலவழிக்கப்படுவதை நான் வீண் அனாவசியமான செலவு என்று வருத்தத்துடன் சொல்லாமல் இருக்க முடியவில்லை.
இம்மாதிரி செலவுக்குச் சர்க்கார் அறிக்கை சொல்லும் காரணம் “மெயில்” பத்திரிகை சொல்லுகிற பிரகாரம், பொருத்தமற்றதும், நியாயமற்றதுமாகும் என்பதுதான் எனது அபிப்பிராயமுமாகும். ஏனெனில் இந்தியா என்கின்ற பெயருள்ள பூபாகத்தில் பல பாஷை பேசும் பல மாகாணங்கள் இருக்கும் போது “தென் இந்தியர் இந்தி படிப்பது இந்தி பேசும் மாகாண மக்களுடன் பழகுவதற்கு அனுகூலமாயிருக்கும்” என்று சொல்லுவது அசட்டுத்தனமேயாகும். ஒரே ஒரு பாஷை பேசும் மக்களுடன் பழகுவதற்கு மாத்திரம் அனுகூலமாயிருக்கும் மற்றொரு பாஷைக்குப் பொது ஜனங்கள் வரிப் பணமும் பொதுப்பள்ளிக்கூட முயற்சியும் ஏன் செலவழிக்கப்பட வேண்டும். மற்ற பாஷை மாகாணங்களுடன் தென் இந்தியர் பழக வேண்டுமானால் அதற்கென்ன செய்வது? மற்றும் இப்போதைய சர்க்கார் அறிக்கை முறைப்படி ஒரு தமிழ் மாணவன் இந்தியை இஷ்ட பாடமாக எடுக்க வேண்டுமானாலும் அவன் தனது தாய்மொழியை விட்டுவிட்டுத்தான் இதை எடுக்க வேண்டியவனாக ஆவான்.
ஆகையால் இந்தப் பாகம் மாத்திரம் ஒன்று யோசனை இல்லாமல் செய்த காரியமாய் இருக்க வேண்டும். அல்லது மாஜி கணம் ஆச்சாரியாரைத் திருப்திப்படுத்த கவர்னர் பிரபு எடுத்துக் கொண்ட கோணல் வழி முயற்சியாய் இருக்க வேண்டும். எப்படியிருந்த போதிலும் தமிழர் விருப்பப்படி இந்தி கட்டாய போதிப்பு ஒழிந்ததற்கு மகிழ்ச்சியடைகிறேன்.
நமது பிறவி எதிரிகளான பார்ப்பனர்களும் அவர்களது கூலிகளும் பார்ப்பனப் பத்திரிகைகளும் நமது விஷயத்தை மறைத்தும், குறைத்தும், திரித்தும் விஷமத்தனமாகக் கூறியும் வெளியிட்டும் நம்மை எதிர்த்தும், நம் முயற்சியைக் கெடுத்து வந்தும், நாம் வெற்றி பெற்றோம். இதற்கு தமிழர்களின் ஒற்றுமையும் தன்மான உணர்ச்சியுமே காரணமாகும்.
ஆரம்பம் முதல் கட்டாய இந்திப் போதிப்பை எடுத்துவிடக் கிளர்ச்சி செய்யப் பெரியதொரு ஊக்கமும், உற்சாகமும் ஏற்படும் உதவி செய்துவந்த “மெயில்” பத்திரிகைக்கு நான் தனியான நன்றி செலுத்துவதுடன் நம்முடன் ஒத்துழைத்துப் பலவகையில் ஆதரவளித்தவர்களுக்கும்; பல கஷ்ட, நஷ்டங்களை ஏற்றுத் தீவிரக் கிளர்ச்சியில் பங்கெடுத்துக் கொண்டவர்களுக்கும்; பொருளுதவி செய்தவர்களுக்கும் எனது மனப்பூர்த்தியான நன்றியறிதலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இனி அடுத்து தொடங்கப்படப் போகும் கிளர்ச்சிகளிலும் தமிழர்கள் இதுபோலவே ஒத்துழைக்க வேண்டுமென்று வேண்டிக் கொள்ளுகிறேன்.
– தோழர் பெரியார், குடிஅரசு – அறிக்கை – 25.02.1940