விஸ்வகர்ம சமுகத்திற்கு பெரியார் விளக்கம்

Print Friendly, PDF & Email

தென் இந்திய விஸ்வகர்ம சங்கப் பொதுக் காரியதரிசியார் அவர்கள் நீதிக்கட்சியின் தலைவரான நம் பெரியாரிடமிருந்து சில விஷயங்கள் விளக்கப்பட வேண்டுமென்று விரும்பி விடுத்த வேண்டுகோளுக்குப் பெரியார் விளக்கமளித்து அச்சமுகத்திற்கு ஒரு வேண்டுகோள் விடுத்திருக்கிறார். அவ்வேண்டுகோள் 14.02.1940ஆம் தேதி விடுதலையில் பிரசுரிக்கப்பட்டிருக்கிறது. அதைத் தென் இந்திய விசுவகர்ம சமுக மக்கள் எல்லோரும் நன்கு சிந்தித்து ஒரு முடிவுக்கு வர வேண்டியது இது சமயம் மிகவும் அவசியமாகும்.


எல்லா சமுகத்தாருக்கும் பொருந்தும்


பெரியாரின் பதில் என்னும் வேண்டுகோளானது தென்னிந்திய விஸ்வகர்ம சமுகத்தினருக்கு என்று விளக்கப்பட்டிருந்தாலும் அது பொதுவாகவே தென்னிந்தியாவில் ஜாதியின் பேரால், வகுப்பின் பேரால் உள்ள எல்லாக் கைத்தொழிலாளர் சமுகத்திற்கும் பொருத்தமானதென்றே சொல்லுவோம்.


இந்த நாட்டில் விவசாயத்தொழிலாளி, உழவர், வேளாளர் ஆகிய ஜாதியைச் சேர்ந்தவர் நெசவு தொழிலாளி, கைக்கோளர், தேவாங்கர், சாலியர், பட்டுநூல்காரர் முதலிய ஜாதியைச் சேர்ந்தவர்கள்; உலோக – மர தொழிலாளர்கள்; விஸ்வகர்மா ஆச்சாரி வகுப்பைச் சேர்ந்தவர்கள்; சிற்பத் தொழிலாளிகளில் உலோகம், மரம், கல் மண் கட்டடம் ஆகியவைகளுக்கு விஸ்வகர்மாக்களுடன் மற்றும் உப்பாரன் என்னும் உப்பிலியர், ஒட்டர், கொல்லத்துக்காரர் முதலிய சில ஜாதிகளைச் சேர்ந்தவர்கள் இவர்களைத் தவிர்த்து மற்றும் குடிமக்கள் என்னும் பேரால் மனித சமுக வாழ்க்கைக்கு அவசியமான பல தொழில்களுக்கும் குடிமக்கள் என்னும் தலைப்பில் பலவகை வாணியர், வலையர், குயவர், வண்ணார், நாவிதர் முதலாகிய பல தொழிலாளிகள், இன்னும் மக்களுக்கு போக இன்பம், நாட்டிய இன்பம், இசை இன்பம் அளிக்கும் தொழில்களை மேற்கொண்ட தொழிலாளர் மக்கள் எல்லோருமே நம் நாட்டில் இந்து சமயம் காரணமாக ஒவ்வொருவரும் ஒவ்வொரு ஜாதியின் பேராலேயே வகுக்கப்பட்டிருக்கிறார்கள்.


தொழலாளரெல்லாம் சூத்திரராக்கப்பட்டிருக்கின்றனர்


இந்துமத ஆதாரப்படி, இந்துமத தர்ம சாஸ்திரங்களின் விதிப்படி இத்தொழிலாளிகள் இவ்வளவு பேரையும் உழவர், நெசவர், வாணியர், பல தொழில் தச்சர்கள் உள்பட யாவரையும் வருணாசிரம ஜாதி முறையில் நாலாம் ஜாதி – சூத்திரஜாதியாய் ஆக்கி, மற்றும் அதனுள்ளும் கீழ் மேல் படி வைத்து, ஒருவருக்கொருவர் உண்பன, தின்பன, தொடுதல், நெருங்குதல்கூட இல்லாமல் இருக்கும்படியான இழிவுகளை உண்டாக்கி, ஒருவரையொருவர் இழித்துக் கூறிக் கொள்ளும்படியாகச் செய்து வந்தது. இந்த முறையும்கூட நாட்டுக்கொருவிதமாய் நடப்பிலிருக்கும்படியாக ஆக்கி கீழ்மைப்படுத்தி, அவர்கள் ஒன்று சேர்ந்து தங்கள் நலனுக்கும் மேன்மைக்கும் முயற்சி செய்ய வழியில்லாமல் செய்து வைக்கப்பட்டிருக்கிறது.


இது ஒருபுறம் கல்லின் மேலெழுத்துப் போல் ஆதாரத்திலும், அனுபவத்திலும் இருந்து வந்தாலும் இந்தத் தொழிலாளர் ஜாதியார்கள் ஒவ்வொருவரும் தங்கள் தங்கள் தனி ஜாதியையும் வகுப்பையும் உயர்வாகப் பேசிக் கொள்வதிலும், உயர்வாகக் கருதப்பட முயற்சிப்பதிலும் அவற்றிற்கு ஆதாரங்கள் கண்டுபிடிப்பதிலும், கற்பிப்பதிலும் வழி தேடிக் கொள்வதிலும் எவரும் இளைத்தவர்களல்ல.


உண்மையில் பகுத்தறிவுப்படி, இந்தியனாகவோ, இந்து சமயத்தவனாகவோ இல்லாமல் உலகப் பொதுமகனாக இருந்து ஒருவன் பார்ப்பானேயாகில் இவ்வளவு தொழிலாளர் சமுகமும் இன்னும் இதில் குறித்திராத பள்ளு, பறை, சக்கிலி, தோட்டி என்று சொல்லப்படும் சமுகங்களும்,


“பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா
செய்தொழில் வேற்றுமை யான்”


என்று தமிழ் வேதம் சொல்லுவது போல் யாவரும் பிறவியில் பேதமில்லாத மனித சமுகமே ஆவார்.


“செய் தொழில் வேற்றுமையால் சிறப்பு ஒவ்வாது” என்று சொன்னதுபோல் மக்கள் வாழ்க்கைத் தொழில்களாலும் உயர்வு, தாழ்வு கற்பிப்பதற்கும் இடம் இல்லை. இந்தப்படிதான் இந்தியா, இந்து மதம் நீங்கிய மற்ற நாடுகளிலும் சமயங்களிலும் இருந்து வருகிறது.


நம் நாட்டிலும் தமிழர்கள் இந்து மதம் என்றும் ஆரிய மதமும் அதன் பயனாய் பிராமணர் – சூத்திரர் என்னும் ஜாதிப் பாகுபாடும் ஏற்படுவதற்கு முன் பிறவி பேதமற்ற மக்களாகவும், உயர்வு, தாழ்வு பேதமற்ற தொழிலாளிகளாகவும் இருந்திருக்கிறார்கள்.


தொழில் என்றால் என்ன?


மொத்தத்தில் தொழில் என்பது மக்களின் சமுதாய வாழ்க்கைக்கு இன்றியமையாததொன்றாகும். மனிதன் காட்டுமிராண்டி வயதில் தன்னம் தனிமையாய் மிருகங்களைப் போல் காடுகளில் திரிந்த காலத்தில் இம்மாதிரி தொழில் முறைகள் தேவை இருந்திருக்காது. ஆனால், சமுதாயமாகச் சேர்ந்து கூட்டு வாழ்க்கை வாழ ஆரம்பித்தபின் காலம் செல்லச் செல்ல, அறிவு பெருகப் பெருக, தேவைகள் வலுக்க வலுக்க பல தொழில்கள் செய்ய வேண்டியது மனிதனுக்கு அவசியமாயிற்று. அதிலிருந்து நிலைமைக்குத் தக்கபடி தொழில்களும், தொழில் செய்ய வேண்டிய அவசியமும் மக்களுக்கு ஏற்பட்டது. அவற்றை ஒவ்வொரு மனிதனும் அவனவன் உடல் சக்தி, அறிவு சக்தி ஆகிய காரணங்களுக்குத் தக்கபடி செய்து வந்திருக்கிறான். இதற்கு ஜாதியோ, வகுப்போ இல்லாமல் அவரவர்கள் சவுகரியம், இச்சை ஆகியவைகளுக்குள்ளாகவே தொழில்கள் சார்ந்து விட்டன. அந்த முறைதான் உலக முழுவதும் இன்றளவும் நடந்த வருகின்றது. கஷ்டமானதாகவோ, அசவுகரியமானதாகவோ ஒரு தொழில் இருக்குமானால் அந்தத் தொழில் நாளாவட்டத்தில் கஷ்டக் குறைவாகவும், அசவுகரியம் குறைவாகவும் செய்யப்பட வேண்டியதான் அறிவுடைமையே தவிர, தொழில்களில் உயர்வு தாழ்வு கற்பித்து நிலை நிறுத்துவதோ, தொழில்களுக்குத் தத்துவார்த்தங்கள் கண்டுபிடிப்பதோ, அவற்றை மற்றவர்கள் தலையில் போடப் பார்ப்பதோ, தொழிலாளர் ஜாதியார்கள் தங்கள் தொழிலை மாற்றாமல் ஜாதியை உயர்த்திக் கொள்ள நினைப்பதோ எவ்விதப் பயனும் அளிக்காது.


(விடுதலை)


– தோழர் பெரியார், குடிஅரசு – கட்டுரை – 25.02.1940

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *