ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு

Print Friendly, PDF & Email

ஆச்சாரிய சர்க்கார் இந்தியை பள்ளிகளில் அதுவும் இளம் மாணவர்களுக்கு கட்டாயப் பாடமாக புகுத்திய காலையில் ‘கட்டாயம்’ என்பது இருத்தல் கூடாதென்றும், இளம் மாணவர்கள் ஏற்கனவே பல பாடங்களைக் கற்க வேண்டிய கஷ்ட நிலையிலிருக்கையில் இப்புதியதொரு பாடத்தையும் கட்டாயமாக கற்கச் செய்வது அவர்களுக்கு பெரிய பாரமாகும் என்றும், தாய்மொழிப் பயிற்சிக்குப் பங்கம் ஏற்படும் என்றும், கட்டாயப் பாடமாக வைத்துவிட்டு பரிட்சையில்லாமல் செய்வது பொருந்தாச் செய்கை என்றும், சிறிதும் அர்த்தமற்ற செய்கையென்றும் நாம் சொல்லி வந்ததை நமது வாசகர்கள் இதற்குள் மறந்திருப்பார்கள் என்று நாம் கருதவில்லை. நமது ஆட்சேபணைகள் எவ்வளவு தூரம் நியாயமானவை என்பது இவ்வாரம் கவர்னர் சர்க்கார் பிறப்பித்துள்ள உத்தரவிலிருந்து நன்கு விளங்கும். முதலாவது, கட்டாயப் பாடமாக இருந்துவந்த இந்தியை இஷ்ட பாடமாக்கி விட்டார்கள்.


இரண்டாவது, முதல் மூன்று பாரங்களில் பரிட்சை எதுவுமில்லாமல் இந்தியை கட்டாயப் பாடமாக மட்டும் போதிப்பதால் மாணவர்களுக்கு போதிய அறிவோ, திறமையோ ஏற்படாதென்று சர்க்கார் உணர்ந்து விட்டார்கள். ஆகவே இன்றைய சர்க்கார் முக்கியமான நமது இரண்டு ஆட்சேபணைகளையும் உணர்ந்து கொண்டு விட்டார்கள் என்றாலும் சர்க்கார் மனமாற்றமடையவில்லை என்றே நாம் கருதுகிறோம். நாம் இவ்வாறு கருதுவதற்கு சர்க்காரின் இன்றைய போக்கே போதிய சான்றாகும் என நினைக்கிறோம்.


உண்மையிலே சர்க்கார் மனமாற்றமடைந்திருந்தால், அடக்கு முறை பாணத்தை சர்க்காரின் போக்கைக் கண்டிப்பவர்கள் மீது தொடுத்திருக்க மாட்டார்கள். ஆகவே, நமது போராட்டத்தில் ஓரளவு நாம் வெற்றியடைந்துவிட்டாலும், நமது போராட்டத்தை இத்துடன் நிறுத்திவிட வேண்டும் என்று சர்க்கார் கருதவில்லை என்றே தெரிகிறது. அவ்வாறு சர்க்கார் கருதியிருப்பார்களேயானால், “சண்டே அப்சர்வர்” ஆசிரியர் தோழர் பி.பாலசுப்ரமணிய முதலியார் மீது 1500 ரூபாய் ஜாமீன் நடவடிக்கை தொடர்ந்திருப்பார்களா? என்று கேட்கிறோம். எனவே, இதுவரை வெற்றி கண்ட தமிழர்கள் பூரண வெற்றி காணும்வரை போராட ஒரு நாளும் பின்வாங்க மாட்டார்கள் என்பதோடு நமது பெரியாரும் பூரண வெற்றி காணும் வரை, தமிழர்கள் தன்மானத்தோடு வாழ வழிகாணும் வரை, அயரார் என்பதையும் நாம் அறிவோம். நிற்க, சர்க்கார் உத்தரவிலே கட்டாயப் பாடமாக இருந்து வந்த இந்தி இனிமேல் இஷ்ட பாடமாக இருக்குமென்று கூறியிருக்கிறார்கள். பள்ளிக்கூடங்களில் உள்ள பாடத்திட்டத்தில் (Curriculum) மொத்தப் பாடங்களை “ஏ-குரூப்”, “சி-குரூப்” என இரு பிரிவாகப் பிரித்திருக்கின்றனர் என்பதும், மொழி (language) சம்பந்தமான பாடங்களை “ஏ-குரூப்”பாகவும், கலை சம்பந்தமான – உதாரணமாக, சேத்திரகணிதம், பீஜகணிதம், இரசாயணம், பவுதிக சாஸ்திரம், புக் கீப்பிங், டைப்ரைட்டிங் போன்ற பாடங்களை “சி-குரூப்”பாகவும் பிரித்திருக்கின்றனர் என்பதும், “ஏ-குரூப்”பில் உள்ள பாடங்களில் ஒரு மாணவன் ஏதாவது ஒன்றை மொழிக்காக எடுக்க வேண்டுமென்றும், “சி-குரூப்” பில் உள்ள பாடங்களில் ஏதாவது ஒன்றை தனது எதிர்கால வாழ்வை உத்தேசித்து பொறுக்கி எடுப்பான் என்பதையும் யாவரும் அறிவார்கள்.


சர்க்கார் இந்தியை “சி-குரூப்” பில் சேர்த்திருக்கிறார்கள் என்பது 22 ஆம் தேதி “இந்தியன் எக்ஸ்பிரஸ்” வெளிவந்துள்ள செய்தியிலிருந்து நன்கு விளங்குகிறது. உயர்தரக் கல்வி கற்க விரும்பும் மாணவன் எவனும், கல்லூரியில் பாடமாக இல்லாத ஒரு பாடத்தை எடுக்கமாட்டான் என்பதும், தொழிலுக்குச் செல்ல விரும்பும் ஒருவன் தொழிலுக்கு உதவும் பாடங்களில் ஒன்றைத்தான் தெரிந்தெடுப்பான் என்பதும் நன்கு விளங்கும் உண்மை இதுதான்; இவ்வுத்தரவில் காணப்படுவதும் இதுதான்.


ஆனால், “இந்தி போதனையை ஏற்படுத்திய காலத்தில் அவர்களுக்கு (காங்கிரஸ் மந்திரிகளுக்கு) இருந்த நோக்கத்தையே இந்த மாறுதல் விரிவுபடுத்தி ஊர்ஜிதப்படுத்துவதாக இருக்கிறது. அதனுடன் புதியமுறை அதிகப் பலன் அளிக்கக்கூடும்” என்று “சுதேசமித்திரன்” எழுதுவதின் கருத்து என்னவென்றே நம்மால் விளங்கிக் கொள்ள முடியவில்லை. இந்தி கட்டாயப் பாடமாக புகுத்திய காலத்தில் ஆச்சாரியார் முதல் அவரை வால்பிடித்துத் திரிந்தவர்கள் யாவரும் கட்டாயமாக இருந்தால்தான் ஒவ்வொருவரும் இந்தியை கற்றுத் தீருவார்கள் என்றும், அதுதான் தங்கள் நோக்கம் என்றும் கூறிவந்ததை எவரும் மறந்திருக்க முடியாது. ஆனால், இன்றைய சர்க்கார் உத்தரவுப்படி, “இந்தியை” “சி-குரூப்” பாடமாக அதாவது இஷ்ட பாடமாக வைத்திருப்பதினால் எப்படி எல்லா மாணவர்களும் கற்க முடியுமென்று கேட்கிறோம்? எப்படி அவர்களது நோக்கம் மாற்றப்படவில்லை? ஏன் அடியோடு கொலை செய்யப்பட்டு விட்டதென்று சொல்ல முடியாது என்று கேட்கிறோம். மேலும் இப்புதிய முறை எப்படி அதிக பலன் அளிக்கக்கூடும் என அப்பத்திரிக்கை கூறுகிறதென்பதை வாசகர்களே சிந்தித்துப் பார்க்க விட்டுவிடுகிறோம். முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்க முடியுமா? அதுபோல உண்மையை பொதுமக்கள் உணரமுடியாதபடி மறைக்க முடியுமா? என்னதான் மறைத்தாலும்; உண்மை வெளிப்படாமல் போகுமா?


“சர்க்கார் தங்கள் அறிக்கையில், இந்திக்காக அதிகப்பணம் செலவு செய்யப்போவதாகவும் கூறுகிறார்கள், “சுயமரியாதைகளுக்கு உண்மையாகவே தமிழில் சிரத்தையிருக்குமேயானால் இப்புதிய ஏற்பாட்டை எதிர்க்க வேண்டும்” என கூலிக்கு மாரடிக்கும் காங்கிரஸ் கூலிப் பத்திரிகையொன்று எழுதுகிறது. இதைக் குறித்து நாம் சிறிதும் கவலை கொள்ளவில்லையானாலும் இந்த மடத்தனம் எவ்வளவு உச்சநிலையிலிருக்கிறது என்பதை வாசகர்கள் தெரிந்து கொள்ளட்டும் என்பதினாலேயே அதை எடுத்துக்காட்டுகிறோம். பள்ளிக்கூட பாடத்திட்டத்தில் புதியதாக ஒரு பாடத்தை சர்க்கார் புகுத்தினால் அதற்காக பள்ளிக்கூடங்களுக்கு அளிக்கும் மானியத்திலும் அதிக மானியம் கொடுக்க வேண்டாமா? அதற்கும்கூட சர்க்கார் நிபந்தனை விதிக்காமலில்லை. அதாவது இந்தி வகுப்பில் போதிய மாணவர்களிருக்க வேண்டும் என்பதாகும். ஆகவே, எந்தப் பள்ளிக்கூடங்களில் இந்தி வகுப்புகளில் போதிய மாணவர்களிருக்கிறார்களோ, அந்தப் பள்ளிக்கூடங்களுக்கு வருஷந்தோறும் கொடுக்கிற மானியத்தோடு இதற்காக அதிக மானியம் கொடுப்பார்கள். இதை “சுயமரியாதைக்காரர்கள் ஏன் எதிர்க்க வேண்டும்” என்று கேட்கிறோம். தங்கள் ஆச்சாரியார் சர்க்கார் புகுத்திய கட்டாய இந்தி செத்து ஒழிந்ததே என்ற துக்கத்தின் காரணமாக எதையெதையோ மனம் போன போக்கில் எழுதித் தனது ஆத்திரத்தைத் தீர்த்திருக்கிறதென்று சொல்வதோடு புத்திசாலித்தனமாக ஒரு ஆதாரத்தையாவது தனது வாதத்திற்கு அதனால் எடுத்துக்காட்ட முடியாது போயிற்று என்றுதான் சொல்ல வேண்டியிருக்கிறது.


கடைசியாக, ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு என்பதை இப்போராட்டத்திலிருந்து தமிழர்கள் உணர்ந்து எதிர்கால போராட்டங்களிலும் ஒன்றுபட்டு பெரியார் ஆணைப் படி நின்று போராடுவோமேயானால் வெற்றி நமதே, தமிழர்களே, தயாராயிருங்கள்!


குடிஅரசு – தலையங்கம் – 25.02.1940

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *