சீனப் பிரமுகர் பேச்சு

Print Friendly, PDF & Email

தலைவர் அவர்களே! அன்புமிக்க தோழர்களே!


நான் இந்த மாபெரும் தமிழர் கூட்டத்தில் தமிழில் பேசுவதைக் கேட்டு நீங்கள் பெரும் ஆச்சரியம் அடையலாம். சீன தேசத்தவனாகிய என்னை தமிழில் பேசும்படித் தூண்டியது, இந்தக் கூட்டத்திற்கு காரணமான உங்கள் தலைவர் பெரியார் ஈ.வெ. ராமசாமி அவர்கள் தான்.


இன்று உலகில் சமுதாயத் துறையில் வேலை செய்துவரும் ஒருவர் உண்டானால் அது பெரியார்தான் என்பதை நீங்கள் ஒப்புக்கொள்ளுவீர்கள். அவரால் தமிழ்நாடு அடைந்துவரும் முன்னேற்றம் அனந்தம்.


சீன தேசத்து டாக்டர் சன் யாட் சென் என்பவரைப் பற்றி நீங்கள் கேட்டிருக்கலாம். அவருடைய குருவாகிய டாக்டர் கன்பூசியஸ் என்னும் மகானுக்குப் பெரியார் ராமசாமி அவர்களை ஒப்பிடலாம். மூடப் பழக்கங்கள் மலிந்து கிடந்த சீனத்தை ஒன்றுபடுத்த முயன்ற சன் யாட் சென்னுக்கு வழிகாட்டிய டாக்டர் கன்பூசியஸ் அவர்களைப் போல உங்கள் பெரியாரும் தமிழ்நாட்டை ஒன்றுபடுத்த மிகவும் பாடுபட்டு வருகிறார். தமிழர் உயர்வு கருதியும், தமிழ் பாதுகாப்புக் கருதியும் தொண்டாற்றி வரும் பெரியார் நீடுழி வாழ வேண்டும்.


அதற்குக் காரணம் பெரியார்


கடந்த பத்து வருஷ காலத்தில் மலாய் நாட்டில் வாழும் தமிழர்கள் முன்னுக்கு வந்திருப்பதை காண வியப்படைந்த போதிலும் அதற்கு காரணம் பெரியார்தான் என்று இப்போது அறிகிறேன். பெரியார் ஆயிரத்து தொள்ளாயிரத்து இருபத்தி ஒன்பதாம் (1929) ஆண்டில் மலாயாவில் செய்த சீர்திருத்தப் பேச்சால், இங்குள்ள தமிழர்கள் பழைய பழக்கங்களைப் புதைத்துவிட்டு கீழ்நாட்டின் சிறப்பை நிலைநாட்ட முன்வந்து இருக்கிறீர்கள் என்பது எனக்குத் தெரியும், சீனத்தைப் போலவே, தமிழர் நாகரீகமும் அதிக புராதீனமானது. எனவே, நமது நாகரிகம் மேல்நாட்டு நாகரிகத்திற்கு கொஞ்சமும் குறைந்தது அல்ல என்பதை உலகிற்குக் காட்ட வேண்டுமானால் தமிழரும், சீனரும், ஒன்றுகூடிவேலை செய்ய வேண்டும். ஆகவே அதைப்பற்றி சில வார்த்தைகள் ஆங்கிலத்தில் பேச விரும்புகின்றேன். தமிழில் பேசுவது இதுவே முதல் தடவை. ஆதலால் நான் நீண்ட நேரம் தமிழில் பேச முடியாமைக்கு மன்னிக்கவும். பெரியார் வாழ்க! (பெரும் கைத்தட்டல்)


(28-12.1939 அன்று சிங்கப்பூர் ஹேப்பி வேர்ல்டில் பெரியார் பிறந்த தினக் கொண்டாட்டத்தில் சீனப்பிரமுகர் தோழர் சி.எஸ்.ஸீ. அவர்களின் தமிழ் சொற்பொழிவு)


குடிஅரசு – பெட்டிச்செய்தி – 11.01.1940

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *