விசுவகர்மத் தலைவர் கடிதத்துக்கு பெரியார் பதில்

Print Friendly, PDF & Email

அன்புள்ள ஐயா அவர்களே!


தாங்கள் ஜனவரி 19ஆம் தேதி எழுதிய வேண்டுகோள் கடிதம் பெற்றேன். அதை பொதுமக்கள் அறியும்படி 20.01.1940ஆம் தேதி விடுதலையில் பிரசுரிக்கச் செய்துமிருக்கிறேன். அது விஷயமாய் உடனே தங்களுக்கு பதில் எழுத எனக்கு போதிய சாவகாசமில்லாமல் போனதால் தாமதமாகி விட்டதற்கு மன்னிக்க வேண்டுகிறேன்.


நான் பொதுவாழ்வில் தலையிட்ட காலம் முதல்கொண்டு தங்களையும், தங்களது அருந்தொண்டுகளையும் நான் நன்கு அறிவேன். தங்கள் சமுகம்பற்றியும், அதன் முன்னேற்றத்திற்காக ஏற்பட்டிருக்கும் விஸ்வகர்ம சமுக ஸ்தாபனம் செய்துவரும் முயற்சிகள்பற்றியும் நான் கவனித்து வந்திருக்கிறேன்.


எனது தொண்டின் மத்தியில் நான் தங்கள் சமுக குறைபாடுகளைப்பற்றியும் கவனித்து பேசி வருவதன் மூலம் தங்கள் சமூகத்தின் மனதை என் பக்கம் திரும்பும்படியான அளவுக்கு கவர்ந்திருக்கின்றேன் என்று தாங்கள் குறிப்பிட்டிருப்பதைப் பார்க்க நான் மிகவும் மகிழ்ச்சியோடு பெருமை அடைகிறேன்.


ஆட்சேபணை என்ன இருக்கிறது?


தங்களது சமுகம் இந்தியாவில் 5 கோடி என்று தாங்கள் குறிப்பிட்டிருக்கிறீர்கள் இந்த எண்ணிக்கையானது இந்தியாவில் உள்ள மொத்த இந்துக்கள் என்பவர்களின் ஜனத் தொகையில் 5இல் ஒரு பங்குக்கு மேலாகவே ஆகிறது. அதாவது இந்துக்கள் தொகை 23 கோடி என்பது ஜனக்கணிதக் குறிப்பு. இதில் 5 கோடி விஸ்வகர்மா கைத்தொழிலாளர்கள் என்றால இது இந்திய நாட்டிலேயே ஒரு முக்கியமானதும், குறிப்பிடத்தக்கதுமான சமுகமாகும் என்பதில் ஆட்சேபணை என்ன இருக்கிறது?


இப்பேர்ப்பட்ட ஒருபெரும் அளவான ஜன எண்ணிக்கையும், முக்கியமான தொழில் திறமும் கூர்மையான புத்தி நுட்பமும் உள்ள சமுகம் ஆகிய (தங்கள்) விஸ்வகர்ம தொழில் சமுகம் அரசாங்கக் குறிப்பில் “பிற்பட்ட வகுப்பார்” என்ற தலைப்பில் சேர்க்கப்பட்டிருப்பதாக தாங்கள் குறிப்பிட்டு மன வருத்தமடைந்திருக்கிறீர்கள். இதில் எனக்கு ஒன்றும் ஆச்சரியம் தோன்றவில்லை.


ஆச்சரியம் என்ன?


ஏனெனில், இந்நாட்டில் உள்ள 35கோடி ஜனத் தொகையில் 100-க்கு 3 பேராயுள்ள (அதாவது சுமார் ஒரு கோடி பேராய் மாத்திரம் உள்ள) பார்ப்பனர்கள் தாங்கள் மாத்திரம் மேல் ஜாதியாகவும், அவர்கள் கடவுள் முகத்தில் இருந்து பிறந்தவர்களாகவும், மற்றவர்கள் கடவுளின் பாதத்தில் இருந்து பிறந்தவர்களாகவும் சூத்திரர்கள் ஆகவும் அதாவது மேற்படி பார்ப்பனர்களுக்கு அடிமையாய் இருந்து உடலுழைப்பு உழைத்து பாடுபட்டு உதவ வேண்டியவர்களாகவும் கதைகள், புராணங்கள் கற்பித்து அவற்றையே கடவுள் சொன்னதாகவும், அவைகளையே நம்மக்களின் சமய வேத சாஸ்திர தர்ம நூலாகவும் பாவிக்கச் செய்கிற ஒரு சமயத்தை நாம் எல்லோரும் ஒப்புக் கொண்டு, அவற்றிற்கு நாம் அடிமைப்பட்டு நம்மையும் அந்தச் சமயத்தைச் சேர்ந்தவர்கள் என்று பெருமையோடு சொல்லிக்கொண்டு இருப்பதோடு, அச்சமயத்தை் காப்பாற்ற நாம் நம் பெண்டு பிள்ளைகளுடன் உடல் பொருள் ஆவியைத் தத்தம் செய்து பாடுபடும்போது உங்களுடைய வகுப்பை மாத்திரமல்லாமல் ஏனைய இந்நாட்டுப் பழம் பெரும் குடி மக்கள் வகுப்பையும் பிற்பட்ட வகுப்பினராகவும் சமுதாயத்தில் தாழ்த்தப்பட்ட புழங்கப்படாத, தீண்டப்படாத வகுப்பென்றும் குறிப்பிட்டிருப்பதில் ஆச்சரியமென்ன இருக்கிறது என்று எனக்குத் தெரியவில்லை.


பரிசுத்தமான எண்ணத்தோடு எழுதுகிறேன்


நான் எழுதுவதும் பற்றி தாங்கள் தப்பாய் நினைக்க மாட்டீர்கள் என்கின்ற தைரியத்தின் மீதும், பரிசுத்தமான நல்ல எண்ணத்தின்மீதுமே நான் எழுதுகிறேன்.
இந்த நாட்டில் ஒரே மேல் ஜாதிக்காரன் என்பவனான பார்ப்பான், அவன் எவ்வளவு பழிதொழிலும் இழி குணமும் படைத்தவனாக இருந்தாலும் கூட அவன் வீட்டில் மற்ற வகுப்பார் எல்லோரும் சாப்பிடலாம். ஆனால் அவன் மாத்திரம் மற்றவர்களாகிய நம்மில் யார் எவ்வளவு மேன்மையான தொழிலும் உயர்வான குணமும் உடையவராயிருந்தாலும் சாப்பிட மாட்டேன் தொடவும் மாட்டேன் என்பான். மற்றும், அவ்வளவோடு மாத்திரம் அவன் நின்றுவிடவில்லை. அவனது சமயத்தால் நாமும் ஒருவருக்கொருவர் புழங்கக்கூடாத மாதிரியில் உண்பன தின்பன இல்லாமல் பிரித்து வைத்து நம்முள் ஒருவருக்கொருவர் உயர்வு தாழ்வில் சண்டையிட்டுக் கொள்ளும்படி யாகச் செய்து, ஒருவரை ஒருவர் மிக்க இழிவாகக் கருதும்படி ‘தர்ம சாஸ்திரங்களை’ எழுதி வைத்து அமலில் கொண்டு வந்து விட்டான்.


அப்படிப்பட்ட சமயமும் அதன் தர்ம சாஸ்திரங்களும்தான் இன்று நம்முடைய அரசியல் ஆதாரங்களிலும் சட்ட திட்டங்களிலும் அமலில் இருப்பதோடு அக்கூட்டமேதான் சமய சமுதாய அரசியல் ஆகியவற்றிலும் நம்பிரதிநிதிகளாய் வழிகாட்டிகளாய் இருக்கிறார்கள்.


இந்த நிலை உள்ளவரை முற்போக்கடைய முடியாது


இந்த நிலை உள்ளவரை தங்கள் சமுகம் என்பதுவும், பார்ப்பனர் நீங்கிய மற்ற சமுகங்கள் என்பனவும் ஆகியவெல்லாம் கல்வி அறிவுகளிலும் சமுதாய உரிமைகளிலும், அரசியல் பிரதிநிதித்துவங்களிலும் பிற்பட்ட வகுப்புகளாய் இருந்துதான் தீரும் என்பது எனது தாழ்மையான அபிப்பிராயம், இவற்றிற்கு அஸ்திவாரமாய் இருக்கும் சமய சாஸ்திரங்களைத் தகர்ந்தெறிந்து அவற்றிலிருந்து விடுபடாமல் நாம் முற்பட்ட வகுப்பார்களாவதும் சமுதாயத்தில் பார்ப்பனருக்கு சரிசமமான சமுகமாக ஆவதும் நமக்குரிய உரிமைகளைப் பெறுவதும் முடியாத காரியமாகவே எனக்குத் தோன்றுகிறது.


அடுத்தபடியாக காங்கிரசைப் பற்றி தாங்கள், “ஒரு காலத்தில் காங்கிரஸ் புனிதமான ஸ்தாபனமாக இருந்தாலும் இன்று அதன் நோக்கங்களும் முயற்சிகளும் (விஸ்வகர்ம சமுகம் போன்ற) பெரிய மைனாரிட்டிகளின் உரிமைகளைக் காக்கும் நோக்கமுடையதாக இல்லை என்பதை விஸ்வகர்மா சமுகம் இப்போது நன்றாய் அறிந்து கொண்டதால் விகிதாச்சாரப்படி உரிமைகளைப் பெறுவதற்குப் பாடுபடும் மற்ற ஸ்தாபனங்களுடன் ஒத்துழைத்து அக்கொள்கை வெற்றிபெற பாடுபட வேண்டும் என்கின்ற முடிவுக்கு விஸ்வகர்ம சமுக தலைவர்கள் வந்திருக்கிறார்கள்” என்று எழுதி இருக்கிறீர்கள். இதை அறிய நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்.


சென்னை மாகாணத்தில் ஜஸ்டிஸ் கட்சியானது சுமார் 25 வருட காலமாக எல்லா வகுப்பாரும் தங்களுடைய எண்ணிக்கைக்குத்தக்கபடி உரிமைகளையும், பிரதிநிதித்துவங்களையும் பெற வேண்டுமென்பதற்காகவே பார்ப்பனர் ஒழிந்த மற்ற சமுகத் தலைவர்களால் ஏற்படுத்தப்பட்டு, பல கஷ்ட நஷ்டம் தொல்லை ஆகியவை களுக்கிடையில் பாடுபட்டு வருகிறது. அதன் பயனாக பார்ப்பனர் ஒழிந்த மற்ற எல்லா வகுப்பாரும் ஒரு குறிப்பிட்ட அளவிற்காவது பயனடைந்து, தங்கள் தங்கள் சமுக நிலையை அறியவும், முன்னேற்றமடைய கருதவும் மேல் நிலையில் உள்ளவர்களிடம் போட்டி போடும் உணர்ச்சியும் துணிவும் பெறவும், அடியோடு தூங்கிக் கிடந்தவர்களும் விழிப்படைந்து கிளர்ச்சி செய்ய உணர்ச்சி பெறவுமான நிலைமை ஏற்பட ஏது உண்டாய் இருக்கிறது.


ஜஸ்டிஸ் கட்சியின் நோக்கம்


ஆதலால் தாங்கள் மேலே “விகிதாச்சாரப்படி உரிமைகளைப் பெரும் வழியில் முயன்றுவரும் இதர ஸ்தாபனங்களுடன் ஒத்துழைக்க வேண்டும்” என்று குறிப்பிட்டிருப்பதில் ஜஸ்டிஸ் கட்சியைப்பற்றி பெரிதும் கருத்தில் கொண்டு குறிப்பிட்டிருக்கலாம் என்று கருதி மகிழ்ச்சி அடைகிறேன்.


ஒரு சமயம் தாங்கள் அப்படி கருதி குறிப்பிடவில்லை என்று சொல்வதானாலும் ஜஸ்டிஸ் கட்சியானது அதாவது தென் இந்திய நல உரிமைச் சங்கமானது நான் மேலே குறிப்பிட்ட மாதிரி 25 வருட காலமாகவே இந்நாட்டிலுள்ள எல்லா மைனாரிட்டி, மெஜாரிட்டி வகுப்புகளின் உரிமைகளைப் பாதுகாக்க முயற்சித்து வந்திருக்கிறது என்பதையும், இனியும் அதுபோலவே பாதுகாத்து வரும் என்பதையும், இவற்றையே தான் அக்கட்சி உயிர்க் கொள்கையாக வைத்து வேலை செய்து வருகிறது என்பதையும் தங்களுக்கு நான் வலியுறுத்தி தெரிவித்துக்கொள்ள ஆசைப்படுகிறேன்.
ஆனால், அதே சமயத்தில் “ஒரு காலத்தில் காங்கிரஸ் நாட்டின் புனித ஸ்தாபனமாக இருந்து இருந்தாலும்” என்று தாங்கள் குறிப்பிட்டிருப்பதை பணிவோடு மறுத்துக் கூற வேண்டியவனாய் இருக்கிறேன்.


நானும் நம்பியதுண்டு


தாங்கள் எந்த விதத்தில் எந்தக் காரியத்தில் எப்போது காங்கிரஸ் “புனித ஸ்தாபனமாய் இருந்தது” என்று தெரிவிக்கிறீர்களோ என்பதை எனக்குத் தெரிந்து கொள்ள முடியவில்லை். ஆனாலும் எனக்குக் காங்கிரசில் சுமார் 25 வருடத்திற்கு முன் இருந்து நெருங்கி பழக்கமும் சம்மந்தமும் இருந்தது உண்டு, இந்த இருபத்தி ஐந்து வருட காலத்தில் தாங்கள் குறிப்பிட்டதுபோல் நானும் ஒரு காலத்தில் அது புனித ஸ்தாபனம் என்று நம்பி ஏமாந்ததும் உண்டு. ஆனால் அது ஒரு நாளும் அப்படி இருந்தது இல்லை. காங்கிரஸ் பழங்கதை எப்படியிருந்தாலும் 1920 ஆம் வருஷம் முதல் காங்கிரசு புனித வேஷம் போட்டதுண்டு. அதாவது சத்தியம், நீதி, அஹிம்சை, சமத்துவம், ஒற்றுமை, தியாகம், அன்பு ஆகிய வாக்கியங்கள் காங்கிரஸ் ஸ்தாபனங்களோடு பொருத்தப்பட்டிருந்தன என்பதோடு, அவைகளை நம்பி நானும் காங்கிரசுக்கு ஒரு முன்னணி தொண்டனாய் இருந்து பயபத்தியங்களை மேற்கொண்டு மூட்டைகளை தூக்கிக்கொண்டு கால்நடையாயும் ஊர் ஊராக திரிந்து இவைகளை எடுத்துச் சொல்லி காங்கிரசுக்கும் இப்போதைய அதன் தலைவர்களுக்கும் விளம்பரங்கள் ஏற்படும்படி செய்து பெண்டு பிள்ளைகளுடன் சிறை செல்ல பொதுமக்களை தூண்டி அதற்கும் முன்னணியில் இருந்து பல முறை சிறை சென்று வழிகாட்டி தொண்டாற்றியும் வந்திருக்கிறேன் என்றாலும், எனது இவ்வகை அனுபவத்தில் காங்கிரஸ் வேறு எக்காரியங்களில் உண்மையாய் இருந்து வெற்றி பெற்றிருந்தாலும் இந்த மேற்கண்ட குணங்களில் ஒன்றிலாவது உண்மையாக இருந்ததாகவோ, காரியத்தில் நடைபெற முயற்சித்ததாகவோ நான் தெரிந்து கொள்ள முடியாமல் போனதாலேயே அதை வெறுத்து விலகி, பல வகுப்புகளுக்கும் மானமும், நீதியும், சமத்துவமும், உரிமைக்காப்பும் அளிப்பதற்கென உள்ள சுயமரியாதை இயக்கத்தின் மூலமும், நீதிக்கட்சி என்னும் தென் இந்திய இயக்கத்தின் மூலமும் பாடுபட்டு வருகிறேன்.


இதில் குறிப்பாக நீதிக்கட்சியானது எவ்வித மறைபொருளும் வெளி வேஷமும், தனி நலமும் இல்லாமல் உண்மையும் சத்தியமும் ஆக கொள்கைகளையே தன்னுள் அடக்கி வேலை செய்து வருகிறது.


ஆகையால் இந்த முன்னுரையுடன் தாங்கள் காட்டியுள்ள சமுக குறைபாடுகளையும், தேவைகளையும் பற்றிய எனது அபிப்பிராயத்தை கீழே தெரிவித்துக் கொள்ளுகிறேன்.


தாங்கள் குறிப்பிட்டிருக்கும் குறைபாடுகள் என்பவைகளில்


“இந்தியாவின் மொத்த ஜனத் தொகையில் 7ல் 1 பாகமாகிய 5 கோடி மக்களைக் கொண்ட விஸ்வகர்ம கைத்தொழில் சமுகத்தை நாட்டின் முக்கியமான ‘மைனாரிட்டி’ வகுப்பாகக் கருதி அரசியலில் வாக்கு சுதந்திரம் கொடுக்கப்பட வேண்டும்” என்று குறிப்பிட்டிருக்கிறீர்கள்.


இதில் ஆரம்பத்திலேயே ஒரு தவறு இருப்பதாக நான் கருதுவதற்கு மன்னிக்க வேண்டுகிறேன். என்னவெனில் தாங்கள் இந்தியாவின் மொத்த விஸ்வகர்ம தொழிலாளர்களையும் சேர்த்துக் கொண்டிருக்கிறீர்கள். இது அனுபவ சாத்தியமற்றதாய் இருந்து வந்திருக்கிறது. ஏனெனில், இந்தியா பூராவிலும் உள்ள மக்களைப் பற்றியும், அவர்களுக்காகவும் நாம் எடுத்துக் கொள்ளும் எந்த முயற்சியிலும் நாம் வெற்றி பெற முடியாதவர்களாய் இருக்கிறோம். நம் மாகாண நிலைமையும், உணர்ச்சியும் வேறு, மற்ற மாகாணக்காரர்கள் நிலையும், உணர்ச்சியும் வேறு, வெளி மாகாணக்காரர்கள் எந்த வகுப்பராய் இருந்தாலும் பார்ப்பன சமய கொள்கைகளை ஒப்புக் கொள்ளுகிறவர்களாகவும், தனி உரிமை கேட்பது என்பதை தேசத் துரோகமாகவும் விடுதலைக்கு முட்டுக்கட்டையாகவும் கருதுகிறவர்களாகவும் இருக்கிறார்கள். அதனாலேயே காங்கிரஸ்காராகள் எந்த காரியத்திற்கும் இந்தியா பூராவையும் சேர்த்துப் பேசி நம் மாகாணத்தவர்களை மைனாரிட்டிகளாக ஆக்கி நமது கூப்பாடுகளை அலட்சியப்படுத்தி பார்ப்பன ஆதிக்கத்திற்கு வேண்டியவைகளை மாத்திரம் சுலபமாக சாதித்துக் கொள்ள முடிகிறது.


மற்றும், நமக்கு உள்ள சமுதாய, சுயமரியாதை உணர்ச்சி அளவு மற்ற மாகாணக்காரர்களுக்கு இருப்பதாக காண முடிவதில்லை. ஆதலால் தமிழகத்தை அதாவது சென்னை மாகாணத்தைப் பொறுத்தவரை எண்ணிக்கை எடுத்து அதற்கு உள்ள விகிதாச்சாரம் வீதம் உரிமை பெறுவதற்கு என்று முயற்சிப்பது வெற்றிக்கு அனுகூலமாய் இருக்கலாம். எப்படியிருந்தாலும் நீதிக்கட்சியானது விசுவ கர்மசமுகத்திற்குத் தாங்கள் குறிப்பிட்டபடி அரசியலில் வாக்கு சுதந்திரம் முதலியவை கொடுப்பதில் எவ்வித ஆட்சேபணையும் கூறவில்லை.


மற்றபடி தாங்கள் குறிப்பிட்டுள்ள மற்ற குறைபாடுகளுக்கும் தேவைகளுக்கும் பொதுவாகவே எனது கருத்தைத் தெரிவிக்க விரும்புகிறேன்.


தொழிலாளர் பிரச்சினை


அதாவது:


நம் நாட்டில் தொழலாளர் பிரச்சினையானது மற்றமேல் நாட்டுத் தொழலாளர் பிரச்சினைபோல் இல்லாமல் மிகச் சிக்கலான பிரச்சினையாக இருக்கிறது. இந்தியா பூராவிலுமே தொழிலாளர் பிரச்சினை என்றால் யந்திரஸ்தாபனங்களில் வேலை செய்பவர்களுக்கும் ஒரு முதலாளியின் கீழ் கும்பலாக கூலிக்கு வேலை செய்பவர்களுக்கும் சம்பந்தப்பட்டவைகளாக மாத்திரம் கருதப்படுகின்றனவே ஒழிய, கைத்தொழில் செய்யும் சுதந்திரத் தொழிலாளரையும் அவ்வப்போது செய் கூலி பேசிக்கொண்டு சாமான்கள் பணிகள் செய்யும் தொழிலாளிகளையும் அன்றன்றைய பணியாளாக இருந்து வேலை செய்யும் நித்திய கூலிகளையும் பற்றிய பிரச்சினைகளை கவனிக்க எவ்வித பொது ஸ்தாபனமும் இல்லை. இதனாலேயே நம் நாட்டு வேலைபாடான தொழில் திறங்களும் கைத்தொழலாளிகள் நிலைமைகளும் மிக்க சீர்கேடான நிலைமைக்கு வந்துவிட்டன.


உதாரணமாக, நெசவு முதலான கைத் தொழிலாளிகளின் நிலைமை மிக மிக மோசமாகிக்கொண்டே வருகிறது. அது போலவே கொல்லு தச்சு முதலிய உலோக, மர முதலான தொழிலாளர்கள் நிலைமையும் சீர்கேடாகி வருகின்றன.


மில் கூலி தொழிலாளியும், பெரும் ஸ்தாபனத்தில் வேலை செய்யும் தொழிலாளியும் தவிர மற்ற தொழிலாளிகள் நம் நாட்டில் பெரும் ஜாதியின் பேரால் தொழிலாளிகளாய் இருக்கிறார்கள். இவர்கள் தங்களுக்காக சங்கம் வைத்து தங்கள் முன்னேற்றங்களுக்கு பாடுபடுவது என்றால் பெரும்பாலும் சமுதாயத்தில் தங்கள் ஜாதி என்பதை உயர்த்திக் கொள்ள முயற்சிக்கிறார்களே ஒழிய, தொழிலில் மேம்பாடு அடைவதைப்பற்றியோ பொருளாதாரத்தில் உயர்நிலை அடைவதைப்பற்றியோ கவலை கொள்ளுவது மிகச் சிலவேயாக இருக்கின்றன.


இந்தக் கஷ்டம் ஒழிய வேண்டும்


ஏனெனில், இந்நாட்டில கைத்தொழலாளிகள் எல்லாம் சமய ஆதாரங்களின் பேரால் சமுதாயத்தில் ‘கீழ்’ ஜாதியாராகவே கருதும்படியாக கற்பிக்கப்பட்டு விட்டார்கள். ஆதலால் உண்மையும் மேன்மையுமான கைத்தெழிலாளிகள் பொருளாதாரத் தொழில் திற முன்னேற்றத்தை விடத் தங்கள் ஜாதியை உயர்த்திக் கொள்வதிலேயே ஈடுபட வேண்டியவர்களாக ஆகிவிட்டார்கள். மில் யந்திரத் தொழிலாளிகள், பெரிய ஸ்தாபன தொழிலாளிகள் ஆகியவர்களுக்கு ஜாதி இல்லை; யார் வேண்டுமானாலும் அவற்றில் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள். ஆகையால் அவர்கள் பொருளாதாரத்தையும், வாழ்க்கை சவுகரியத்தையும் மாத்திரமே கவனிக்க வேண்டியவர்களாகி விட்டார்கள்.


மேல் நாடுகளில் தொழில்களுக்கு ஜாதிப் பாகுபாடு இல்லையானதால் அதில் வர்க்கத் தொழிலாளர்கள் ஒன்று சேர்ந்து தங்களின் பொருளாதாரத்துக்கும் வாழ்க்கை நலத்திற்கும் பாடுபடுகிறார்கள். இந்தக் கஷ்டம் ஒழிந்தால்தான் நம் நாட்டிலும் கைத்தொழிலாளிகள் நிலை சீர்பட முடியும்.


வரப்போகும் ஆபத்து


ஜாதிப்பாகுபாட்டை அஸ்திவாரமாகக் கொண்ட கைத்தொழிலாளிகளுக்கு மற்றொரு ஆபத்து வரயிருக்கிறது. என்னவென்றால் இன்றுள்ள பெரும்பாலான கைத் தொழில்கள் வெகு சீக்கிரத்தில் அதாவது கால் நூற்றாண்டுகளுக்குள் யந்திரன்மூலம் சாதிக்கக் கூடிய தொழில்களாக ஆகிவிடுமென்பது எனது அபிப்பிராயம். அந்தப்படி தானாகவே ஆகாவிட்டாலும் முயற்சி செய்தாவது ஆக்கப்பட வேண்டிவரும் என்பது எனது ஆசையுமாகும். இப்படி ஆவதானது மனித சமுகத்தின் முற்போக்கை காட்டுவதாகும். இம்மாதிரி ஆவதற்கு முயற்சி செய்வது மனித சமுக ஜீவகாருண்யத்திற்கு பாடுபடுவதுமாகும். ஏனெனில் இந்த 20வது நூற்றாண்டில் உலகம் எவ்வளவோ அற்புதத்தை கண்டுபிடித்து ஆனந்த வாழ்க்கை வாழ முன்னேறிக் கொண்டிருக்கிற காலையில், நம் நாட்டு மக்கள் 100-க்கு 90 பேர் அன்றாட வயிற்றுப்பாட்டுக்கு பகல் முழுவதும் சரீரத்தில் பலர் வெய்யிலிலும், நெருப்பு முன்னும் இருந்தும் யந்திரம்போல் சரீரப் பாடுபடுவதென்றால் இது இன்னும் காட்டுமிராண்டி வயதைத்தான் காட்டுவதாகும். ஆதலால் இவை மாறும்படியான சமயம் வந்தால் இந்த ஜாதிக் கைத்தொழிலாளிகளின் நிலை மிகக் கஷ்டமானதாக ஆகிவிடும்.


வார்தா திட்டம் வெற்றி பெறாது


காங்கிரசின் வார்தா திட்டக் கல்வி என்பது இப்படிப்பட்ட ஒரு மாறுதல் அதாவது யந்திர உலகம் ஏற்படாமல் தடுத்து உடல் உழைப்பு தொழிலாளர்களை ஜாதிப் பிரிவினைப்படி நிலை நிறுத்தி வர்ணாச் சிரம தர்மத்தை புதுப்பித்து காப்பாற்ற வேண்டும் என்கின்ற உள் கருத்தைக் கொண்டிருப்பதால், இக்கல்வி ஒரு நாளும் வெற்றி பெறாது என்பதுடன் இது இயற்கைக்கு முரணானதுமாகும். ஏனெனில், உலக முற்போக்கு இந்தியாவை மாத்திரம் கல் ஆயுத காலத்திற்கு தள்ளிவிட்டுக் கொண்டிருக்காது. ஆதலால் ஒவ்வொருவகை தொழலாளி வர்க்கமும் ஒன்று சேர்ந்து ஜாதியையும், வகுப்பையும் மறந்து ஒரே வர்க்க தொழிலாளராக ஆகி யந்திர உலகத்திற்குத் தயாராய் இருக்க வேண்டும்.


ஜஸ்டிஸ் கட்சி அக்காரியத்திற்குப் பாடுபடுவதுடன், அதன் மூலம் அந்தந்த வர்க்கத் தொழிலாளிகளுக்கும் பூரண பாதுகாப்பளிக்கும். எப்படியெனில் யந்திரங்களின் மூலம் தனிப்பட்ட நபர்கள் தொழிலாளிகளைவிட அதிக லாபம் சம்பாதிக்க வகையில்லாமல் செய்து விட்டால் தொழிலாளிகளுக்குக் கஷ்டமே வராது. அந்தப்படி ஜஸ்டிஸ் கட்சியால்தான் செய்ய முடியுமே தவிர, காங்கிரசு கட்சியால் முடியாது என்று தயங்காமல் சொல்வேன்.


காங்கிரசின் முக்கிய லட்சியம்


ஏனெனில், காங்கிரசின் முக்கிய லட்சியம் நான் மேலே குறிப்பிட்டபடி வர்ணாச்சிரம உலகத்தை சிருஷ்டிப்பதேயாகும். ஆதலால் காங்கிரசுக்கு முதலாளியும், தொழிலாளியும் இருந்தாக வேண்டும். அன்றியும் காங்கிரசின் மூலம் தொழிலாளிகளுக்கு உண்மை பிரதிநிதித்துவம் கிடைப்பதும் முடியாத காரியமாகும். கிடைத்துவிட்டால் தொழிலாளிகள் முதலாளிகளையும், சோம்பேறி வாழ்வுக்காரர்களையும் மிஞ்சிவிட முயற்சிப்பார்கள் என்பது காங்கிரசுக்குத் தெரியும். உதாரணம் வேண்டுமானால் கூறுகிறேன். சைமன் கமிஷன் இந்தியாவுக்கு வந்தபோது தொழிலாளிகளுக்குச் சட்டசபையில் பிரதிநிதித்துவம் வேண்டுமென்று கேட்டு திட்டம் எழுதி கொடுத்தவர்கள் ஜஸ்டிஸ் கட்சியார் ஆகும். சைமன் கமிஷனும் அதை அப்படியே ஒப்புக்கொண்டு பிரதிநிதித்துவம் கொடுக்கச் சிபார்சு செய்தது. 1935-ம் வருஷம் சீர்திருத்தத்தில் பிரதிநிதித்துவம் கிடைத்தது. ஆனால், அந்த பிரதிநிதித்துவம் பெரிதும் ஜாதியிலோ, தொழிலிலோ தொழிலாளி அல்லாதவர்களுக்கும் உடலுழைப்பு என்பதே பரம்பரையில் கூட இல்லாதவர்களுக்கும்தான். அதாவது, பார்ப்பனர்கள் தான் அதிகமாய் கைப்பற்றிக் கொண்டதோடு சென்னைக் காங்கிரஸ் ஆட்சி அரசாங்கத்தில் தொழில் இலாகா மந்திரியும் ஒரு பார்ப்பனராகத்தான் இருக்க முடிந்தது. இதுதான் உடலுழைப்புக் கூலித் தொழிலாளருக்கும் ஜாதித் தொழிலாளருக்கும் காங்கிரசால் ஏற்பட்ட “நன்மை” யாகும்.


ஜஸ்டிஸ் கட்சியால் அப்படி ஏற்பட்டிருக்க முடியாது. ஜஸ்டிஸ் கட்சியானது ஜாதி பேதமற்ற சமரசக் கட்சியானாலும், அது ஏற்படும் வரை ஜாதிகளின் நியாயமான உணர்ச்சியை பாதிக்கத்தக்க எந்தக் காரியத்தையும், எந்த ஒரு ஜாதியினது சுயநலத்திற்காகவும் ஒருக்காலும் செய்யாது. தொழில் முறைகளில் உண்மைத் தொழிலாளரையே கவனிக்கும். காங்கிரஸ் ஒரு நாளும் அப்படி இருக்க முடியாது. ஒரு ஜாதியின் மேன்மைக்காக மற்றொரு ஜாதியை இழிவுபடுத்தவோ, குறைவுபடுத்தவோ, பலி கொடுக்கவோ சற்றும் அது பின்வாங்குவதில்லை.


ஒன்றுசேர வேண்டும்


கைத்தொழில்களும், தொழிலாளர் சமுகங்களும் முன்னேற்றமடைந்து வாழ்வில் பெருக்கமடைய வேண்டுமானால், கைத்தொழில் துறையை சர்க்கார் கைப்பற்றியாக வேண்டும். காங்கிரஸ் ஒரு நாளும் அப்படி செய்யாது. ஏனெனில், அந்த மாதிரி செய்தால் காங்கிரசின் வர்ணாச்சிரமக் கொள்கை பாழ்பட்டுப் போகும். ஆதலால் காங்கிரசானது தொழிலாளர் சமுகம் என்று ஒன்று இருக்க பாடுபடுவதுடன், அச்சமுகம் என்றும் அன்றாடப் பிழைப்புக்கு திண்டாடும் படியாகவேதான் வைத்திருக்க முயற்சிக்கும்.


மற்றபடி காங்கிரசானது தொழிலாளர்களுக்கோ, தங்கள் சமுகத்திற்கோ இதுவரை ஒன்றும் செய்யவில்லை என்பதையும், வார்தா கல்வி திட்டம் தொழிலாளர் முன்னேற்றத்தை தடுக்கும் சூழ்ச்சி என்பதையும், தங்கள் சமுகம் அறிந்து கொண்டதாக தாங்களே எழுதி இருப்பதைக் காண நான் மகிழ்ச்சி அடைகிறேன்.


ஆகவே, நம் மாகாணத்தைப் பொறுத்தவரை பார்ப்பனர் ஒழிந்த மற்ற சமுகத்தார்கள் எல்லாம் சகலவித தொழிலாளர் உட்பட ஒன்றுசேர வேண்டும் என்பதும், ஒன்று சேருவதோடு மட்டுமல்லாமல் ஒற்றமைப்பட்டு மனித சமுக முன்னேற்றத்திற்கே பெரும் பீடையாய் இருக்கும் காங்கிரசைப் பலமாக எதிர்த்து ஒழிக்கச் செய்ய வேண்டும் என்பதும் தான் நான் தொழிலாளர் வர்க்கத்திற்குச் சொல்லும் யோசனையாகும். இதுதான் இப்போது நம் மக்களுக்கு இருக்கும் முதலாவதும் முக்கியமானதுமான வேலை என்று கருதுகிறேன்.


இதற்காகவே தென்னிந்திய நல உரிமைச் சங்கம் எந்தத் தனிப்பட்ட ஜாதி வகுப்பாருடைய சுயநல நன்மைக்கும் இல்லாமல், இம்மாகாண எல்லா வகுப்பு மக்களுக்கும் சமநீதி வழங்கும் நோக்கத்தோடு இருந்து வேலை செய்து வருகிறது. ஆதலால், தாங்களும் தங்கள் சமுகமும் சமுக ஸ்தாபனமும் இவைகளை நன்றாய் ஆலோசித்து நீதிக்கட்சியை ஆதரிக்க முன்வர வேண்டுமென்பது எனது தாழ்மையான வேண்டுகோள்.


கடைசியாக எனது பொது வேண்டுகோள் ஒன்றுண்டு. அதாவது தாங்கள் எக்கட்சியை ஆதரிப்பதானாலும் தங்கள் சங்கம் குறைந்தது ஒரு லட்சம் மக்களையாவது அங்கத்தினர்களாக கொள்ள வேண்டும். போதுமான பெருநிதி சேர்க்கப்பட வேண்டும். நல்லதொரு பத்திரிகை இருக்க வேண்டும். ஐக்கிய நாணய சங்கமூலம் தொழிலுக்கு சலுகை பெற ஏற்பாடு செய்து கொள்ள வேண்டும். சிறுவர் சிறுமியர் எல்லோரும் கட்டாயமாய்ப் படிக்கும் படி பார்த்துக்கொள்ள வேண்டும். உங்கள் தொழிலில் தேக சிரமம் குறையும்படியாக யந்திர சவுகரியம் செய்து கொள்ள முயற்சிக்க வேண்டும்.


சமுக ஒற்றுமையும், ஸ்தாபன கட்டுப்பாடும், தலைவர்களுக்கு அடங்கி நடத்தலும் பலப்படுத்திக்கொள்ள வேண்டும். இவைகள் சரிவர செய்யப்படுமானால் தங்கள் சமுகம் சர்க்காராலும், மற்ற பொதுநல ஸ்தாபனங்களாலும் நன்கு மதிக்கப்படும் என்பதோடு, இந்த வலுவைக்கொண்டு இந்த நாட்டான் எப்படிப்பட்ட பொதுநல ஸ்தாபனத்தையும் தங்கள் சமுகமே நடத்தும்படியான தலைமையைக்கூட பெறலாம்.


மற்றும், உங்கள் மாநாடுகளில் கதரையும், வார்தா திட்டத்தையும் எதிர்ப்பதையும் முக்கிய தீர்மானமாகக் கொள்ள வேண்டும். ஏனெனில் இவை தொழில் முன்னேற்றத்தையும் பொருளாதார முன்னேற்றத்தையும் தடைப்படுத்துவனவாகும். மற்றும், பல விஷயங்களைப் பற்றி நாம் நேரில் பேசி இருக்கிறோம் என்பதையும் தெரிவித்துக் கொள்ளுகிறேன்.


தங்கள் அன்புள்ள ஆளான


ஈ.வெ. ராமசாமி,


(நீதிக்கட்சி தலைவர் ஈ.வெ.ரா அவர்கட்கு சென்னை தென்னிந்திய விசுவகர்மா கான்பரன்ஸ் மத்திய போர்டு பொதுக்காரியதரிசி தோழர் டி.எம். தெய்வசிகாமணி ஆச்சாரியார் அவர்கள் ஜனவரி மாதம் 19 ஆம் தேதியில் அனுப்பியுள்ள வேண்டுகோள் கடிதத்துக்கு பெரியார் அவர்கள் அளித்த பதில் அறிக்கை)


– தோழர் பெரியார், குடிஅரசு – வேண்டுகோள் – 18.02.1940

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *