காந்தியத்தை ஏன் ஒழிக்க வேண்டும்?

Print Friendly, PDF & Email

உலகில் தோன்றிய ஒவ்வொருவனுக்கும் இவ்வுலகில் வாழ பூரண சுதந்திரமிருக்க வேண்டும் என்றும் ஒருவனை ஒருவன் மதத்தின் பேராலோ, ஜாதியின் பேராலோ, பிறப்பின் பேராலோ, நிறத்தின் பேராலோ அடிமையாக்கி ஆண்டான் – அடிமை, முதலாளி – தொழிலாளி, பிராமணன் – அல்லாதான், வெள்ளையன் – கருப்பன் என்ற பாகுபாட்டைக் கற்பித்து வரும் நாகரிகமற்ற முறை ஒழிக்கப்பட வேண்டும் என்றும், இக்கொடிய முறை ஒழிக்கப்பட வேண்டுமானால் உலகப் பொருளாதார நிலை, நாட்டின் பொருளாதார நிலை அமைப்பு மாற்றியமைக்கப்பட வேண்டுமென்றும் நாம் பல தடவை எடுத்து விளக்கி வந்திருக்கிறோம்.


பொருளாதார அமைப்பு மாற்றப்பட வேண்டுமானால், திருத்தியமைக்கப்பட வேண்டுமானால், நாட்டின் பழக்க வழக்கங்கள் மாற்றப்பட வேண்டுமானால், தகப்பனது தொழிலையே பிள்ளை செய்ய வேண்டும்; சோம்பேறியாக இருந்து மக்களை வஞ்சித்து ஏய்த்து வாழ்ந்து வந்தவர்கள் என்றும் அவ்வாறே வாழ்க்கை நடத்த வேண்டும்; தூங்குகிற நேரம் போக எலும்பொடிய பாடுபட்டு எலும்புந்தோலுமாக வாழ்ந்து வந்தவர்கள் என்றும் அவர்கள் சந்ததி அவ்வாறேயிருக்க வேண்டும் என்ற கொள்கையை அடிப்படையாகக்கொண்ட காந்தியத்தினால் முடியுமா? என்று கேட்கிறோம். ஏன் இதை இப்பொழுது குறிப்பிடுகிறோம் என்றால், காந்தியம் இன்று காங்கிரஸ் உலகிலே எவ்வளவு தூரம் தலைவிரித்தாடுகிறதென்பதைப் பொதுமக்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டுமென்பதினாலேயாகும்.


ஒரு காலத்தில் மாண்டுபோன காந்தியம், காந்தியாரே சென்ற வருடம் தோழர் பட்டாபி தோல்வி தனது தோல்வி என்று சொல்லும் அளவுக்கு இருந்து வந்தது. இன்று இவ்வளவு உயர்ந்த நிலைக்கு வந்திருக்க வேண்டுமானால், சென்ற வருடம் காங்கிரஸ் உலகிலே காந்தியத்திற்கு எதிராக இருந்து வந்த எண்ணம் உறுதியானதும், உண்மையானதுமானதா? அல்லது தோழர் காந்தியார் உதிர்த்த கண்ணீர் உண்மையானதா என்பதை வாசகர்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.


சமதர்ம நாடாகிய ரஷ்யாவிலே மந்திரியாக நியமனம் செய்ய தகுதியுடைய, ஆற்றலுடைய, அறிவு படைத்த தோழர் எம்.என்.ராய் காங்கிரசிலே வெறும் தலைவராக தேர்ந்தெடுக்கப்படவில்லையானால், இக்காங்கிரஸ் உலகை நம்பி பாட்டாளி மக்கள், தொழிலாளி மக்கள் எப்படி வாழ முடியும் என்று கேட்கிறோம். இத்தகைய நிலைமை அதாவது சென்ற ஆண்டு சமதர்மத்தை ஆதரித்த மக்கள் இன்று அதை விடுத்து இவ்வாண்டும் காந்தியத்தை ஆதரித்ததின் காரணம் – ஒன்று சமதர்மத்தைவிட காந்தியம் சிறந்ததென்று கண்டிருக்க வேண்டும் அல்லது அவர்கள் சுயமாகச் சிந்திக்கும் ஆற்றல் அற்றவர்களாயிருத்தல் வேண்டும். முந்திய காரணத்தைவிட பிந்திய காரணமே இம்மாறுதலுக்கு ஏற்றதாயிருக்கும் என்று கருதுகின்றோம்.


ஏனென்றால், இவர்களுக்கு சுயமாகச் சிந்திக்கும் ஆற்றலும் உரிமையுமிருந்திருந்தால், காங்கிரஸ் மந்திரிகள் இருந்த காலத்திலும், அவர்கள் வெளியேறிய காலத்திலும், இந்திய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் காங்கிரஸ் சமதர்மிகள் கைது செய்யப்பட்டு தண்டிக்கப்பட்டதைக் கண்டித்து ஒரு தீர்மானமாவது நிறைவேற்றியிருக்க மாட்டார்களா? என்பதை பொதுமக்கள் சிந்தித்துப்பார்க்கக் கோருகிறோம். சுயமாக சிந்தித்துப் பார்க்க ஆற்றல் இல்லாததற்குக் காரணம், அதற்கு ஏற்ற அறிவு இல்லாததே ஆகும். ஏன் நாம் இவ்வாறு சொல்லுகிறோம் என்றால், உண்மையிலே கல்வி கற்றவன் கற்றதின்படி நடப்பவன் என்று சொல்லப்படுமானால், பள்ளிக்கூடத்தில் மாணவர்களுக்கு சூரிய கிரகணம், சந்திர கிரகணம், பூமியின் நிழல் விழுவதினால்தான் உண்டாகின்றன என்று உபகரணங்களுடன் விளக்கிக் காட்டிவிட்டு மேற்படி கிரகணத்தன்று பாம்பு சூரியனைத் தீண்டிற்று என்ற கதையை நம்பி அதற்காகப் பரிகாரம்தேட முற்படுவானோ? என்பதே. ஆகவே, துரதிர்ஷ்டவசமான, இந்நாட்டிலேதான் கல்விக்கும், வாழ்க்கைக்கும் சம்பந்தமில்லாதிருந்து வருகிறதென்று சொன்னால் ஒருநாளும் தவறாகும் என்று நாம் கருதவில்லை.


ஒருவன் எவ்வளவுதான் கல்வி கற்றாலும், தனது மனதிலுள்ள மூடநம்பிக்கையை அகற்றுவதேயில்லை. என்று நம்நாட்டவர் தாம் கற்ற கல்வியறிவைக் கொண்டு தாமே சிந்தித்து ஒரு முடிவுக்கு வரத்துணிவு கொள்கின்றனரோ, அன்றுதான் இந்நாட்டு மக்களின் வாழ்வு உயரும்.


மனிதனுக்கு அறிவு கல்வி கற்றதினால்தான் அதாவது எழுதப்படிக்கத் தெரிந்ததினால்தான் ஏற்படுகிறதென்பதை நாம் ஒப்புக்கொள்வதில்லையென்றாலும், இம்மாகாண மாஜி முதலமைச்சர் சமீபத்தில் ஆத்தூரில் நடைபெற்ற மாகாண காங்கிரஸ் மாநாட்டில் எழுத்தறிவு இயக்கத்தை ஆரம்பித்து வைக்கையில் “நமது நாட்டில் எழுத்தறிவு குறைவாயிருந்தாலும் கல்வியிலும் உண்மையான அறிவிலும் நாம் மற்ற நாடுகளுக்கு எள்ளளவும் குறைந்தவர்களில்லை. உலக விஷயங்களைத் தவிர வேதாந்தம், தத்துவம் இவையெல்லாவற்றிலும் கூட நம் நாட்டில் எழுதப்படிக்கத் தெரியாதவர்கள் அறிவடைந்திருக்கிறார்கள்” என்று குறிப்பிட்டிருப்பதை நம்மால் ஒப்புக்கொள்ள முடியவில்லை. ஆனால், ஒன்றை மட்டும் ஒப்புக்கொள்ளலாம்.


அதாவது திண்ணை வேதாந்தம் பேசுவதிலும், சோம்பேறி தத்துவம் பேசுவதிலும், நம் நாட்டவர்களைத் தோற்கடிக்க வேறு எந்த நாட்டவர்களாலும் முடியாது என்பது. அறிவு, எழுதப்படிக்கத் தெரிந்துவிட்டதனால் மட்டும் ஏற்பட்டு விடுமென்று எவரும் படிக்கக் கருதமாட்டார்கள். எழுதப்படிக்கத் தெரிந்து கொள்வது அறிவை வளர்க்க ஒரு கருவியே தவிர வேறொன்றுமில்லை.


மனுசனுக்கு அறிவு பல வகைகளினாலும் ஏற்படுகிறதென்பதை எவரும் மறுக்க மாட்டார்கள். அவனது அனுபவத்தினாலும், கேள்வியினாலும் அறிவு ஏற்படுகிறதென்பதை எவரும் ஒப்புக்கொள்வார். ஆனால், எழுதப்படிக்கத் தெரிந்துகொள்வதினால், பல அறிஞர்களது அனுபவத்தையும், அவர்களது கருத்துகளையும் அறிந்துகொள்ள ஏதுவுண்டாகிறதென்ற ஒரு காரணமே தவிர வேறொன்றுமில்லை. ஆகவே, ஒருவன் அதிக அறிவு பெற்றிருக்க வேண்டுமானால், எழுதப்படிக்கத் தெரிந்திருக்க வேண்டுமென்பதோடு அக்கருவியை எவ்வளவுக்கெவ்வளவு பயன்படுத்துகிறானோ அவ்வளவுக்கவ்வளவு அறிவைப் பெறுகின்றான் என்பது நன்கு விளங்கும்.


எனவே, தோழர் ஆச்சாரியார் சொல்லுவதுபோல் நம் நாட்டுமக்களில் பெரும்பாலோர் எழுதப்படிக்கத் தெரியாதவர்களாக இருந்தாலும், உண்மையாக அறிவைப் பெற்றிருக்கிறார்கள் என்பது உண்மையானால், பிறப்பினாலே ஒருவன் உயர்ந்தவன், மற்றொருவன் தாழ்ந்தவன், தீண்டப்படுபவன், தீண்டப்படாதவன் என்று பாகுபாடு பிரித்து வைத்திருப்பதையும், ஒரு சாராரை பூதேவர் என்றும் மற்றொரு சாராரை அரக்கர்களென்றும் சொல்லப்பட்டிருப்பதையும் தங்களைத் தாசிமகன், வைப்பாட்டிமகன் என்று சொல்லியிருப்பதையும் பொறுத்துக் கொண்டிருப்பார்களா? என்று கேட்கிறோம்.


தோழர் ஆச்சாரியார் இவ்வாறு கூறியிருப்பதிலிருந்து, ஒவ்வொருவரும் எழுதப் படிக்கத் தெரிந்து கொண்டுவிட்டால், எல்லோரும் சமத்துவம், சுதந்திரம் கோர முன்வந்துவிட்டால் என்ன செய்வது என்ற அச்சத்தினால், எழுதப்படிக்கத் தெரிந்தவர்களை விட அது தெரியாதவர்களே அறிஞர்கள் என்று சொல்லிவிட்டால் படிப்பைப்பற்றி மற்ற சமுகத்தார் கவலை கொள்ள மாட்டார்கள், ஒரு குறிப்பிட்ட சமுகமே கல்வி கற்று பிறரை என்றென்றும் அடிமைகொண்டு வாழலாம் என்ற எண்ணத்தினால் அவ்வாறு சொல்லியிருக்க வேண்டுமென்பதை வாசகர்களே அறிந்து கொள்வார்கள். தோழர் ஆச்சாரியார் இதோடு நின்றிருந்தால் அவரது தைரியத்தைக் குறித்து பாராட்டுவோம்.


ஆனால், அதே தோழர் ஆச்சாரியார் மற்றோரிடத்தில் முதியோர் கல்வியைப் பற்றிப் பேசுகையில் “மக்களே நீங்கள் படிப்பற்று இருக்கிறீர்கள்! இது தகுமா? முறையா? உங்கள் தற்குறித்தனத்தை ஓட்டுவதே கடமையாகவன்றோ யாவருக்கும் இருக்க வேண்டும்” என்று முதலைக்கண்ணீர் வடிப்பதேன்? இது யாரை ஏய்க்க என்று கேட்கிறோம்.


இவரது முன்னுக்குப் பின் முரணான வாதத்தை பொதுமக்கள் அறியார் என்ற எண்ணத்தினால் இவ்வாறு பிதற்றித் திரிகிறாரா? அல்லது தாம் முன் காட்டிய தைரியம் கோழைத் தனமானது என்பதைக் காட்டிக் கொள்கிறாரா? என்று பொதுமக்கள் கருதுவர் மற்றும் தோழர் ஆச்சாரியார் ஆத்தூர் பேச்சில், “மற்ற நாடுகளில் பிச்சையெடுப்பவர்கள் ஏமாந்தால் திருடுவார்கள், ஏமாறாவிட்டால் பிச்சையெடுப்பார்கள். நமது நாட்டில் தத்துவமும், வேதாந்தமும் தெரியவேண்டுமானால் நாம் பிச்சைக்காரர்கள் சொல்வதைக் கேட்டுத் தெரிந்துகொள்ளலாம்” என்று பேசியிருக்கிறார். இவர் பிச்சைக்காரர்களுக்காக இவ்வளவு தூரம் வக்காலத்துப் பேசுவதின் ரகசியம் தமது வகுப்பைச் சேர்ந்தவர்களின் குலத்தொழிலாகிய பிச்சையெடுக்குந் தொழிலுக்கு மதிப்புக்கொடுக்கவே என்று பொதுமக்கள் கருதுவர். ஏன்? “முட்டிபுகும் பார்ப்பரகத்தை எட்டிப் பாரோமே” என்ற கவி அரசர் கம்பர் கூறியிருப்பதினால் அறிக. அதைக்குறித்து நமக்கு கவலையில்லை.


ஆனால் தத்துவமும் வேதாந்தமும் இப்பொழுது என்ன அவசியம் என்று கேட்கிறோம். தத்துவம் பேசிப் பேசித்தானே உலக ஜனத்தொகையில் அய்ந்தில் ஒரு பகுதியினராய் நாமிருந்தும் அன்னியருக்கு அடிமையாயிருக்கிறோம். வேதாந்தம் பேசிப் பேசித்தானே நம் நாட்டவர் சராசரி 21/2 அணா சம்பாதித்து வருகின்றனர். எனவே, நம்மவர்கள் உலகோர் எள்ளி நகைக்கும் அளவில் கேவல நிலைமையிலிருக்க, தத்துவத்தைக் குறித்தும் வேதாந்தத்தைக் குறித்தும் பேசுவது உண்மையிலே நாட்டின் முன்னேற்றத்தில் மக்களின் வாழ்வின் உயர்வில் அக்கறையுற்றவர்கள் செய்கையாகுமா? என்று கேட்பதோடு இவ்வாறு பேசித்திரியும் கூட்டத்தாரின் காந்தியத்தினால், இந்நாடு எந்நாளாவது சுதந்திரம் அடையுமா? மக்கள் விடுதலை பெறுவாரா? என்று கேட்கிறோம். கடைசியாக, சுதந்திரத்தோடு சுயமரியாதையோடு வாழ வேண்டுமென்று கருதுகிறவர்கள் காந்தியத்தை வெட்டிப் புதைப்பதோடு, உண்மையிலே சுதந்திரத்துக்கும், சுயமரியாதைக்கும் போராடும் இயக்கத்தில் சேர்ந்து தொண்டாற்ற முன்வரக் கோருகிறோம்.


– தோழர் பெரியார், குடிஅரசு – தலையங்கம் – 18.02.1940

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *