நீதிக்கட்சியின் மத்திய காரியாலயத் திறப்பு விழா

Print Friendly, PDF & Email

சர். எ.டி.பி. திறந்து வைத்தார்


ராயப்பேட்டை பைக்ராப்ட்ஸ் தெருவில் நிறுவப்பட்டிருக்கும் தென்னிந்திய நல உரிமைச் சங்கத்தின் மத்திய காரியாலயத்தின் திறப்பு விழா வைபவம் நேற்று நடைபெற்றது.


ஏராளமான மக்கள் கூடியிருந்தனர். நீதிக் கட்சியைச் சேர்ந்த பழைய தலைவர்கள் எல்லாம் ஒன்றுகூடியிருந்தனர். சர்.ஏ.பி. பாத்ரோ, குமாரராஜா முத்தைய செட்டியார், சர்.ஏ.டி. பன்னீர்செல்வம், சர்.கெ.வி. ரெட்டிநாயுடு, எஸ். முத்தைய்ய முதலியார், ராவ் பகதூர், என்.ஆர். சாமியப்ப முதலியார், பெரியார் ஈ.வெ.ராமசாமி முதலியவர்கள் வந்திருந்த பிரமுகர்களில் சிலராவர்.


மேற்படி வைபவத்திற்குத் தலைமை வகிக்கும்படி குமாரராஜா முத்தைய செட்டியார் அவர்களை பெரியார் கேட்டுக்கொண்டார்.


அதன்படி குமாரராஜா அவர்கள் தலைமை வகித்து சொற்பொழிவாற்றியபோது குறிப்பிட்டதாவது:-


இவ்வைபவமானது நமது கட்சியில் ஒரு புதிய உணர்ச்சியையும் எழுச்சியையும் உண்டுபண்ணியிருக்கிறது. தற்பொழுது இது ஒரு வாடகைக் கட்டடமாயிருந்தபோதிலும் விரைவில் மத்திய காரியாலயத்திற்குச் சொந்தமான ஒரு கட்டடம் ஏற்படும் என நம்புகிறேன்.


இன்று நமது கட்சிக்குப் பெரியார் தலைமை தாங்கியிருப்பதினால் ஆயிரக்கணக்கான மக்கள் கூடியிருப்பதை நாம் காண்கிறோம். இது மட்டும் போதாது, லட்சக்கணக்கான மக்கள் கூடவேண்டும். ஆயிரக்கணக்கான அங்கத்தினர்களைச் சேர்க்க வேண்டும். இதுதான் ஒவ்வொரு தமிழனுடைய கடமையாகும்.


ராவ்பகதூர் என்.ஆர். சாமியப்ப முதலியார் அவர்களை நீதிக்கட்சிக் கொடியை ஏற்றி வைக்கும்படி தலைவர் கேட்டுக்கொண்டார். அதன்படி அவர் நீதிக்கொடியை ஏற்றி வைக்கையில் கொடியின் லட்சியத்தை விளக்கி தமிழர்கள் எல்லோரும் ஒன்றுபட்டு மேற்படி கொடியின் கீழ் நின்று பணியாற்ற வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.


மத்திய காரியாலயத்தைத் திறந்து வைத்து சர்.ஏ.டி.பன்னீர்செல்வம் அவர்கள் பேசுகையில் குறிப்பிட்டதாவது:-


பல வருடங்களுக்கு முன்னமே நமது கட்சி லட்ச ரூபாயில் ஒரு கட்டடத்தை வாங்கியிருக்கிறது. நிர்வாகக் குறைவினால் நாம் அதை இழக்க நேரிட்டது.


இப்பொழுது மீண்டும் கட்டடம் தோற்றுவிக்கவேண்டும் என்ற எண்ணத்தின் மீது இங்கு கூடியுள்ளோம். பொதுமக்களிடம் காத்திருக்கும் ஆர்வமும் அவர்களுக்கு நம்மிடமிருந்து வரும் அன்பும் மேற்கண்ட காரியத்தை வெற்றியுறச் செய்யும் என நம்புகிறேன்.


விடுதலைபெற 4 கோடி திராவிட மக்களும் நீதிக்கட்சியில் சேர்ந்துவிட்டால் காங்கிரசைவிட நீதிக்கட்சி பலம் பொருந்தியதாக்கிவிடலாம் என்று பேசி, கட்டிட நிதிக்கமிட்டி ஒன்று உடனே நிறுவ வேண்டும் என்று கடைசியாகக் கேட்டுக்கொண்டு தமது புதிய பதவியைக் குறித்து பேசுகையில் தாம் தமிழன்பர்களையும், சகாக்களையும் விட்டுப்பிரிய வேண்டியதற்காக வருந்துவதாகவும் தமது புதிய பதவியிலும் தமிழர் நன்மைக்காக உதவ முடியுமெனக் கருதுவதாகவும் தெரிவித்ததார்.


சர்.கே.வி. ரெட்டிநாயுடு அவர்கள் பேசுகையில் குறிப்பிட்டதாவது:-


“இந்து – முஸ்லிம் பிரச்சினை எவ்வளவு முக்கியமானதும், தீர்க்கப்பட வேண்டியதும் என பிரிட்டிஷ் சர்க்கார் கருதுகிறார்களோ அதுபோலவே பார்ப்பனர், பார்ப்பனரல்லாதார் பிரச்சினையும் முக்கியமானதும், தீர்க்கப்படவேண்டியதுமாகும் என பிரிட்டிஷ் சர்க்கார் உணரும்படி செய்ய வேண்டியது நமது கடமையாகும்.
ராவ் பகதூர் எம்.சி. ராஜா அவர்கள் பேசுகையில், தாழ்த்தப்பட்டோர் நீதிக்கட்சியை பூரணமாக ஆதரிப்பதாக குறிப்பிட்டார்.


ஜனாப் பி. தாவுத்ஷா பேசுகையில், முஸ்லிம்களும், முஸ்லிம் லீக் மெம்பர்களும், நீதிக்கட்சியுடன் ஒத்துழைப்பதோடு ஆதரிப்பதாகவும் குறிப்பிட்டார்.
தோழர் எஸ். முத்தையா முதலியார் பேசுகையில் தமிழர்கள் எல்லாம் ஒற்றுமையுடன் இருந்து போராட வேண்டுமெனக் கேட்டுக்கொண்டார்.


பெரியார் ஈ.வெ. ராமசாமி அவர்கள் பேசிவிட்டு, குமாரராஜா எம்.ஏ முத்தைய செட்டியார் அவர்களை தலைவராகக் கொண்ட கட்டிட வசூல் நிதிக் கமிட்டி ஒன்று நிறுவியிருப்பதாகத் தெரிவித்தார்.


மேற்படி நிதிக்காக அவ்விடத்திலேயே பணவசூல் செய்யவேண்டும் என சர்.ஏ.டி. பன்னீர்செல்வம் அவர்கள் கேட்டுக்கொண்டதற்கிணங்க திருவாட்டிகள் பண்டிகை நாராயணி அம்மாளும், மலர்முகத்தம்மாளும் வசூல் செய்தார்கள். ரூபாய் 43-9-2 பை வசூலாயிற்று.


பிறகு பெரியார் படத்தை குமாரராஜா எம்.ஏ. முத்தைய செட்டியார் அவர்கள் திறந்துவைத்து கூட்டம் கலைந்ததென தெரிவித்தார்.


– குடிஅரசு – செய்தி – 11.02.1940

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *