நீதிக் கட்சி நிலையத் திறப்பு விழா

Print Friendly, PDF & Email

“இன்று நமது கட்சிக்குப் பெரியார் தலைமை தாங்கியிருப்பதினால் ஆயிரக்கணக்கான மக்கள் கூடியிருப்பதை நாம் காண்கிறோம்” என சென்னை ராயப்பேட்டை பைக்ராப்ட்ஸ் தெருவில் நிறுவப்பட்டிருக்கும் தென்னிந்திய நல உரிமைச் சங்கத் திறப்பு விழாவிற்குத் தலைமை வகித்த செட்டிநாட்டு குமாரராஜா எம்.ஏ. முத்தைய செட்டியார் அவர்கள் பேசுகையில் குறிப்பிட்டிருப்பதிலிருந்து பெரியார் நீதிக்கட்சியினால் நலமடைந்தாரா? பெரியாரால் நீதிக்கட்சி நலமடைந்ததா? என்ற உண்மையை பொதுமக்கள் இப்பொழுதாவது நன்கு உணர்ந்திருப்பார்கள் என்றே நம்புகிறோம். 500 அடி ஆழத்தில் நீதிக்கட்சியை புதைத்து விட்டோம் இனி இந்நாட்டை நாங்கள் ஆண்டால் ஆளுவோம் இல்லையேல் வெள்ளையனுடைய துப்பாக்கிமுனை ஆளும் என ஆணவமாக, இறுமாப்பாக பேசியவர்கள் இன்று நீதிக்கட்சி என்று ஒன்றிருக்கிறதென்பதைத் தெரிந்து கொள்ளவும், ஆயிரக்கணக்கான மக்கள் கூட்டங்கூடி நீதிக்கட்சியை ஆதரிக்கின்றனரே என்று வயிறு எரியவும் செய்தவர் யார்? என்பதை நாம் சொல்லாமலே வாசகர்கள் விளங்கிக் கொள்வார்கள் என நம்புகிறோம்.


நிற்க, பிறிதொரு பக்கத்தில் நீதிக்கட்சியின் மத்திய காரியாலயம் சென்னையில் வாடகை கட்டடத்தில் திறந்து வைத்த வரலாறு வெளிவருகிறது. அதைக் காணும் ஒவ்வொருவரும் உண்மையிலே மனம் உருகாமலிரார் என்றே நம்புகின்றோம். ஏன்? 20 வருடமாக நாடாண்ட கட்சி, கட்சியின் பேரால் எத்தனையோ பேர் பேரும் புகழும் பெற்றிருக்க இன்று வாடகை வீட்டில் காரியாலயம் துவக்கப்பட வேண்டியதாயிற்றென்றால் உண்மையான கட்சி அபிமானிகள் உள்ளம் உருகாமலிருப்பார்களா என்று கேட்கிறோம். அன்று அதாவது 20 வருடங்களுக்கு முன் நீதிக் கட்சிக்கு – பார்ப்பனரல்லாதார் கட்சிக்கு, நாட்டிலே எங்கு பார்த்தாலும் செல்வாக்கும் ஆதரவுமிருந்து வந்ததோடு லட்ச ரூபாயில் கட்டடமும் சென்னையிலே பெற்றிருந்தது போக இன்று எதிரிகள் நகைப்புக்கேற்றாற் போல் கட்சித் தலைவர்கள் என்று சொல்லிக்கொள்பவர்கள் கட்சியின் பேரால் பலன் அனுபவித்தவர்கள் எல்லாம் மூலை பார்த்து பதுங்கிக்கொள்ளவும், கட்சிக்குச் சொந்தமாயிருந்து வந்த லட்ச ரூபாய் கட்டடமும் ஏலத்தில் போகவுமான நிலைமை வந்ததேன் என்று சிந்தித்துப் பார்ப்போமேயானால் பெரியார் அடிக்கடி பொதுக்கூட்டங்களில் சொல்லிவருவது போல, அன்று மக்கள் பார்ப்பனியத்தினால் சுயமரியாதையிழந்து தலைநிமிர்ந்து நடக்க முடியாத நிலையிலிருந்து வந்ததினாலே எத்தகைய தியாகத்தைச் செய்தாயினும், எதைக் கொடுத்தாயினும் தமது உரிமையைப் பெறவேண்டும். சுயமரியாதையைக் காப்பாற்ற வேண்டும் என்ற காரணத்தினால் அவ்வளவு ஆர்வத்தோடு இருந்தார்கள் என்பதும், இன்றுள்ளவர்களோவெனில், அத்தகைய கொடுமையைத் தெரிந்துகொள்ள முடியாதிருப்பதினால்தான் இன்று இவ்வளவு உற்சாகக் குறைவாயிருக்கிறார்கள் என்பதும் நன்கு விளங்கும். ஆனால், கடந்த இரண்டரையாண்டு காங்கிரஸ் கட்சியானது, தூங்கிக்கிடந்த தமிழர்களை, பார்ப்பனரல்லாதார்களைத் தட்டி எழுப்பி பார்ப்பனியத்தின் நிழலிலே உனக்கு இந்தக் கதி என்றால் உண்மையான பார்ப்பனியம் தோன்றிவிட்டால் உன் கதி என்னாகும் என்று சித்தரித்துக் காட்டிவிட்டதினாலே, மக்கள் பழையபடி அதாவது 20 வருடங்களுக்கு முன் எத்தகைய உணர்ச்சி பெற்று ஆர்வங்கொண்டு விளங்கினார்களோ அதே அளவுக்கு இன்று முன்வந்து விட்டார்கள் என்பதை சென்னையில் நடைபெற்ற மேற்படி திறப்பு விழா வைபவம் சித்தரித்துக் காட்டுகிறதென்றால் ஒரு நாளும் மிகையாகாது என்றே கருதுகிறோம்.


அன்று நமது நீதிக்கட்சி தோன்றுவதற்கு முன், பார்ப்பனரல்லாத பெருங்குடி மக்கள் தங்கள் வாழ்க்கை நிலைமையை வகுக்க உரிமையற்று, தங்கள் நிலையை உயர்த்த – சுயநிர்ணயஞ்செய்ய சுதந்திரமற்று இருந்த காலையில் டாக்டர் டி.எம். நாயர் பெருமானும், சர் தியாகராய பெருமானும் எப்படி ஒரு நாட்டாருக்கு – தங்களுக்கு வேண்டியவைகளை வகுக்க, நிர்ணயிக்க தங்களுக்கு சுயநிர்ணயம் வேண்டுமென்று கோர உரிமையிருக்கிறதோ அதுபோல ஒவ்வொரு வகுப்பாருக்கும் அந்த உரிமையைக் கோர நியாயமிருக்கிறது என்று வழக்காடி பார்ப்பனரல்லாதார் தங்கள் வாழ்க்கையை, தங்கள் நிலையை வகுக்கும் சுயநிர்ணயத்தை நீதிக்கட்சியின் மூலமாக அதை நிலைநாட்டினார்கள்! அதுபோலவே, இன்று இந்தியாதான் தனது நாட்டின் எதிர்கால திட்டத்தை வகுக்க, நிர்ணயிக்க உரிமை கொண்டதென கூறுகையில், தமிழ்நாட்டின், திராவிட நாட்டின் எதிர்காலத் திட்டத்தை, நிலைமை வகுக்க, நிர்ணயிக்க தமிழ் நாட்டுக்குத்தான் உரிமையுண்டென்று பெரியார் கர்ஜித்துக் கொண்டுவருகிறார். அதை மக்களும் உணர்ந்து புத்துயிர் பெற்றெழுந்து நீதிக்கட்சியின் மத்திய காரியாலயம் ஒன்றை வாடகைக் கட்டடத்திலாவது நிறுவி ஆக்கவேலை செய்ய முன்வந்து விட்டனர் என்றே கருதுகின்றோம்.


உண்மையிலேயே தமிழ் மகன் சுயநிர்ணய உரிமையைப் பெற்றிருந்தால் தன்னைப் பார்ப்பனியத்துக்கு அடிமைப்படுத்தி தன்னை தாசிமகன், வேசிமகன், ‘சூத்திரன்’ என்று அழைத்துக்கொள்ள வெட்கப்படாமலிருப்பானா என்று கேட்கிறோம். இந்த இழி தன்மை, மானங்கெட்ட வாழ்வு ஒழிய வேண்டுமானால் தமிழனுக்கு சுய நிர்ணய உரிமையிருத்தல் வேண்டும் என்பது நன்கு விளங்கும். அதுபோலவே, தமிழ்நாடும், பிற நாடுகளுக்கு அதாவது ஆங்கிலேய நாடுகளுக்கு அடிமையாயிருப்பது போய் வடநாடுகளுக்கு அடிமையாயிருத்தலினின்று விடுபட வேண்டுமானால் தமிழ்நாட்டுக்கு சுய நிர்ணய உரிமையிருத்தல் வேண்டும் என்பது பளிச்சென்று விளங்கும். இதை ஒவ்வொரு தமிழ் மகனும் திராவிடரும் உணர்ந்து கொண்டால், சர். பன்னீர்செல்வம் அவர்கள் சொன்னது போல் 4 கோடி திராவிட மக்களும் நீதிக்கட்சியில் சேர்ந்துவிட்டால் சர். பன்னீர்செல்வம் அவர்கள் இங்கிலாந்திலிருந்து இந்திய திரும்பி வருகையில் நீதிக்கட்சியின் மத்திய சபைக்கு சொந்தமாக லட்ச ரூபாய் பெறுமானமுள்ள ஒரு கட்டடமட்டுமல்ல, தமிழகமே அதற்குச் சொந்தமாயிருத்தலை அவர் காண்பார் என்பது உறுதி! உறுதி!! உறுதி!!!


– தோழர் பெரியார், குடிஅரசு – தலையங்கம் – 11.02.1940

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *