பூகோளப்பட பித்தலாட்டம்

Print Friendly, PDF & Email

தோழர்களே, இன்று இம்மகாநாட்டைத் திறந்து வைக்க நேர்ந்ததை நான் ஒரு பெருமையாய் கருதுகிறேன்.


இதைத் திறந்து வைக்கும்போது சம்பிரதாயத்துக்காவது நான் சில வார்த்தைகள் பேச வேண்டியவனாய் இருக்கிறேன்.


அதில் முக்கியமாக உங்கள் லீக் சங்கங்களைப் பற்றிப் பேச ஆசைப்படுகிறேன். இந்தியா போன்ற நாடுகளில் மக்களுக்கு விமோசனம் ஏற்பட வேண்டுமானால் இம்மாதிரி தனித்தனி சங்கங்கள்தான் முக்கியமாய் வேண்டியதாகும்.


இந்தியாவில் லட்சியம் ஏது?


இந்த நாடு ஒரு கதம்பமாகும். இந்த நாட்டுக்கென்று பொதுவாக ஒரு லட்சியமும் இல்லை. ஏனென்றால் இங்கு பல சமயம் பல சமுதாயம். (நான் இங்கு சமுதாயம் என்பதை ஆங்கிலத்தில் உள்ள நேஷன் என்ற பதத்தின் கருத்தை வைத்து பேசுகிறேன்). ஒரு சமுதாயத்திற்குள்ளாகவே பல சமயமும் இருக்கின்றன. மற்றும் ஒரு சமயத்திற்குள்ளாகவே பல சமயமும் இருக்கின்றன. மற்றும் ஒரு சமயத்திற்குப் பல சமுதாயமுமிருக்கின்றன. அதுபோலவே ஒவ்வொரு சமுதாயத்திற்கும் தனித்தனி கலைகள் பழக்க வழக்கங்கள் இருக்கின்றன. இவைகளை அனுசரித்தே அவரவர்களது லட்சியங்களும் இருக்கின்றன. இந்நிலையில் இந்தியன் என்றால், இந்தியாவின் லட்சியம் என்றால் கையில் வலுத்தவன், சூழ்ச்சியின் தந்திரத்தில் அயோக்கியத்தனத்தில் மானமற்ற தன்மையில் வலுத்தவன். கட்டுப்பாட்டில் வலுத்தவன் ஆகியவர்களுக்குத்தான் தன்னை இந்தியனாக்கிக் கொள்ளவும் அவனது மேன்மைக்கும் நன்மைக்குமேற்ற லட்சியங்களே இந்தியலட்சியமாகவும் ஆகிவிடுகின்றன. ஆதலால்தான் ஒவ்வொரு சமயம், சமுதாயம், வகுப்பு, உள்வகுப்பு ஆகியவைகளும் தங்கள் தங்களுக்கு என்று ஸ்தாபனங்கள் ஏற்படுத்திக்கொண்டு பாடுபட்டாலல்லாது எல்லா மக்களுக்கும் நன்மையான காரியங்கள் ஏற்பட மாட்டாது என்கிறேன்.


தனி ஸ்தானங்கள் இல்லாமல் சமுகங்கள் முன்னேறுமா?


உதாரணமாக இந்தியாவில் உள்ள முஸ்லிம்கள் தங்களுக்கு என்று ஒரு லீக்கு அதாவது முஸ்லிம் லீக்கு ஏற்படுத்திக்கொண்டு இந்த 35 வருஷ காலமாக உழைத்து வந்திருக்காவிடில் இன்று இந்திய முஸ்லிம்களின் நிலை எப்படி இருந்திருக்கும் என்று யோசித்துப் பாருங்கள். பெரும்பாலான முஸ்லிம்கள் தீண்டப்படாதவர்களாக இருந்திருக்க மாட்டார்களா? கல்வி, பொருளாதாரம், சமுதாய சமத்துவம் முதலிய துறைகளில் அவர்களது யோக்கியதை மிக மிக பிற்பட்டதாக இருந்திருக்காதா?


அதுபோலவே மற்ற வகுப்பாரையும் எடுத்துக் கொள்ளுங்கள். தென் இந்தியாவில் திராவிட சமுதாயத்துக்கு என்று தென் இந்திய நல உரிமைச் சங்கம் என்பதான ஒரு ஸ்தாபனம் ஏற்பட்டு இந்த 25 வருட காலமாக உழைத்து வந்திருக்காவிட்டால் திராவிடர்களாகிய தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், துளுவு முதலிய பாஷைகளைப் பேசும் திராவிட சமுதாயத்தார்களுடைய நிலைமை எப்படி இந்திருக்கும் என்பதை சற்று சிந்தித்துப் பாருங்கள். ஆரியர்களது புராணக் கதைகளும், தர்ம சாஸ்திர நூல்களும் சொல்வதுபோல் திராவிடன் மனைவியை ஆரியனுக்குக் கொடுப்பதன் மூலம் மோட்சம் பெறலாம் என்கின்ற உணர்ச்சியில் மூழ்கி ஈன ஜாதியாய்ப் பிழைப்பதே மேன்மை என்று கருதிக்கொண்டு தங்களைத் தாங்களே தாசன் என்றும், சூத்திரன் என்றும் சொல்லிக் கொள்வதில் பெருமையும் திருப்தியும் அடைந்துகொண்டு சூத்திரனுக்கும் சண்டாளனுக்கும் விதித்துள்ள இழிவான வேலையை மாத்திரம் செய்து வாழ்ந்து கொண்டிருக்கும் சமுகமாகவல்லவா இருந்திருக்கும். இதுபோலவே திராவிட சமுதாயத்திலும் ஆரிய சூழ்ச்சியால் பிரிக்கப்பட்ட பல்வேறு வகுப்புகளில் ஷெடியூல் வகுப்பார் என்பவர்களும் நாடார் வகுப்பார் என்பவர்களும் மற்றும் பல வகுப்பாரும் கைத்தொழிலாளி வகுப்பாய் இருக்கும் காரணத்தால் கீழ் ஜாதியாய் மதிக்கப்படும் கொல்லு வேலை, நெசவு வேலை, எண்ணெய் வேலை, பாண்ட வேலை, வெளுப்பு வேலை, சிரைப்பு வேலை, வலை வேலை, காவல் காப்பு வேலை முதலாகிய முக்கியமான அதாவது ஜனசமுதாயத்திற்கு இன்றியமையாத உதவிகளை செய்துவரும் குடிமக்களைச் சேர்ந்த வகுப்பார்களுக்கெல்லாம்கூட இன்று அவரவர் வகுப்புகளுக்கு என்று சங்கமும் ஸ்தாபனமும் முயற்சியும் இல்லாதிருக்கு மானால் அவர்கள் பெரிதும் இன்று திராவிட சமுதாயத்திற் குள்ளாகவே ஒருவருக்கொருவர் இன்றைய தினத்தைவிட தீண்டப்படாத மக்களாகவும் புழங்கக்கூடாத மக்களாகவும் ஆக்கப்பட்டிருக்க மாட்டார்களா என்று சிந்தித்து பாருங்கள்.


சங்கங்களே விடுதலைக்குச் சாதனம்


ஆகையால் இந்தியா போன்ற பல சமயம் , பல பிரிவு, பல வகுப்புகளாக உள்ள நாட்டிற்கு இம்மாதிரி சங்கங்களேதான் விடுதலையும் சுயமரியாதையும் அளிக்கக் கூடிய சாதனமாகும் என்பதை மறுபடியும் வலியுறுத்திக் கூறுகிறேன். இதனால் நம்மை யாராவது சமயவாதியென்றோ, சமுதாயவாதி என்றோ, வகுப்புவாதி என்றோ கூறுவார்களானால் அவர்களைப் பற்றி நீங்கள் சிறிதும் தயங்காமல் நேருக்கு நேராகவே “நீங்கள் கடைந்தெடுத்த அயோக்கியர்கள்” என்று சொல்லிவிடுங்கள். அயோக்கிய பட்டத்தை ஏற்றுக் கொள்ளத்தயங்குவார்களானால் ‘நீங்கள் வடிகட்டின மடையர்களாகவாவது ஆவீர்கள்” என்று சொல்லிவிடுங்கள். இப்படிச் சொல்லுவதில் சிறிதும் தயங்காதீர்கள்.


இப்படிப்பட்ட அயோக்கியர்களும் மடையர்களும் இவ்விழி மொழிகளையும் பெற்ற பிறகுகூட நம்மை ஏய்க்க தேசமென்றும், தேசாபிமானமென்றும், பொதுவிடுதலை என்றும், சுயராஜ்ஜியம் என்றும் பேசி மயக்க வருவார்கள். அப்பொழுதும் நாம் தைரியமாக இருந்து எனது சமுதாயமும். எனது வகுப்பும், எனது நாடும், விடுதலையும் சுதந்திரமும் பெற்ற பிறகுதான் இந்தியாகவோ இந்தியனோ உலகமோ விடுதலை பெற பாடுபடுவேன் என்று சொல்லி அனுப்பிவிடுங்கள். இந்திய விடுதலை, இந்திய சுயராஜ்ஜியம் என்பது நம் நாட்டு மக்களின் முன்னேற்றத்தையும் மனிதத் தன்மையையும் கொல்லும் ஒரு கொடிய நோயாகும். அந்த நோயையே அடியோடு ஒழித்தாலல்லது நமது முற்போக்கும் மானமும் உயிர் நிலைக்காது. ஆதலால் உறுதியுடன் இருந்து அந்நோய்களை ஒழித்துவிட்டு உங்களது சமுதாய வகுப்பு ஸ்தாபனங்களைக் காப்பாற்றுங்கள்.


பூகோளப்பட பித்தலாட்டம்


ஒன்றுக்கொன்று பழக்க வழக்க சமுதாயத்தில் மாறுபட்ட பல நாடுகளைச் சேர்ந்து படத்தில் ஒன்றாய் எழுதிக்கொண்டு “இவையெல்லாம் நம் தேசம்” என்று சொல்லுகிற அயோக்கியர்கள் பல வகுப்பு, பல சமுதாய பல சமய பேதங்களையும் ஒருவரையொருவர் அடக்கி ஆளும்படி கீழ்மைப்படுத்தி, உழைப்பாளிகள் உழைப்பில் சோம்பேறிகள் வாழும்படி இருக்கும் அக்கிரம அயோக்கிய கொடிய முறைகளையும் ஒழித்து மக்களை ஒன்றாக்கிக்கொண்டு இப்படிச் சொல்கிறார்களா என்று யோசித்துப் பாருங்கள். இதுவரை இம்மாதிரியான பித்தலாட்டங்களுக்கும் வஞ்சகர்கள் சூழ்ச்சிக்கும் நாம் ஏமாந்து வாழ்ந்தது போகட்டும். இனி நாம் ஏமாந்துபோகக் கூடாதென்றே இவ்வளவு வலியுறுத்திச் சொல்லுகிறேன். ஆதலால்தான் ஒவ்வொரு சமுதாயமும் வகுப்பும் தங்கள் தங்கள் நலனுக்கு ஸ்தாபனம் ஏற்படுத்திக்கொண்டு அதையே அவர்களது ஜீவநாடியாகக் கருதி பலப்படுத்தி உழைக்க வேண்டும் என்று வேண்டுகிறேன்.


ஸ்தாபனத்தின் மதிப்பு


ஒரு ஸ்தாபனமென்றால் அச்சமுதாயத்தின் ஆதரவையும், அதன் அங்கத்தினர் எண்ணிக்கையும், அதில் உள்ள கட்டுப்பாட்டின் மேன்மையையும் பொறுத்துத்தான் மதிப்பிடத்தக்கதாகும். அந்த ஸ்தாபனத்தின் தலைவர்களிடம் அச்சமுதாய மக்களுக்கு இருக்கும் நம்பிக்கையும் பக்தியுமாகும். நம்பிக்கையும் பக்தியும் இல்லாத தலைவர்கள் உள்ள ஸ்தாபனம் கூட கட்டுப்பாடு இருந்தாலும் பலமான ஸ்தாபனமாக விளங்கும்.


பின்பற்றுவோர் இல்லாத காங்கிரஸ்


உதாரணமாக காங்கிரசை எடுத்துக் கொள்ளுங்கள், காங்கிரசின் சர்வாதிகாரி என்று சொல்லப்பட்ட காந்தியாரிடம் காங்கிரஸ்காரர்களுக்கு யாருக்காவது நம்பிக்கையோ பக்தியோ இருக்கிறதென்று நீங்கள் கருதுகிறீர்களா? ஜின்னா அவர்கள் சொல்வது போல் காந்தியாரின் ராட்டினத்திலோ, தக்கிளியிலோ, அவரது அந்தராத்மா சம்பாஷணைகளிலோ, அவர் கூறும் அகிம்சையிலோ யாருக்காவது, எந்தக் காங்கிரஸ்
அங்கத்தினருக்காவது நம்பிக்கையோ பக்தியோ இருக்கிறதென்று நீங்கள் சொல்லக் கூடுமா? முதலாவது தோழர்கள் நேருவுக்கோ, பிரசாத்துக்கோ, படேலுக்கோ, ராஜ கோபாலாச்சாரியாருக்கோ, சத்தியமூர்த்திக்கோ, உண்மையாக காந்தி கொள்கையிடம் நம்பிக்கை இருக்கிறதென்று சொல்ல முடியுமா என்று கேட்கிறேன். இவர்களும் இவர்கள் போன்ற பல காங்கிரஸ் பிரபலஸ்தர்களும் காந்தியாரை ஒரு பித்துக்கொள்ளி என்றே கருதிக் கொண்டிருக்கிறார்கள். தோழர்கள் இராமனாதன், சத்தியமூர்த்தி போன்றவர்கள் ஆயிரக்கணக்கான தடவை காந்தியாரின் புரட்டைப் பற்றி மேடைகளில் பேசியிருக்கிறார்கள். பேசிக்கொண்டுதான் இருக்கிறார்கள். இருந்தாலும் அது ஒரு கூட்டுக்கொள்ளை ஸ்தாபனமாய் நாணயமோ, யோக்கியமோ இருப்பதால் ஆளுக்காள் உதவி பண்ணிக்கொண்டு ஒருவர் புரட்டுகளையும் நாணயக் குறைவுகளையும் ஒருவர் மூடிவைத்து பேசிக்கொண்டு தனித்தனியாகச் சுயநலம் அடைந்து வருகிறார்கள். ஆகவே, ஒரு ஸ்தாபனமோ, நாணயமோ, யோக்கியமோ நல்ல கொள்கையோ இல்லாவிட்டாலும்கூட அதன் கட்டுப்பாட்டினாலும் தலைவர் என்பவருக்குக் கீழ்ப்படிவதனாலும் எவ்வளவு காரியம் சாதிக்க முடிகிறது என்பதைக் காங்கிரசைப் பார்த்து தெரிந்துகொள்ளுங்கள்.


ஜின்னாவின் பெருமை


இன்று இந்தியா கண்டம் பூராவும் ஜின்னா சாயபின் பெயர் அடிபடக் காரனமென்ன? அவர் 67 வருஷமாய் இருக்கிற ஜின்னாதானே. அவர் ஒரு சாதாரண மனுஷன்தானே. அவருக்குக் காந்திக்கு உள்ள விளம்பரத்தில் 100 இல் ஒரு பங்குகூட, அவருக்கு செய்யப்படவில்லையே. அவரைப் பற்றி எத்தனையோ ஆரியப் பத்திரிகைகள் விஷமப் பிரசாரமும் செய்துகொண்டு வந்திருந்தும் ஜின்னா எப்படி இன்று இவ்வளவு பெரிய மனிதரானார்? காந்தியாரும் காங்கிரஸ் தலைவர்களும் வலம் வந்து வணங்கிக்கொண்டு திரியும் காரணம் என்ன? ஒரு வைசிராயைக்கூட ஜின்னா ஒரு சாதாரண மனுஷனாகவே கருதுகிறார். கூப்பிட்டால் ஒழிய எந்த கவர்னர் வைசிராய் வீட்டையும் திரும்பிக்கூட பார்ப்பதில்லை. இந்த பெருமையும் கம்பீரமும் அவருக்கு எப்படி வந்தன. அவர் தன் இடம் எந்த அந்தராத்மாவின் சகாயமும் இருப்பதாக காட்டிக் கொள்வதில்லை. பட்டினி விரதம், பிரார்த்தனை வேஷம்? மவுன விரதம் ஒன்றுமே அவர் பின்பற்றுவதில்லையே. இவை எல்லாம் உங்களுக்கு தெரிந்ததுதானே. அப்படி இருக்க “35 கோடி மக்களின் ஏக பிரதிநிதித்துவ சபை” என்று பெருமை பாராட்டிக் கொள்ளும் காங்கிரசின் கோரிக்கைகளுக்கும் ‘தெய்விக சக்தி பெற்ற சர்வாதிகாரி’ என்று விளம்பரம் பெற்ற காந்தியாரின் சக்திக்கும் எதிராக முட்டுக்கட்டையாக இருக்கிறார் ஜின்னா என்று காங்கிரசுக்காரர்களே கூடிக் கூடி ஒப்பாரி இட்டு அழும்படியான நிலை அவருக்கு எப்படி ஏற்பட்டது? நன்றாய் சிந்தித்துப் பாருங்கள்.


இந்திய முஸ்லிம்கள் 81/2 கோடி பேரும் இரண்டொரு சுயநலமிகள் தவிர ஆண், பெண் அடங்கலும் ஜின்னாதான் எங்கள் தலைவர் என்று சொல்லி, அவரின் நிழலில் இருக்கிறோம். அவரைத் தவிர வேறு யாரையும் பின்பற்ற மாட்டோம், அவரது வாக்கே எங்களுக்கு அரசியலில் வேதவாக்கு என்று கோஷமிடுவதால்தானா? அல்லவா என்று கேட்கிறேன். இந்திய ஜனத் தொகையில் ஜின்னாவை உண்மையாக பின்பற்றுகிற ஜனங்களின் எண்ணிக்கையையும், காந்தியை உண்மையாக பின்பற்றுகிறவர் களின் எண்ணிக்கையும் கணக்கெடுத்துப் பார்த்தால் எது அதிகமாக இருக்குமென்று கருதுகிறீர்கள். காந்தியை பின்பற்றுவதாகச் சொல்லுகிறவர்கள் ஜின்னாவைப் பின்பற்றுகிறவர்களில் 3-இல் 4-இல் ஒரு பங்குகூட இருக்கமாட்டார்கள் என்பதோடு அந்த 3-இல் 4-இல் ஒரு பங்கு மக்களிலும் 100-க்கு ஒருவர் இருவர்கூட காந்தியையோ, காந்தீயத்தையோ உண்மையாய் நம்பி பின்பற்றுகிறவர்கள் இருக்கமாட்டார்கள். அப்படி யாராவது இருப்பவர்கள் தங்கள் தங்கள் சொந்த சுயநலத்தை கருதி காந்தி சிஷ்ய வேஷம் போட்டுக் கொண்டிருப்பார்களே ஒழிய, ஒரு பொதுநலத்தையும் உத்தேசித்தவர்களாய் இருக்க மாட்டார்கள். ஒரு சமயம் பார்ப்பனர்கள் வேண்டுமானால் தங்கள் தனிப்பட்ட சுயநலத்தையே பிரதானமாய்க் கருதாமல் தங்களது ஜாதி நலத்துக்காக காந்தியைப் பின்பற்றுகிறவர்கள்போல வேஷம் போட்டுக் கொண்டிருக்கலாம். ஆனால் ஜின்னாவைப் பின்பற்றுவதாய்ச் சொல்லுகிற முஸ்லிம்களில் 100-க்கு 993/4 பேர்கள் ஜின்னாவை உண்மையாய் பின்பற்றுகிறார்கள் என்பதோடு அப்படி பின்பற்றும் 993/4 பேர்களிலும், 100-க்கு 99 முக்காலே மூன்று வீசம் பேர்கள் தங்கள் தனிப்பட்ட சுயநலமின்றி முஸ்லிம் சமுக நலத்தையே பிரதானமாய் கருதினவர்களாய் இருக்கிறார்கள். அதனால்தான் ஜின்னா சாயபு இன்று இந்தியாவின் அரசியல் தலைமையில் உச்சஸ்தானத்தில் இருக்கிறார். இன்று இந்தியாவில் ஒரு பெரிய ஒன்றுபட்ட சமுகம் இருக்கிறது என்றால் அது முஸ்லிம் சமுகமாகத்தானிருக்கிறது. அவர்களுக்குத்தான் இமயமலை முதல் கன்னியாகுமரி வரை ஒரு ஸ்தாபனம், ஒரு தலைவர், ஒரு லட்சியம், ஒரு கட்டுப்பாடு இருந்து வருகிறது. அதோடு மாத்திரமல்லாமல் மெஜாரிட்டி வகுப்புகள் பிற்படுத்தப்பட்ட வகுப்புகள் முதலியவைகள்கூட காங்கிரசைவிட, காந்தியைவிட லீக்கையும் ஜின்னாவையும் நம்ப வேண்டியவர்களாக இருக்கும்படியாய் இருக்கிறது.


எல்லோரும் லீக்கை விரும்புகிறார்கள்


நம் தமிழகத்தில் ஏதோ இரண்டொரு கூலிகள் இந்துமகா சபையின் பேரால் லீக்கை குறை கூறி பார்ப்பனரிடம் கூலி பெறுவதாயிருந்தாலும் எல்லா இந்திய இந்துமகா சபை தலைவர்கள் காங்கிரசைவிட, காந்தியைவிட லீக்கினுடையவும் ஜின்னாவினுடையவும் ஒத்துழைப்பையே மேலென்று கருதுகிறார்கள். இது ஒரு பிரபல மாஜி இந்து மகாசபைத் தலைவரே என்னிடம் சொன்னார். 5 கோடி சமுகமாகிய தாழ்த்தப்பட்ட மக்கள் சமுதாயத்தின் தலைவர் அம்பேத்கர் அவர்களும் தங்கள் விடுதலைக்கும் மனிதத் தன்மைக்கும் லீக்குடையவும் ஜின்னாவுடையவும் ஒத்துழைப்பையே விரும்புகிறார்கள். சென்னை மாகாணத்தில் 17 வருஷ காலம் நல்லாட்சி நடத்திய தென் இந்திய நலவுரிமை சங்க ஸ்தாபனமும் காங்கிரசை சமுதாயத்திற்கு ஜென்ம விரோதி என்று கருதுவதோடு லீக்கினுடையவும் ஜின்னா வினுடையவும் ஒத்துழைப்பை பெரிதும் விரும்புகிறது.


ஆகவே, லீக் பெருமைக்கும் ஜின்னாவின் தலைமைக்கும் இவைகளைவிட வேறு என்ன ஆதரவு வேண்டுமென்கிறீர்கள். ஆதலால் திராவிட நாட்டு முஸ்லிம் சமுதாயமாகிய நீங்கள் உங்கள் ஸ்தாபனமும் உங்கள் தொண்டும் முஸ்லிம்களுக்கு மாத்திரமென்றில்லாமல் நீங்கள் உங்களை ஒரு மாபெரும் திராவிட சமுதாயமென்றும் எண்ணிக்கொண்டு திராவிடர்களின் கூட்டுறவுக்கும் ஒற்றுமைக்கும் பாடுபடுங்கள். சமயத்தில் நீங்கள் இஸ்லாமியர்களானாலும் சமுதாயத்தில் நீங்கள் திராவிடர்களாவீர்கள். அரசியலில் நம்மிருவருக்குள்ளும் லட்சிய வேறுபாடு இருக்க நியாயமில்லை. சமயத்துறையிலும், திராவிட சமயத்திற்கும் இஸ்லாம் சமயத்திற்கும் வெளி வேஷம் சடங்கு இவைகளில் மாறுதல் காணலாமே ஒழிய, கடவுள் தன்மை என்பதில் எவ்வித மாறுதலும் இல்லை. வெளி வேஷமும் சடங்கும் பிரதானமானதல்ல. அவை சீதோஷ்ண நிலைக்குத் தக்கபடி ஊருக்கு ஒருவிதம் இருக்கின்ற காரியமாகும். அன்றியும் அவை நாளாவட்டத்தில் மாற்றமடையக் கூடியதுமாகும். ஈஜிப்ட், துருக்கி, ரஷ்யா, இஸ்லாம்களின் வேஷமும் சடங்கும் இன்று எவ்வளவோ மாற்றமடைந்துவிட்டது. ஆதலால் அதற்காக நாம் அதிக கவலைப்பட வேண்டியதில்லை. எனவே, இந்நாட்டில் உள்ள இஸ்லாமியர் தாங்கள் திராவிடர்கள் என்கின்ற உணர்ச்சி பெற வேண்டும் என்பது நமது ஆசை. ஏனெனில் இந்நாட்டிலுள்ள இஸ்லாமியரும், தமிழரும் இன்று ஆரியரால் கீழ்மைப்படுத்தப்பட்டு துன்பமடைந்து இழிநிலைக்குப் போய்க் கொண்டிருக்கிறோம். நம்முடைய இந்நிலைக்கு ஆங்கிலேயர் காரணஸ்தர்கள் என்று நம்பிவிடாதீர்கள். ஆங்கிலேயர் அயோக்கியர்களாயிருந்தால் நம் நாட்டு ஆரியர்கள் 100-க்கு 100 பேர் எப்படி படித்திருக்க முடியும்? அவர்களுடைய வாழ்வு மாத்திரம் எப்படி சரீரத்தில் பாடுபடாமல் மேன்நிலையில் இருந்து கொண்டு உழைப்பாளியைவிட உயர்நிலையில் இருக்க முடியும்? அதுவும் அல்லாமல் நம் நாட்டில் சரீரத்தால் உழைத்தும் திராவிட மக்கள் உழைப்பெல்லாம் உழைக்காத கூட்டமாகிய ஆரியர்களுக்கே போய்ச் சேரும்படியாக எப்படி செய்திருக்க முடியும்? ஆகையால் நம் சமுதாய இயல், அரசியல், கல்வி இயல், பொருளியல் முதலியவற்றின் இழிநிலைக்கு ஆரியர்கள்தான் காரணஸ்தராவார்கள். அதிலிருந்து விடுபடாமல் நாம் இரு கூட்டமும் ஒத்துழைக்கவேண்டும்.


தற்கால அரசியல் நிலை


தோழர்களே! இதுவரை நான் ஸ்தாபனம் அதன் தலைவர் அதைச் சேர்ந்த மக்கள் ஆகியவை பற்றி பேசினேன். இனி தற்கால அரசியல் நிலையைப் பற்றி நான் பேச வேண்டுமென்று நீங்கள் ஆசைப்படுவீர்கள். அதைப் பற்றியும் சிறிது பேசுகிறேன். இன்று எங்கு பார்த்தாலும் அரசியல் பேச்சாக பேசப்பட்டு வருவது எது என்றால் 3 மாதத்திற்கு முன்னால் ஒழிந்து போய் மக்களால் மகிழ்ச்சிக் கொண்டாட்டமும் கொண்டாடி இனி மறுபடியும் வந்து விடக்கூடாதே என்று கருதிக் கொண்டிருப் பதற்கான காங்கிரஸ் மந்திரிசபை மறுபடியும் வந்து விடுமா என்பதைப் பற்றிய பேச்சேயாகும். நேரப்போக்கு பேச்சுக்களிலும் விவாதத்திற்கும் பந்தயம் கட்டிக் கொள்வதற்கும்கூட இந்தப் பேச்சே பெரிதும் நடந்து வருகிறது. அதாவது காங்கிரஸ் மந்திரிசபை மறுபடியும் ஏற்படுமா என்பதேயாகும். காங்கிரஸ்காரர்களிடத்தில் மக்களுக்கு ஒருவிதமான மானமோ, நாணயமோ இருக்கிறது என்று நினைத்துக் கொண்டிருக்கும் மக்களிடையில் இம்மாதிரி பேச்சு நிகழ இடமே இல்லை. ஏனெனில் என்ன காரணத்திற்காக காங்கிரஸ் மந்திரி வெளியாக்கப்பட்டார்களோ அல்லது விட்டுப்போனார்களோ அந்த காரணத்தில் ஏதாவது மாற்ற மேற்பட்டால்தான் காங்கிரஸ் மந்திரிகள் வரக்கூடியதாக இருக்கலாம்.
அப்படி இல்லாத நிலையில் காங்கிரஸ் மந்திரிகள் மறுபடியும் வரக்கூடும் என்று நினைப்பது காங்கிரஸ்காரர்களுக்கு மானமும் நாணயமும் இல்லையென்று எண்ணுவதற்கு ஒப்பாகும்.


காங்கிரஸின் நோக்கம்


பெருவாரியான மக்கள் அப்படி நினைத்து பேசுகிறார்கள் என்றால் நாட்டில் பெருவாரியான மக்களுக்கு காங்கிரசுக்கு மானம், நாணயம் ஒன்றும் இல்லை. பதவி வேட்டைதான் அதன் நோக்கம் என்கின்ற அபிப்பிராயம் ஏற்பட்டிருக்கிறது என்றுதான் கொள்ள வேண்டும்.


காங்கிரஸ்காரர்கள் தாங்கள் பதவியில் இருக்கிற காலத்திலேயே “அய்ரோப்பிய நாட்டில் யுத்தம் ஏற்பட்டு பிரிட்டிஷூக்குப் பாதகம் உண்டாகும்படியான நெருக்கடி ஏற்பட்டால் இந்தியா பிரிட்டிஷூக்கு எவ்வகை உதவியும் செய்யக்கூடாது என்றும் செய்யாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்றும் தீர்மானம் செய்து கொண்டிருக்கிறார்கள். இந்தப்படி காங்கிரசில் ஒன்றுக்கு மேற்பட்ட தீர்மானங்கள் இருக்கின்றன. இதைப் பிரிட்டிஷார் உணர்ந்தே காங்கிரஸ்காரர்கள் தங்கள் தீர்மானப்படி நடந்து கொள்ளுவார்கள் என்று கருதியே யுத்தம் ஏற்படும் என்ற நிலை தெரிந்த உடன் யுத்தம் ஏற்பட்டதாக அறிக்கை (டிக்ளேர்) வெளியானதும் காங்கிரஸ் மந்திரிகளை டிஸ்மிஸ் செய்துவிட்டு கவர்னர்களே நிர்வாகங்களை நேரடியாக ஏற்று நடத்திக் கொள்ளத்தக்கது என்று சீமையிலிருந்து வைசிராய்க்கு ஆக்ஞை அனுப்பியிருந்தார்கள். இந்த விஷயந்தெரிந்த காங்கிரஸ்காரர் கவர்னர் டிஸ்மிஸ் செய்த பின்பு வீட்டுக்குப் போவதைவிட தாங்களாகவே வீட்டிற்குப் போவது மானத்தை மீத்து வைத்துக் கொள்ளவும் மக்களை ஏமாற்றவும் அனுகூலமான காரியமென்று கருதி ஏதோ ஒரு அர்த்தமற்ற தீர்மானத்தைச் செய்துகொண்டு வெளியேற வேண்டியவர்களானார்கள். இது ஒருபுறம் இப்படியிருக்க காந்தியாரும், நேரு, பண்டிதரும் காங்கிரஸ் யுத்த தீர்மானங்களுக்கு விரோதமாய் “யுத்த சமயத்தில் நிபந்தனையில்லாமல் பிரிட்டிஷாரோடு ஒத்துழைக்க வேண்டுமென்று அறிக்கையிட்ட மாதிரி பேசினார்கள்.


இழுக்குப்படுத்தினதா? பெருமைப்படுத்தினதா?


பிறகு சுபாஷ் போஸ் பாபுவின் தொல்லைக்குப் பயந்து ஏதோ நிபந்தனை கேட்பதுபோல் பாசாங்கு செய்தார்கள்.


இப்போது காங்கிரசுக்கும், வைஸ்ராய்க்கும் எதற்காக ராஜி பேச்சுகள் நடக்க வேண்டும்? காங்கிரஸ்காரர்கள் எதற்காக சர்க்காரை நிபந்தனை கேட்க வேண்டும்? காங்கிரஸ் தீர்மானம் அந்தப்படி நிபந்தனை கேட்கும்படியாக எதுவும் இல்லை. யுத்தம் ஏற்பட்ட சந்தர்ப்பத்தைக் காங்கிரஸ் அனுகூலமாகக்கொண்டு பிரிட்டனுக்கு தங்களாலான தொல்லையை விளைவித்து ஏகாதிபத்தியங்கள் ஒழிக்கப்படுவதற்கு அந்தச் சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்கின்ற கருத்திலேயே அத்தீர்மானங்கள் செய்யப்பட்டனவாகும். அந்தப்படிதான் அத்தீர்மானங்கள் நிறைவேற்றப்படும் போதும் பேசப்பட்டதாகும். அப்படிப்பட்டவர்கள் இன்று ராஜிக்கு பிரிட்டனை வலுவில் அழைப்பதின் இரகசியமென்ன? இவர்களுடைய இச்செய்கையானது இந்திய தேசியம் என்பதின் சுயமரியாதையை இழுக்குப் படுத்தினதாகுமா? பெருமைப்படுத்தினதாகுமா?


‘கிணறு வெட்டப் போய் பூதம் புறப்பட்டது’ என்பது போல் காங்கிரஸ் தனக்கு பொய் கவுரவம் சம்பாதித்துக் கொள்ள செய்த சூழ்ச்சியானது உள்ள கவுரவமும் கெடும்படியாகச் செய்துவிட்டது. என்னவெனில் காங்கிரசுகாரர்கள் சர்க்காரிட மிருந்து தங்களுக்கு “ஒரு நிபந்தனையும் வேண்டியதில்லை. இழந்துவிட்ட பதவி மாத்திரம் கிடைத்தால்போதும்” என்று சொன்னாலும்கூட சர்க்கார் “அதெல்லாம் முடியாது உங்களுக்கு மறுபடியும் மந்திரி பதவி கொடுக்கும் அதிகாரம் என்னிடம் இல்லை. ஜின்னாவிடம் போங்கள்” என்று சொல்லும்படியான நிலைமை உண்டாகிவிட்டது. ஜின்னாவிடம் சென்றால் ஜின்னாவோ, “அந்த அதிகாரம் என்னிடம் இல்லை. அம்பேத்கரிடமும். ஜஸ்டிஸ் கட்சியாரிடம் போ” என்று சொல்லும்படியாக ஆகிவிட்டது. இந்த நிலையில் காங்கிரசின் பதவி மோகம் மானம் வெட்கம் விட்டு யாரிடம் வேண்டுமானாலும் சென்று மண்டியிட்டு பல்லைக் கெஞ்ச துணிந்துவிடும்படி செய்துவிட்டது.


அரசியல் நிர்ணய சபை


காங்கிரஸ்காரர் இந்தியாவுக்கு எம்மாதிரி சுயேச்சை அளிக்க வேண்டுமென்பதை தீர்மானிக்க சர்க்காருக்கு அதிகாரமில்லை என்றும், பொதுஜன பிரதிநிதித்துவம் கொண்ட ஒரு அரசியல் பிரதிநிதித்துவ சபை கூட்ட வேண்டுமென்றும் கேட்பதில் ஏதாவது புத்திசாலித்தனமிருக்கிறதா என்று யோசித்துப் பாருங்கள். காங்கிரஸ்காரர்கள் இந்தியா மக்கள் பூராவுக்கும் தாங்களே பிரதிநிதித்துவம் வாய்ந்தவர்கள் என்று சொல்லிக் கொள்ளுகிற போது எதற்காக இன்னொரு சபைகூட வேண்டுமென்று கேட்கிறார்கள்? தாங்கள் சொல்லுகிறபடி ஒரு சீர்திருத்தம் கொடுத்துவிட வேண்டும். இல்லாவிட்டால் சர்க்காரோடு ஒரு கை பார்க்கிறோம் என்று சொல்லி விட்டு ஒத்துழையாமையோ சத்தியாக்கிரகமோ சட்ட மறுப்போ பட்டினி விரதமோ ஆரம்பிக்க வேண்டியதல்லவா நியாயமான காரியமாகும். அப்படிக்கின்றி ஏன் வேறு சபை கூட்டவேண்டுமென்கிறார்கள். அதற்காக ஏன் வேறு தேர்தல் வைக்கிறதாக ஒப்புக்கொள்ளுகிறார்கள். இதிலிருந்தே காங்கிரஸ்காரர்களே தாங்கள்தான் இந்தியாவுக்கு ஏக பிரதிநிதித்துவம் வாய்ந்தவர்கள் என்பதை ஒப்புக்கொள்ளவில்லை என்று ஏற்படுகிறதல்லவா?


அர்த்தம் என்ன?


அன்றியும் இந்நாட்டில் காங்கிரசைத் தவிர காங்கிரசை ஒப்புக்கொள்ளாத வேறு பல வகுப்பு ஸ்தாபனங்களும் அரசியல் கட்சிகளும் இருக்கின்றன என்பதை காங்கிரஸ்காரர்கள் மறுக்க முடியுமா? வேறு எந்த நாட்டிலும் இல்லாத மாதிரி சமயத்தில் மாறுபாடாக இஸ்லாம், கிறிஸ்து, சீக்கியம், பார்சியம், ஆரியம், தமிழம் என்பனவாகிய பல சமய சமுகங்களும் ஆரியர் – திராவிடர் என்பனவாகிய சமுதாயங்களும் ஒன்றுக்கொன்று மாறுபட்ட சமய சமுதாய கொள்கைகளையும், லட்சியங்களையும் கொண்ட மக்கள் இருக்கும் போது இந்த ஏட்டில் வேண்டுமானால் இல்லை என்று காங்கிரஸ்காரர்கள் சொல்லிவிட முடியுமுமே தவிர பிரத்தியட்சத்தில் இல்லை என்று சொல்லிவிட முடியமா? இவர்களுக்கு பிரதிநிதிகள் இந்த மேல்கண்ட சமயத்தாரும், சமுதாயத்தாரும் தெரிந்தெடுத்து அனுப்புவதா அல்லது இவைகளில் கழிபட்ட கீழ்த்தரமுள்ள ஆள்கள் யாரோ சிலர் காங்கிரசில் வந்து சேர்ந்து கொண்டதாலேயே அவர்களை அந்தந்த சமய சமுதாயத்திற்கு பிரதிநிதிகளாகக் கொண்டு விடுவதா என்று கேட்கிறேன். முஸ்லிம் சமுகத்திற்கு ஜனாப் ஜின்னா பிரதிநிதியா, மவுலானா அபுல்கலாம் ஆசாத் பிரதிநிதியா? தாழ்த்தப்பட்ட மக்கள் என்னும் ஆதிதிராவிட மக்களுக்கு அம்பேத்கர் பிரதிநிதியா, தோழர் வி.ஐ. முனிசாமிப் பிள்ளை பிரதிநிதியா? தமிழர்களுக்கு அச்சங்கத்தலைவர் பிரதிநிதியா? ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் பிரதிநிதியா? இந்த விவகாரம் தீராததற்கு முன் பிரதிநிதி சபை கூடுவது என்றால் அர்த்தம் என்ன?


காங்கிரஸ் சொல்லும் பதில் என்ன?


இந்துக்கள் என்பவர்களுக்காவது காங்கிரஸ் பிரதிநிதி ஸ்தாபனமா என்று யோசிப்போம். இந்துக்களுக்கு காங்கிரசே பிரதிநிதி ஸ்தாபனமாய் இருந்திருக்குமானால் மதுரைக் கோவிலைத் திறந்ததற்காக இந்துக்களுக்குள் அதாவது ஆரியர்களுக்குள்ளாகவே தகராறு ஏன் வந்தது? பொது ஓட்டினாலேயே காங்கிரசுக்குப் பிரதிநிதித்துவம் வந்துவிட்டது என்று சொல்லப்படுமானால் காங்கிரஸ் கோவிலைத் திறந்துவிட ஏன் சட்டம் செய்யவில்லை?


சட்டம் செய்யாவிட்டாலும் எல்லா ஆரியக் கோவில்களையும் ஏன் திறந்து விட்டிருக்கக் கூடாது. பொதுஜன சம்மதம் இருக்கும் கோவிலை மாத்திரம் திறந்து விட்டதாகச் சொல்வதின் சுருக்கமென்ன? இதிலிருந்து காங்கிரசுக்கு ஓட்டுக்கொடுத்த பொதுஜனங்களைவிட வேறு பொது ஜனங்கள் இருக்கிறார்கள் என்பதை காங்கிரசே ஒப்புக்கொண்டதாக ஆகிறதா? இல்லையா? கோவில் திறப்பு விஷயமாய் ஆட்சேபிக்கும் ஆரியர்களுக்குக் காங்கிரஸ் சொல்லும் பதில் என்ன?


கோவில் என்பது கடவுள் சம்பந்தப்பட்டது என்று சொல்லப்பட்டாலும் கடவுளும் எல்லோருக்கும் ஒரே மாதிரியானது என்று சொல்லிவிட முடியுமா? முஸ்லிம் கடவுளுக்கும், ஆரியர் கடவுள்களுக்கும், பார்சி சீக்கியர் கடவுளுக்கும் தமிழர், கிறிஸ்தவர் கடவுளுக்கும் வித்தியாசமில்லை என்று சொல்லிவிட முடியுமா? எந்த எந்த கடவுள் எந்த எந்த சமய சமுதாயத்தாருக்கு உரியதோ அந்தந்த கடவுள் கோவில் முதலிய விஷயங்கள் சம்பந்தமாய் ஏற்படுத்தப்படும் மாறுதலுக்கு அந்தந்த சமய சமுதாயத்தாரர்களே உரிமையுடையவர்களாவார்கள். அப்படி இல்லை என்று சொல்ல வருவதானால் எல்லா விஷயங்களிலும் அந்த உரிமையை பயன்படுத்த வேண்டும்.


எப்படி பொதுஜன அபிப்ராயமாகும்?


சீரங்கம் கோவிலுக்கு ஜன சம்மதமில்லை என்று சொல்லிவிட்டு மதுரை கோவிலைத் திறந்துவிடுவது எப்படி பொதுஜன அபிப்பிராயமாகும்? சட்டத்தினால் ஒரு காரியம் செய்யப்படுகிறபோது பொதுஜனப் பிரதிநிதித்துவம் சமுதாய சம்மதத்தினால் செய்துவிடுவது என்பது சாத்தியமும் யோக்கியமுமான காரியமாகி விடுமா? இந்து லாவில் இந்தியன் பீனல் கோடில் தீண்டாதவனும் கோவிலுக்குள் நுழையப் படாதவனும் இருக்கிறான். அதை எடுக்கப் பொதுஜனப் பிரதிநிதித்துவம் இடம் கொடுக்கவில்லை. சமுதாய சம்மதத்தின் மீது மதுரை கோவிலில் மாத்திரம் தீண்டாமை நுழையாமை எடுத்துவிடப்பட்டதாகச் சொன்னால் மதுரை சமுதாயம் வேறு என்றாவது ஏற்பட்டுவிடுகிறதா இல்லையா? இரண்டு சமுதாயத்திற்கும் காங்கிரஸ் பிரதிநிதித்துவம் பொருந்தியது என்று சொல்லிக் கொள்ள முடியுமா?


உதாரணத்திற்கு சொல்லுகிறேன்


இதை நான் ஒரு உதாரணத்திற்கு ஆகவும் காங்கிரஸ் கொண்டாடும் பிரதிநிதித்துவ பாத்தியதையை எடுத்துக்காட்டுவதற்கு ஆகவும் சொல்லுகிறேன். இப்படிப்பட்ட காங்கிரஸ் தென்வடல் 2,000 மைலும், கிழமேல் 1,500 மைலும் உள்ளதும் 35 கோடி மக்களும் 30 சமயமும் 350 பாஷையும் 3,500 ஜாதியும் கொண்ட தேச மக்களுக்கு ஏதோ ஒரு பலத்தைக்கொண்டு சம்பாதித்த ஓட்டு பலத்தைக் கொண்டு, தான் தான் ஏகப் பிரதிநிதித்துவம் வாய்ந்தது என்று காங்கிரஸ் சொல்லுவது எந்த விதத்தில் பொருத்தமானதாகும்? இந்த மாதிரி ஓட்டு முறையில் கிடைக்கும் மெஜாரட்டியால் எப்படி அரசியல் பிரதிநிதித்துவ சபை ஏற்படுத்திவிட முடியும்? சமய சமுதாய ஜனங்கள் அந்தந்த சமய சமுதாயத் துறையைக்கொண்டு தெரிந்தெடுக்கப்பட்டால் நாட்டு அரசியலை விட்டுக் கொடுத்து விடுவார்கள் என்ற பயமிருக்குமானால் பல சமய சமுதாய வகுப்புகளைக் கூட்டி வகுப்புத் தலைவர்களைக் கலந்து முதலில் அதைத் தெரிந்து கொள்ளட்டும் அல்லது நிர்ணயித்துக் கொள்ளட்டும், அதிலுள்ள சந்தேகத்தை தீர்த்துக் கொள்ளட்டும்.


(24.01.1940 அன்று திருநெல்வேலி ஜில்லா கடையநல்லூரில் நடைபெற்ற கமாலிய முஸ்லிம் லீக் ஆண்டு விழா மாநாட்டை திறந்து வைத்து பெரியார் ஈ.வெ. ராமசாமி அவர்கள் ஆற்றிய சொற்பொழிவு.)


 – தோழர் பெரியார், குடிஅரசு – சொற்பொழிவு – 04.02.1940

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *