மானமுள்ளவர்களாய் வாழ வேண்டுமானால்?

Print Friendly, PDF & Email

“முதலில் உன் கண்ணிலிருக்கிற துரும்பை நீக்கிவிட்டு அயலான் கண்ணிலிருக்கும் உத்திரத்தை நீக்கப் பாடுபட வா” – என விவிலிய நூலில் ஒரு பழமொழி உண்டு. அதுதான் இன்று காங்கிரஸ்காரர்கள் தென் ஆப்பிரிக்கா விஷயத்தைக் குறித்து பேசுகையில் நமது ஞாபகத்தில் வருகிறது. ஏன் நாம் இவ்வாறு கூறுகிறோம் என்றால் சென்றவார “சண்டே அப்சர்வர்” பத்திரிகை மலபார் ஜில்லா போர்டார் மலபார் ஜில்லாவில் ரயில்வே ஸ்டேஷன்களில் உள்ள உணவு விடுதிகளில் இந்துக்களுக்கென்றும், முஸ்லிம்களுக்கென்றும் தனித்தனி இடம் ஒதுக்கி வைத்திருப்பதை ஒழிக்க வேண்டும் என தென்னிந்திய ரயில்வே கம்பெனியாரை கேட்டதற்கு ரயில்வே அதிகாரிகள் நிராகரித்து விட்டனர் என்றும், இதை எதிர்த்து கிளர்ச்சி செய்ய வேண்டும் என்றும், பெரியார் தென்னிந்திய ரயில்வே விடுதிகளில் பார்ப்பனர் பார்ப்பனரல்லாதாருக்கு என தனித்தனியிடம் ஒதுக்கி வைத்திருப்பதை எதிர்த்து கிளர்ச்சி செய்ய வேண்டும் என்றும் எழுதியிருக்கையில் அதாவது இந்நாட்டில் பிறந்த மக்கள் உரிமையாளர்களைத் தனித்து ஒதுக்கிவைத்துக் கொடுமைப்படுத்தி, இழிவுபடுத்தி வருகையில் இதைக் குறித்து கவலை கொள்ளாமல் எங்கேயோ இருக்கிற தென்னாப்பிரிக்காவில் காணப்படும் செய்கையைக் குறித்து முதலைக் கண்ணீர் விடுவது எதற்கு? என்று கேட்கிறோம்.


தென்னாப்பிரிக்காவில் நிறவேற்றுமை வர்ணாசிரமம் தலைவிரித்தாடுகிறது. இதை ஒழிக்கவேண்டும் என்று கூச்சல் போடும் காங்கிரஸ் தாள்கள், காங்கிரஸ்காரர்கள், காங்கிரஸ்காரர்களால் போற்றப்பட்டு வரும் தோழர் காந்தியார் ஆகியவர்கள் கண்களில் இந்நாட்டின் பெருங்குடி மக்கள் பிறப்பின் காரணமாக தெருவில் நடக்கவும், நுழையவும், தொடவும் கூடாதென்று ஒதுக்கி வைத்திருக்கும் கொடுமையும் இழிவும் தெரியவில்லையா என்று கேட்கிறோம்.


“அன்னிய நாடுகளில் குடியேறிய இந்தியர்களுக்கு சம உரிமை வழங்குவதில்லை; பிரித்து வைக்கின்றனர்” என்று கூச்சல் போடுபவர்கள். சாமியின் பேரால், கடவுளின் பேரால், மதத்தின் பேரால், ஜாதியின் பேரால் பிரித்து வைத்திருப்பதைக் குறித்து வாய் திறக்காதிருப்பதேன்? இதைக் கண்டிக்க அவர்கள் முன்வந்துவிட்டால் காங்கிரஸ் செல்வாக்கு எந்த அளவிலிருக்கும் என்பது அவர்களுக்குத் தெரியும். ஏன்? இன்று இந்நாட்டில் காங்கிரசை, திவான் வேலை, ஜட்ஜூவேலை பார்த்துவரும் அய்யங்கார், ஆச்சாரி முதலியவர்கள் முதல், காப்பி ஓட்டல்கள் அய்யங்கார் ஈறாக ஒரே முகமாக காங்கிரசை ஆதரித்து வருகின்றனர் என்பதை யாரும் மறுக்க முடியாது. பார்ப்பனர்கள் காங்கிரசையும், அதன் போக்கையும் எவ்வளவுதான் வன்மையாக கண்டித்தாலும், எத்தகைய அரசியல் கொள்கையைப் பின்பற்றி வருபவர்களானாலும், சமயம் வந்துற்றபோது காங்கிரசை ஆதரிப்பதில் ஒரு பொழுதும் தவறுவதில்லை என்பதை பொதுமக்கள் நன்கு அறிந்திருக்கக்கூடும். இதற்கு உதாரணம் சென்ற பொதுத்தேர்தலின் போது சுயேச்சையில் நின்ற தோழர் டி.ஆர். வெங்கட்ராம சாஸ்திரியாரை மாஜி கனம் சி.ராஜகோபாலாச்சாரியார் ஆதரித்து பேசியதையும், மகா கனம் சீனிவாச சாஸ்திரியார் பம்பாயில் லிபரல் கட்சியை ஆதரித்துவிட்டு தென்னாட்டில் காங்கிரஸ் அபேட்சகரை ஆதரித்ததையும், சென்ற சென்னை மேல்சபை உபதேர்தலில் தோழர் டி.டி.கிருஷ்ணமாச்சாரியார் காங்கிரஸ் அபேட்சகரை ஆதரித்ததையும் கண்டவர்களுக்கு நாம் மேற்கொண்டு உதாரணம் எடுத்துக்கூறவேண்டும் என கருதவில்லை.


எனவே, பார்ப்பனர்கள் இந்தக் காங்கிரசினால்தான் வாழ முடியும் எனக் கருதி வருகையில் பார்ப்பனர்கள் வகுத்த ‘மனு’ சட்டத்தை, ஜாதிப் பாகுபாட்டை, மத வித்தியாசத்தை ஒழிக்க காங்கிரஸ்காரர்கள் கண்டிக்க முன் வருவார்களா? என்று கேட்கிறோம். இதைக் கண்டிக்க முன்வர நெஞ்சில் உரமில்லாத, தைரியமில்லாத, வீரமில்லாதவர்கள் எங்கேயோ வெள்ளையர் குடியேறி, நாட்டை ஆண்டுவரும் வெள்ளையர் அந்நாட்டு பூர்வீகக் குடிகளை ஒதுக்கி வர்ண பேதத்தை காட்டி வருகின்றனர் என்றும் இந்தியர்களை மரியாதையுடன் நடத்துவதில்லை என்று முதலைக்கண்ணீர் விடுவதை பகுத்தறிவு, நடுநிலைமையுள்ள எவரும் நியாயமானது உண்மையானதென்று ஒப்புக் கொள்வார்களா? என்று கேட்கிறோம்.


ஒரே நாட்டில் பிறந்த கோடிக்கணக்கான மக்களை மிருகத்தைவிட கேவலமாக, இழிவாக நடத்திவரும் ஒரு கூட்டத்தார் தங்கள் நாட்டு மக்களை வெள்ளையர்கள் இழிவாக நடத்துகிறார்கள் என்று கூற என்ன உரிமையிருக்கிறது என்று பொதுமக்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டியது அவசியமல்லவா என்று கேட்கிறோம். இந்தியர்களை இழிவாக நடத்துகிறீர்களே! நாகரிக உலகம் இதை ஏற்குமா? என காங்கிரஸ்காரர்கள் வெள்ளையர்களைக் கண்டிக்க முன் வந்தால் இவர்கள் நாட்டில் ஒரு கூட்டத்தார் சட்டத்தின் பேராலும், பழக்க வழக்கத்தின் பேராலும் கோடிக்கணக்கான மக்களை அடிமைப்படுத்தி வைத்திருப்பதை திருப்பி வெள்ளையர் காட்டினால் இவர்கள் (காங்கிரஸ்காரர்கள்) என்ன பதில் சொல்லப்போகிறார்கள் என்று கேட்கிறோம்.


அந்நிய நாடுகளில் நம்மவர்களை அந்நிய நாட்டார் மரியாதையுடன் நடத்த வேண்டுமானால் முதலில் நம் நாட்டில் நம்மவர்களை இழிவுபடுத்தும் – கொடுமைப் படுத்தும் – தாழ்வுபடுத்தும் முறையொழிக்கப்படவேண்டும், சுயமரியாதையுடன் வாழ உரிமைபெறவேண்டும். என்று இவைகளை பெறுகிறார்களோ அன்றுதான் நம்மவர்கள் அந்நிய நாட்டாரை ஏதாவது கேட்டாலும் அவர்கள் லட்சியப்படுத்துவார்கள் நாமும் கேட்பதற்கு உரிமையாளர்களாக ஆகமுடியும். எனவே, இலங்கை, மலேயா, தென்னாபிரிக்கா முதலிய அந்நிய நாடுகளில் குடியேறி வேலை செய்து வருகிறவர்களை வெள்ளையர்களோ, அல்லது அந்நிய நாட்டவர்களோ இழிவாக நடத்துகிறார்கள் என்று குறைகூறுவதில் பயனில்லையென்று சொல்லுவதோடு, நமது எதிர்ப்பை அவர்கள் லட்சியம் செய்ய வேண்டுமானால் இங்குள்ள அடிமைத்தனம் உடனே ஒழிக்கப்பட வேண்டும் என்று சொல்வோம். உண்மையிலே நம்மவர்கள் மானத்தோடு வாழவேண்டும் என அவர்கள் விரும்புவார்களேயானால் உடனே அவர்கள் நமது போராட்டத்தில் கலந்து ஒத்துழைப்பார்கள் என்று நம்புகின்றோம்.


– தோழர் பெரியார், குடிஅரசு – தலையங்கம் – 04.02.1940

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *