தற்காலம் தமிழ்நாட்டில் பத்திரிகைத் தொழில் இலாபமளிக்கிறது என்றால் அது பிராமணர்களால் நடத்தப்படும் பத்திரிகைகளாகத்தான் இருக்கின்றன. பிராமணர்களில் படித்தவர்கள் அதிகம். சுயஜாதி அபிமானம் அவர்களிடம் அதிகம். எல்லா உத்தியோகஸ்தர்களும் அவைகளுக்கு நேர்முகமாகவும், மறைமுகமாகவும் தங்களாலான எல்லா உதவிகளையும் தட்டின்றி அளிக்கிறார்கள். விளம்பரக் காரர்களின் ஆதரவு பிராமணர்களால் நடத்தப்படும் பத்திரிகைகளுக்கே ஏராளமாய்க் கிடைக்கிறது. பிராமண அபிமானிகளான பிராமணரல்லாதார் பிராமணப் பத்திரிகைகளையே அதிகமாக வாங்கிப் படிக்கும் மனப்பான்மை கொண்டிருக்கிறார்கள்.
பிராமணரல்லாதாரால் நடத்தப்படும் பத்திரிகைகளுக்குப் பிராமணரல்லாதார் ஆதரவு கிடைப்பது கஷ்டமாயிருக்கிறது. பிராமணரல்லாதாரிடையே பத்திரிகை படிக்கும் ஆசை மிகக் குறைவாயிருக்கிறது. பிராமண உத்தியோகஸ்தர்கள் அப்பத்திரிகை வியாபாரத்தை தடுக்க மறைமுகமாக எல்லா வேலைகளும் செய்து விடுகிறார்கள். பிராமணரல்லாதார் பத்திரிகைகள் மீது துவேஷ உணர்ச்சி முளைத்து அவைகளைக் கெடுக்க அந்தரங்க வேலைகளும் நடப்பதுண்டு. இது போன்ற காரணங்களால் ‘விடுதலை’, ‘குடிஅரசு’, ‘சண்டே அப்சர்வர்’, ‘ஜஸ்டிஸ்’ ஆகிய பத்திரிகைகளுக்கு ஏற்பட்டு வந்திருக்கும் தொல்லைகள், அனந்தம்.
தமிழர் பத்திரிகைகளை ஆதரிக்க வேண்டும்
தமிழ்நாட்டில் தமிழர் பத்திரிகைத் தொழிலில் நஷ்டத்தையும், கஷ்டத்தையும் உண்டாக்கும் தொழிலாகவே இருந்து வருகிறது. இத்தொல்லைகளிலிருந்து நாம் விடுதலை பெற நாம் பலமான நடவடிக்கை எடுத்தாக வேண்டும். தமிழர்களுடைய எதிரிப் பத்திரிகை ஒழிப்புதினம் ஒன்று நம் நாட்டில் கொண்டாட வேண்டிய காலம் சீக்கிரம் வருமென்று எதிர்பார்க்கிறேன். “சமரசம்” பத்திரிகையும், பிராமணரல்லாதாரால் நடத்தப்படும் ஏனைய பத்திரிகைகளையும் தமிழர் அனைவரும் ஆதரித்து உற்சாகமளிக்க வேண்டுமெனக் கேட்டுக் கொள்ளுகிறேன்.
(19.01.1940 அன்று திருச்சியில் ‘சமரசம்’ பத்திரிகையின் ஆண்டுவிழாவில் கலந்துகொண்டு பெரியார் ஈ.வெ.ரா ஆற்றிய சொற்பொழிவு)
– தோழர் பெரியார், குடிஅரசு – சொற்பொழிவு – 28.01.1940