இந்தியாவின் அரசியலமைப்பை வகுக்க அரசியல் நிர்ணய சபை கூட்ட வேண்டுமென காங்கிரஸ் மகாசபை கோரியுள்ளது. இது ஒரு புதிய விஷயம் ஆதலின், இது எப்படிக் கூட்டப்படும்? பிரிட்டன் இதைச் செய்வது சாத்தியந்தானா? அரசியல் அமைப்பு எப்படி வகுக்கப்படும்? என்றெல்லாம் கேள்விகள் கேட்கப்படுகின்றன. இதற்கெல்லாம் திருப்திகரமான வகையில் தகுந்த பதில் அளிப்பதற்கு, மற்ற குடியேற்ற நாடுகளில் இவ்விதமான அரசியல் நிர்ணய சபைகள் கூட்டி எவ்விதம் அரசியலமைப்பு வகுக்கப்பட்டது என்பதும், பிரிட்டன் இதனை எவ்விதம் ஏற்றுக்கொண்டது என்பதும் ஆகிய விவரங்கள் உதவியாக இருக்கும் அவைகளைக் கவனிப்போம்.
மற்ற நாடுகளில் அரசியல் நிர்ணய சபைகள் கூட்டப்படுவதற்கு முன்பு, அங்கு சமுதாயப் பிளவும், மதக் கலவரமும், வகுப்புக் காய்ச்சலும், வறுமைப் பிணக்கும், தற்குறித் தன்மையும், புரோகித ஆட்சியும், பிறப்பில் உயர்வு தாழ்வும், குருட்டுக் கொள்கையும், முரட்டுவாதமும் இருந்ததில்லை. இத்தகைய கோளாறுகள் ஒழிக்கப் பட்டு, சமுதாயத் துறையில் சமத்துவமும், கல்விஅறிவும் பரவிய பிறகுதான், குடியேற்ற நாட்டு அந்தஸ்து பெற்ற நாடுகள் அரசியல் நிர்ணய சபையைக் கூட்ட முடிந்தது. ஆனால், புலியைப் பார்த்து பூனை சூடு போட்டுக் கொண்ட கதைபோல, எங்கெங்கோ அரசியல் நிர்ணய சபைகள் கூட்டினார்களே இங்கேன் கூட்டக்கூடாது என்ற வாதம் புரிகின்றனர் காங்கிரசார்.
நம் நாட்டிற்கு இல்லாத பலவித சவுகரியங்களைப் பெற்றிருந்தும்கூட, அந்நாடுகளில், அரசியல் நிர்ணய சபைகளைக் கூட்ட எவ்வளவு ஆண்டுகள் வேலை செய்ய வேண்டி வந்தது. எத்தனை தொல்லைகளைச் சரிப்படுத்த வேண்டி இருந்தது?
இதற்காக எவ்வளவு பெரிய பெரிய அரசியல் நிபுணர்கள் அரும்பாடுபட்டார்கள் என்பதும் தெரியவரும்.
– தோழர் பெரியார், குடிஅரசு – செய்தித்துணுக்கு – 21.01.1940