காங்கிரசை எதிர்க்க கூட்டு இயக்கம்

Print Friendly, PDF & Email

நான் பம்பாயில் சுற்றுப்பிரயாணம் செய்தபோது அ.இ. முஸ்லிம் லீக் தலைவர் ஜனாப் முகம்மது அலி ஜின்னாவையும், ஆதித்திராவிட சமுகத் தலைவர் டாக்டர் அம்பேத்கரையும் சந்தித்துச் சில மணி நேரங்கள் அவர்களுடன் மனம் விட்டுத் தாராளமாகச் சம்பாஷித்தேன்.


நாங்கள் காங்கிரஸின் ஆரம்பம் முதல் அரசியல் நிர்வாகத் திறமையின்மை வரை பல்வேறு விஷயங்கள் பற்றிச் சம்பாஷித்தோம். ஜனாப் ஜின்னாவும் டாக்டர் அம்பேத்கரும் காங்கிரஸைப் பற்றிக் கூறிய அபிப்பிராயங்கள் என் சொந்த அபிப்பிராயத்தை ஒத்தனவாகவே இருந்தன. நாங்கள் மூவரும், காங்கிரஸ் செல்வாக்கினால் ஏற்படும் தீங்குகளை அகற்ற ஒன்று கூடி முயற்சிப்பதென முடிவு செய்தோம்.


சுயநலமிகள் கூட்டம்


“காங்கிரஸின் செயல்களும், அதில் அங்கம் வகிப்பவர்களும், கொள்கைகளும், தீவிர மாறுதலும் காங்கிரஸ் எப்போதும் ஒரு அரசியல் ஸ்தாபனமெனக் கூற முடியாதென்பதைத் தெளிவாகக் காட்டுகின்றன” என்று ஜனாப் ஜின்னா கூறினார்.


காங்கிரஸ் சுயநலங்கொண்ட சில தனிப்பட்ட நபர்களடங்கியது. அது பொது மக்களின் உணர்ச்சியில் விளையாடும் முறையில் நடந்து வருகிறது. காங்கிரஸாரும் பொது மக்களின் பிரதிநிதிகளெனத் தங்களைக் கூறிக்கொண்டு அவர்களிடம் கிடைத்ததையெல்லாம் விழுங்கி, தங்கள் குலப்பெருமையைப் பலப்படுத்திக் கொள்ளுகின்றனர்.


பிரிட்டிஷாரின் நல்ல பிள்ளை


காங்கிரஸ் விஷயத்தில் பிரிட்டிஷ் சர்க்கார் நடந்து கொள்ளும் முறைகள் பற்றியும் விவாதம் நடைபெற்றது. பிரிட்டிஷ் சர்க்கார் காங்கிரசைத் தட்டிக் கொடுப்பதையே லாபகரமானதாகவும், பாதுகாப்பானதாகவும் கருதுகின்றனரென்று நாங்கள் ஏகமனதாக அபிப்பிராயப்பட்டோம். ஏனெனில், வேறெந்த ஸ்தாபனமும், காங்கிரசைப் போன்று ராஜவிஸ்வாசமாகவும், பூரணமாகவும் பிரிட்டிஷ் சர்க்காரின் பாட்டுக்குத் தாளம் போட முடியாது. மேலும், காங்கிரசைப் போல் வேறெந்தக் கட்சியும். பிரிட்டிஷாரின் வசதிக்காகப் பொதுமக்களின் உணர்ச்சிகளைக் கருணையற்ற முறையில் புண்படுத்த முற்படாது.


பிரிட்டிஷ் நலன்களுக்குத் தீங்கு செய்யாததும், அவ்வாறு செய்ய நினையாததுமான ஒரே ஒரு கட்சி காங்கிரஸ்தான். ஒருக்கால் பிரிட்டிஷ் சர்க்காரின் கருத்தும் இவ்வாறுதான் இருக்குமெனக் கருத வேண்டியிருக்கிறது. அவ்வாறில்லாவிடில், காங்கிரசிடம் பிரிட்டன் இப்போது நடந்து வரும் தோரணையில் நடந்து வராது.


குரைக்கும் நாய்களுக்கு எலும்பு


பிரிட்டிஷார் காங்கிரசின் செல்வாக்கு க்ஷீணமடைந்து வருவதை நன்கறிவர். ஆனால், அவர்கள் “குரைக்கும் நாய்களுக்கு எலும்பு போடும்” பழைய கொள்கையை இப்போது அனுஷ்டித்து வருகின்றனர். அயல்நாட்டு ஆதிக்கத்தை உண்மையில் வெறுப்பவர்களைக் கருணையின்றி ஒழித்து விடும் கொள்கையும் பிரிட்டிஷார் அனுசரித்து வருகின்றனர். ஒரு வேளை அவர்கள் இதர சில கட்சித் தலைவர்களையும், சமுகத்தினரையும் புறக்கணித்துவிட முயற்சிப்பர்.


முஸ்லிம் லீக் மதப் பாதுகாப்புக்காக ஏற்பட்ட ஒரு ஸ்தாபனமன்று, இஸ்லாத்திற்கு இத்தகைய உதவியொன்றும் தேவையில்லை. இஸ்லாம் மதம் தன் சுயபலத்தோடு நின்று தன்னைப் பாதுகாத்துக் கொள்ளும் வல்லமையுடையது.


ஆனால், அரசியல் முஸ்லிம்களுக்காகப் பேசவும், செயல்கள் புரியவும் முஸ்லிம் லீக் ஒரு ஸ்தாபனத்துக்கு மட்டுமே உரிமையிருக்கிறது. முஸ்லிம் லீக் ஒன்றே முஸ்லிம்களின் சுயமரியாதைக்குக் கண்கண்ட பூரணச் சின்னமாகும். அரசியல் முஸ்லிம்களுக்காக முஸ்லிம் அல்லாதார் பேசுவதை முஸ்லிம் லீக் ஒரு போதும் சகித்துக் கொண்டிராது.


முஸ்லிம் லீக் ஒன்றே முஸ்லிம் சமுகத்தின் அரசியல் விஷயங்களில் பிரதிநிதித்துவம் வாய்ந்தது. முஸ்லிம் சமுகத்தின் சார்பாகப் பேசவும், முஸ்லிம் சமுக நன்மைகளை உத்தேசித்து எத்தகைய அரசியல் மாற்றத்தையும் அனுமதிக்கவும் முஸ்லிம் லீக் ஒன்றுக்கு மட்டுமே உரிமையுண்டு. இந்த உண்மை உணரப்பட வேண்டும்; அங்கீகரிக்கப்பட வேண்டும்; அப்போதுதான் முஸ்லிம் லீக், தனது அரசியல் கோரிக்கைகளை இதர அரசியல் கட்சிகள் முன்னும் பிரிட்டிஷார் முன்னும் சமர்ப்பிக்கும்.


முஸ்லிம் லீக் பணிய முடியாது


“முஸ்லிம் லீக், தனது உரிமைகளைக் கோருவதற்காக அந்நியருக்குப் பணிந்து விடாது. நமது சமுகத்தின் ‘இஜ்ஜத்’ (கண்ணியத்தை) அங்கீகரிக்கக்கூடிய அந்தஸ்தையே முஸ்லிம் லீக் கோருகிறது. இத்தகைய கண்ணியமான சத்தைக் கொண்டுவரும் எவரையும் வரவேற்க லீக் தயாராயிருக்கிறது” என்று ஜனாப் ஜின்னா கூறினார். இந்தப் பெருந்தன்மை வாய்ந்த நியாயமானக் கூற்றை யாராவது மறுக்க முடியுமா என்று நான் கேட்கிறேன்.


காங்கிரஸ் ஆட்சியில் சிறுபான்மையினர் நிலைமை சம்பந்தமான பிரச்சினையில் நாங்கள் ஒரே அபிப்பிராயம் கொண்டவர்களாக இருக்கிறோம்.


“எந்த வகையிலாவது, காங்கிரஸ் மீண்டும் பதவிக்கு வர முயற்சிக்குமாயின், அம்முயற்சியொன்றே சிறுபான்மையினருக்குப் பாதுகாப்பு வேண்டுவதன் அவசியத்தை உணர்த்தி விடும். இப்பாதுகாப்புகள் இல்லாமல் எந்த அரசியல் முறையும் திருப்திகரமாக நடைபெறாது” என்று ஜனாப் ஜின்னா அபிப்பிராயப்படுகிறார்.


கட்டாய இந்தி


காங்கிரசின் ஆட்சி, உலக மக்களுடையவும், பிரிட்டிஷாருடையவும் கண்களைத் திறந்துவிடும். அப்போது காங்கிரசின் யதேச்சாதிகாரச் செயல்களிலிருந்து சிறுபான்மையினர் பாதுகாக்கப்பட வேண்டுவது அவசியமென்ற உண்மை ஸ்வரூபத்தைக் கண்டுகொள்வர்.


கட்டாய இந்தி சம்பந்தமாக என் கருத்துகளை ஜனாப் ஜின்னாவும், டாக்டர் அம்பேத்கரும் ஆதரித்தனர். கட்டாய இந்தித் திட்டம் நமது கலைகளுக்கு விரோதமாக பிராமண மதத்தையும் கலைகளையும் பலப்படுத்தி விஸ்தரிக்கும் ஒரு குறுகிய நோக்குள்ள திட்டமாகுமென்று நான் அபிப்பிராயப்படுவது போன்றே ஜனாப் ஜின்னாவும், டாக்டர் அம்பேத்கரும் அபிப்பிராயப்பட்டனர். நான் நமது மாகாணத்தில் இந்தி எதிர்ப்புக் கிளர்ச்சி மீண்டும் ஆரம்பிக்க உத்தேசிக்கப்பட்ட விஷயமாகப் பிரஸ்தாபித்த போது ஜனாப் ஜின்னா அவர்கள் “நீங்கள் என் பூர்ண ஆதரவையும் பெறுவீர்கள்” என்று கூறினார். இவ்விஷயத்தில் டாக்டர் அம்பேத்கரும் என் அபிப்பிராயத்தை ஆதரித்தார். இந்தி சம்பந்தமாக எனது கொள்கையை ஜனாப் ஜின்னா அங்கீகரித்ததிலிருந்து, நான் மீண்டும் ஆரம்பிக்கப் போகும் இந்தி எதிர்ப்புக் கிளர்ச்சியில் இம்மாகாண முஸ்லிம்கள் தாராளமாகக் கலந்து உதவி செய்வாரென நான் நம்புகிறேன். நம் மாகாணத்தில் காங்கிரஸ் மந்திரி சபையின் செயல்களைப் பற்றி என்னிடமிருந்து; முதல் தரமான தகவல்களைக் கேள்விப்பட்டவுடன் அவ்விரு தலைவர்களும்,


“காங்கிரஸ் ஆட்சியின் கீழ் நீங்கள் மிக சகிப்புத் தன்மையோடு நடந்து கொண்டதைப் பாராட்டுகிறேன். நீங்கள் இதர மாகாணங்களிலும் சுற்றுப் பிரயாணம் செய்து, அங்குள்ள பொது மக்களுக்கு இவ்வுண்மையை உணர்த்த வேண்டும்” என்று ஏகோபித்துக் கூறினார்கள்.


காங்கிரஸ் எதிர்ப்பு வேலைகள்


இந்நாட்டிலுள்ள எல்லா காங்கிரஸ் எதிர்ப்பு ஸ்தாபனங்களையும் ஒன்று திரட்ட நாங்கள் ஏகமனதாக வேலை செய்வதென முடிவு செய்தோம். இதனை கட்டுப்பாடான வேலையென அவர்கள் கூறுகின்றனர். ஆனால், ஜனாப் ஜின்னாவும், டாக்டர் அம்பேத்கரும் அரசியல் நிர்ணய சபையைப் பலமாக எதிர்க்கின்றனர். மாஜி காங்கிரஸ் மந்திரி சபையால் ஏற்படுத்தப்பட்ட படுமோசவரிகளை ஒழிக்கக் கிளர்ச்சி செய்யும் விஷயத்தைப் பற்றியும், வேலையற்றிருக்கும் சட்டசபைகளின் அங்கத் தினர்களுக்கு சம்பளங்கள் அளிக்கப்படக்கூடாதெனக் கிளர்ச்சி செய்யும் விஷயத்தைப் பற்றியும் நாங்கள் மேற்கொண்டு சம்பாஷணை நடத்தினோம். கூடிய சீக்கிரத்தில் இதற்காக ஒரு கூட்டுக்கிளர்ச்சி செய்ய திட்டத்தை வகுப்பதென உத்தேசித்துள்ளோம்.


நாம் நியாயமாகக் கருதுபவைகளையெல்லாம் அழித்துக் கொண்டு வரும் விபரீத குணமுள்ள ஸ்தாபனமாகிய காங்கிரசை கடைசி வரை எதிர்த்துப் போராட காங்கிரஸ் எதிர்ப்பு இயக்கம் ஒன்று சமீபத்தில் ஆரம்பிக்கப்படுமென அந்த மாபெருந் தலைவர்களிருவரும் வாக்குறுதிகளும் நம்பிக்கையுமளித்தனர் என்பதை நான் மகிழ்ச்சியுடன் அறிவித்துக் கொள்கிறேன். சீக்கிரத்தில் நான் மீண்டும் பம்பாய் செல்வேன். அது சமயம் அரசியல் நிலைபற்றி இன்னும் விரிவான விஷயங்கள் விவாதிக்கப்பட்டு, ஒரு திட்டம் வகுக்கப்படுமென நம்புகிறேன்.


என் சுற்றுப்பிரயாணம் மிகப் பயன்படக்கூடியதாகவும் பேருதவியாகவும் இருந்தது. இது போன்ற சந்தோஷமான சந்திப்பு – நமது நண்பர்கள் எதிர்பார்ப்பதைவிடவும், நம் எதிரிகள் பயப்படுவதைவிடவும் வெகுசீக்கிரத்தில் – ஏற்படுவதற்கு என் நன்றியையும், வந்தனத்தையும் செலுத்திக்கொள்ளுகிறேன்.


(நீதிக் கட்சித் தலைவர் தோழர் ஈ.வெ.ராமசாமி அவர்கள் பம்பாயில் சுற்றுப் பிரயாணம் செய்து அ.இ.முஸ்லிம் லீக் தலைவர் ஜனாப் ஜின்னாவையும், ஆதித் திராவிட சமுகத் தலைவர் டாக்டர் அம்பேத்கரையும் சந்தித்து தற்கால அரசியல் நிலைபற்றிச் சம்பாஷித்த விஷயத்தைப்பற்றி, பெரியார் ஈ.வெ.ராமசாமி அவர்கள் வெளியிட்ட அறிக்கை)


– தோழர் பெரியார், குடிஅரசு – அறிக்கை – 28.01.1940

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *