எனது பம்பாய் பயணம்

Print Friendly, PDF & Email

அன்புள்ள தலைவர் அவர்களே! தோழர்களே!


நான் பம்பாய் தமிழ் மக்களின் சாதாரண அழைப்பிற்கிணங்கி பல தோழர்களுடன் பம்பாய் சென்று திரும்பியதற்காக என்னை இவ்வளவு ஆடம்பரமாக வரவேற்று, பொதுக்கூட்டமும் கூட்டி இருக்கிறீர்கள். இதுபோலவே சென்னையிலும் ஸ்டேஷனிலேயே ஏராளமான மக்கள் கூடி வரவேற்றார்கள். இது எதற்காக என்று எனக்குத் தெரியவில்லை.


நான் இதற்கு முன் பலதடவை பம்பாய் சென்றுள்ளேன். அதுபோலவே இந்தச் சமயமும் பம்பாய் சென்றேன்.


பம்பாய் சென்றதன் நோக்கம்


நமது நாட்டிலிருந்து பிழைப்பதற்காக பம்பாய் சென்றுள்ள தமிழர்கள் நமது இயக்க விஷயங்களில் மிக அக்கறை எடுத்து வேலைசெய்து வருகிறவர்கள் அன்புடன் அழைக்கிறார்களே என்று அங்கு சென்றேனே ஒழிய வேறில்லை. அவர்கள் என்னை அங்கு வரவேண்டுமென்று அழைத்தது தங்களுக்குத் தொண்டாற்றும் ஒருவரைக் காணவும் கனப்படுத்தவுமேயாகும் என்று கருதினேன். ஆனால், நான் அங்கு சென்ற பிறகு அவர்கள் அழைத்த நோக்கம் நானும், நமது இயக்கமும் வடநாட்டிலுள்ள நமது கொள்கைகளைக் கொண்ட தலைவர்களுடன் ஒரு சம்பந்தம் வைத்துக்கொள்ள வேண்டுமென்பதே என்று தெரிந்தேன். இது முன் எனக்கு அறிவிக்கவில்லை. இருந்தாலும் அவர்கள் அழைப்புக்கும் வருவதாக ஒத்துக்கொண்டிருந்தேன்; பின் எனக்குள்ள பலவித அவசர வேலைகளின் நிமித்தம் பம்பாய் பிரயாணத்தை ஒத்தி வைக்கும்படி தந்தி கொடுத்தேன்.


அதற்கு பம்பாயிலுள்ள பல தமிழ் பிரபலஸ்தர்கள் நான் அவசியம் வரவேண்டுமென்றும், என்னிடம் பம்பாய் தலைவர்கள் ஜின்னா அவர்களும், அம்பேத்கர் அவர்களும் பேச விரும்புவதாகவும் வந்தால் நமது இயக்கத்தைப் பற்றி மற்ற மாகாணங்களிலுள்ளவர்களும் அறிந்துகொள்ள முடியுமென்றும் தந்தி கொடுத்தார்கள். அதன்படி நானும் மற்றும் 5 தோழர்களும் புறப்பட்டோம். 6ஆம் தேதி காலை தாதர் ஸ்டேஷன் போய்ச் சேர்ந்தோம். இந்த தாதர் என்ற இடத்தில்தான் தமிழர்கள் 2000 பேர்களுக்கு மேலாகவே வசிக்கிறார்கள். அவர்கள் திருநெல்வேலி, இராமநாதபுரம், மதுரை ஜில்லாக்களைச் சேர்ந்தவர்கள், இவர்கள் அனைவரும் கூலிவேலைகள் செய்து வருபவர்கள். அதாவது தொழிற்சாலைகளிலும், தோல் ஷாப்புகளிலும் வேலைசெய்து வருபவர்கள்.


என் மனங்கலங்கி விட்டது


இவர்களைப் பார்த்தவுடன் என் மனம் மிகவும் கலங்கி விட்டது. ஏனெனில், நமது நாட்டிலிருந்து பம்பாய்க்குப் பிழைக்க வந்த ஆயிரக்கணக்கான தமிழர்கள் கூலி வேலைகள் செய்து கஷ்டப்படுவதும் பம்பாயிலிருந்து நமது நாட்டிற்குப் பிழைக்க வரும பனியாக்களும், குஜராத்திகளும், மார்வாடிகளும் நம் நாட்டின் செல்வங்களை சுரண்டிக்கொண்டு முதலாளிகளாய் வாழ்வதும் ஞாபகத்திற்கு வந்து என் மனதை மிகவும் வாட்டிற்று. நமது நிலையை எடுத்துக்காட்ட இதைவிட கொடுமையானதும் முட்டாள் தனமானதுமான காரியம் வேறு ஏதாவதுண்டா? நமது நாட்டிலிருந்து சென்ற வேறு சிலர் அங்கு நல்ல பதவியிலும் இருக்கிறார்கள். ஆனால், அவர்கள் யார் என்றால் அப்படிப்பட்ட அத்தனை பேரும் பார்ப்பனர்களே ஆவார்கள்.


பம்பாயில் காங்கிரஸ் மாறுபட்ட அபிப்பிராயமுடைய பத்திரிகைகள் பல இருக்கின்றன. அவற்றிலெல்லாம் கூட பெரிதும் நம்நாட்டிலிருந்து சென்ற பார்ப்பனர்களே உதவி ஆசிரியர்களாகவும், நிருபர்களாகவும் இருக்கிறார்கள்; நல்ல சம்பளம் வாங்குகிறார்கள். அந்தப் பார்ப்பனர்கள் நமது மக்கள் பம்பாயில் படும் கஷ்டத்தை மக்கள் அறிய முடியாதபடி செய்வதோடு, அவர்களை முதலாளிகளுக்கு காட்டிக்கொடுக்கவும் உதவியாய் இருக்கிறார்கள். பம்பாயில் எங்களை நன்றாக வரவேற்றார்கள். நாங்கள் சென்ற நாள் மாலை 4-30 மணிக்கு ஆரம்பித்த ஊர்வலம் 7-30 மணிக்குத்தான் முடிந்தது. 2, 3 மைல் தூரம் ஊர்வலம் சென்றது. அந்த ஊர்வலத்துடன் பல ஆயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்டார்கள்.


ஆதாரத்தோடு பேசினேன்


மக்கள் எல்லாம் மிகுந்த ஆடம்பரத்துடனும், உற்சாகத்துடனுமே இருந்தார்கள். தெருக்களெல்லாம் கொடிகள், தோரணங்கள் கட்டி அலங்காரம் செய்திருந்தார்கள். ஒவ்வொரு வீட்டிலும் படம் வைத்து அலங்காரம் செய்து வாழைக் கம்பம் தோரணம் கட்டி உற்சவம் போல் கொண்டாடினார்கள். ஊர்வலம் முடிந்ததும் ஒரு பொதுக்கூட்டம் நடைபெற்றது. மறுநாளும் ஒரு பெரிய கூட்டம் ஏற்பாடு செய்திருந்தார்கள். அக்கூட்டத்திற்கு ஆதிதிராவிடர்களின் மாபெரும் தலைவர் டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் அவர்கள் தலைமை வகித்தார்.


நான் தமிழில் பேசினேன். அதைத் தோழர் சி.என். அண்ணாதுரை ஆங்கிலத்தில் மொழி பெயர்ந்தார். 3 மணி நேரம் நடந்தது. நான் பேசும்போது நமது நாட்டில் காங்கிரசார் செய்த கொடுமைகளையும், அவற்றால் நமது தமிழர்கள் அடைந்து வரும் கேடுகளைப் பற்றியும் மிக விளக்கமாகவும் விரிவாகவும் பல எழுத்து மூலமான ஆதாரங்களைக் காட்டிப் பேசினேன். அதைக்கேட்ட அங்குள்ள பம்பாய்வாசிகள் பலர் ஆச்சரியப்பட்டார்கள். நான் காங்கிரஸ் மந்திரிகள் உத்தியோக விஷயங்களில் நடந்து கொண்ட விதங்களைப் பற்றிப் பேசும்போது நம்மைக் கேலி செய்தார்கள்.


அதாவது, உயர்ந்த உத்தியோகங்கள் எல்லாம் பார்ப்பனர்களுக்கும், கீழ்த்தரமான உத்தியோகங்கள் எல்லாம் நமக்கும் அளித்திருப்பதைச் சொன்னேன். வருத்தப்பட்டார்கள்.


நமது நிலையை நன்கு விளக்கினேன்


பார்ப்பான் எவ்வளவு ஒழுக்கம் கெட்டவனாக இருந்தாலும் அவனை சாமி என்று அழைப்பதைப் பற்றியும், எவ்வளவு உயர்ந்தவனாகவும், ஒழுக்கமுடையவனாகவும், நாணயமுடையவனாகவும் இருக்கும் தமிழன் சூத்திரனாக நமது நாட்டில் இருந்து வருவதையும் கூறினேன். அவர்கள் மிகுந்த வருத்தப்பட்டு இத்தனை நாள் நீங்கள் பாடுபட்டும் இதையெல்லாம் கூட உங்களால் ஒழிக்க முடியவில்லையா என்று கேட்டார்கள். அதற்கு நான், எங்கள் நாட்டு பார்ப்பனர்களின் செல்வாக்கை நாங்கள் குறைத்து வரும்போது உங்கள் நாட்டிலுள்ள சிலரை எங்கள் நாட்டிற்கு அழைத்து வந்து இழந்த செல்வாக்கைத் தேடிக்கொடுக்கிறார்கள் என்றும், எங்களில் சில ஈனப்பிறவிகள் அவர்களுக்கு கூலிகளாக இருக்கிறார்கள் என்றும் பெயர் விவரங்களோடு எடுத்துச்சொன்னேன்.


தமிழ் நாட்டிற்கு தோழர்கள் ஆச்சாரியாரும், சத்தியமூர்த்தியாரும் எப்படி தலைவர்கள் ஆனார்கள் என்றும், அவர் கையாடிய தந்திரங்கள் இன்ன இன்னவை என்றும் எடுத்துச் சொன்னேன். நாம் மேலான பட்டங்கள் கொடுக்கவில்லையென்று நம்மோடு கோபித்துக்கொண்டு போய் பார்ப்பனர்களுக்கு அடிமையான சில பார்ப்பனரல்லாத பெரிய ஆட்கள் அவர்கள் தந்திரத்தில் பட்டு உள்ள பட்டத்தையும் சர்க்காருக்கு வாபஸ் செய்துவிட்டு பார்ப்பனர்களுக்குக் கை தூக்கிக்கொண்டு மூலையில் விலாசம் தெரியாமல் உட்கார்ந்து இருப்பதை எடுத்துச்சொன்னேன். ஆச்சாரியாரும் மூர்த்தியும் எப்படி மக்களை ஏமாற்றி அக்கிரமமாக சட்டங்கள் செய்துகொண்டு முதல் மந்திரியாகவும், மேயராகவும் வரமுடிந்தது என்பதை ஆதாரபூர்வமாக எடுத்துச் சொன்னேன். தோழர் சி.ஆர். ஆச்சாரியார் சட்டசபை மெம்பரானது ஒரு தந்திரமென்றும், அவர் நாமிநேஷன் சிலிப்போடும் முதல் நாள் தான் அவர் இன்ன தொகுதியில் நிற்கிறார் என்பது மக்களுக்கு தெரிந்தது என்றும், அதுவும் ஒரு பார்ப்பனரல்லாத மேதாவி சி.ஆர்.ரெட்டியாரை ஏமாற்றிவிட்டு பார்ப்பன ஓட்டர்களே அதிகமாக உள்ள யூனிவர்சிட்டி தொகுதியில் வந்தார் என்றும், அதில் அந்தமாதிரி சத்தியமூர்த்தியார் வர காத்திருந்தார் என்றும், தோழர் சி.ஆர். இருவரையும் ஏமாற்றி வந்தார் என்றும், அதற்கு பிரதிபிரயோஜனமாக சத்தியமூர்த்திக்கு ஆச்சாரியார் மேயர் பதவி செய்து வைத்தார் என்றும் அதுவும் 1939 இல் நடக்க வேண்டிய கார்ப்பரேஷன் தேர்தலை நடத்தாமல் செய்து, பழைய காங்கிரஸ் மெம்பர்களையே வைத்துக்கொண்டு மேயர் எலக்‌ஷன் மாத்திரம் நடத்தி மூர்த்தியாரை மேயர் ஆக்கினார் என்றும் கூறும்போது பம்பாய்க்காரர்கள் பார்ப்பன தந்திரங்களையும் அவர்களது கேவலமான நடத்தையையும் பற்றி சிரி சிரி என்று சிரித்தார்கள். அதோடு பம்பாயில் உள்ள காங்கிரஸ் தலைவர்கள் என்பவர்களும் இப்படித்தான் நடக்கிறார்கள் என்று கூறினார்கள்.


இழிவான செய்கையை எடுத்து விளக்கினேன்


மற்றும் சமீபத்தில் ஜில்லா போர்டு தேர்தலில் நமது கட்சி தோற்றதற்குக் காரணம் என்ன என்று விளக்கினேன். காங்கிரஸ் மந்திரிகள் ஜில்லா போர்டு தேர்தலில் நடந்துகொண்ட இழிவான செய்கைகளை எடுத்துக்கூறினேன். அதாவது ஜில்லா போர்டுக்கு நிற்கும் அபேட்சகர்கள் வாபஸ் வாங்கும் தினத்தைத் தேர்தல் நடக்கும் தினம் வரை அதிகப்படுத்தி வைத்து காங்கிரஸ் மந்திரிகள் பத்துப் பேரும் ஒவ்வொரு சமயமும் தேர்தல்கள் நடக்கும் இடத்திற்குச் சென்று காங்கிரசிற்கு விரோதமாக நிற்கும் அபேட்சகரைப் பயமுறுத்தியும், பிரதி பிரயோஜனம் செய்வதாய் ஆசை காட்டியும் வாபஸ் வாங்கச் செய்வதும் இரண்டிற்கும் கட்டுப்படாதவர்களை அவர்களின் சொந்தக் காரியங்களில் புகுந்து பலவித இன்னல்கட்கு உட்படுத்துவதுமான காரியங்கள் செய்து வாபஸ் வாங்கச் செய்து வெற்றி பெற்றார்களென்றும் கூறினேன். அதைக் கேட்டு அவர்கள் காங்சிரசாரை மிகவும் வெறுத்தார்கள்.


மேலும் நகரங்களில் சமீபத்தில் 2, 3 மாதமாக நடக்கும் பஞ்சாயத்து போர்டு (யூனியன்போர்ட்) அங்கத்தினர்கள் தேர்தலிலும், தலைவர் தேர்தலிலும் காங்கிரஸ்காரர்கள் பலமாக தோற்றதையும், அதிலும் ஜஸ்டிஸ் கட்சியார் பெறுவாரியாக வெற்றி பெறுவதையும் எடுத்துக் கூறினேன்.


தோல்வி பெறுவதையும் தோன்றக் கூறினேன்


முன் மந்திரியாக இருந்த தோழர் கோபால் ரெட்டியார் காங்கிரசிற்கு நகரத்தில்தான் எதிர்ப்பு இருக்கிறதென்றும், கிராமத்து ஜனங்களிடம் தங்களுக்கு மிகுந்த செல்வாக்கிருந்து வருகிறதென்றும் மந்திரியாக இருக்கும்போது கூறினார். இன்று அவர் வெட்கித் தலைகுனியும்படி கிராமங்களில் நடைபெறும் பஞ்சாயத்து தேர்தல்களிலும் தோற்று வருவது பற்றியும் கூறினேன்.


மற்றும் பம்பாயில் பொதுவான இடங்களில் காங்கிரஸ் கூட்டங்களே கூடுவதில்லையென்று கூறினார்கள். எந்தத் தலைவர்கள் வந்தாலும் மண்டபங்களிலும், தியேட்டர்களிலுமே கூட்டங்கள் நடப்பதாகக் கூறினார்கள். மற்றும் சென்னைக் காங்கிரஸ் மண்டபம் நெருப்புப் பற்றிய விஷயத்தைப் பற்றிக் கேட்கும்போது மண்டபத்தில் ஓலைக்கொட்டகையில் கடை வைத்திருந்த கடைக்காரர்கள் தங்கள் சாமான்கள் வெந்து போவதைக்கூடக் கருதாது தங்கள் பணங்களையும், கணக்குகளையும் பாதுகாத்து வந்திருக்க, தார்ஸ் கட்டட மண்டபத்திலிருந்த காங்கிரஸ் கணக்குகளும், பணங்களும் எப்படி வெந்துபோயின என்றும், ஒரு சமயம் அவை வெந்து போகவேண்டிய அவசியம் காங்கிரஸ் தலைவர்களுக்கு இருந்ததோ என்ற சந்தேகம் பம்பாயில் பரவியிருப்பதாகவும் கூறினார்கள். அது சரியான சந்தேகம்தான் என்று சொன்னேன்.
ஏனெனில், சென்ற வருடம் தகரக் கொட்டகை போட்டதோடு மற்றும் தண்ணீர் வசதிகளும், தொண்டர்கள் வசதிகளும் செய்திருக்க இந்த வருடம் இவைகள் செய்யாததன் காரணத்தையும் மற்றும் அது சம்பந்தமாக காங்கிரஸ் பத்திரிகைகளும், காங்கிரஸ் தொண்டர்களும் சொல்லுவதையும் ஆதாரம் காட்டினேன். மற்றும் நெருப்பானது ஒரே இடத்திலிருந்து பிடிக்காது. பல இடத்திலிருந்து ஆரம்பித்து வந்ததையும், நெருப்பு அணைக்கும் இஞ்சின் மிகத்தாமதமாக வரவழைக்கப்பட்டதையும் அதுவும் பழுதானதாக இருந்ததையும் பார்த்தால் நெருப்பு தானாகப் பிடிக்கவில்லை என்று கருதவேண்டி இருக்கிறதையும் சொல்ல வேண்டி வந்தது. இது விஷயமாக பம்பாயில் நடைபெறும் “பம்பாய் சென்டினல்” பத்திரிகை கிண்டல் செய்திருப்பதாகவும் கூறினார்கள். இப்போது சில நாட்களாக காங்கிரஸ் மண்டபம் புதுப்பிக்கும் விஷயமாகப் பணவசூல் நடப்பதையும், அதுவும் முதலில் பார்ப்பனர்களிடமே 100,200 ரூபாய்க் கையெழுத்து வாங்கி வருவதையும், பின் பார்ப்பனர் அல்லாதாரிடம் கையெழுத்தும் பணமும் பெற்றுவருதையும் எல்லாம் பற்றி பேசியதில் காங்கிரஸ் என்பது பார்ப்பன ஸ்தாபனம்தான் என்பதை நன்றாக உணர்ந்தார்கள்.


மற்றும் டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் அவர்களைப் பார்த்தேன். அவர் ஒரு தேநீர் விருந்தும், ஒரு சாப்பாடு விருந்தும் நடத்தினார். அதற்கு பம்பாயிலுள்ள பல பிரபலஸ்தர்களும், பத்திரிகைகாரர்களும் வந்திருந்தார்கள். அங்கு வந்திருந்த அனைவர்களும், காங்கிரஸ்காரர்களின் கேவலமான செய்கைகளைப் பற்றி வேடிக்கையாகப் பேசிக்கொண்டார்கள். பின் நான் முஸ்ஸிம் லீக் தலைவர் ஜனாப் ஜின்னா அவர்களைக் கண்டு பேசினேன்.


அவரிடம் 3 மணிநேரம் அரசியல் விஷயங்களைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தேன். அவர் பல புதிய விஷயங்களைப் பற்றிக் கூறினார்.


காங்கிரசைப் பற்றி ஜின்னா கூறியது


அவர்கள் காங்கிரஸ்காரர்களைப் பற்றிக்கூறும்போது அவர்கள் ஒரு ஏமாற்றுக்காரர்களென்றும், ஒரு கொள்ளைக் கூட்டத்துக்காரர்களென்றும் பொருள்படக்கூறினார். அதற்கு உதாரணமாக அரசியலின் பேரால் மக்களை வெள்ளைக்காரர்களுக்கு காட்டிக்கொடுத்து, பதவிகளைக்கொள்ளையடித்து வருவதைப் பற்றி மிக, மிக விளக்கமாகப் பேசினார்.


மற்றும் தோழர் ஜின்னா அவர்கள் ஒவ்வொரு மாகாணத்திலும் முஸ்லிம்களுக்கும், சிறுபான்மை வகுப்பினர்களுக்கும் காங்கிரஸ் மந்திரிகள் செய்த கொடுமைகளைக் கூறினார்.


வங்காளத்தில் முஸ்லிம்களை வதைத்து வரும் இழிவான செய்கைகளையும் புள்ளி விவரங்களுடன் கூறினார்.


மற்றும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு ஒவ்வொரு மாகாணங்களிலும் காங்கிரஸ் ஆட்சியில் செய்து வந்த கொடுமைகளை டாக்டர் அம்பேத்கர் அவர்கள் புள்ளி விவரங்களுடன் எடுத்துக்கூறினார். மற்றும் இரு சமுகங்களும் ஒன்று சேர்ந்து காங்கிரசை எதிர்க்க செய்துவரும் முயற்சிகளையும் பற்றி இருவரும் கூறினார்கள்.


காங்கிரஸ்காரர்களுக்கும், தமக்கும் நடந்த கடிதப் போக்குவரத்தைப் பற்றித் தோழர் ஜின்னா அவர்கள் விரிவாக எடுத்துச் சொன்னார்.


மற்றுமொரு முக்கிய விஷயம்


மீண்டும் ஒரு முக்கியமான விஷயத்தை தோழர் ஜின்னா அவர்கள் என்னிடம் கூறினார். அதாவது வைஸ்ராய் அவர்களும், பிரிட்டிஷ் சர்க்காரும் காங்கிரசை நம்புகிறார்கள் வெளியில் சர்க்காரைப் பற்றி காங்கிரஸ்காரர்கள் என்ன ஜம்பமாகப் பேசினாலும், உள்ளுக்குள் நல்ல அடிமைகளாக இருக்கிறார்கள் விஸ்வாசமாக வெள்ளைக்காரனுடைய நலத்திற்கு வேண்டியதை எல்லாம் செய்கிறார்கள் என்றும் சர்க்கார் நம்புகிறார்கள். 27 மாதம் பிரிட்டிஷார் நன்மைக்காகப் பல வேலைகள் செய்திருப்பதாகவும சர்க்கார் கருதுகிறார்கள். இந்த மாதிரி நம்மை சர்க்கார் நம்புவதில்லை. நாம் எப்பொழுதும் அவர்களுக்கு விரோதமாகச் செய்வோம் என்று சந்தேகப்படுகிறார்கள். அந்த அடிமைகளை விட்டுவிட சர்க்காருக்கு மனமில்லை என்பதாகும்.


காங்கிரஸ், சர்க்காரை ஒரு நாளும் மிரட்டவில்லை; அடங்கியே வந்ததென்பதையும் பல ஆதாரங்களுடன் ஜின்னா அவர்கள் கூறினார்.


இப்போது வைஸ்ராய் அவர்கள் பம்பாயில் பேசும்போது குடியேற்ற நாட்டந்தஸ்து கொடுப்பதாகக் கூறிவிட்டதாகவும், மீண்டும் பதவி ஏற்றுக் கொள்ளலாமென்றும் காங்கிரசார் கூறுகிறார்கள். அது மிகவும் ஏமாற்றுப் பேச்சு, சூழ்ச்சிப்பேச்சு, வைஸ்ராய் முன்பு என்ன பேசினாரோ அதையேதான் இப்பொழுதும் பேசி இருக்கிறார் ஒரு மாற்றமும் இல்லை. அதில் ஏதாவது ஒரு புது விஷயம் இருக்கிறதென்றால் அது சிறுபான்மையோர் உரிமைகளுக்கு பங்கம் வராது பாதுகாப்பேன் என்பதை வலியுறுத்தியிருப்பதாகும்.


தோழர் சி.ராஜகோபாலாச்சாரியார் வார்தா ஓடி இருக்கிறார். அங்கு போய் வைஸ்ராய் பிரசங்கத்தைக் காட்டி மீண்டும் பதவியைப் பெற உத்தரவு பெற்று வருவார். அப்படிச் செல்லும் போதே 2-3 பார்ப்பனர்களையும், நமது உஸ்மான் சாய்பு அவர்களையும் தூண்டி, காந்தியாருக்கு வைஸ்ராய் பிரசங்கத்தைக் காட்டி, மந்திரி பதவி ஏற்றுக் கொள்ளவேண்டுமென்று தந்தி கொடுக்கும்படி செய்து விட்டுச் சென்றுள்ளார். அதன்படியே தந்தியும் கொடுத்திருக்கிறார்கள்.


“சுதேசமித்திரன்” பத்திரிகையும் வைசிராய் பிரசங்கத்தால் சர்க்கார் சிறிது இறங்கி விட்டதாகக் கூறுகிறது.


வரி விதிப்பு நியாயமல்ல


ஆனால், தினமணியோ வைசிராய் மற்றும் ஒருபடி உயர்ந்து விட்டதாகக் கூறுகிறது. நமக்குக் காங்கிரஸ் பதவி ஏற்றாலும் ஒன்றுதான், ஏற்காவிட்டாலும் ஒன்றுதான். ஆனால், மீண்டும் காங்கிரஸ் பதவிக்கு வந்தால் நாட்டில் ரத்தக்களரியும், மண்டை உருளலும் நடைபெறும். இது நமது பக்கத்தில் நடைபெறாவிட்டாலும் வடநாட்டில் அவசியம் நடந்தே தீரும். இது விஷயமாக வைஸ்ராயிடம் தோழர் ஜின்னா அவர்கள் கூறி விட்டதாகவும் தெரிகிறது. அதனாலேயே இனி மந்திரி சபை அமைவதானால் அதில் எல்லாக் கட்சியாரையும் பிடித்துப்போட வேண்டுமென்று வைசிராய் பார்க்கிறார். இதனால் பின்பற்றுபவர்கள் இல்லாத தலைவர்களுக்கெல்லாம் பிரைஸ் அடித்தாலும் அடிக்கும். காங்கிரஸ் மந்திரிகள் காலத்தில் விதிக்கப்பட்ட வரிகளைப் பற்றி தோழர் ஜின்னா அவர்களிடம் பேசிக்கொண்டிருந்தேன். அதற்கவர் வரி உயர்வைப் பற்றி நமது கிளர்ச்சி போதாதென்று கூறுகிறார். நாம் மட்டும் தக்கபடி கிளர்ச்சி செய்திருந்தால் இந்த வரி உயர்வு நடந்திருக்காது என்றும் கூறினார். மீண்டும் இதுபற்றி அதிகமான கிளர்ச்சி செய்து வரியை எடுக்கும்படி செய்ய வேண்டுமென்றும் கூறினார். மற்றும் இந்த வரி விதிப்பே நியாயமானதல்லவென்றும் கூறினார்.


இந்தி எதிர்ப்புக்கு முழு ஆதரவு


மதுவிலக்கு செய்வதால் ஏற்படும் துண்டை நிவர்த்திக்கவே இந்த வரிகள் உயர்த்தப் பட்டதென்றும், 3, 4 ஜில்லாக்களில் மதுவிலக்கு செய்வதற்கு வருடம், 6, 7 கோடி வருமானமுள்ள வரியை போடுவதா? என்று கூறியதுடன், காங்கிரசிற்கு விரோதமாக உள்ள எல்லாக் கட்சிகளும் ஒன்று சேர்ந்து இந்தக் கிளர்ச்சி செய்து பொதுஜனங்களுக்கு ஏற்பட்ட இந்த வரிக்கொடுமையை எடுக்க முயற்சிக்க வேண்டுமென்றும் கூறினார். மற்றும் இந்தி எதிர்ப்புக் கிளர்ச்சியை மீண்டும் ஆரம்பிக்க வேண்டியதைப் பற்றி தோழர்கள் அம்பேத்கர் அவர்களிடமும், ஜின்னா அவர்களிடமும் கூறினேன். அதற்கு இருவரும் இந்தி எதிர்ப்புக்கு பரிபூரண ஆதரவு கொடுப்பதாகக் கூறி மீண்டும் ஆரம்பிக்கும்படி கூறினார்கள்.


மற்றும் தோழர் அம்பேத்கர் அவர்களும், ஜனாப் ஜின்னா அவர்களும் ஒரு அவசியமான விஷயம் கூறினார்கள். அதாவது காங்கிரஸ்காரர்கள் மந்திரி பதவியை ராஜினாமா செய்துவிட்ட பின்பு சட்டசபைக் கூட்டம் நடக்காமல் இருக்கும்போது சட்டசபை மெம்பர்களுக்கும், தலைவர்களுக்கும் சம்பளம் கொடுத்து வருவதைப் பற்றி பெரிய கிளர்ச்சி செய்யவேண்டுமென்றும், வேலை செய்யாமலிருப்பவர்களுக்கு சம்பளம் கொடுப்பதென்றால் இது எவ்வளவு அக்கிரமம் என்பதை சற்று யோசித்துப் பார்க்க வேண்டுமென்றும் கூறியதுடன், இந்தச் சம்பளத்தை சட்டசபை மெம்பர்கள் எல்லாம் காங்கிரசிற்குக் கொடுக்க வேண்டுமென்று காந்தியார் கேட்பது மகா துணிகரமான அக்கிரமம் என்றும் கூற இந்தச் சம்பளம் கொடுப்பதைத் தடுக்க தக்க கிளர்ச்சி செய்ய வேண்டிய பல ஏற்பாடுகளும் செய்ய வேண்டும் என்றும், இந்த சம்பளமானது ஏழை மக்களின் வரிப் பணத்திலிருந்து கொடுக்கப் படுகிறதென்றும், இது ஒரு அரசியல் கிளர்ச்சி ஸ்தாபனத்திற்குக் கொடுக்க வேண்டுமென்று கூறுவது யோக்கியமானதல்ல என்றும் இனி அவ்விதம் கொடுத்து வருவதை தடுக்க வேண்டுமென்றும் கூறினார்கள்.


சும்மா இருப்பவர்களுக்குச் சம்பளம் கொடுப்பதா?


நானும் அதேதான் கூறுகிறேன். நமது ஏழை மக்கள் வரிப் பணத்திலிருந்து ஒரு வேலையும் இல்லாது சும்மா இருந்து கொண்டிருப்பவர்களுக்கு சம்பளம் கொடுப்பதும், அதை நாம் பார்த்துக் கொண்டிருப்பதும் எவ்வளவு கேவலமானதும், வீரமற்றதுமான காரியம் என்பதை யோசித்துப் பாருங்கள்.


நமது சர்க்காரும் சண்டித்தனமும் தொல்லை விளைவிப்பதும் செய்கிறவர்களுக்குத் தான் சலுகைகாட்டி வருகிறார்கள்; பெருந்தன்மையும், நல்லெண்ணமும் உடையவர்களைப் புறக்கணிக்கிறார்கள் என்று நான் சொல்லி வருவதையே தோழர்கள் ஜின்னாவும், அம்பேத்கரும் கூறினார்கள். மற்றும் நமது குறைகளை நீக்க நாம் கிளர்ச்சி செய்ய வேண்டியது அவசியம் என்றும், அதற்கு இது நல்ல சமயம் என்றும் கூறினார்கள்.


நமது தென்னாட்டில் காங்கிரசிற்கு விரோதமான கிளர்ச்சிகள் மற்ற மாகாணங்களைவிட நன்றாக நடந்திருக்கின்றனவென்றும், இங்கு நடைபெறும் கிளர்ச்சிகளை மிக நன்றாகக் கவனித்து வருவதாகவும் மிகவும் புகழ்ந்து கூறினார்கள். அதற்கு நான், அப்படி ஒன்றும் பிரமாதமாக நடைபெற்றுவிட வில்லை. ஏதோ எங்களைச் சேர்ந்த சிலர் எங்களாலானதைச் செய்து வருகிறோம். அப்படிச் செய்தும் எங்கள் மக்கள் இன்னும் திருந்தவில்லை என்றும், நாளைக்குத் தேர்தல் வந்தாலும் மஞ்சள் பெட்டி வைத்தால் அதில் தான் ஓட்டுப்போடுவார்கள் என்றும் சொன்னேன். அதற்கு இருவரும் சிரித்துக்கொண்டு ஏன் என்றார்கள். மஞ்சள் என்றால் மங்களகரமென்றும் நல்ல சகுனமென்றும் சொல்லி ஓட்டு கேட்பதால் பாமர மக்கள் மஞ்சள் நிறத்துக்கு விரோதம் செய்யப் பயப்படுகிறார்கள் என்றும் சொன்னேன். அவர்கள் இன்னும் அதிகமாக சிரித்தார்கள்.


காங்கிரஸ் சூழ்ச்சியை வெளியாக்கப் பிரசாரம்


பிறகு இந்தியா பூராவுக்கும் காங்கிரஸ் சூழ்ச்சியை வெளியாக்கும் பிரசாரம் நடக்கவேண்டும் என்றும், அதற்கு தாங்கள் இருவரும் பாடுபட வேண்டுமென்றும் சொன்னதோடு தென்னிந்தியாவிற்கு வரவேண்டுமென்றும் தோழர்கள் அம்பேத்கர், ஜின்னா ஆகிய இருவரையும் கேட்டுக்கொண்டேன். இருவரும் சம்மதித்து இம்மாதக் கடைசியிலாவது ஏப்ரல் மாதத்திலாவது வருவதாக ஒப்புக்கொண்டார்கள்.


மற்றும் சர்க்கார், காங்கிரஸ்காரர்கள் மந்திரி பதவியை விட்டுப்போன பின்பும் காங்கிரஸ்காரர்கள் பதவியில் இருந்தபோது எப்படி நடந்துகொண்டார்களோ அதேபோல இவர்கள் நடந்துகொள்ளுகிறார்கள் என்றும், எங்கள் கவர்னருக்கு ஆச்சாரியார்தான் குருவென்றும், அவர் சொல்லுகிறபடிதான் பெரிதும் நடக்கிறார் என்றும், ஒவ்வொரு உத்தியோகமும் பார்ப்பனர்களுக்கே அளித்து வருகிறார்கள் என்றும், உதாரணமாக, சமீபத்தில் நியமித்த டைரக்டர் ஆப் பப்ளிசிட்டி என்ற வேலையை மகா கனம் ஸ்ரீனிவாச சாஸ்திரியார் தம்பி வி.எஸ்.ராமசாமி அய்யருக்குக் கொடுத்திருக்கிறார்கள். அவர் ‘இந்து’ப் பத்திரிகையின் உதவி ஆசிரியராக இருந்தவர் இவர் மிக வயது சென்றவர் மற்றும் இவருக்கு தமது மகன் இறந்த வருத்தத்தால் கொஞ்சம் புத்திக் கோளாறு உள்ளவரென்று சொல்லப்படுகின்றதென்றும், அவர்கள் கூட்டமே பார்ப்பனரல்லாதார் சமுகத்திற்கு விரோதிகள் என்றும், அப்படிப்பட்ட வரை எங்கள் கவர்னர் பிரபு முக்கியமான பதவியில் நியமித்தால் அவர் கட்சிப் பிரதி கட்சியில் விஷயத்தையே மாற்றினாலும் மாற்றலாமென்று பயப்படவேண்டி இருக்கிறது என்றும் ஆகையால் சர்க்கார் கட்டுப்பாடாகவே எங்கள் கிளாச்சிக்கு விரோதமாக நடந்துவருகிறார்கள் என்றும் ஜனாப் ஜின்னா அவர்களிடம் கூறினேன்.


அதற்கவர் மிகவும் வருத்தப்பட்டு இம்மாதிரி விஷயங்களில் நீங்கள் பெரும் கிளர்ச்சி செய்து வெளி மாகாணங்களுக்குத் தெரியும் படியாகச் செய்ய வேண்டும் என்று கூறினார்.


சண்டை சமயமாக இருக்கிறதே இப்போது கிளர்ச்சி செய்தால் அது பிரிட்டிஷூக்கு சங்கடமாக இருக்குமே என்று பயப்படுகிறேன் என்று நான் கூறினேன்.


கிளர்ச்சி செய்ய வேண்டும்


அதற்கு ஜின்னா அவர்கள் அதைப்பற்றி நாம் அதிகக் கவலைப்பட வேண்டியதில்லை. அந்தக் கவலை சர்க்காருக்கும் இருக்கவேண்டியதாகும் என்று சொன்னதோடு புகையிலை வரி, விற்பனை வரி குறைப்பதைப் பற்றியும், சட்டசபை மெம்பர்களுக்குச் சம்பளம் கொடுப்பதை நிறுத்துவதைப் பற்றியும் உத்தியோக விஷயங்களைப் பற்றியும் கிளர்ச்சி செய்வது தப்பாகாது. ஆதலால், நாம் உடனே கிளர்ச்சி செய்யவேண்டியதுதான் என்றும் கூறினார்.


நமது கிளர்ச்சிப்படி சர்க்கார் நமது குறைகளை நீக்க வேண்டியதுதான் கடமையென்றும் கூறினார். மற்றும் நமது இயக்கத்தைப் பற்றி மற்ற மாகாணங்களிலுள்ள மக்கள் அறியும்படி ஒவ்வொரு மாகாணங்களுக்கும் செல்ல வேண்டுமென்றும், ஆங்காங்குள்ள ஜாதி ஒழிப்பு சங்கங்களுடன் சேர்ந்து நமது கொள்கைகள் பரவச் செய்ய வேண்டுமென்றும் கூறினார்கள்.


போகாத ஊருக்கு வழிகேட்பது


மற்றபடி தோழர்கள் ஜின்னா அவர்களும், அம்பேத்கர் அவர்களும் காங்கிரஸ் தேசத்துக்கு கேடு விளைவிக்கும் மகா கொடிய சபையென்றும், அதற்கு விரோதமாக பெரும் கிளர்ச்சி செய்து மக்களைக் காப்பாற்ற வேண்டியது மிகவும் அவசியமும், அவசரமுமான காரியம் என்றும் மிக வற்புறுத்திக் கூறினார்கள். இதுதான் எனது பம்பாய் பிரயாண விஷயம். ஆகையால், நீங்கள் யாவரும் சமீபத்தில் நடக்கவிருக்கும் இந்தி எதிர்ப்புக் கிளர்ச்சிக்கு ஆதரவளிக்க வேண்டும். சிறை செல்ல வேண்டிய நிர்ப்பந்த மேற்பட்டால் சிறைசெல்லவும், பணம் கொடுக்கக் கூடியவர்கள் பணம் கொடுக்கவும், ஆதரவு காட்டக் கூடியவர்கள் ஆதரவு காட்டவும் வேண்டுகிறேன். இந்தி விஷயமாக சர்க்கார் இப்போது விடுத்திருக்கும் ஒரு நூதன அறிக்கையைப் பற்றி நாம் ஒன்றும் கவலை கொள்ளவேண்டாம். இது சர்க்காரின் தந்திரம் நம்மை ஏமாற்றவே அவ்விதம் செய்திருக்கிறார்கள்.


இந்தியால் தமிழ் கெடும் என்று நாம் சொன்னால் பிள்ளைகளுக்கு மற்ற பாடம் படிக்க நேரம் இருக்கிறதா என்று சர்க்கார் எட்மாஸ்டர்களைக் கேட்பது – போகாத ஊருக்குத் தடம் கேட்பது போலல்லவா இருக்கிறது. அதுவும் 100-க்கு 99 பேர்கள் பார்ப்பன எட்மாஸ்டர்களாக உள்ளவர்கள் என்ன சொல்வார்கள்? இந்தி வைக்கும்போது காங்கிரஸ் சர்க்கார் அனேக எட்மாஸ்டர்களைக் கேட்டுத்தானே வைத்தர்கள். அப்படி இருக்கும்போது அவர்கள் இந்திக்கு விரோதமாகச் சொல்லியிருக்கிறார்களா? இந்தி எடுத்தால் அநேக பார்ப்பனர்களுக்கு வேலை போய்விடும் என்பது எட்மாஸ்டர்களுக்குத் தெரியாதா? ஆக, ஆடுகளைக் கேட்டு மசால் அரைப்பாதானால் எந்த ஆடு அனுமதி கொடுக்கும்? ஆகையால், நமது கிளர்ச்சியை ஆரம்பிக்க வேண்டியதுதான். திருநெல்வேலி ஜில்லாவிலிருந்து ஒரு படை கால் நடையாகச் செல்லப் போகிறது. அது சென்னை வந்து சேர்ந்ததும் சென்னையில் மீண்டும் முன்போலவே கிளர்ச்சி ஆரம்பிக்கப்படும். அதற்காக யாவரும் பலமான ஆதரவு கொடுக்க வேண்டுமென்று மீண்டும் வேண்டுகிறேன். ஜனாப் ஜின்னா, தோழர் அம்பேத்கர் தென்னாட்டுச் சுற்றுப் பிரயாணம் வரும்போது ஆதரவு கொடுக்க வேண்டுமாகக் கேட்டுக்கொள்கிறேன். அவர்கள் நம் நாட்டில் 15 நாட்கள் சுற்றுப் பிரயாணம் செய்வார்கள்.


(12-10-1940 அன்று, பம்பாய் சென்று திரும்பிய பெரியார் ஈ.வெ.ரா. அவர்களை வரவேற்று நடைபெற்ற பாராட்டுவிழாவில் தந்தை பெரியாரின் சொற்பொழிவு)

– தோழர் பெரியார், குடிஅரசு – சொற்பொழிவு- 28.01.1940

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *