யாருக்கு இந்த உபதேசம்?

Print Friendly, PDF & Email

இந்தியா ஒரு ‘நேஷன்”என்று ஒரு கூட்டத்தார் சொல்லி வருவதை நாம் பல தடவை மறுத்து தக்க உதாரணங்களுடன் விளக்கியிருக்கிறோம். நினைக்க முடியாததும், எண்ண முடியாததுமான கற்பனைகளைக் கற்பித்து மக்களை ஏய்த்து அடிமைப் படுத்தி வந்த வஞ்சகக் கூட்டத்தாரின் மரமண்டையில் நாம் எவ்வளவுதான் உதாரணங்களுடன் விளக்கினாலும் எப்படி ஏறும். ஆகவே, பொதுமக்கள் தான் உணர்ந்து அவர்களின் பித்தலாட்டத்தை, புரட்டை அறிந்து தக்க பாடம் கற்பிக்க வேண்டியதாகும் என்ற ஒரே காரணத்தின் மீதும் “இந்தியா ஒரு தேசம் (நேஷன்) அல்லவென்று சிலர் சொல்லுகிறார்கள். இது ஒரு கண்டமென்று சொல்லுகிறார்கள். நல்ல வேளையாக ஒரு கோளமாய் இல்லாமல் போயிற்றே” என்று மாஜி கனம் ராஜகோபாலாச்சாரியார் சென்னையில் கிறிஸ்துவ கல்லூரியில் ஒரு கூட்டத்தில் பேசுகையில் குறிப்பிட்டதாக பத்திரிகைகளில் செய்தி காண்கிறதென்ற காரணத்தினாலேயேயும் மீண்டும் எழுதலானோம்.


இந்தியா ஒரு தேசமா – அல்லவா என்பதைக் குறித்து விவாதிப்பதற்குமுன், ஒரு தேசம் (நேஷன்) என்பதின் லட்சணம் என்ன என்பதை சற்று சிந்தித்தால் இவர்கள் (காங்கிரஸ்காரர்கள்) கூற்று எவ்வளவு புரட்டானதென்பது விளங்கும். தனிக்கலை, தனி மொழி, தனி நாகரிகம், தனி நாடு, தனி அரசாட்சி முதலியவைகளைக் கொண்ட மக்களைத்தான் சரித்திரக்காரர்கள் நேஷன் என குறிப்பிட்டு வந்தார்கள் என்பது சரித்திர ஞானமுள்ளவர்களுக்கு நன்கு விளங்கும். மற்றும் ஒரே சர்க்காரின் அதாவது ஆட்சியின் கீழிருப்பவர்களையே “நேஷன்” என்றழைக்கப்பட்டு வந்திருக்கிறது – அழைக்கப்பட்டும் வருகிறதென்பதும் அச்சொல்லுக்கு உரை எழுதினவர்கள் கொடுத்திருக்கிறார்கள்.


ஆகவே, இந்திய மக்கள் யாவரும் என்று ஒரே ஆட்சியின் கீழ் இருந்தனர்? எத்தனை நூற்றாண்டுகள் அவ்வாறு இருந்தனர்? என்பவைகளை சரித்திர ஆதாரத்தோடு மெய்ப்பிக்க முடியுமா என்று கேட்கிறோம். சரித்திர காலந்தொட்டு இந்தியா பற்பல சிறு ஆட்சியின் கீழ் துண்டு துண்டாக இருந்து வந்ததேயல்லாது ஒரே ஆட்சியின் கீழ் இருந்ததென்று சொல்லப்படுமானால் அது ஒரு சில மன்னர்கள் தங்கள் ராணுவ பலத்தினால் ஆண்டு வந்தார்கள் என்று சொல்வதைத் தவிர, வேறு என்ன சரித்திர ஆதாரம் காட்ட முடியும் என்று கேட்கிறோம்.


இந்தியா ஒரு “நேஷன்” என்று சொல்வதைவிட, “திராவிடநாடு” ஒரு “நேஷன்”, “ஆந்திரநாடு” ஒரு “நேஷன்”, “வங்காளநாடு” ஒரு “நேஷன்” என்று சொன்னாலும் பொருந்தும். உதாரணமாக திராவிடநாட்டை எடுத்துக்கொண்டால் திராவிடநாடு தனிக்கலை, தனிமொழி, தனி நாகரிகம், தனி ஆட்சியின் கீழ் ஆயிரக்கணக்கான வருஷங்கள் இருந்து வந்ததென்று சரித்திரம் சாற்றுகிறதென்பதை யாராலும் மறைக்க முடியாது.


எனவே, திராவிட மக்கள் ஒரு “நேஷன்” என்றால் அறிவுடைய மக்கள் ஒப்புக் கொள்வார்களேயல்லாது. நூற்றுக் கணக்கான மொழிகளையும், நாகரிகங்களையும், ஆட்சிகளையும் கொண்டதாய் விளங்கும் நாட்டையோ, மக்களையோ, ஒரு ‘நேஷன்’ என்று கூறினால் ஒப்புக் கொள்வார்களா? என்று கேட்கிறோம். 52 வித்தியாசமான ஆட்சிகளின் கீழ் இருந்துவரும் ஒரு நாட்டை ஒரு “நேஷன்” என்று சொல்லி எல்லா மக்களையும் ஒன்றுபடுத்தி அன்னியனிடமிருந்து விடுதலையடைந்து கொண்டு, ஒரு கூட்டத்தார் மற்றொரு கூட்டத்தாரை சவாரி செய்யலாம் என்றால் இதை யார் ஒப்புக்கொள்வார்கள் என்று கேட்கிறோம். “நாம் பல ஜாதி, நாம் பல மதம், பல கொள்கையுடையவர்களாய் இருக்கிறோம். ஒருவரையொருவர் அடிமைப்படுத்தி விடக்கூடாது. விடவும் சம்மதிக்க மாட்டோம். எங்கள் சமுகம், கலை, நாகரிகம் எல்லாம் பாதுகாக்கப்பட வேண்டும். அதற்குப் பொறுப்பளிக்க வேண்டும். பொறுப்பளிப்பதென்றால் எதிர்கால ஆட்சிமுறையை வகுப்பதற்கு ஒவ்வொரு வருக்கும் போதுமான உரிமைகள் வழங்கப்படவேண்டும்” என ஒவ்வொருவரும் கூறினரேயல்லாது தோழர் ஆச்சாரியார் சொல்லுகிற மாதிரி மத்தியஸ்தம் செய்ய அன்னியர் ஒருவன் என்றென்றும் இருக்க வேண்டுமென்று ஒருவரும் கூறவில்லை. ஏன் இவ்வாறு கூறுகிறார்கள் என்றால் இவர் (காங்கிரஸ்காரர்)களின் கடந்த 21/2 வருட ஆட்சியைப் பார்த்த பிறகும் இதற்குக் காரணம் விளக்க வேண்டுமா என்று கேட்கிறோம்.


இந்தியா இவர்கள் கூறுவதுபோல் ஒரு நேஷனாயிருந்திருந்தால் இன்று இவ்வளவு எதிர்ப்பு இருக்குமா என்று கேட்கிறோம். இந்தியாவின் பழைய சரித்திரத்தைப் பார்ப்பவர்களுக்கு இந்தியாவில் எத்தனை வித ஆட்சிகள் இருந்தனவென்றும், எத்தனை ராஜ்ஜியங்கள் இருந்தனவென்றும், அவைகளில் ஒன்றையொன்று விழுங்க அடிமைப்படுத்த போராடி வந்தன என்பதும் நன்கு விளங்கும்.


தோழர் ஆச்சாரியார் இரண்டாவது வாக்கியத்தில் “இது ஒரு கண்டம்” என்று சொல்லுகிறார்கள் என்று குறிப்பிட்டிருக்கிறார். ஒரு பிரதேசத்தைக் கண்டம் என்று பூகோள சாஸ்திரிகள் எந்தக் காரணத்தைக்கொண்டு கூறுகிறார்கள் என்பதை அறிந்தவர்கள் இந்தியாவை ஒரு கண்டம் என்று சொல்வதைக் கண்டு ஆச்சரியப்பட மாட்டார்கள். ஏன்? பல ஜில்லாக்களைக் கொண்ட ஒரு பாகத்தை ஆங்கிலேயர்கள் ஆட்சி முறையை உத்தேசித்து ஒரு மாகாணமாகப் பிரித்தார்கள். பல மாகாணங்களைக் கொண்ட ஒரு பிரதேசத்தை தேசம் என்று அவர்கள் வகுத்தார்கள். மாகாணத்திற்கு இவ்வளவு ஜில்லாக்கள் தான் இருக்க வேண்டும் என்ற விதியொன்றுமில்லை. உதாரணமாக, சென்னை மாகாணத்தையும், பீகார் மாகாணத்தையும் எடுத்துக் கொண்டால் அவைகளுக்குள்ள வித்தியாசம் இதை நன்கு விளக்கும். அதுபோலவே, கண்டம் என்றால் பல ராஜ்யங்ககளைக் கொண்டதென்பதும், எல்லா கண்டமும் ஒரே அளவுள்ளதென்றும், ஒவ்வொன்றும் ஒன்றுக்கொன்று எல்லாவகையிலும் வித்தியாசம் உடையதென்பதும் நன்கு விளங்கும். எனவே பல ராஜ்யங்களைக் கொண்ட பாகத்தை கண்டம் என்று சொன்னால் என்ன தப்பு என்று கேட்கிறோம்.


மேலும், தோழர் ஆச்சாரியார் “ஒரு தேசத்தில் மெஜாரிட்டி மக்களின் ஆதரவுடன் நிர்வாகத்தை நடத்தும் சர்க்காரை மைனாரிட்டி ஒப்புக்கொள்ளாமல் அந்த மைனாரிட்டி என்ன செய்ய முடியும்?” என ஆணவமாகப் பேசியிருக்கிறார். இவரது ஆணவப்பேச்சைக் கண்டு நாம் ஒன்றும் ஆச்சரியப்படவில்லை. ஏன் இந்த ஆணவத்தின் காரணமாகத்தான், தனக்கு சட்ட சபையில் மெஜாரிட்டி இருக்கிற மமதையினால் மைனாரிட்டிகளின் எதிர்ப்பை சிறிதும் லட்சியம் பண்ணாமல் தான் நினைத்த மூப்பாக நடந்து வந்தார் என்பது நன்கு விளங்கும். ஒரு தேசத்தில் மெஜாரிட்டி, மைனாரிட்டி கட்சிகள் நடந்து கொள்வதைக் குறித்துப் பேசும் ஆச்சாரியார் ஒரு தேசத்தில் மெஜாரிட்டி கட்சியினர் நடந்து கொள்கிற மாதிரி நடந்துகொள்கிறாரா? என்று கேட்கிறோம். எந்தத் தேசத்திலாவது, தேர்தலில் தெரிவிக்காத காரியங்களையெல்லாம் தங்களுக்கு மெஜாரிட்டி கிடைத்த உடன் சாதிக்க முயல்கிறார்களா? எங்காவது தங்களது வர்ணாசிரம தர்மத்தை நிலைக்கச் செய்ய இழந்துபோன செல்வாக்கை நிலைபெறச் செய்ய காரியங்கள் செய்து வருகிறார்களா? என்று கேட்கிறோம்.


எதிர்க்கட்சித் தலைவரை போட்டியிட்டுத் தோற்கடித்த ஒரு கட்சியைச் சேர்ந்த ஆச்சாரியாருக்கு ஒரு தேசத்தின் ஜனநாயத்தைக் குறித்துப் பேச என்ன உரிமையுண்டென்று கேட்கிறோம். மற்ற நாடுகளில் அதாவது ஜனநாயக நாடுகளில் அரசியல் கட்சிகள் பல உண்டு. அவைகள் ஒவ்வொன்றும் தங்கள் தங்கள் கொள்கைகளையும், திட்டங்களையும் விளக்கி ஆதரவு தேடுவார்கள். அதன் காரணமாக மைனாரிட்டி கட்சியினர் மெஜாரிட்டியினராகவும், மெஜாரிட்டியினர் மைனாரிட்டிகளாகவும் மாறி வருகின்றனர். அங்கெல்லாம் ஒரு கட்சி மற்றொரு கட்சியை தேசத்துரோக கட்சி , ஏகாதிபத்திய தாசர் கட்சி, நாட்டைக் காட்டிக்கொடுக்கும் கட்சி என்று இழி பிரசாரம் செய்ய மாட்டார்கள். தங்களைத் தவிர, வேறுகட்சி ஒன்றுமிருக்க முடியாதென்றும் தாங்கள் தான் இந்நாட்டின் ஏகப்பிரதிநிதியென்றும் பேசும் ஆணவம் பிடித்தவர்கள் ஜனநாயகத்தைப் பேசுவதென்றால் இதைப் பல்லிழந்த கிழப் புலி பார்ப்பானுக்கு தர்மோபதேசம் செய்ததற்கொப்பிடாமல் வேறெதற்கு ஒப்பிடுவதென்று கேட்கிறோம். கடைசியாக இத்தகைய உபதேசம் திராவிட மக்களிடம் சாயாது என்று தெரிவித்துக் கொள்வதோடு, இத்தகைய உபதேசங்களைக் கேட்டு திராவிடர் ஒரு நாளும் ஏமாற மாட்டார்கள் என்றே நம்புகின்றோம்.


– தோழர் பெரியார், குடிஅரசு – தலையங்கம் – 28.01.1940

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *