இந்தியை எதிர்ப்பது ஏன்?

Print Friendly, PDF & Email

தலைவர் அவர்களே! தாய்மார்களே!! தோழர்களே!!!


இன்று இக்கூட்டம் இவ்வளவு பெருமையாகவும், வெற்றியாகவும் முடியுமென்று எதிர்பார்க்கவில்லை. இந்தி எதிர்ப்பு கிளர்ச்சி தொடங்குவதற்கு இவ்வளவு பெரிய ஒரு கூட்டம் போட்டுதான் செய்ய வேண்டும் என்கின்ற அவசியமில்லை. எல்லா ஏற்பாடுகளும் தயாராக இருக்கிறது. நாமும் சில நாளைக்கு தீவிர கிளர்ச்சியை நிறுத்தி வைப்பது என்ற முடிவு செய்தோமே ஒழிய, அடியோடு நிறுத்திவிடவில்லை. அதுவும் நான் என் சொந்த முறையில் சில தலைவர்கள் யோசனைப்படி நிறுத்திவைக்கும்படி கேட்டுக்கொண்டேனே தவிர, பொது அபிப்பிராயத்தின் மீதுகூட அல்ல! ஆதலால் மறுபடியும் துவக்கும்படி நானே கேட்டுக்கொள்ளலாம்.


அவர்களும் அதாவது இந்தி எதிர்ப்பு கிளர்ச்சியை சென்னையில் நடத்தி வந்த கமிட்டியாரும் விட்ட இடத்தில் இருந்து மறுபடியும் தொடங்கிக்கொள்ளலாம். பொதுஜனங்களும் முன்போலவே ஆதரவளித்து வரலாம். அன்றியும் கொஞ்ச நாளைக்காவது தீவிர கிளர்ச்சி ஏன் நிறுத்தப்பட்டது என்றுதான் என்னை பல தோழர்கள் குறைகூடக் கூறி கேள்வி கேட்டார்களே ஒழிய, நிஷ்டூரம்கூட பட்டுக்கொண்டார்களே ஒழிய, ஏன் நடக்கவேண்டுமென்று வேண்டிக்கொண்டாய் என்று கேட்கப் போகிறவர்கள் யாரும் இருப்பதாக தெரியவில்லை. ஆதலால், முன்போல் கிளர்ச்சி ஆரம்பிக்க இந்தக்கூட்டம் கூட்டவேண்டிய அவசியம் கூட இருந்ததாய் நான் கருதவில்லை.


கூட்டத்தின் நோக்கம்


ஆனால், ஏன் இதை கூட்டினேன் என்றால், நிறுத்தி வைக்கும்படி கேட்டுக்கொண்டவன் நான் ஆனதால், இப்பொழுது அதை தொடங்கிக்கொள்ளச் சொல்லவேண்டியவனும் நானாய் இருப்பதால் இவற்றின் காரணங்கள் பொதுமக்களுக்குத் தெரிவித்து முன்னிலும் தீவிரமாகவும், கட்டுப்பாடாகவும் நடத்த பொதுமக்களுடைய ஆதரவை தேடிக் கொடுக்கவேண்டியதை முன்னிட்டும், சர்க்காருக்கும் நம்முடைய நிலைமை தெரிந்துவிடவேண்டும் என்று கருதியும் நான் இக்கூட்டம் கூட்டினேன். இக்கூட்டம் ஒரு சிறுகூட்டமாக இருக்கும் என்றுதான் கருதினேன். ஆனால், எனது தோழர்கள் தங்கவேல் முதலியாரும், லிங்கமும் இதை ஒரு மாநாடாக (கான்பரன்சாக) ஆக்கிவிட்டார்கள். முன்பு இந்திக் கிளர்ச்சி துவக்க காஞ்சிபுரமே கட்டளையிட்டதாலும் இப்போதும் துவக்க காஞ்சிபுரமே கட்டளையிடப் போவதாலும் இக்கூட்டம் மாநாடாகவே இருக்க வேண்டுமென்று கருதி இவ்வளவு மேன்மையைக் கொடுத்துவிட்டார்கள் போலும்.


ஏன் பிரிட்டிஷ் வெற்றி பெறவேண்டும்?


எனக்கு முன் பேசிய சிலர் யுத்தத்திற்கு உதவி செய்யக்கூடாதென்றும், போர் துவக்க அதிகநாள் கடத்தக் கூடாதென்றும் மற்றும் பலவிதமாக மிக்க ஆவேசத்துடன் பேசினார்கள். யுத்தத்திற்கும் இந்தி எதிர்ப்புக்கும் சம்பந்தமில்லை. பிரிட்டிஷ் வெற்றிபெற வேண்டுமென்பது பிரிட்டிஷார் நன்மைக்காகவே அல்ல. அந்நிய ஆட்சி வேறு ஏதாவது ஒன்று நம் நாட்டில் இருப்பதென்றால் பிரிட்டிஷாரைத் தவிர வேறு ஆட்சி இருக்கக்கூடாது என்பது எனது கருத்து. பிரிட்டிஷ் தோற்றால் ஜெர்மனி ஆட்சி வரக்கூடும். ஜெர்மனி தன்னை ஆரியன் என்று சொல்லிக்கொள்கிறது. நம்நாட்டு ஆரிய ஆட்சியிலும் சமுதாயத்திலும், மதத்திலும், அரசியலிலும் நாம் படுகிற பாடு நீங்கள் அறியாததல்ல. இங்குள்ள பெரும்பாலான பார்ப்பனர் உள்ளத்தில் ஜெர்மனி ஜெயிக்க வேண்டுமென்ற ஆசையும் பேச்சும் நாம் பார்த்து வருகிறோம். ஆகவே, ஜெர்மனி வந்தால் இரண்டு ஆரியர்களும் சேர்ந்து காந்தியாரும் உள்உளவாய் இருந்து வருணாசிரம ஆட்சியாகத்தான் நடத்துவார்கள். அப்போது தமிழர்கள் ராமராஜ்யத்தில் இருந்ததுபோல் குரங்குகளாயும், ராட்சதப்பதர்களாயும் இருக்க வேண்டியது தான். ஆதலால்தான் நாம் பிரிட்டிஷ் வெற்றிபெற ஆசைப்பட்டு உதவி புரிய வேண்டுமென்று வேண்டிக் கொள்ளுகிறோம்.


இந்தி எடுப்பதை யுத்தத்தில் உதவிபுரிவதற்கு லஞ்சமாக நாம் கேட்கவில்லை கேட்கப் போவதுமில்லை. நம்முடைய உரிமையை காப்பாற்றும்படி வேண்டுகிறோம். இந்தி கட்டாயத்தை எடுக்காவிடில் நமது போராட்டம் லேசானதாக இருக்காது. தமிழ் மகன் ஒரு நாளும் ஓயமாட்டான். நம்மில் உத்தியோகம், பதவிக்கு ஆசைப்பட்டவர்கள் சுவரின் மீதுள்ள பூனைபோல் வேஷக்காரர்களாக இருந்தாலும் மற்றவர்கள் இறுதிவரை பார்த்து இதிலேயே தங்களது வாழ்வு முடிவடைவதானாலும் சரி என்றுதான் இறங்கி இருக்கிறோம்.


எதிர்ப் பிரசாரம்


ஓடகிறவர்களைப்பற்றி கவலை இல்லை; நமக்கு எதிர்ப் பிரசாரம் செய்கிறவர்களைப் பற்றியும் கவலையில்லை. நமது முடிவு கட்டாய இந்தி ஒழிவதா? நாம் ஒழிவதா? என்பது தான். ஆதலால் இதற்காக வேறு நிபந்தனைகளைச் சேர்க்க வேண்டியதில்லை.


தலைவர் சர்.ஏ.டி.பன்னீர்செல்வம் அவர்கள் காலையில் பேசும்போது இவைகளை உங்களுக்கு நன்றாக எடுத்துச் சொன்னார்கள்.


இந்தி கட்டாயம் என்பது திராவிடர்களை ஆரியராக்குவதுதான்! அதுவும் கட்டாய மதமாற்றம் என்று சொன்னார். ஆகவே, உண்மைத் தமிழனாக தனித்தமிழ் ரத்தம் உள்ளவன் சாகவாவது துணிவானே ஒழிய ஆரியனாக்கப்படச் சம்மதிக்க மாட்டான். இந்த நாட்டிலே பிழைக்கவந்த ஒரு சிறு கூட்டம் பழைமையும் பழம்பெரும் மேன்மையும் பொருந்திய ஒரு பெரும் சமுகத்தை அடக்கி ஆண்டு அடிமைகொண்டு ஆதிக்கம் செலுத்துவதென்றால் நாம் ஆரியர்களது வைப்பாட்டி மக்களென்று கூறும் மனுதர்மத்தை ஏற்றுக்கொண்ட சூத்திரர்களேயாவோம். மானமற்றவர்கள் வெளியில் போகட்டும், மானமுள்ளவர்கள் இதில் மடியவேண்டும் என்றுதான் சொல்லுவேன். நம்மில் நாம் (தமிழர்கள்) ஒரு ஜாதி, ஒரு தகப்பன் மக்கள் என்கின்ற உணர்ச்சி இல்லை.


ஒவ்வொருவனாக ஒரு ஜாதி, ஒரு சந்ததி, ஒரு சமயம், ஒரு கடவுள், ஒரு கலை, ஒரு நூல் என்று இப்படியாக சின்னா பின்னப்படுத்தப்பட்டு விட்டோம். நமது மதப்பண்டிதர்கள் தங்கள் ஈன வயிற்றுப் பிழைப்புக்காக நம்மை ஆரியனுக்கு அடிமைப்படுத்திக் கொடுத்துவிட்டார்கள். ஆரிய மதத்துக்கும் ஆரிய கடவுளுக்கும் மானமின்றி தத்துவார்த்தம் பேசுகிறார்கள். அவர்களது நிலைமையையும், கல்வி அறிவையும் பார்த்தால் இதற்கு மேல் அவர்களிடம் ஒன்றும் எதிர்பார்க்க முடியாது. இனி அதிலிருந்து மீண்டு இரண்டிலொன்றைப் பார்த்துவிட வேண்டியவர்களாக ஆகிவிட்டோம்.


ஜஸ்டிஸ் கட்சி


ஜஸ்டிஸ் கட்சி இந்தி எதிர்ப்பை எடுத்துக்கொள்ள வேண்டுமென்று சிலர் ஆவேசமாய் பேசினார்கள்.


நான் ஜஸ்டிஸ் கட்சித் தலைவன் என்கிற முறையில் இப்போது பதில் சொல்லவில்லை. இந்தி எதிர்ப்புக் கிளர்ச்சித் தொண்டன் என்கின்ற முறையிலும் அதற்காக சிறைசென்றவனாகவும், நாளை செல்லப் போகிறவனாகவும், எந்தக்கட்சி சம்பந்தமும் இதில் இல்லாத தனி மனிதன் என்கின்ற முறையிலும் பேசுகிறேன். நாம் ஏன் ஜஸ்டிஸ் கட்சியை இந்தி எதிர்ப்பை எடுத்து நடத்தும்படி தொங்க வேண்டும். நமது (இந்தி எதிர்ப்பு) கூட்டத்தைவிட ஜஸ்டிஸ் கட்சிக் கூட்டம் மேலானது. பலமுள்ளது என்று நான் கருதவில்லை. ஜஸ்டிஸ் கட்சி தமிழர்களுக்கு உழைக்கிற கட்சி என்ற முழு யோக்கியதையும் உண்டாக வேண்டுமென்று இருந்தால் அது வலிய வந்து நம்முடன் கலந்து கிளர்ச்சியை நடத்தட்டும். காங்கிரஸ், இந்தியை பார்ப்பனமயமாக்க தமிழர்களுக்குள் புகுத்துகிறது என்பதை உண்மையாக உணர்ந்த எந்தத்தமிழனும் இந்தி கிளர்ச்சியில் பங்குகொண்டு நடத்தாவிட்டால் திருவள்ளுவர் சொன்னது போல் அவன் குலத்தில் அய்யப்படவேண்டும் என்றுதான் சொல்லுவேன்.


மந்திரி பதவிக்காக இந்தியை எதிர்க்கவில்லை


இந்தியை எதிர்த்தால் மந்திரிகளை ஒழித்துவிடலாம் என்றோ, நமக்கு பதவி கிடைக்கும் என்றோ நான் சொல்ல வரவில்லை. பார்ப்பன மந்திரிகளுக்குத்தான் அப்படித் தோன்றிற்று. எப்படி எனில், “இந்தியை எடுத்துவிட்டால் கிளர்ச்சிக்காரர்கள் மற்றொன்றை எடுத்துக் கொள்ளுவார்கள். அப்பொழுது நாம் மந்திரி பதவியை விட்டுவிட வேண்டியதாகிவிடும்” என்று முதல் மந்திரி பார்ப்பனர் பயந்து கொண்டுபேசி இருக்கிறார்.


ஆனால், நாம் இந்தியை ஒழிக்கக் கருதுவது மந்திரி பதவி வருமென்பதற்கல்ல. கட்டாய இந்தி ஒழியாதவரை மந்திரி பதவி ஏற்பது கஷ்டமாகத்தான் இருக்கும். நம்மவர்களை சுலபத்தில் மந்திரி பதவி ஒப்புக் கொள்ள விடமாட்டோம். இந்தி இருக்கும் வரை பார்ப்பன ஆட்சியே இருந்து தமிழர்களை குரங்குகளாக ஆக்குவதை அனுபவித்து பிறகு புத்திபெற்று மந்திரி ஆகவேண்டும் என்பதுதான் எனது ஆசை, தமிழனுக்கு இனியும் புத்தி வரவில்லை. இந்தி எதிர்ப்பைத் தனது சொந்த நலனுக்கு, சுயவாழ்வுக்கு அனுகூலப்படுத்திக் கொள்ளவே பல தமிழனும் பல பண்டிதனும் விரும்புகிறானே ஒழிய, அப்போராட்டத்தில் முடிவு காண பலருக்குக் கவலையில்லை.


தமிழனுக்குப் புத்தி வரவேண்டும்


இதைப் பார்க்கும்போதுதான் மறுபடியும் காங்கிரஸ் ஆட்சி வந்தால் தேவலாம் என்று தோன்றுகிறது. ஏனெனில், அப்படி வந்தால் தமிழனுக்கு நலம் ஏற்படும் என்பதற்கல்ல தமிழனுக்குப் புத்தி வரும் என்பதற்காக, இனியும் ஒரு 5, 10 வருஷத்திற்குத் தமிழனுக்கு மந்திரி பதவி வராவிட்டால்கூட நான் கவலைப்படமாட்டேன். ஏன்? இந்த 27 மாத ஆரிய ஆட்சியில் அவன் செய்த கொடுமை எவ்வளவு? அவற்றை அறிந்த தமிழரில் யாருக்குப் பூரண புத்தி வந்து விட்டது? இந்த இப்படிப்பட்ட போராட்ட நிலைமையில் 4, 5 பேர்களைத் தவிர வேறு எந்தப் பெரிய தமிழன் முன்வந்து நமக்கு உதவி செய்து விட்டான்? எங்கு பார்த்தாலும் குசலம், குண்டியத்தனம், ஏமாற்றுவித்தை ஆகியவை தான் தாண்டவமாடுகின்றன. அதனால்தான் இனியும் தமிழனுக்குப் புத்தி வரவேண்டுமென்கிறேன்.


யார் கவலையெடுத்துக் கொள்கிறார்கள்?


உங்களிடம் உண்மையைச் சொல்லுகிறேன். தோழர் பொன்னம்பலமும் இங்கேயே இருக்கிறார். அதாவது நான் சட்டசபை பொதுத் தேர்தல் நடந்தவுடன் உடல் நலிவினால் கொடைக்கானலுக்குச் சென்றிருந்தேன். அங்கிருக்கும்போது தேர்தல் முடிவுகள் வெளியாகி தகவல்கள் வந்து கொண்டிருந்ததில் திடீரென்று தோழர் பொன்னம்பலனார் நான் இருந்த அறைக்கு வந்து “பொப்லி ராஜா தோற்றுவிட்டார்” என்று சொன்னார். உடனே, எனது சொக்காயில் இருந்த பணப்பையை எடுத்து அதிலிருந்து 10 ரூபாய் நோட்டு ஒன்றை எடுத்து வீசி எறிந்து, இன்று பிரியாணி சாதம் சமைக்க ஏற்பாடு செய்து நண்பர் சிலரை அழையுங்கள் என்று சொன்னேன். அந்தப்படியே அன்று முழுவதும் கொண்டாடினோம் என்றாலும், தமிழனுக்குக் கிடைத்த அவமானத்திற்காக ஒருபுறம் சங்கடமும் இருந்தது. நான் மகிழ்ச்சி அடைந்ததற்குக் காரணம் என்னவெனில், இனி மேலாவது ஜஸ்டிஸ் கட்சியானது பிரசாரத்தையும் பாமர மக்கள் தொடர்பையும் தங்கள் கட்சி நலனுக்கு முக்கியமானதென்று உணரும் என்பதேயாகும். இப்பொழுதானாகட்டும் இரண்டொரு ஜில்லா தவிர, இரண்டொரு பெரியார்கள் தவிர, வேறு எங்கே யார், ஜில்லா பிரமுகர்களோ, பொதுத் தலைவர்களோ கவலை எடுத்துக் கொள்ளுகிறார்கள்?


வேலை செய்கிறவர்களை அதிகாரம் செய்யவும் வேலைகளைப்பற்றி குறைகூறவும் முற்படுவதுதான் இயக்க வேலை என்றும், தலைவர் என்று காட்டிக்கொள்ள மார்க்கமென்றும் கருதுகிறார்கள். ஆதலால், இனியும் இரண்டொரு தடவை இக்கட்சி தோல்வி அடைந்தால் இப்படிப்பட்ட ஆட்கள் மறைந்துபோய் உண்மையான தொண்டும் கவலையும் உள்ளவர்களே இயக்கத்தை நடத்த முடியும். அவர்களுக்கே இயக்கத்தில் இடமும் இருக்கும்.


நான் உண்மையாகப் பேசுகிறேன். காங்கிரஸ்காரர்களுக்கு இருக்கும் பொறுப்பையும் நமக்கு இருக்கும் பொறுப்பையும் பாருங்கள்.


நம்மவருக்குப் பொறுப்பில்லை!


சகல பார்ப்பனர்களும் காங்கிரஸ் தொண்டர்கள். எவ்வளவு பெரிய பார்ப்பனராய் இருந்தாலும் குப்புசாமி சுப்பையாவைக் கண்டாலும் மதிக்கிறான். மரியாதை செய்கிறான். புகழ்ந்து கூறுகிறான். அவர்களை விளம்பரப்படுத்த ஒவ்வொருவனும் கவலை எடுத்துக்கொள்கிறான். காப்பிக்கடையெல்லாம் காங்கிரஸ் பிரசார சபை, கோவில் எல்லாம் காங்கிரஸ் பிரசார சபை, கல்யாணம், கருமாதி, பார்ப்பன தாசி வீடெல்லாம்கூட காங்கிரஸ் பிரசார சபை, பார்ப்பன அதிகாரிகள் காங்கிரஸ் பிரசாரர்கள். ஆனால் நமக்கு அப்படியில்லை. நமது ஆட்கள் நம்மைக் கண்டதும் நமக்குப் புத்தி சொல்வதும், அதிலே ஓட்டை இதிலே ஓட்டை என்பதும், ஒருவர் மீது ஒருவர் புரளி பேசுவதும், ஆன காரியம்தான் இயக்க வேலை என்று கருதுவதாய் இருக்கிறது. சென்ற தேர்தலில் ஓட்டுக்கூட போட்டிருக்கமாட்டான் எதிர் பிரசாரமும் செய்திருப்பான். ஒரு ‘ஜஸ்டிஸ்’, ‘குடிஅரசு’, ‘திராவிடன்’, ‘விடுதலை’ காசு கொடுத்து வாங்கி இருக்கமாட்டான். அப்படிப்பட்டவன் இப்போது நமது கூட்டத்தையும், செல்வாக்கையும் பார்த்து உள்ளே வந்து நுழைந்துகொண்டு பெரிய மேதாவி மாதிரி தன் தலைமையிலேயே இயக்கம் இருக்கிற மாதிரி இயக்கம் இப்படி இருக்க வேண்டும். தலைவன் அப்படி இருக்க வேண்டும் என்று சவடால் அடிக்கத் தொடங்கி விடுகிறான். நான் ஏன் இவைகளை இப்போது சொல்கிறேனென்றால், இன்றைய தீர்மானத்தைச் சில பேர் சப்பைத் தீர்மானம் என்று பேசுவார்கள். நாங்கள் வேலை தொடங்கப் பயந்து விட்டோம் என்று சொல்வார்கள். “இதிலெல்லாமா ஆகப் போகிறது. அது செய்ய வேண்டும் இது செய்ய வேண்டும்” என்பார்கள். இவர்களில் யாரும் ஜெயிலுக்குப் போகமாட்டான். காசும் கொடுக்க மாட்டான் என்பதற்காகவே சொல்லுகிறேன்.


நமது நிலை


ஆனால், இன்று நாம் லேசான வார்த்தையில் கடினமான தீர்மானம் போட்டிருக்கிறோம். இதை வைத்துக்கொண்டே நமது மக்கள் யோக்கியதைப்படி எவ்வளவு கடினமாக வேண்டுமானாலும் காரியம் செய்யலாம். வெறும் வாய் கடினத்தையும், வார்த்தை கடினத்தையும் பார்த்து ஏமாறுகிறவனல்ல நமது பிரிட்டிஷ்காரன். “செட்டி முடுக்கோ, சரக்கு முடுக்கோ” என்றுதான் பார்ப்பான். நல்ல சரக்கு வீட்டிலிருந்தாலும் விலையாகும். சப்பட்டை சரக்கு தப்பட்டை அடித்தாலும் விற்காது. நம்ம விஷயங்கள் எதுவும் எப்போதும் சரக்கு முடுக்காய் இருக்கும். காங்கிரசிடம் அதுதான் கிடையாது. வெறும் வாயேமாற்றந்தான். அதனால் தான் அது எப்போதும் மக்களை ஏமாற்றியே விற்கப் பார்க்கிறது. ஜனங்களுக்கு அதன் வண்டவாளம் தெரிந்துவிட்டது. சர்க்காருக்கும் தெரிந்துவிட்டது. அது இனி வாயைத் திறந்தாலும் தலையை அசைத்தாலும் நல்ல உதைதான் தின்னப்போகிறது. நமது நிலை அப்படி அல்ல. இந்தி ஒழிய வேண்டும் இல்லாவிட்டால் ஜெயிலில் மடியவேண்டும். ஆகையால், நமக்கு பொறுப்பு அதிகம்.


கட்டுப்பாடு வேண்டும்


இப்போது போட்டு இருக்கும் தீர்மானத்துக்கு ஆள், பணம் வேண்டி இருப்பது ஒருபுறமிருந்தாலும் முக்கியமாக கட்டுப்பாடு வேண்டும். இப்பொழுது நீங்கள் போட்ட கமிட்டியார் சொல்லுகிறபடி கேட்க ஆட்கள் வேண்டுமே ஒழிய, இனிமேல் இந்தக் கமிட்டியாருக்குப் புத்தி சொல்ல ஆட்கள் வேண்டியதில்லை. இக்கமிட்டியிலும் பொறுப்பை ஏற்று நடத்துகிறவர்கள் சொல்லுவதைக் கேட்க வேண்டும். அவர்கள் சொல்வது தவறுதலாய் இருந்தால்கூட, செய்துவிட்ட தவறை எடுத்துக் காட்ட வேண்டும். அதற்குள் ஒன்றும் முழுகிப் போய்விடாது. அப்பேர்ப்பட்ட காரியங்கள் அவர்கள் செய்துவிட மாட்டார்கள் என்று நம்ப வேண்டும்.


போராட்டம் என்றால்…


போராட்டமென்றாலே ஒழுங்கும் கட்டுப்பாடும்தான், அவைதாம் படைகளுக்கு ஆயுதமே தவிர முன்னின்று நடத்துபவனுக்கு புத்தி சொல்லிக் கொண்டிருப்பது ஆயுதமாகாது. அதில்லாத ஒரு காரணமே தமிழன் சூத்திரனானான், பார்ப்பானுக்கு அடிமை ஆளானான். ஆதலால், தமிழ்ப்போரில் இறங்க சவுகரியமில்லாதவர்கள் ஆண்மையோடு ஒதுங்கி நின்று கொள்ள வேண்டும். போலி வீரத்திற்காகவும், சுயநலத்திற்காகவும் கலந்துகொண்டு தொல்லை விளைவிக்கக்கூடாது.


தமிழன் ஆயிரக்கணக்காய் சிறை செல்லுவதும், தாய்மார்கள் சிறை செல்லுவதுமான காரியங்கள் தற்கால முடிவு எப்படியானாலும் பின்னால் அது தமிழர் இயக்கத்திற்கு பெரிய சொத்தாகும். பின்னால் நடக்க வேண்டிய போராட்ட காரியங்கள் மிக மிக இருக்கின்றன. படை இல்லாமல் அப்போராட்டங்களை எப்படி நடத்த முடியும். ஒவ்வொருவரும் ஒவ்வொருவர் வீட்டு பெண்மணிகளும் தமிழர் படையில் தங்களைப் பதிவு செய்து கொள்வது என்றால் ஒரு தடவை சிறைக்குச் சென்று விட்டு வருவதுதான். பெண்மணிகள் அதிகமாக சிறைசென்று வரவேண்டும்.


பணம் வேண்டும்


கட்டுப்பாட்டையும், சிறை செல்ல வேண்டியதையும்பற்றிச் சொன்னேன். இனி பணம் வேண்டியதைப் பற்றியும் சொல்லுகிறேன். பணம் வேண்டியதும் முக்கியமானது தான். பணமில்லாவிட்டால் காரியம் நடக்காது. ஒன்றைக் கவனியுங்கள். தமிழ் நாட்டில் இந்திப் பிரசாரம் 15 வருஷகாலமாக வெகுமும்முரமாக நடைபெறுகின்றது. பல பள்ளிகள், காலேஜுகள் பல அருமையான கட்டடங்கள் மாதம் 200 ரூ. சம்பளம் முதல் பல சிப்பந்திகள் வைத்து பார்ப்பனர்கள் தமிழ் நாட்டில் இந்தி பரப்பி வருகிறார்கள். எனது தோழர் ஆச்சாரியார் இந்தியை கட்டாயமாக வைத்தால்தான் இந்தியின் ஆபத்து பாமர மக்களுக்கு தெரிய நேரிட்டதே தவிர, இல்லாவிட்டால் காதும் காதும் வைத்ததுபோல் இந்தி விஷப் பிரயோகம் நடந்துகொண்டுதான் இருக்கும். நடந்து வரத்தான் போகிறது; இவற்றிற்கு -பார்ப்பனர்க்கு பணம் ஏது? இந்த 15 வருஷ காலமாக வருஷம் 20, 30 ஆயிரம் வீதமும் சில சமயத்தில் லட்சம் ரூ. வீதமும் வடநாட்டில் இருந்துதான் வந்து கொண்டிருக்கிறது. இதற்காக பணம் கொடுக்கும் வடநாட்டான்கள் எல்லாம் இந்தி படித்தால் சுயராஜ்யம் என்று கருதியா இப்படி லட்சக்கணக்காகக் கொடுக்கிறான்? மேல் நாட்டுப் பணக்காரர்கள் இந்தியர்களை கிறிஸ்தவர்களாக்குவதற்கு பாதிரிகள் கையில் பணம் கொடுப்பதுபோல் தமிழனை ஆரியக் கலையில் ஆழ்த்துவதற்கும், தமிழன் என்கின்ற உணர்ச்சியை ஒழிப்பதற்கும் வடநாட்டான் இப்படி லட்சலட்சமாய் பணம் கொடுத்துவருகிறான். இதனால் ஆரியமும் பரவுகிறது; தமிழும் கெடுகிறது; பார்ப்பனர்களும் பிழைக்கிறார்கள்.


இந்த உணர்ச்சி தமிழனுக்கில்லையே!


இந்த உணர்ச்சி எந்தத் தமிழ் மகனுக்காவது இருக்கிறதா? பின்னும் நான் சொல்லுவேன், தமிழ்ப் பணக்காரான் இந்திக்கு பணம் கொடுத்ததில் 8இல் 10இல் ஒரு பங்குகூட கட்டாய இந்தி ஒழிப்புக்குக் கொடுக்கவில்லை. மற்றபடி என்ன என்று பார்த்தால் இன்று பல தமிழனுக்கு வயிற்றெரிச்சலும், பொறாமையும், போக்கிரித்தனமான பிரசாரமும் இருந்து வருவதாகத் தெரிகிறது. ஆத்திரம் சகிக்கமாட்டாமல் வயிற்றுக் கடுப்புங்கூட இருந்து வருவதாகத் தெரிகிறது. ஏன் என்றால், எனது தொண்டிற்கு என்று 1001 காசு, 1001 காலணா, 1001 அணா, 101 காசு என்பதாக அதிகமாகவும் 100ரூ, 1001ரூ. என்று கூட சில இடங்களிலும் அவசியப்படி செலவு செய்துகொள்ள என்று சிறிது பணம் கொடுக்கிறார்கள். இதைப் பார்த்தும் கேட்டும்தான் இவ்வளவு ஆத்திரப்படுகிறார்கள்.


இதைப் பற்றித்தலைவர் சர்.பன்னீர்செல்வம் அவர்களும் சற்று முன் சொன்னார்கள். இதுவரை வசூல் செலவு மாத்திரம் போக 7 அல்லது 8 ஆயிரம் ரூபாய் வசூலாகியிருக்கலாம். மே மாதம் முதல் அக்டோபர் ஈறாக 5 மாத காலம் நடந்த இந்தி எதிர்ப்பு தீவிர கிளர்ச்சி பெரிதும் இந்தப் பணத்தில்தான் நடந்தது. மே முதல் இன்றுவரை நடந்த இயக்கப் பிரசாரம் இந்தப் பணத்தில்தான் நடந்திருக்கிறது. பல தேர்தல்களின் செலவுகள் இந்தப் பணத்தில்தான் நடக்கிறது. பவுன்ட் ரூ.0-1-4 ஆக இருந்த காகிதம் சண்டை ஆரம்பமானவுடன் பவுன்ட் 4 அணாவாகவும், 31/2 அணாவாகவும் வாங்கப்பட்டு மாதம் 400, 500 நஷ்டத்தில் நடத்திவரும் “விடுதலை” பேப்பர், இந்தப் பணத்தில்தான் நடந்துவருகிறது. இந்தப் பேப்பரும், பிரசாரமும், இந்தி எதிர்ப்புக் கிளர்ச்சியும் இல்லாவிட்டால் ஆயிரம் ராமசாமியும், ஆயிரம் பன்னீர்செல்வமும், ஆயிரம் குமார ராஜாவும், ஆயிரம் பாண்டியனும் மற்றும் ஆயிரம் இயக்க அன்பர்களும் இருந்துதான் என்ன செய்ய முடியும்? இயக்கம்தான் ஏது?


ஆகவே, இவை தொடர்ந்து நடைபெற வேண்டுமானால் இன்னமும் எவ்வளவு பணம் வேண்டும், யார் மொத்தமாகக் கொடுத்தார்கள், யார்தான் கொடுக்க வருகிறார்கள்? யாருக்கு வாய் நீளமோ அவர்களுக்குத்தான் கை கோணல். யாருக்கு கை நீளமோ அவர்களுக்குத்தான் விஷமப் பிரசாரம் செய்யும் உணர்ச்சி கிடையாது. இரண்டாம் பேர் அறியாமல் கொடுத்துவிட்டு மறுபடியும் வேண்டுமானால் வாருங்கள் என்றுகூட சிலர் கூறுகிறார்கள்.


ஏன் இவைகளைச் சொல்கிறேன்?


ஏன் இந்தச் சமயத்தில் இவைகளைச் சொல்லுகிறேன்? கூடிய சீக்கிரத்தில் நானும் தலைவர் சர்.செல்வமும் சிறை செல்லப்போகிறோம். வெளியில் இருப்பவர்கள் காரியம் பார்க்க வேண்டும்; அவர்களுக்கு ஆட்களும் பணமும் வேண்டும். இவ்வித விஷமப் பிரசாரங்கள் அவர்களது வேலையைத் தடுத்து விடுமே என்கின்ற பயம்தான். என்னைப் பொறுத்தவரை விஷமப் பிரசாரத்திற்குப் பயமில்லை. எப்படிப்பட்ட இயக்கமானாலும் என் சொந்த இயக்கமாக்கிக்கொண்டு யாருடைய தயவும் இல்லாமல்கூட என்னால் ஆனதைச் செய்து கொண்டிருக்க முடியும். அதற்கு ஏற்ற சில தோழர்கள் எனக்கு உண்டு. அன்றியும் என் வாழ்வுக்கு வேறு காரியம் ஒன்றும் கிடையாது.


ஆனதால், இன்று நமது பொறுப்பு முன்னைவிட அதிகம் என்று கருதியே இவைகளைச் சொல்ல நேர்ந்தது. என்ன அதிகப் பொறுப்பு என்றால் பார்ப்பனருடனும், பிரிட்டிஷாருடனும் இரண்டு பேருடனும் இப்போது போராட வேண்டியிருக்கிறது.


முன் ஜாக்கிரதையாக இருக்கவேண்டும்


பிரிட்டிஷார் மிரட்டுபவனைக் கண்டால்தான் பயப்படுகிறார்கள். நியாயத்துக்குப் பயப்படுவதில்லை. ஆதலால், தக்க ஆட்கள் சிறைக்குப் போக வேண்டிய நிலைமை ஏற்பட்டு இருக்கிறது. அதற்கு அதிக நாள் தவணைகூட இல்லை. யுத்தச் சாக்கை வைத்துக்கொண்டு சர்க்கார் நம்மை கடினமாக நடத்தினாலும் நடத்துவார்கள். ஆதலால், நாம் எதையும் வெள்ளையாகப் பேசி முன் ஜாக்கிரதையாக இருக்கவேண்டும். பொதுஜனங்கள் விஷமப் பிரசாரத்திற்கு காது கொடுக்காமல் ஒவ்வொருவரும் தாராளமாய் பணம் உதவவேண்டும். மற்றவர்கள் கை மூலம் செலவாகும் பணத்தைவிட, என் கைமூலம் செலவாகும் பணம் மிக்க சிக்கனமாகத்தான் இருக்கும். செலவான பணத்தையும், ஆகி இருக்கும் வேலையையும் கணக்கு பாருங்கள்.


ஆகவே, நீங்கள் இப்பொழுதே முடிவு செய்து கொள்ளுங்கள். உங்கள் ஒவ்வொருவர் வீட்டிலும் யார் சிறைக்குப் போவது, யார் யார் பிரசாரம் செய்வது, யார் யார் எவ்வளவு பணம் கொடுப்பது, யாரார் பண வசூல் செய்வது என்பது போன்ற வேலைகளை ஒவ்வொருவரும் அவரவர்களால் ஆனதைச் செய்யுங்கள். இதைவிட நல்ல சமயம் உங்களுக்குக் கிடைக்காது. குறைந்த செலவில் அதிக காரியம் செய்து கொள்ளலாம்.


(31-12-1939ஆம் தேதி காஞ்சிபுரத்தில் கூடிய இந்தி எதிர்ப்புக் கிளர்ச்சி கமிட்டியில் தந்தை பெரியார் அவர்களின் சொற்பொழிவு)

– தோழர் பெரியார், குடிஅரசு – சொற்பொழிவு- 21.01.1940

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *