பெரியாரும் – பிரசாத்தும்!

Print Friendly, PDF & Email

பார்ப்பனியம் இந்நாட்டில் வேரூன்றியதற்கும், இன்று பார்ப்பனியம் எத்துறையிலும் ஆதிக்கம் செலுத்துவதற்கும், பார்ப்பனியத்திற்கு நம் மக்கள் அடிமையானதற்கும், நம் மக்கள் கலையிழந்து மொழியிழந்து, நாகரிகமிழந்து வாழ்வதா – மாள்வதா என்ற நிலையிலிருப்பதற்கும் பார்ப்பனியத்தைப் புகுத்தியவர்கள் தான் அதாவது ஆரியர்கள்தான் காரணமென்றாலும், நம்மவர்களும் அதற்குப் பொறுப்பானவர்கள் என்பதை யாவரும் மறந்து விடக்கூடாதென்றும், நம்மவர் சிலரின் கோழைத்தனத்தினால்தான், நெஞ்சில் உரமில்லாததினால்தான், ஆற்றலில்லாததினால்தான் சுயமரியாதையிழந்து சுயமதிப்பிழந்து வாழ்ந்து வருகின்றோம் என்றும் நாம் பலதடவை எழுதி வந்திருக்கிறோம். பெரியாரும் நம்மவர்கள் தவறினால்தான் சுயமரியாதையிழந்து பார்ப்பனியத்துக்கு அடிமையாயிருக்க நேரிட்டது என்பதை உணர்த்தி கோழைத்தனத்தை விட்டொழியுங்கள் என்று சங்கநாதம் செய்து கொண்டு வருகிறார் என்பதும் யாவரும் அறியாமலிருக்க முடியாது. ஏன் இதை இப்பொழுது எடுத்துச் சொல்கிறோம் என்றால், இவ்வாரத்தில் காங்கிரஸ் தலைவர் தோழர் ராஜேந்திரபிரசாத் வார்தாவிலிருந்து சுயேச்சை தினத்தைக் குறித்து வெளியிட்ட அறிக்கை ஒன்றில்,


“அடிமைத்தனத்திற்குப் பொறுப்பாளி எஜமானன் மட்டுமல்ல; அடிமையும் அதற்குப் பொறுப்பாளியே! கோழைகள்தான் கொடுங்கோல் ஆட்சியை சிருஷ்டிக்கிறார்கள். பலவீனமான தேசங்களே ஏகாதிபத்தியத்திற்குக் காரணம்” எனக் குறிப்பிட்டிருப்பதினாலேயே ஆகும்.


மேற்கண்ட வாசகங்களை ஒவ்வொருவரும் பன்முறை படித்து மனதில் கொள்ளவேண்டுமெனக் கூறுகிறோம். ஏனெனில், பார்ப்பனியத்திற்கு நாம் அடிமையாய் இருப்பதற்கு பார்ப்பனியத்தை புகுத்தியவர்கள் (பார்ப்பனர்கள்) மட்டுமல்ல, நம்மவர்களும் பொறுப்பாளிகள் என்பதை என்று நம்மவர்கள் உணருகிறார்களோ அன்றே பார்ப்பனியம் வெட்டி வீழ்த்தப்படும் என்பதில் சிறிதும் சந்தேகமில்லை. ஏன்? நமது மக்கள், நமது கலை, மொழி, நாகரிகம் இன்னதென்பதையும், அதற்கும் ஆரிய கலை,
மொழி, நாகரிகத்திற்கும் உள்ள வேற்றுமைகளை உணர்ந்து கொண்டுவிட்டால். பார்ப்பனியத்திற்கு நாம் அடிமையாயிருப்பதினால்தான், அரசியல், பொருளாதாரம், சமூகம் ஆகிய துறைகளில் ஒரு வகுப்பினரே என்றென்றும் ஆதிக்கம் செலுத்தி வருகிறார்கள் என்பதை நன்கு அறிந்துகொண்டு பார்ப்பனியத்தை வெட்டி வீழ்த்தக் கூடிய கோடாரி பகுத்தறிவுதான் எனத் தெரிந்து அதைத் துணையாகக் கொண்டு வாழ முன் வந்துவிடுவார்கள். பகுத்தறிவைத் துணையாகக் கொண்டு வாழ முன்வந்து விட்டால் அவன் முன் எத்தகைய சக்திவாய்ந்த கொள்கையானாலும் அவனை அடிமை கொள்ளமுடியாது. நம்மவர்கள் பகுத்தறிவை துணை கொண்டிருந்தால் தங்களை ஒரு கூட்டத்தார் “சூத்திரர்”, “வேசி மகன்”, “அடிமை” என்று சொல்லி வருவதை சகித்துக் கொண்டிருப்பார்களா என்று கேட்கிறோம். இவர்களுக்கு பகுத்தறிவிருந்திருந்தால் பார்ப்பனர்கள்தான் புத்திசாலிகள், அறிவாளிகள் என்று சொல்லிக்கொண்டு அவர்கள் வால்பிடித்துத் திரிவார்களா என்று கேட்கிறோம். பார்ப்பனர்கள் கால் கழுவின நீரைக் குடித்தால்தான் தங்கள் “ஜன்மம் முத்தி” பெறும் என்று நம்மவர்களில் எத்தனைபேர் இன்னும் எண்ணிக்கொண்டிருக்கின்றனர்? இவர்கள் இவ்வாறு எண்ணிக் கொண்டிருக்கையில் பார்ப்பனியம் எப்படி ஒழியும்? நம்மவர்கள் எங்ஙனம் சுயமரியாதையுடன் வாழ முடியும் என்று கேட்கிறோம். ஆகவே, பார்ப்பனியம் வெட்டி வீழ்த்தப்பட வேண்டுமானால், நம்மவர்கள் விழிப்படைந்து அடிமைத்தளையை உடைக்க முன்வரவேண்டும் என்பது இப்பொழுதாவது நன்கு விளங்கும் என்று நாம் கருதுகின்றோம். அடுத்தபடியாக தோழர் ராஜேந்திர பிரசாத் கோழைகள்தான் கொடுங்கோலாட்சியை சிருஷ்டிக்கிறார்கள் என்று குறிப்பிட்டிருப்பது இன்றைய அனுபவத்திற்கு எவ்வளவு பொருத்தமானதாய் இருக்கிறதென்பதை நாம் எடுத்துச் சொல்லாமலே வாசகர்கள் அறிந்து கொள்வர் என்றே கருதுகின்றோம்.


கடந்த 21/2 ஆண்டு ஆட்சியில் பார்ப்பனியம் அரசியல் துறையில் தலைவிரித்தாடியதற்கும், தமிழர்களின் – திராவிடர்களின் கலை, மொழி, நாகரிகம் ஆகியவைகளை ஒழிக்க இந்தியை புகுத்தி, ஆயிரத்து முந்நூறு பேர்களுக்கு மேல் தலைவர்கள், தொண்டர்கள், தாய்மார்கள், சிசுக்கள் முதலியோர்களை வெஞ்சிறையிலிட்டும் சிறதும் நெஞ்சில் இரக்கமென்பதில்லாமல் பிடிவாதமாக இருந்ததற்கும், தமிழர்கள் எத்துறையிலும் முன்னேறாமலிருப்பதற்கும் நம்மவர் சிலரின் கோழைத்தனந்தான் என்பதே என்றால் யாரும் மறுக்க முடியாது. நம்மவர்களின் கோழைத்தனத்தினால் அல்லவா இத்தனை பேர்கள் சிறைசென்றும் எவ்வளவோ கண்டனக் கூட்டங்கள் போட்டும், ஒன்றுக்கும் அசையாது, ஒரு ஜனாப் லால்ஜான் நாள் குறிப்பிட்டு “மறியல் செய்கிறேன்” என்று சொன்ன மாத்திரத்தில் வந்தே மாதரப் பாடல் பாடுவதை காலவரையின்றி ஒத்திவைத்து விட்டார்கள் என்று கேட்கிறோம்.


ஆகவேதான், நமது கோழைத்தனத்தை உடனே விட்டொழித்து, தமிழன் மானம் போனபின் உயிர்வாழான் என்பதை பார்ப்பனிய ஆட்சிக்கு. பார்ப்பனிய ஆட்சியை வளர்ப்பவர்களுக்கு எடுத்து காட்ட முரசு கொட்டுங்கள் எனப் பெரியார் சங்கநாதம் செய்கிறார். நாமும் இதை பலதடவை எடுத்து விளக்கி இருக்கிறோம்.
நாம் கோழைகளாக இருக்கும்வரை கொடுங்கோலாட்சியிலிருந்து விடுதலை பெறமுடியாது. கோழைத்தனம் எச்சமுகத்தாரிடம் ஆதியிலிருந்தது. தமிழர்களிட மிருந்ததாக சரித்திரம் சாற்றுகிறதா ஆரியர்களிடமிருந்ததாக சரித்திரம் சாற்றுகிறதா என்பதை சரித்திர ஞானமோ, உலக அனுபவமோ சிறிதும் உள்ளவர்கள் அறியாமலிருக்க முடியாது. மறைவிலிருந்து அம்பு எய்து கொன்றவர்களிடம் கோழைத்தனம் காணப்படுகிறதா? தம்பியை சேர்த்து, வஞ்சகமாக அண்ணனைக் கொன்றவர்களிடம் காணப்படுகிறதா? அல்லது எத்தகைய சூழ்ச்சியை கையாண்ட போதிலும் சிறிதும் யுத்த விதியை கைவிடாது போராடியவர்களிடம் காணப்படுகிறதா? என்று யோசித்துப் பார்க்கக் கோருகிறோம்.


கோழைத்தனம் நமது மக்கள் மனதில் எப்படி பிறந்ததுமுதல் புகுத்தப்பட்டு வளர்க்கப்பட்டு வருகிறது என்பதையும், அதை வெட்டியொழிக்கவே சுயமரியாதை இயக்கம் அன்று முதல் இன்றுவரை போராடி வருகிறதென்பதையும், கோழைத் தனத்தை விட்டொழித்து தமிழர் வீரம் தழைக்கவேண்டும் என்பதற்காகவே இன்றும் பெரியார் அரும்பாடுபட்டு வருகிறார் என்பதையும் தமிழர்கள் கவனிக்கவேண்டியதாகும்.


தமிழர்கள் உண்மையிலே வீரர்களாக வாழவேண்டுமானால், தமிழர் ஆட்சி தோன்ற வேண்டும். தமிழ்நாடு தமிழருக்கேயாக வேண்டும். தமிழ்நாடு தனியாக பிரிக்கப்பட்டு தமிழர் ஆட்சி ஏற்படாதவரை இந்தியாவுக்கு எத்தகைய சுதந்திரம் வந்தாலும், தமிழர்கள் வீரர்களாக தன்மானத்தோடு வாழமுடியாது என்பதை நாம் எந்த மலையுச்சியினின்றும் கூறுவோம். ஆகவே, ஒவ்வொரு தமிழனும், தமிழரியக்கத்தில் சேர்ந்து தமிழ்நாடு தமிழருக்காகவே ஆகவேண்டும் எனப் போராட முன்வரவேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறோம். பார்ப்பனியத்தினின்று விடுதலை பெறவும், கொடுங்கோலாட்சியினின்றும் விடுதலை பெறவும் ஆவன செய்ய தமிழர்கள் இனியாவது தயங்காது முன் வருவார்களாக.


– குடிஅரசு – (அண்ணா எழுதிய) தலையங்கம் – 21.01.1940

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *