காங்கிரஸ் மந்திரிகள் ஆட்சி ஒழிந்த நாள்

Print Friendly, PDF & Email

தலைவர்களே! கான்சாகிப் சேக்தாவுது சாய்பு அவர்களே!! இந்து முஸ்லிம் தோழர்களே!!!


இன்று நாம் இங்கு ஏன் இவ்வளவு ஏராளமாகக் கூடியிருக்கிறோம் என்பதை யாவரும் அறிந்திருப்பீர்கள்.


27 மாதங்களாக நம்மை ஆண்டு பல தொல்லைகளுக்காளாக்கி வந்த காங்கிரஸ் மந்திரிகள் ஆட்சி ஒழிந்ததற்காக மகிழ்ச்சி தெரிவிக்க வேண்டியே கூடி இருக்கிறோம். இது இயற்கையேயாகும்.


மக்களுக்கு ஏற்பட்டிருந்த கொடுமைகள் ஒழிந்தால் அவர்கள் மகிழ்ச்சியடைந்து கொண்டாட்டம் கொண்டாடத்தான் செய்வார்கள்.


ஏன் விழா கொண்டாடுகிறோம்?


இன்று இந்தக் கொண்டாட்டம் இந்தியா முழுவதும் கொண்டாடுவார்கள். அதுபோல் இங்கும் கொண்டாடுகிறோம்.


இது சில தோழர்களுக்கு அதிருப்தியை உண்டாக்கி இருக்கிறது. அதைப்பற்றி நமக்கு கவலை இல்லை.


இந்த மந்திரிகள் ஆட்சியில் பல கஷ்டங்களையும், தொல்லைகளையுமடைந்த மக்கள் ஏன் விடுதலை நாளைக் கொண்டாடமாட்டார்கள்? இது எங்கும் நடப்பதுதானே. இதற்கு உதாரணம் வேண்டுமானால் சமீபத்தில் அதாவது ஒரு மாதத்திற்கு முன் புராணக் கதைப்படி நரகாசூரன் என்ற அசுரன் கொல்லப் பட்டதற்காக தீபாவளி என்று ஒரு நாளை வைத்து அன்று எண்ணெய் தேய்த்து தலை முழுகியும், பலகாரங்கள் செய்து சாப்பிட்டும், புது ஆடைகள் வாங்கிக் கட்டியும் மகிழ்ச்சி கொண்டாட வில்லையா? இதில் ஏமாந்த அறிவற்ற திராவிடர்களும் கலந்து கொள்ளவில்லையா? அதுபோல், 27 மாதங்களாக பலவித கஷ்டங்களையும், தொல்லைகளையும் அடைந்த மக்கள் அப்படி தொல்லைகள் உண்டாக்கி வந்தவர்கள் ஒழிந்ததற்காக ஏன் விழாக் கொண்டாட மாட்டார்கள்?


தேசியவாதிகளின் போக்கு


நான் உண்மையாகக் கூறுகிறேன். தோழர் ஜின்னா அவர்கள் அறிக்கை விட்டதும் காங்கிரஸ்காரர்கள் பேசாமல் சும்மா இருந்திருந்தால் இவ்வளவு பிரமாதமாக இருக்காது இந்தக் கொண்டாட்டம், எங்கேயோ முக்கியமல்லாத இடங்களில் கொண்டாடி இருப்பார்கள். இவ்வளவு ஆர்ப்பாட்டமிருக்காது. ஆனால், அறிக்கை வெளிவந்ததும் காந்தியார் முதல் பலர் இது, இந்து – முஸ்லிம் கலவரத்திற்கு இடமுண்டாக்குமென்று அறிக்கைகள் விட்டனர். இதை ஒரு இந்து முஸ்லிம் கலவரமாக ஆக்கவும் முயற்சித்தனர். அதன் பேரிலேயே, தோழர் ஜின்னா அவர்கள் அறிக்கையை ஆதரித்தும் 22ஆம் தேதி விடுதலை விழா கொண்டாட வேண்டியது அவசியமென்றும், பார்சிகள், மைசூர் பிராமணர்கள், ஆதிதிராவிடர்கள், திராவிடத் தலைவர்கள், திராவிட ஸ்தாபனங்கள் மற்றும் பல தனிப்பட்ட பிரபலஸ்தர்கள் ஆகியவர்கள் அறிக்கை விட்டிருக்கிறார்கள்.


சில தேசியவாதிகள் என்பவர்கள் இந்தக் கொண்டாட்டம் இந்துமதத்திற்கு விரோதமானது என்று துண்டு விளம்பரம் போட்டு வினியோகித்து இருக்கிறார்கள். இது எவ்வளவு இழிவான -போக்கிரித்தனமான காரியமென்று பாருங்கள். இந்து மகா சபையும், இந்து மகாசபைத் தலைவரும் இதுவரை இதைப்பற்றி ஒன்றும் பேசவில்லை.


பித்தலாட்டம் விளங்கியிருக்கும்


காங்கிரசில் இந்து முஸ்லிம் ஒற்றுமையைப்பற்றிப் பேசி வந்ததின் பித்தலாட்டம் இப்போதாவது மக்களுக்கு விளங்கி இருக்கும் என்று கருதுகிறேன். தோழர் காந்தியார், பெசன்ட் அம்மையாரையும் திலகரையும் தள்ளிவிட்டுதான் அரசியல் தலைவராக வருவதற்கு, இந்து முஸ்லிம் ஒற்றுமை விஷயத்தைத்தான், மிகப்பிரமாதமாகப் பேசி, அதுவே தனது முக்கிய கொள்கையென்றும் சுயராஜ்யம் கூட அதற்குப் பிற்பட்டதுதான் என்றும் பறைசாற்றி முஸ்லிம்களை ஏமாற்றி, முஸ்லிம் தலைவர்களை சுவாதீனப் படுத்திக்கொண்டு தலைவரானார். ஆனால் இப்போது அது என்னவாய் முடிந்தது?


சில காலிகள் இந்த விழாவில் கலந்துகொள்கிற இந்துக்களைக் கூலிகளென்றும், குலாம்களென்றும் துண்டு விளம்பரம் போட்டு இருக்கிறார்கள். அதைப்பற்றி நமக்குக் கவலை இல்லை. யார் கூலி என்பது அவரவர் நிலைமையை யோசித்துப்பார்த்தால் விளங்கும்.


இந்த விழாவில் முஸ்லிம்களைவிட ஆதிதிராவிடர்களும், தமிழர் கழகங்களும், சுயமரியாதைச் சங்கங்களும், ஜஸ்டிஸ் சங்கங்களும் கலந்துகொள்ள உரிமை உண்டு.


இந்த விடுதலை விழா கொண்டாட்டத்தைக் கொண்டாடும்படி, நானே ஒரு அறிக்கைவிடவேண்டுமென்று எண்ணியிருந்தேன். அதற்காகப் பல ஏற்பாடுகளும் செய்துவந்தேன். ஆனால் ஜனாப் ஜின்னா அவர்கள் முந்திவிட்டார்.


அப்பொழுதே கூறியிருக்கிறேன்


இந்த நாள் கொண்டாடவேண்டுமென்று ஜனாப் ஜின்னா அவர்கள் அறிக்கைவிட்டதற்காக அவர் மீது காங்கிரஸ்காரர்கள் கோபப்படுகிறார்கள். அவர்மீது ஒரு குறையும் கூறவேண்டியதில்லை. என் மீது வேண்டுமானால் குறை கூறலாம்.


நான், “காங்கிரஸ் என்பது அரசியல் ஸ்தாபனமல்ல. அது ஒரு வகுப்பாருடைய நன்மைக்காக உழைக்கும் வகுப்பு ஸ்தாபனம்” என்று கருதி 1923,1924 ஆம் வருடத்திலேயே அதைவிட்டு வெளிவந்து விட்டேன். வெளி வந்ததும் காங்கிரஸ், பார்ப்பனர்கள் நன்மைக்காக உழைப்பது என்பதை வெளிப்படுத்தினேன். 1925ஆம் வருடம் முதல் நான் வகுப்புவாதி என்ற பட்டமும் சூட்டப்பட்டேன். ஆனாலும் காங்கிரசின் வகுப்பு உணர்ச்சியை நானே முதலில் வெளியாக்கினவனானேன்.


1926ஆம் வருடத்திலிருந்து இன்று வரை திராவிடர்களுக்குக் காங்கிரசினால் ஒரு நன்மையும் ஏற்படாதென்றும், ஏற்படவில்லை என்றும், அது தமிழர்களை அடிமைப்படுத்தி அடக்கி வைக்கவே வேலை செய்து வருகிற ஆரிய ஸ்தாபனமென்றும் கூறியதுடன் காங்கிரஸ் ஒரு அரசியல் ஸ்தாபனமல்ல, அது ஒரு வகுப்பாரின் நன்மைக்காகப் பாடுபடும் ஒரு வகுப்பு ஸ்தாபனம் என்றே கூறி வருகிறேன்.


இன்றும் யாராவது மறுக்க முடியுமா?


அதை இன்றும் யாராவது மறுக்க முடியுமா? இன்று காங்கிரஸ் யாருடைய ஆதிக்கத்திலிருக்கிறது? காங்கிரசில் எல்லா உயர்ந்த பதவிகளையும் ஆரியர்களே அனுபவித்து வருகிறார்கள். காந்தியாரும் அதையேதான் ஒத்துக்கொள்வதோடு ஆரிய ஆட்சிக்கே உழைக்கிறேன் என்று வெளிப்படையாய் சொல்லி வருகிறார். அதாவது, தான் கோரும் சுயராஜ்யம், ராமராஜ்யத்தை ஸ்தாபிப்பதே என்று 100 தடவை கூறியிருக்கிறார். அதற்காகவே உயிர்வாழ்வதாகவும் கூறுகிறார்.


திராவிடர்களாகிய நமக்கு ராம ராஜ்யத்தால் எவ்வளவு கேடுகள் உண்டாகும் என்பதைச் சற்று யோசித்துப் பார்த்தால் நன்றாக விளங்கும்.


ஆரியர்களுடைய வேதம், மதம், கடவுள், பண்டிகை யாவும் திராவிடர்களாகிய நமக்கு மிகுந்த விரோதமானவையாகும். அவைகள் யாவும் நம்மை ஆரியர்களுக்குத் தொண்டாற்றும் அடிமைத் தனத்திற்குக் கொண்டுபோகச் செய்து வருகின்றன. இந்தியாவை அந்நியர்களுக்குக் காட்டிக் கொடுத்து இன்று மேன்மை நிலைக்கு வந்தது யார்? ஆரியர்கள் தானே! இதை உணராது ரோஷம், மானமின்றி அவர்களுடன் நமது திராவிடத் தோழர்கள் பலர் சேர்ந்து கொண்டு நம்முடன் கலகம் செய்து வருகிறார்கள்.


நான் கவலைப்படவில்லை


நான் இவர்கள் தேர்தலுக்கு நிற்கும்போதே இவர்களைத் தேர்ந்தெடுத்தனுப்பினால், இன்று அவர்கள் செய்த குற்றங்களும், குறைகளும் செய்வார்களென்று கூறி வந்தேன். யார் கேட்டார்கள்? அவர்கள் மக்களை ஏமாற்றிய ஏமாற்றலுக்கு நம்பி ஓட்டுச் செய்தார்கள். அப்படிப்பட்ட ஓட்டுகளின் மீதே காங்கிரஸ்காரர்கள் பதவிக்கு வந்தார்கள். அவர்கள் செய்த ஒவ்வொரு குற்றங்களையும் மக்களிடம் எடுத்துக் கூறிவந்தேன். இப்படி மக்களைக் கொடுமைப்படுத்தும் மந்திரிகள்
எத்தனை நாட்களுக்கு இருக்கப் போகிறார்கள் என்பதை உணர்ந்து “சரணாகதி மந்திரிகள் இன்னும் எத்தனை நாள்?” என்றும் பத்திரிகையில் எழுதி வந்தேன். இதைப் பார்த்து பல தேசபக்தர்கள் என்பவர்கள் கேலி செய்து வந்தார்கள். ஏன், இங்கு ஒரு தடவை வந்து பேசிய எனது நண்பர் டாக்டர்.சுப்பராயனே கேலி செய்திருக்கிறார். அதைப் பற்றி நான் கவலைப்படவில்லை.


ஆனால், அக்கிரமமும், ஆணவமும், ஏமாற்றமும் செய்தவர்கள் அற்ப ஆயுளில் ஒழிந்தார்கள்.


இன்னும் கூறுகிறேன் இவர்கள் நியாயமான முறையில் பார்த்தால் ஒரு வருஷத்திற்கு முன்பே போயிருக்க வேண்டும். ஏன் மானமுள்ள முறையில், நாணயமான முறையில் நடந்து கொள்பவர்களாக இருந்தால் இவர்கள் பதவிக்கே வந்திருக்க மாட்டார்கள்.


இதுதானா பிரிட்டிஷாரை விரட்டும் வீரம்?


காங்கிரஸ்காரர்கள் தேர்தலில் மெஜாரிட்டியாக வந்தபின் பதவி ஏற்கப் போகும்போது வாக்குறுதிகள் கேட்டுப் பயமுறுத்தினார்கள். ஆனால், வைஸ்ராய் பிரபு, இவர்கள் பயமுறுத்தலுக்குப் பயப்படாது பேசாது பதவியை ஏற்றுக் கொள்ளுகிறீர்களா? அல்லது உங்களை என்றும் தலையெடுக்காமல் செய்யவா? என்று ஒரு விளாசு விளாசினார். பின் ‘உப்புக்கண்டம் பறிகொடுத்த பாப்பாத்தி’ போல் இவர்களே வாக்குறுதி கொடுத்து பதவி ஏற்றுக்கொண்டார்கள்.


தேர்தலின் போது பிரிட்டிசாரை இந்நாட்டை விட்டுத் துரத்துவோம் என்று பலமாகப் பேசி ஓட்டுக் கேட்டார்கள்.


ஆனால், வெற்றி பெற்று சட்ட சபைக்குள் போனதும் முதன் முதலாக பிரிட்டிஷ் அரசருக்கும் அவரது சந்ததிகளுக்கும் விஸ்வாசமாக இருப்பதாக சத்தியம் செய்து கொடுத்தார்களே, இதுதானா இவர்கள் பிரிட்டிசாரை விரட்டும் வீரம்? இவர்கள் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிப்படி நடப்பவர்களானால் ஏன் இவர்கள் ராஜ விஸ்வாசப் பிரமாணம் செய்யாது சர்க்காரைத் திணற வைக்கக்கூடாது? இது மட்டுமா?


மானத்தைப் பெரிதாக மதிக்கவில்லை


இவர்கள் தேர்தலின் போது நாங்கள் வெற்றி பெற்றதும் யூனியன் ஜாக் கொடிக்குப் பதிலாக தேசியக் கொடியை சர்க்கார் கட்டிடங்களில் ஏற்றுவோம் எனக் கூறினார்கள். ஆனால், கவர்னர் இவர்கள் கன்னத்திலடிப்பதுபோல் ‘உங்கள் கொடி ‘தேசிய’க் கொடியாகாது; அது ஒரு கட்சிக் கொடி. அது மூவர்ணக் கொடி என்றுதான் ஏற்றுக்கொள்வோம்.” என்று கூறினார். இவர்கள் மானம், ரோஷமின்றி அதை ஒத்துக்கொண்டு பதவியில் ஒட்டிக்கொண்டார்கள்.


நாங்கள் பதவி ஏற்ற பின் வெள்ளையர்கள் சம்பளத்தைக் குறைப்போமென்று ஜம்பமாகக் கூறி ஓட்டுப் பெற்றார்கள். வெற்றி பெற்று பதவிக்குப் போய் என்ன செய்தார்கள்? சம்பளங் குறைக்க மனதில் எண்ணினார்கள். ஆனால் சீமையிலிருந்து சவுக்கடி வந்தது. வாயை மூடிக்கொண்டு சும்மா இருந்து விட்டார்கள்.


இவர்களுக்கு இதுபோல் பல சமயங்களில் பல ஆபத்துகள் வந்தன. எல்லாவற்றையும் மூடி வைத்துக்கொண்டு அட்டை போல் பதவியில் ஒட்டிக்கொண்டிருந்தார்கள். மானம் போவதை இவர்கள் பெரிதாக நினைக்கவில்லை. பணத்தைத்தான் இவர்கள் பெரிதாக நினைத்து பணத்திற்கு மானத்தை விற்று வாழ்ந்தார்கள்.


எங்கே இவர்கள் ஜம்பம்?


பின் சண்டை வந்தது. இவர்கள் பதவிக்கு வருவதற்கு முன் சண்டையில் பிரிட்டிஷாருக்கு உதவி செய்வதில்லை என்று தீர்மானம் போட்டார்கள். அது இவர்களுக்கு மிக ஆபத்தாக இருந்தது.


நான் சிறையிலிருக்கும்போது சிறைக்கு மாஜி மேயர் தோழர் வெங்கிடசாமி நாயுடுவும், ரங்கய்யா நாயுடுவும் சிறைக்கு வந்தார்கள். என்னைப் பார்த்தார்கள். பார்த்ததும் நாங்களும் விரைவில் சிறைக்கு வருவோம் என்று ஜம்பமாகப் பேசியதுடன் அப்போது ஒரு வேளை உங்களை விட்டாலும் விட்டு விடுவார்கள் என்றும் கூறினார்கள். காரணம் “சமஷ்டியும், யுத்தமும் வரப்போவதால், அதை நாங்கள் எதிர்த்து சிறைக்குப் போக வேண்டிவரும்” என்றும் சொன்னார்கள். இப்போது என்ன செய்தார்கள்? எங்கே அவர்கள் ஜம்பம்?


காங்கிரஸ்காரர்கள் முன் செய்த யுத்தத் தீர்மானம் என்னவாயிற்று? அதன்படி ஏன் நடக்கவில்லை? இவர்களுக்குப் பதவியை விட்டு வெளியில் போகப் பயம்.


ஒரு ரகசியம்


இது இப்படி இருக்க, இனி மற்றொரு இரகசியமான விஷயம் ஒன்று கூறுகிறேன். அதாவது காங்கிரஸ்காரர்கள் யுத்த விஷயமாக கவர்னர்கள் சொல்லுகிறபடி கேட்காவிட்டாலாவது ஏதாவது விஷமத்தனமாக நடந்தாலாவது உடனே வெளியில் அனுப்பிவிடவேண்டுமென்று லண்டனிலிருந்து வைஸ்ராய்க்கு அதிகாரம் கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்த விஷயம் தெரிந்த பிறகேதான் காந்தியாரும், ஜவஹர்லால் நேருவும் சம்மனில்லாது ஆஜராவதுபோல் யுத்த விஷயத்தில் உதவி செய்வதாக தெரிவித்தார்கள். அதாவது யாரும் கேட்காமலேயே காங்கிரசின் பழைய தீர்மானத்தையும் மறந்து தோழர் காந்தியார் “அந்த அழகான லண்டனில் குண்டு விழுந்தால் என் மனம் பொறுக்காது” என்று சொன்னார். இவர்தான் இப்படிக் கூறினாரென்றால் அந்தப் பொதுவுடைமை வீரர் தோழர் ஜவஹர்லால் நேரு அவர்கள் சைனாவிலிருந்து அவசர அவசரமாய் ஓடோடி வந்து கொண்டிருக்கும்போதே நடு வழியிலேயே.


“பிரிட்டிஷாருக்கு பெரிய ஆபத்து வந்துவிட்டது. இது சமயம் யாதொரு நிபந்தனையுமின்றி சண்டைக்கு உதவி செய்து பிரிட்டனைக் காப்பாற்ற வேண்டுமென்று அறிக்கை விட்டார்.” இது எவ்வளவு நியாயமானதெனப் பாருங்கள். இவர்களுக்குப் பதவியின் மேல் இருந்த ஆசையின் பேரில் முன் செய்த தீர்மானத்தையும் காற்றில் பறக்கவிட்டார்கள்.


கண்டனத்துக்குப் பயந்து பல்ட்டி


தோழர் போஸ் அவர்களும் மற்றும் காங்கிரஸ் தீவிரவாதிகளும் இவர்கள் இருவரையும் கண்டிக்க ஆரம்பித்தார்கள். கண்டனங்களுக்குப் பயந்துகொண்டு ஒரு பல்ட்டியடித்து யுத்தத்தில் ஒத்துழைக்க வேண்டுமானால் வாக்குறுதி கொடுக்கவேண்டுமென்று வைசிராயிடம் பழைய பல்லவியை தெரிவித்தார்கள். வைஸ்ராய் ஒப்பாது இந்தியாவிலுள்ள மற்ற கட்சிகளின் பிரதிநிதிகளாக 40, 50 பேர்களை அழைத்தார்கள். அநேகமாக அத்தனை பேர்களும் காங்கிரசின் சூழ்ச்சி அறிந்து தாங்களும் நிபந்தனையின்றிப் பிரிட்டிஷூக்கு உதவி புரிவதாக வைஸ்ராயிடம் கூறினார்கள். அதன்மேல் வைசிராய் காங்கிரசை வெளியனுப்ப யோசிக்க வேண்டியவரானார். இதை அறிந்த காங்கிரஸ் மந்திரிகள் தாங்களாகவே வெளியில் போய்விடுவது மேல் என்ற நிலைமைக்கு வர வேண்டியவர்களானார்கள். அதன்மீதுதான் அவர்களே ராஜிநாமாச் செய்துகொண்டு வெளியில் வந்துவிட்டார்கள். தாங்கள் வாக்குறுதி கேட்டது தவறு என்று அறிந்து மீண்டும் இழந்துபோன பதவியைப் பெறுவதற்கு ஏதேதோ காரியங்கள் செய்கிறார்கள். வைஸ்ராய்க்கும், பிரிட்டிஷ் சர்க்காருக்கும் காங்கிரஸ்காரர்களின் 27 மாத ஆட்சியில் இவர்களுக்கு செல்வாக்கில்லை என்று புலனாகிவிட்டது. ஆதலால் பிரிட்டிஷார் காங்கிரசிடம் பிகுவு காட்ட ஆரம்பித்துவிட்டார்கள்.


ஜின்னாவின் வீரம்


காங்கிரஸ்காரர்களுக்கு முஸ்லிம் லீக் என்றாலே பிடிப்பதில்லை. அதை எவ்வளவு வெறுக்க வேண்டுமோ அவ்வளவும் வெறுத்தார்கள். அதைப்பற்றி எவ்வளவு விஷமப் பிரசாரம் செய்யவேண்டுமோ அவ்வளவும் செய்தார்கள். லீக்குக்குள் கலகத்தை உண்டாக்க எவ்வளவு முயற்சிக்க வேண்டுமோ அவ்வளவு முயற்சித்து சூழ்ச்சிகள் செய்தார்கள். ஆகவே ஜின்னா மீதும், லீக் மீதும் காங்கிரஸ்காரர்கள் செய்து வந்த துஷ்பிரசாரமும், இழிதன்மையும் கொஞ்சநஞ்சமல்ல. தோழர் ஜின்னா அவர்களை சரியான முஸ்லிம் அல்ல என்று கூட கூறும்படி ஏழை முஸ்லிம்களைத் தூண்டி விட்டார்கள். ஒன்றுக்கும் ஜின்னா சிறிதும் அசையவில்லை. ஒரே பிடிவாதத்தில் இருக்கிறார்.


ஒன்று காங்கிரஸ் ஒழிவது, அல்லது முஸ்லிம்கள் ஒழிவது; இதற்கு இடையில் எவ்வித ராஜியும் இல்லையென்று கங்கணம் கட்டிக்கொண்டார். காங்கிரஸ் என்பதே முஸ்லிம்களை ஒழிக்கக் கருதி இருக்கும் ஒரு ஸ்தாபனம் என்பதே ஜனாப் ஜின்னாவின் அபிப்பிராயம். அதற்கு வேண்டிய ஆதாரங்கள் ஜின்னாவிடம் ஏராளமாக இருக்கின்றன.


நம் நிலை


ஜனாப் ஜின்னாவைப் போல்தான் நாமும் கருதுகிறோம். காங்கிரஸ் என்பது திராவிட மக்களை சூத்திரர்களாக ஆக்கி ஆரியர்களுக்கு அடிமைப்படுத்துவதற்காகவே இருக்கும் ஸ்தாபனம் என்று கருதுகிறோம். ஆகையால் நமது இருவருடைய வேலையும் என்ன விலை கொடுத்தாவது காங்கிரசை ஒழிக்க வேண்டுமென்பதில் சந்தேகமில்லை.


காங்கிரசின் வகுப்புணர்ச்சி


உதாரணம் வேண்டுமானால் கூறுகிறேன். காங்கிரஸ் பதவிக்கு வந்தவுடன் எதற்காக வந்தேமாதரப் பாட்டைப் பாடவேண்டும்? ஒரு மதஸ்தர்களின் மனதைப் புண்படும்படிச் செய்யும் என்று தோழர்கள் லால்ஜானும், அமீத்கானும் ஆட்சேபித்தால் அவர்களை வெளியில் போகும்படிச் சொன்னது எவ்வளவு ஆணவமான செயல் என்பதைப் பாருங்கள்.


வங்காளத்தைச் சேர்ந்த பக்கிம் சந்திரசாட்டர்ஜி என்பவரால் எழுதப்பட்ட, ஆனந்த மடம் என்ற புத்தகத்தில் முஸ்லிம்களை எவ்வளவு இழிவாகவும், கேவலமாகவும் எழுதி இருக்கிறார் என்பதைப் பாருங்கள்.


அந்தப் புத்தகத்தில் முஸ்லிம்களின் மனதைப் புண்படுத்தும் படியான பலபாகங்கள் இருக்கின்றதுடன், முஸ்லிம்களைத் தாடிக்காரப் பன்றிகளென்றும், அவர்களைக் கண்டவிடங்களிலெல்லாம் அடித்துக் கொல்லவேண்டுமென்றும் எழுதி இருக்கிறது. அந்தப் புத்தகத்திலுள்ள பாடல்களை சட்டசபையில் பாடவேண்டாமென்று கூறினால், சட்டசபையைவிட்டு வெளியில் போகும்படிக்கூறினால் அவர்கள் சும்மா இருப்பார்களா?


நான் கேட்கிறேன். இன்று சைவர்களில் ஒருவர், விஷ்ணு மதத்தையும், புராணத்தையும், விஷ்ணு கடவுளையும் பற்றி இழிவாகப் புத்தகமெழுதினால் விஷ்ணுபக்தர்கள் சும்மா இருப்பார்களா? அதேபோல் சைவ மதத்தையும், புராணத்தையும், கடவுளையும் பற்றிப் புராணங்களில் உள்ளதுபோல் கூட, வைணவர்கள் எழுதினால் சைவர்கள் சும்மா இருப்பார்களா?


இன்று காங்கிரஸ் ஆட்சி செய்த கொடுமைகளைச் சொன்னால் தேசியத் தம்பி களுக்குக் கோபம் வருகிறது. நாம் இப்போது என்ன என்ன குறைகளை கொடுமை களைக் கூறுகிறோமோ அவைகளை அன்றே எடுத்துக்காட்டினோம். அப்போது புத்தியில் ஏறவில்லை.


ஆச்சாரியார் ஆணவம்


சட்டசபையில் எல்லா மதஸ்தர்களும் கூடியுள்ள ஒரு இடத்தில் வந்தேமாதரம் பாடக்கூடாதென்று கூறியபோது, தோழர் ராஜகோபாலாச்சாரியார் ஆணவமாகவும், யோக்கியப் பொறுப்பில்லாமலும் பதில் கூறினார். இதன் கருத்தென்ன? நாம் பதவிக்கு வந்துவிட்டோம். முஸ்லிம்களை ஒழித்து விட்டோம் என்கின்ற எண்ணத்தின் மீது வெற்றிச்சங்கு ஊதுவதாகத்தானே அர்த்தம்.


காந்தி படம்


அதுதான் போகட்டும். பள்ளிகளில் அரசியல் தலைவர்கள் படங்களையும், கட்சிக் கொடிகளையும் தொங்கவிடக் கூடாதென்று ஆட்சேபித்தால் அதைக் காதிலும் போட்டுக்கொள்ளவில்லை. பள்ளிக்கூடத்தில் பொது பணத்தில் காந்தி படம் மாட்டுவது என்பதும், முஸ்லிம்களை இழிவுபடுத்தும் மூவர்ணக் கொடியை கட்ட வேண்டுமென்பதும் அரசியல் கொள்கையா? வகுப்புத் திமிர் கொள்கையா? என்று கேட்கிறேன். பள்ளிகளில் பல கட்சியாரும், பல வகுப்பாரும், மதஸ்தர்களும் இருப்பார்கள்; அங்கு காங்கிரஸ்காரர்கள் மெஜாரிட்டியாக இருப்பதால் மற்றவர்கள் மனதைப் புண்படும்படிச் செய்வதுதான் அரசியலா? ஒரு பிரகஸ்பதி கேட்கிறார். பள்ளிகளில் ராஜா படம் இருக்கும்போது அரசியல் தலைவர்கள் படங்கள் ஏன் இருக்கக் கூடாதென்று.


ராஜா படம் இருக்கலாம்; யார் ராஜாவானாலும் அந்த ராஜா படம் இருந்துதான் தீரும். அதற்குக் காரணமிருக்கிறது. அவர் இந்த நாட்டை ஆளுகிறார்; நாமெல்லாம் அவருடைய குடிகள்; அதனால் அவர் படமிருக்கலாம். அந்த ராஜா போய்விட்டால் அடுத்த ராஜா யாரோ அவர் படமிருக்கலம். அவர் இந்தியாவிலுள்ள எல்லோருக்கும் சக்க்ரவர்த்தி; அவரை யாரும் சக்கரவர்த்தி அல்ல என்று சொல்ல முடியாது. நம்மில் அபிப்பிராய பேதமில்லாமல் எல்லோருக்கும் அரசராயிருக்கிறார். ஆனால், காந்திக்கு என்ன யோக்கியதை இருக்கிறது? அவரை இந்தியர்கள் எல்லோரும் அரசரென்றோ, தலைவர் என்றோ பிரதிநிதியென்றோ ஒப்புக்கொள்கிறார்களா? காங்கிரஸ் கட்சிக்குத்தானே அவர் தலைவர். காங்கிரஸ் கட்சி ஜெயித்ததால் அவர் படம் வைக்கவேண்டுமென்றால், எந்த கட்சி தேர்தலில் வெற்றி பெறுகிறதோ அந்தக் கட்சி தலைவர் படத்தை ராஜா படம் போல் பாவிக்கலாம் என்பதை காங்கிரஸ்காரர்கள் ஒப்புக்கொள்ளுகிறார்களா? என்று கேட்கிறேன்.


கல்வியைக் கெடுத்தார்கள்


முஸ்லிம்கள், கிறிஸ்தவர், தாழ்த்தப்பட்ட மக்கள் ஆகியவர்களுக்கு இருந்துவந்த சில உபகாரச் சம்பளத்தில் கையை வைத்துக் குறைத்துவிட்டார்கள். ஆரம்பப் பள்ளிக்கூடங்களையெல்லாம் மூடிவிட்டார்கள். இதையெல்லாம் கேட்டால் முதல் மந்திரியார், வாய்க்கால் கரையில் அட்டைகளில் எழுதிப் படித்துக்கொள்ளும்படிக் கூறுகிறார். இது அரசியல் கொள்கையா? பார்ப்பனியக் கொள்கையா?
இது பார்ப்பானியமா? அரசியலா?
இந்த நாட்டிலுள்ள தாழ்த்தப்பட்டவர்களை, ‘அரிஜனம்’ என்ற மதப்பெயரைச் சூட்டி அழைக்கும்படி சட்டம் செய்தார்கள். இது அரசியல் கொள்கையா? மதக் கொள்கையா? தமிழ்நாட்டில் உயர்திரு. திருவாளர் போன்ற தமிழ்ப் பதங்கள் வைத்து அழைத்துவந்ததை நீக்கிவிட்டு, ஆரியப்பதமாகிய ‘ஸ்ரீ’ என்ற பதத்தை உபயோகிக்கும்படி உத்திரவிட்டார்கள். இப்படி இவர்கள் செய்தது அரசியல் வேலையா? பார்ப்பன மதவேலையா? என்று கேட்கிறேன்.


தமிழர்கள் கலையையும், நாகரிகத்தையும் குலைக்க வடநாட்டு பாஷையாகிய இந்தியைக் கட்டாயப் பாடமாகக் கொண்டுவந்தார்கள். அதை எதிர்த்த 1300 பேர்களை சிறையில் வைத்தார்கள். 2 வீரர்கள் சிறையில் இறக்கும்படிச் செய்தார்கள். இது அரசியலா? பார்ப்பானியமா?


விஸ்வ பிராமணர்களுக்கிருந்த “ஆச்சாரி” என்பதை எடுத்துவிட்டு, “ஆசாரி” என்று அழைக்க வேண்டுமென்று உத்திரவிட்டார்கள், ஏன் “ஆச்சாரி” என்றிருந்தால், இவர்களிடம் பங்கு கேட்டு விடுவார்களென்றா? விஸ்வ பிராமணர்கள் என்றிருந்தால் இவர்களுக்குக் குத்துகின்றதா? அதை எடுத்து, “விஸ்வகர்ம” என்று
போடவேண்டுமென்று உத்தரவிட்டார். இது அரசியலா? பார்ப்பனியமா? இவையெல்லாம் பார்க்கும்போது இவை வகுப்பு நலமான காரியமா அல்லவா? என்பதை யோசித்துப்பாருங்கள்.


பார்ப்பனரல்லாதாருக்குக் கொடுமை


காங்கிரஸ் மந்திரிகள் பதவியிலிருந்த காலத்தில், பார்ப்பனரல்லாத உத்தியோகஸ்தர்கள் அடைந்த கொடுமைகளை அளவிட்டுக் கூறமுடியாது.


1000 ரூபாய் சம்பளத்திலிருந்த சானிட்டேரி இஞ்சினியர் தோழர் ஹவட் என்ற முஸ்லிமை ஈரோட்டில் சந்தைப்பேட்டை தாழ்வாரம் விழுந்ததற்காக டிஸ்மிஸ் செய்ய இவர்கள் செய்த சூழ்ச்சியை அறிந்து திடீரென மாரடைப்பால் அவர் இறந்துவிட்டார்.


ஈரோடு சந்தைப்பேட்டை விபத்து அசந்தர்ப்பத்தால் ஏற்பட்டது. அது இங்குள்ள ஒரு பார்ப்பன ஓவர்சியர் அதிகாரியின் அஜாக்கிரதையினாலும், மழைபெய்ததால் சந்தையிலுள்ள ஜனங்கள் ஒதுங்க அந்தத் தாழ்வாரத்தில் ஏறி தூணைப்பிடித்து ஆட்டியதாலும் ஏற்பட்டதாகும். இதனால் ஒரு பெரிய உத்தியோகஸ்தருக்கு உலை வைக்க சூழ்ச்சி செய்வதா? இது மட்டுமா? சுகாதார அதிகாரியாக இருந்த தோழர் எத்திராஜுலு நாயுடு அவர்களை அவருக்குக் கீழ் இருந்த ஒரு பார்ப்பனருக்கு கீழே போட சூழ்ச்சி செய்து அவர் யாரோ ஒரு சிறு அதிகாரி லஞ்சம் வாங்கியதை கேட்கவில்லை என்று குற்றம் சாட்டி கீழே இறக்கி லஞ்சம் வாங்கியதாக ஒரு காலத்தில் சந்தேகப்பட்ட ஒரு பார்ப்பனரை மேலே போட முயற்சித்தார்கள். இது தெரிந்தவுடன் அந்த பார்ப்பனரல்லாத அதிகாரி காயலாவில் வீழ்ந்தவர் இன்னமும் எழுந்திருக்கவில்லை. இவையெல்லாம் அரசியலா? அந்தர தர்பாரா? என்று கேட்கிறேன்.


இது தவிர ஈரோட்டில் இதற்கு முன் இருந்த சேர்மன் தோழர் கான்சாகிப் ஷேக்தாவூத் சாகிபு அவர்கள் பெயரால் நாட்டப்பட்ட அஸ்திவாரக் கல்லை மந்திரிகளின் தயவால் இடித்துத் தள்ளிவிட்டு இப்போதுள்ள சேர்மன் தன் பெயரைப் போட்டுக்கொண்டார். இது எவ்வளவு இழிவான அக்கிரமம் பாருங்கள் என்று பேசியதோடு மற்றும் இதுபோன்ற அனேக ஆதாரங்களைக் காட்டிவிட்டு வார்தா கல்வி பற்றியும், மந்திரிகள் பார்ப்பனரல்லாதாருக்குச் செய்த கொடுமைகளைப் பற்றியும், பப்ளிக் பிராசிகூட்டர்களை அநேகமாய் அந்தந்த ஜில்லா ஜட்ஜுகள் நியமனம் செய்து வந்ததை நிறுத்தி தேர்தல் மூலியமாய் வரவேண்டுமென்று ஏற்படுத்தி பார்ப்பனர்களுக்குச் சலுகை காட்டினார்கள் என்றும் மற்றும் இந்த 27 மாதங்களில் திராவிட மக்களுக்கு பெரும் கொடுமைகள் செய்து வந்த காங்கிரஸ்காரர்கள் இப்போது அரசியல் நிர்ணயசபை கூட்ட வேண்டுமென்று கோருவதை நாம் கண்டித்து நமது வெறுப்பைத் தெரிவிப்பதற்காக கூடிய சீக்கிரத்தில் ஓர் நாள் குறித்து அந்நாளை நாம் கொண்டாட வேண்டும்.


(22.12.1939ஆம் தேதி மாலை 6 மணிக்கு ஈரோடு தியாகராய சதுக்கத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பெரியார் ஈ.வெ. ராமசாமியின் சொற்பொழிவு)

– தோழர் பெரியார், குடிஅரசு – சொற்பொழிவு – 14.01.1940

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *