காஞ்சியில் இந்தி எதிர்ப்புக் கமிட்டிக் கூட்டத் தீர்மானங்கள்

Print Friendly, PDF & Email

1.இக்கூட்டமானது இப்போது அய்ரோப்பாவில் நடந்து வரும் யுத்தத்தில் பிரிட்டிஷாருக்கு முழு வெற்றியும் ஏற்பட வேண்டுமென்று மனப்பூர்வமாக ஆசைப்படுகிறதுடன் இந்த யுத்தத்தில் தமிழர்கள் பங்கெடுத்துக் கொண்டு தங்களாலான எல்லா உதவியும் செய்ய தயாராயிருப்பதாக தெரிவித்துக் கொள்ளுகிறது.


2.துருக்கியில் ஏற்பட்ட பூகம்பக் கொடுமைக்கு இக்கூட்டம் மிகவும் வருந்துவதுடன் பூகம்பத்தால் கஷ்டப்பட நேர்ந்த மக்களுக்கு மனப்பூர்வமான அனுதாபத்தைத் தெரிவிப்பதுடன் கஷ்ட நிவாரண காரியத்திற்காக ஏதாவது முயற்சி துவக்க வேண்டுமென்றும் வேறு யாராலாவது துவக்கப்பட்டால் அதில் பங்கு பெற்று வேண்டிய உதவியை செய்ய வேண்டுமென்றும் தமிழ் மக்களை இக்கூட்டம் வேண்டிக் கொள்கிறது.


3.காங்கிரஸ் ஆட்சியில் இந்தி எதிர்ப்புக் கிளர்ச்சி காரணமாய் சிறைபிடிக்கப்பட்ட மக்களில் பெரிதும் காங்கிரஸ் சர்க்கார் அலட்சியத்தின் காரணமாய் உயிர் துறக்க நேர்ந்த வீர வாலிபர்களாகிய நடராஜன், தாளமுத்து ஆகியவர்களுக்காக துக்கப்படுவதுடன் அவர்களது குடும்பத்தாருக்கு தனது ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துக் கொள்கிறது.


4.சென்னையில் தொண்டர் படைத் தலைவராயிருந்தவரும், இந்தி எதிர்ப்புக் கிளர்ச்சிக்கு மிக்க உதவி புரிந்து வந்தவரும், ஆதிதிராவிட வகுப்பு முக்கியஸ்தரும் தமிழர் இயக்கத்திற்கு பல வகையிலும் தொண்டாற்றி வந்தவருமான தோழர் ராகவலு அவர்களின் அகால மரணத்திற்கு இக்கூட்டம் வருந்துவதுடன் அவரது குடும்பத்திற்கு தனது அனுதாபத்தைத் தெரிவித்துக்கொள்கிறது.


5.இந்தி எதிர்ப்புக்கிளர்ச்சியில் ஈடுபட்டு சிறை சென்ற தாய்மார்களையும் தோழர்களையும் பாராட்டுவதுடன் சிறையில் இருக்கும்போது காங்கிரஸ் சர்க்காரால் நடத்தப்பட்ட பல கொடுமைகளை லட்சியம் செய்யாமல் தீரத்துடன் இருந்து வந்ததற்காக இக்கூட்டம் அவர்களைப் பாராட்டுகிறது.


6.அவர்களில் அநேகர் மறுபடியும் கிளர்ச்சி துவக்கப்பட வேண்டிய அவசியம் வந்தால் முன்போலவே தொண்டாற்ற முன் வருவதாக தெரியப்படுத்தி இருக்கும் வீரத்திற்கும் தமிழ்ப் பற்றுக்கும் நன்றி செலுத்தி பாராட்டுகிறது.


7.தலைவர் பெரியார் ராமசாமி அவர்கள் இந்தி எதிர்ப்புத் தீவிரக் கிளர்ச்சியைச் சிறிதுகாலம் நிறுத்திவைக்க வேண்டுமென வெளியிட்ட அறிக்கையை ஏற்று அதன்படியே, மறியலை நிறுத்திவைத்தமைக்கு, இக்கூட்டம், தனது மகிழ்ச்சியான நன்றியறிதலைத் தெரிவித்துக்கொள்கிறது.


8.இந்தி எதிரிப்பாளர்களை சென்னை சர்க்கார் சிறையினின்றும் விடுதலை செய்வித்ததைக் குறித்தும், இந்த ஆண்டு மேற்கொண்டு 100 புதிய பள்ளிக்கூடங்களில் கட்டாய இந்தி புகுத்த வேண்டுமென காங்கிரஸ் சர்க்கார் போட்டுவைத்த திட்டத்தை நீக்கிவிட்டு, இனி புதிதாக எங்கும் கட்டாய இந்தி புகுத்துவதில்லை என சர்க்கார் தீர்மானித்ததற்கும், இக்கூட்டம், தனது நன்றியறிதலைத் தெரிவித்துக் கொள்வதுடன், காங்கிரஸ் சர்க்கார் செய்துவிட்டுப் போன கட்டாய இந்தி உத்திரவை புதிய சர்க்கார் ரத்து செய்யத் தவறிவிட்டதால் மனக்கசப்பும் அதிருப்தியும் ஏற்பட்டிருப்பதை இக்கூட்டம் தெரிவித்துக்கொள்கிறது.


9.கட்டாய இந்தி திட்ட உத்திரவு ரத்துச் செய்யப்படாதவரை திராவிட நாட்டில் தமிழ் மக்களுக்கு பலமான அமைதியும் சமாதானமும் நிலவ முடியாது என்பதைச் சர்க்காருக்குத் தெரிவித்துக்கொள்வதோடு, கட்டாய இந்தி திட்டத்தைச் சர்க்கார் அடியோடு அகற்றி விடும்படி நிர்ப்பந்திக்க தக்க முறைகளையும் வேலைத் திட்டத்தையும் வகுத்து நடத்த அடியிற்கண்டவர்கள் அடங்கிய ஒரு கமிட்டியை, இக்கூட்டம் தெரிந்தெடுக்கிறது.


கமிட்டி அங்கத்தினர்கள்

தோழர்கள்

 1. ஈ.வெ.ராமசாமிப் பெரியார்
 2. குமாரராஜா முத்தைய செட்டியார்
 3. சர்.ஏ.டி. பன்னீர்செல்வம்
 4. ஊ.பு.அ. சவுந்திரபாண்டியன்
 5. ராவ்பகதூர் என்.ஆர்.சாமியப்ப முதலியார்
 6. எஸ்.எஸ். பாரதியார்
 7. சி.டி. நாயகம்
 8. டி. சண்முகம்பிள்ளை
 9. எம். தாமோதரம் நாயுடு
 10. சி. பாசுதேவ்
 11. டி.ஏ.வி. நாதன்
 12. சாமி அருணகிரிநாதர்
 13. சாமி சண்முகானந்தா
 14. வி.பி.எஸ். மணியம்
 15. ரோசம்மாள்
 16. சி.என். அண்ணாதுரை (இக்கமிட்டிக்கு காரியதரிசி)

10.இந்தக் கூட்டத் தீர்மானங்களை, சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அனுப்புவிக்க, இக்கூட்டத் தலைவர் சர்.எ.டி.பன்னீர்செல்வம் அவர்களுக்கு இக்கூட்டம் அனுமதி அளிக்கிறது.

(31.12.1939 அன்று காஞ்சிபுரம் கண்ணன் டாக்கீசில் நடைபெற்ற இந்தி எதிர்ப்பு கமிட்டி கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்)

தோழர் பெரியார், குடிஅரசு – தீர்மானங்கள் – 07.01.1940

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *