மைனாரிட்டிகள் செய்யவேண்டியது

Print Friendly, PDF & Email

சர்தார் படேல், சென்ற இரண்டொரு தினங்களுக்கு முன் ஆமதாபாத்தில் நடைபெற்ற ஒரு பொதுக்கூட்டத்தில் “அரசியல் நிர்ணய சபை கூட்ட வேண்டுமென்ற காங்கிரஸ் கோரிக்கைக்கு பிரிட்டிஷ் சர்க்கார் சம்மதிக்க வேண்டும். இன்னும் அதிக அதிகாரங்களுடன் மந்திரி பதவிகளை வகிக்கும் நிலைமை காங்கிரசுக்கு ஏற்படவேண்டும். அதுவரை காங்கிரஸ் பதவிகளைத் திரும்பிப் பார்க்காது” என்று ஜம்பமாகப் பேசியிருக்கிறார். இவரது ஜம்பப்பேச்சைப் பார்ப்பவர்கள் எவருக்கும், காங்கிரசை பிரிட்டிஷ் சர்க்கார் பதவி ஏற்க அழைப்பதாகவும், இவர்கள் என்னமோ நிபந்தனைகள் விதித்து அவைகளை ஒப்புக்கொண்டால்தான் முடியும் என்று சொல்வது போலும் தோன்றும். ஆனால் உண்மையை உணரும் சக்தி உள்ளவர்களுக்கு இவரது பேச்சின் புரட்டு விளங்காமலிருக்காது. மந்திரி பதவியை ராஜிநாமாச் செய்த உடன், வார்தா முறைக் கல்வியை கற்றுக்கொண்டு வந்து வார்தாக் கல்வி ஆசிரியராகப் போவதாகச் சொன்ன தோழர் ராஜகோபாலாச்சாரியார், “ஓ! ஓ!! நாங்கள் மந்திரி பதவியை விட்டுப் போய்விட்டோம் என்று சந்தோஷமா படுகிறீர்கள்! இதோ பார் வரப்போகிறோம்” என்றும், “எங்கள் மோட்டார் ‘பஞ்சர்’ (ஓட்டை) ஆய்விட்டது. இதோ சரிபடுத்திக்கொண்டு ஓட்டப்போகிறோம் பார்!” என்றும், “மூன்று மாதம் ஓய்வு எடுத்துக் கொண்டிருக்கிறோம். இரண்டரை ஆண்டு நீங்கள் படுத்தின பாட்டினால் ஓய்வு எடுக்க நேரிட்டிருக்கிறது. இதோ ஓய்வை முடித்துக்கொண்டு வருகிறோம்” என்றும்,


“சமையல் செய்து சாப்பிடுவதற்காக குதிரையை விட்டிறங்கியிருக்கிறோம், சாப்பாடு முடிந்ததும் மீண்டும் சவாரி செய்யப் போகிறோம்” என்றும் சொல்லி வருகிறவரைச் சேர்ந்தவர்கள் உண்மையிலே பதவிக்காக தவங்கிடக்கிறார்களா? பதவி கொடுத்தால் போதும் ஆண்டவனே! என்று பல்லை இளித்து நிற்கிறார்களா? அல்லது “வெஸ்ட்மினிஸ்டர் சட்டத்தில் கண்டுள்ள பிரகாரம் இந்தியாவுக்குப் பூரண குடியேற்ற நாட்டந்தஸ்து வழங்குவதே பிரிட்டிஷ் சர்க்காரின் நோக்கம்” என்றும், “யுத்தம் முடிந்த பிறகு இந்தியர்களுடைய அபிப்பிராயத்தை அறிந்து 1935ஆம் வருஷத்திய இந்திய சட்டத்தைத் திருத்த அவசியமானால் யோசிக்கப்படும்” என்றும் “அதுவரை வேண்டுமானால் கவர்னர் ஜெனரலின் நிர்வாக சபையில் இந்தியாவிலுள்ள அரசியல் கட்சிகளின் தலைவர்களில் சிலரை சேர்த்து நிர்வாக சபையை விஸ்தரிக்க தயாராயிருக்கிறோம்” என்றும் கூறும் பிரிட்டிஷ் சர்க்காரும் அவர்களது பிரதிநிதியும் இவர்களை இக்காங்கிரஸ்காரர்களை வாருங்கள் வாருங்கள் என்று வருந்தி அழைக்கிறார்களா? என்று கேட்கிறோம்.


1937ஆம் ஆண்டு ஜூலை மாதம் 14ஆம் தேதி இவர்கள் பதவி ஒப்புக்கொள்வதற்கு முன் கவர்னர்களிடம் ஏதோ வாக்குறுதி கேட்பதாக புரளிச் செய்துகொண்டு திரிந்து பின்னால் வைஸ்ராய் ஒரு குண்டு போடவே மூன்றாம் பேஸ்துகாரரைப் போல் ஏதோ கவர்னர் வாக்குறுதி கொடுத்துவிட்டதாகவும் அதாவது இவர்கள் (இக்காங்கிரஸ் மந்திரிகள்) செய்யும் காரியங்களில் குறுக்கிடுவதில்லையென்றும் உறுதிகொடுத்து விட்டதாகவும் மழுப்பிவிட்டு பதவி பெற்றதை யாரோ அறியார்? கவர்னர்கள் வாக்குறுதி கொடுத்திருந்தது உண்மையாயிருந்தால் காங்கிரஸ் மந்திரிகள் போட்ட உத்தரவுகளில் எத்தனை உத்தரவுகளை கவர்னர் சிவப்புமையால் அடித்து அனுப்பியிருப்பாரா? அல்லது இவர்கள் மானம் உள்ளவர்களாய் இருந்திருந்தால் நாணயம் உள்ளவர்களாய் இருந்தால் உடனே ராஜிநாமாச் செய்யாமல் இருந்திருப்பார்களா? என்பதை சிந்தித்துப் பார்க்க வேண்டாமா என்று கேட்கிறோம்.


“அரசியல் நிர்ணயசபை கூட்டவேண்டும் என்ற காங்கிரஸ் கோரிக்கையை பிரிட்டிஷ் சர்க்கார் ஒப்புக்கொள்ள வேண்டும் இல்லையேல் மந்திரி பதவியை காங்கிரஸ் திரும்பிக்கூட பார்க்காது” என்று சர்தார் படேல் கூறுவது எவ்வளவு வடிகட்டின பச்சைப் புளுகு? பாமரமக்களை ஏய்க்கும் சூழ்ச்சி என்று கேட்கிறோம். ஏன் நாம் இவ்வாறு சொல்கிறோம் என்றால், சர்தார் படேல் பேசிய அடுத்த நாள் பம்பாயில் வைஸ்ராய் பிரபு பேசிய பேச்சில் அரசியல் நிர்ணயசபையைக் குறித்து ஒரு வார்த்தைகூட பிரஸ்தாபிக்கவேயில்லை. அப்படியிருந்தும், தோழர் ராஜகோபாலாச்சாரியார், தாம் தமிழ் நாட்டில் போட்டிருந்த சுற்றுப் பிரயாணத்தை எல்லாம் ரத்து செய்து விட்டு சென்னை கவர்னரைப் பேட்டி கண்டு பேசிவிட்டு வார்தாவுக்குப் பறந்து காரியக் கமிட்டியில் தமது சாணக்ய தந்திரத்தை காட்டச் சென்றிருக்கிறார் என்பதினாலேயாகும். எனவே ஆச்சாரியார் எப்படியாவது பதவி கிடைத்தால் போதும் அதை என்ன விலை கொடுத்தாவது வாங்குவதென முடிவு செய்து கொண்டு அதற்காக தவங்கிடக்கையில் சர்தார் இவ்வாறு பேசுவதென்றால் உண்மையிலே அவர் அறிந்து பேசுகிறாரா அறியாமல் பேசுகிறாரா என்பது நமக்கு விளங்கவில்லை. அவர் அறியாமல் ஒரு நாளும் பேசியிருக்க முடியாது. ஏன் அவரே மந்திரிசபைகளை ஆட்டுவிப்பவராயிருப்பதால் அவர் அறியாமல் இருப்பதற்கு நியாயமே இல்லை. ஆகவே அறிந்தே வேண்டுமென்று பொது மக்களை ஏய்ப்பதற்காக செய்யப்படும் பித்தலாட்டமென்று சொல்லாமல் வேறென்னவென்று சொல்வதென்று கேட்கிறோம். மேலும் சர்தார் இந்து முஸ்லிம் பிரச்சினை ஒரு குடும்ப விவகாரம் என்று குறிப்பிட்டிருக்கிறார். இந்து முஸ்லிம் பிரச்சினை எப்படி குடும்பவிவகாரம் ஆகமுடியும்? என்று இவர்கள் ஒரே குடும்பமாயிருந்தனர்? அப்படி இவர்கள் ஒரே குடும்பத்தினர் என்று சர்தாரும் சர்தார் கோஷ்டியினரும் கருதுவது உண்மையாய் இருந்தால், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த முஸ்லிம்களை நாட்டைவிட்டு விரட்ட, ஓட்ட, துரத்த எழுதப்பட்ட ஆனந்தமடம் என்ற நாவலிலிருக்கும் வந்தேமாதரம் பாடலை இவர்கள் (காங்கிரஸ்காரர்கள்) பாடிவருவார்களா? என்று கேட்கிறோம்.


அடுத்தாற்போல் மூன்றாவது மனிதன் வந்து தீர்க்கமுடியாது என்று தெரிவிக்கிறார். குடும்பத்திலே விவகாரம் ஏற்படாதவரை மூன்றாவது மனிதனுக்கு குடும்பத்தில் வேலை இல்லைதான். ஆனால், விவகாரம் ஏற்பட்டுவிட்டால் மூன்றாவது மனிதன் கண்டிப்பாக வந்துதானே ஆகவேண்டும். இல்லையேல் குத்திலும் கொலையிலுமல்லவா முடியும்? இதைத்தானே இன்று நாம் உலகில் அனுபவபூர்வமாகப் பார்த்து வருகிறோம். கடைசியாக இந்து மெஜாரிட்டியை மைனாரிட்டியாக்கிவிட முடியாது என்று மிரட்டுகிறார். இதில்தான் விஷமிருக்கிறது. சர்தார் காங்கிரசின் உண்மையான விஸ்வரூபத்தைத் தெரிவித்துவிட்டார் என்றே கருதுகிறோம். காங்கிரஸ் காரர்கள் எடுத்ததற்கெல்லாம் மெஜாரிட்டி என்று சொல்லிக் கொண்டு தனக்கு கை தூக்க “கைகாட்டி மரம்” போல் ஆள் இருக்கிறது என்ற ஆணவத்தினால் கடந்த இரண்டரை ஆண்டில் மைனாரிட்டிகளுக்கு இழைத்த கொடுமைகளை- அநீதிகளைக் கண்டுதான் இன்று மைனாரிட்டிகளான முஸ்லிம்களுகம், தாழ்த்தப்பட்டோரும், பார்ப்பனரல்லாதாரும் இந்நாட்டிலே ஜனநாயகத்துக்கு இடமில்லை, ஜனநாயகத்தின் பேரால் மைனாரிட்டிகளின் உரிமைகள் பறிக்கப்படுகின்றன மைனாரிட்டிகளுக்கு அளித்த பாதுகாப்புகள் காற்றில் பறக்கவிடப்படுகின்றன என்று ஏகோபித்த அபிப்பிராயத்தைத் தெரிவிக்கின்றனர். ஜனநாயகம் என்பது மெஜாரிட்டியினரின் இஷ்டம்போல் மைனாரிட்டிகளை அடக்கியாள்வதென்றால் அத்தகைய ஆட்சி முறையை ஒழித்து மைனாரிட்டி சமுகங்கள் ஒன்றுபட்டு இன்று முதலே வேலை செய்ய வேண்டாமா என்று கேட்கிறோம். எனவே, மைனாரிடடிகள் எல்லாம் ஒன்று சேர்ந்து காங்கிரஸ் காணும் கனவு பொய்யாகும் படி செய்யவேண்டுவது அவர்கள் கடமை என்று தெரிவித்துக்கொள்கிறோம்.


– தோழர் பெரியார், குடிஅரசு – தலையங்கம் – 14.01.1940

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *