கடவுள் நம்பிக்கையாளர் என்கின்ற எல்லாச் சோம்பேறிகளும் பிரார்த்தனை என்பதன் பேரால் தங்கள் வஞ்சகத் தொழிலை நடத்திக் கொண்டே உள்ளனர்.
வாலிபர்கள் ஒரு செல்வாக்கையோ, ஒரு பிரச்சாரத்தனையோ, காதலையோ கண்டுவிட்டால் சுலபத்தில் வழுக்கி விழக்கூடும். செல்வாக்கற்ற காரியத்தில் பற்றாய் இருப்பது மிகச் சங்கடமாகத் தோன்றும். பொது மக்கள் ஆதரவு, புகழ், உற்சாகமான காரியங்களில் இருக்கும் அவா, ஒரு தேக்கமான காரியத்தில் உற்சாகம் காட்ட இடம் தராது.
எந்த மனிதனும் மற்றவனுக்கு உபகாரியாயும் கடைசிப்பட்சம் மற்றவனுக்குத் தன்னால் துன்பம் கொடுக்காதவனாகவும் இருப்பதே பெரிய ஒழுக்கம் என்று சுயமரியாதை இயக்கத்தார் கருதி இருக்கிறார்கள்.
ஒழுக்கம், நாணயம், உண்மை என்ற உயர்ந்த குணங்களெல்லாம் பொதுச் சொத்து. மனிதச் சமுதாயத்திலே இது கேடாயிருந்தால் சமுதாயத்துக்குக் கேடு. ஒரு மனிதன் இந்தக் காரியங்களிலே குற்றவாளியாக இருப்பானேயானால் கண்டிப்பாக இன்னொரு மனிதனுக்குக் கேடு விளைந்திருக்கும். அது முக்கியமல்ல; பக்தி, கடவுள் நம்பிக்கை மதக்கோட்பாட்டின்படி நடக்கிறது, இவைதான் முக்கியமென்றால் மக்களுக்கு என்ன பிரயோசனம் அதனாலே? மனிதச் சமுதாயத்திற்கு என்ன பிரயோசனம் அதனாலே?