தமிழ்நாடு தமிழருக்கே – ஏன்?

Print Friendly, PDF & Email

‘தமிழ்நாடு தமிழருக்கே’ என்பதை, கட்சியின் சார்பாக நமது தோழர் சர்.பன்னீர்செல்வம் அவர்கள்தான் வேலூர் உபந்யாசத்தில் எடுத்துச் சொன்னார்கள். அப்பொழுது நான் ஜெயிலில் இருந்தேன். அப்புறம்தான் அது விஷயத்தில் எனக்கும் வர வர அதிக தைரியம் வந்தது. தமிழ்நாடு தமிழருக்கே என்றால் தெலுங்கர்கள், மலையாளிகள் யார் என்று சிலர் சந்தேகப்படக்கூடும். அவர்களும் தமிழர்கள்தான். அம்மொழியும் அதாவது தெலுங்கும், கன்னடமும், மலையாளமும் தமிழிலிருந்து உண்டாகியதுதான். சென்னையில் கொஞ்ச நாள் முன்னர் சர்.பாத்ரோ, சர். கே.வி.ரெட்டி நாயுடு முதலியவர்களுடன் பேசிக்கொண்டிருந்த போது தெலுங்கில் உள்ள பெயர் சொற்கள் எல்லாம் தமிழ், தமிழ் உச்சரிப்பு, தமிழிலிருந்து வந்தன என்பதாக விளக்கிச் சொன்னதுடன், இவை எல்லாம் திராவிட பாஷை என்றார்கள். உதாரணத்திற்கு சுமார் 100 வார்த்தைகளையும் எடுத்துச் சொன்னார்கள்.


40, 50 வருடத்திற்கு முந்திய (டிக்ஷனரி) ஆங்கில அகராதியைப் பாருங்கள். என்சைகிளோ பீடியாவைப் (Encyclopedia) பாருங்கள். ஆந்திரநாடு, கேரள நாடு ஆகிய இவையெல்லாம் திராவிடநாடு என்று அதாவது தமிழகம் (Tamilagam) என்று எழுதப்பட்டிருக்கிறது. தமிழகத்திலிருந்துதான் மற்ற நாடுகள் பிரிந்திருக்கின்றன என்பதை நீங்கள் நன்கு உணரலாம்.


அரசியல் புரட்சி

நமது நாட்டு அரசியலைப்பற்றியே சிலர் பிரமாதமாகப் பேசுகிறார்கள். இங்கு திராவிட நாட்டிற்கு (சென்னை மாகாணத்திற்கு) அரசியல் தலைவர்கள் என்பவர்கள் யார்? ஒரு சத்தியமூர்த்தியாரும், ஒரு ராஜகோபாலாச்சாரியாரும் தானே. இவர்களுடைய கொடிவழிப்பட்டி யாருக்காவது தெரியுமா? ரிஷிமூலம் நதிமூலம் மாதிரி எங்கேயோ இருந்துவந்த யாரோ இருவர் பழம்பெருங்குடி மக்களாகிய திராவிடர்களுக்குத் தலைவர்களா? இந்தப் பெரிய திராவிட நாட்டைப் பண்படுத்தி, சீர்படுத்தி, உழைத்து, நெற்றி வேர்வை நிலத்தில் விழ உழுது, விதைத்து, காத்து பாடுபடுவது யார்? இந்நாட்டிலே உள்ள பார்ப்பன சமுகம் எங்காகிலும் ஒரு பிடி மண்ணையாகிலும் எடுத்து அப்புறம் போட்டிருக்குமா? எங்காகிலும் பார்ப்பான் உழுதிருப்பானா? விதைத்திருப்பானா? உடல் வேலை செய்திருப்பானா? நமது அரசியலுக்கு ஒரு உபயதுல்லாவோ, ஒரு சுப்பய்யாவோ சர்வாதிகாரியாக வந்திருந்தால்கூட நமக்குக் கவலையில்லை. ஏனெனில், அவர்கள் அநேகமாக திராவிடர்கள். நம்முடைய இளிச்சவாய்தனத்தாலல்லவா நம் தலை மீது ஊர் பேர் தெரியாத ஆரியப் பார்ப்பனர்கள் உட்கார்ந்து கொண்டார்கள். இதற்குப் பார்ப்பனர்களுக்கு மாத்திரம் என்ன உரிமை? அவர்கள் பெரிய மேதாவிகளா? அவர்களேதான் அரசியல் நிபுணர்களா? என்று கேட்கிறேன். குண்டூரில் தான் குட்டிச்சுவரில் நின்று கொண்டு விஷம் கக்குவதுபோல் கக்கினாரே ஆச்சாரியார்! “எனக்கு கோர்ட்டில் வாதாடத்தான் தெரியுமே தவிர, நாடாளத் தெரியாது.” “எனது 25 வருஷ பொது அனுபவம் நாட்டுக்கு ஒன்றும் உதவவில்லை” என்று.


நம்மைப்பற்றிப் பேச யாரிருக்கிறார்கள்?

இந்நாட்டு திராவிட மக்களைப்பற்றி வெளி மாகாணத்தில் பேச நமக்கு யார் இருக்கிறார்கள். நம்மைப்பற்றி காந்தியாருக்குச் சொல்வது யார்? ஒரு ஆச்சாரியார், ஒரு மூர்த்தியார்தானே. அவர் காந்தியாரிடம் என்ன சொல்வார்? “பன்னீர்செல்வத்துக்கு வேண்டியதெல்லாம் உத்தியோகம்தான். ஒரு கிளார்க் வேலை கொடுத்தால் போதும், எல்லாம் சரியாய் போய்விடும்” என்று தானே சொல்வார். ராமசாமி யார் என்றால் என்ன சொல்வார்? “அவர் ஒரு சர்க்கார் அடிமை”, “பொதுஜனங்களிடம் பணம் பறிப்பது அவர் வேலை, இதில் தான் ஜீவனம்” என்று தானே சொல்வார். ஒரு சீனிவாச சாஸ்திரியையோ, வரதாச்சாரியையோ, அம்மாபேட்டை வெங்கிட்டராமய்யரையோ கேட்டால் என்ன சொல்வார். “ஓ! அவாளெல்லாம் பரம்பரை பெரிய மனுஷாளல்யோ” என்று தானே சொல்வார்? தன்னைப் பற்றியும் பிரமாதமாக அப்படித்தானே சொல்லிக்கொள்வார். இதைத்தானே அவர் நம்புவார். இவர்களுடைய கொடி வழிப்பட்டி நமக்குத் தெரியாததா? இவர்கள் பின்னாடியா நமது நாடிமுத்து பிள்ளையும், ராமலிங்க செட்டியாரும் கொடி தூக்கிக்கொண்டு ஓடுவது? இந்நாட்டை வேளாளர், உடையார், நாயக்கர், வன்னியர், நாடார், ஆதிதிராவிடர் முதலியவர்கள் ஆளவில்லையா? அப்படி இருக்கும்போது நமக்குப் பார்ப்பனர்களா எஜமானார்கள்? சமுதாயத்திலே பார்ப்பனர்களுக்கு அளவற்ற மரியாதையைக் கொடுத்தோம். ஏழைகளைக் கொள்ளையடித்து பணம் சேர்த்து கோவிலைக் கட்டுகிறோம்; லட்சக்கணக்கான ரூபாயை அள்ளிவிட்டு நிலங்களை வாங்கி வைக்கிறோம், நகைகளை வாங்கி வைக்கிறோம், நமது சொத்தையே கொடுக்கிறோம். கடைசியாக, கோவில் சாவியை பார்ப்பானிடம் கொடுத்து விடுகிறோம். அவன் சாவியை வாங்கிக்கொண்டு நம்மை வெளியே நிறுத்தி நம்மை சாமிக்கு அறிமுகப்படுத்துகிறான். “பார்த்தாயா”, “அம்பலத்தை” என்கிறான். (பலத்த கைதட்டலும், சிரிப்பும்)


உழைப்பது நாம்; உண்பது பார்ப்பான்!

வெளியே மனுஷனுக்கு மனுஷன் எப்படி பார்ப்பான் தரகு வேலை செய்கிறானோ அதுமாதிரி கடவுளுக்கும் இவன்தான் தரகனாக இருக்கத் தகுந்தவன் என்று மக்கள் நினைத்தனர். கடைசியாக சுயராஜ்யத்துக்கும் இவனே தரகன் ஆயிவிட்டான். உங்களிடம் ஓட்டுக்கு வரும் தலைவர் யார்? பண்டித ஜவஹர்லால்: அவர் ஒரு பார்ப்பனர். மத்தியாசியாவிலிருந்து பிழைக்க வந்த குடி. அவர் என்ன சொன்னார்? “கூனாக இருந்தாலும், குருடாக இருந்தாலும், நொண்டியாக இருந்தாலும், முடமாக இருந்தாலும் ஆளைப் பார்க்காதீர்கள், மஞ்சள் பெட்டிக்கு போடுங்கள் ஓட்டை” என்றுதானே சொன்னார். காங்கிரஸ்காரர்கள் போடுகிற நோட்டீசில்தான் என்ன படம் போடுகிறார்கள்? ஒரு பக்கம் காந்தி, மற்றோர் பக்கம் ஜவஹர்லால், நடுவிலே அனுமாரைப் போட்டுத்தானே ஓட்டு வாங்கினார்கள். காந்தி யாரு? ஜவஹர்லால் யாரு? அனுமான் யார்? என்று கூட யோசிக்க நேரமில்லாமல் ஓட்டு போட்டோமே, நமக்கு இப்படிப்பட்ட இனியும் எத்தனை தேர்தல் வந்துதான் பிரயோசனமென்ன? எப்படி சமுதாயத்துறையில் சூத்திரராகி சமயத் துறையிலும் நாம் ஏமாந்தோமோ, அது மாதிரியே அரசியல் துறையிலும் ஏமாந்தோம். அவர்கள் 100-க்கு 50 பேர் மந்திரிகள் ஆனார்கள்; ஆனதோடு நம்மை சிறையிலிட்டார்கள். நாமே 100-க்கு 90 பேர் பங்கா இழுக்கிறவர்களாகவும், பியூனாகவும் ஆனோம்.


நாம் எவ்வளவு தேசபக்தி காட்டினாலும், பாடுபட்டாலும் அதன் பலன் பார்ப்பான் தொப்பைக்கே போகிறது. உழைப்பது நாம். பலன் அனுபவிக்கிறதும், சொகுசாக காலம் தள்ளுவதும் பார்ப்பான்.


எந்தப் பார்ப்பானாவது கூலியாகப் போகிறானா?

ஜான்சிபாருக்கு வேலை செய்யக்கூலியாக எந்தப் பார்ப்பானாவது போகிறானா? சிங்கப்பூருக்கோ, மலாக்காவுக்கோ, பினாங்குக்கோ கூலியாகப் போகிறானா? இல்லவே இல்லையே. நமது ஆட்கள் அங்கு எவ்வளவு கஷ்டப்படுகின்றனர். நானும் தோழர் ராமநாதனும் ( சமீபத்தில் கனமாக இருந்தவர்) மலாயாவில் ஒரு தோட்டத்தில் ஒரு கூலிப்பெண் 102 டிகிரி ஜுரத்தோடு வேலை செய்ததை நேரில் பார்த்தோம். “ஏன் இப்படிக் கஷ்டப்பட்டு வேலை செய்கிறாய்? வீட்டில் வைத்தியம் செய்து கொண்டு காய்ச்சல் நின்ற பிறகு வேலை செய்யக்கூடாதா” என்றேன். அதற்கு அம்மாது, “இன்று நான் வேலை செய்யவில்லையானால் இரவு சாப்பாட்டுக்கு என்ன செய்கிறது” என்றாள். “நான் இவ்வளவு கஷ்டப்பட்டும் கொஞ்சம்கூட மீதமில்லையா” என்று கேட்க அதற்கு அவள், “நாங்கள் இங்கு வருவதற்கு முன்னமே நம்ம ஊர் சுப்ரமணியன், பிள்ளையார், கிருஷ்ணன், ராமன், மாரி, காளி, கள்ளுக்கடை எல்லாம் இங்கு வந்து எங்களை அரித்துத் தின்று விடுகின்றனர்” என்றாள்.


ஆனால், இந்தியா பூராவும் பத்திரிகை ஆபிசிலிருப்பது யார்? பார்ப்பனர்; காங்கிரஸ் ஆபீஸ் பூராவும் இருப்பது யார்? பார்ப்பனர், இங்கிருந்து வெளியூருக்குப் போகும் பார்ப்பனர்கள் ‘சர்’ ஆகி வருகிறார்கள். ஏதோ பெரிய மனுஷன் வீட்டுப் பிள்ளைகளிலே தட்டுக்கெட்டு உங்க ரெங்கனாத முதலியார் குமாரர் எம்.ஏ., படித்துவிட்டார். மற்றபடி அனேகமாய் நம்ம பிள்ளைகள் எல்லாம் அப்பா வைத்திருக்கிற சொத்தை ஒழித்து விட்டுத்தானே மறுவேலை பார்க்கிறார்கள். கோர்ட் ஆப் வார்ட்ஸ் (COURT OF WARDS)இல் வைத்தால்தானே தப்பிக்கிறது. கடன் கட்டுவளியாகிறது. இல்லாவிட்டால், 2,3 தலைமுறையில் வெளிநாட்டுக்கு கூலிக்குப் போகவேண்டியவர்களாகி விடுகிறார்கள். கடவுள் பார்ப்பான் தலையில்தானா மூளையை வைத்துவிட்டான்? இந்நாட்டு பழங்குடி மக்கள் தலையில் தானா களிமண்ணை வைத்துவிட்டான். நீங்கள் அதை உண்மை என்று நம்புகிறீர்களா? ஆகவே, இந்துமதம் என்னும் ஆரியர் மதத்தை ஏற்று சமுதாயத்துறையில் நீங்கள் பார்ப்பனர்களுக்குக் கொடுத்த உயர்வு நமது அரசியல், பொருளாதாரம் சகல துறைகளிலும் நம்மை அடிமையாகச் செய்துவிட்டது.


நம்மவர் கஷ்டம் இவர்களுக்குத் தெரியுமா?

நேற்று பட்டுக்கோட்டையில் நான் பேசிக்கொண்டிருந்தபோது ஒரு காங்கிரஸ்காரர் “இலங்கையிலே தமிழர்களை விரட்டுகிறானே அதுபற்றி நீ செய்தது என்ன” என்று கேள்வியை எழுதி தலைவரிடம் கொடுத்திருந்தார். எங்கு நான் பதில் சொல்ல முடியாமல் திண்டாடிப் போய்விடுவேனோ என்று கருதியோ என்னவோ என்னிடம் தலைவர் கொடுக்கவில்லை.ஆனால், நானே அதை வலியவாங்கிப் பார்த்து பதில் சொன்னேன். வெளியே இருந்து இங்கே வந்து கொள்ளை அடிக்கிற அந்நியர்களை வெளியே விரட்டினால் வெளியே இருக்கிற நம்மவர்களையெல்லாம் இங்கே மேளதாளத்தோடு அழைத்து வரலாம் என்பதற்காகத்தான் தமிழ்நாடு தமிழருக்கே என்கிறேன் என்று நம் தேசிய வீரர்களுக்கு சொன்னேன். (கைதட்டல்) வெள்ளைக்காரன் கொடுமை செய்கிறான் அவனைத் துரத்த வேண்டும்” என்று கூக்குரல் போடுவார்களே தவிர, “அந்நிய நாட்டுத்துணியை விரட்டுங்கள்” என்பார்களே தவிர நம்முடைய நெசவாளிகள் தறிக்காரர்களுடைய கஷ்டம் என்னவென்பதாவது இவர்களுக்குத் தெரியவருமா? நம் உள்நாட்டு நெசவுக்காரன் நிலைமையை சுருக்கமாக சொல்வதானால் “6 மாதம் நூலுமயிலும் 6 மாதம் வேலு மயிலுமாக”த்தானிருக்கிறது! அதாவது 6 மாத வேலை 6 மாத பிச்சை எடுப்பது. எங்கோ கிடந்து வருகிற ஜப்பான் துணி நமது தேசிய வீரனுக்கு மண்டையை கிழிக்குதாம். அகமதாப்பாத்துக்காரன் துணி நம்மை கழுத்தறுக்குதே. எங்கோ கிடந்துவந்த வடக்கத்திக்காரன் இங்கே வந்து இந்திரபவன், சந்திரபவன், ஆனந்தபவன், ஆர்யபவன், சூர்யபவன் என்றெல்லாம் வைத்து நம்மை கொள்ளையடிக்கிறானே.


மார்வாடிக்காரன் யோக்யதை தெரியாதா?

மார்வாடிக்காரன் யோக்யதை தெரியாதா உங்களுக்கு? நகை, புடவை, ஜாக்கெட், உள்பாடியுள்பட வாங்கிக் கொண்டு பணம் காசுகொடுக்க ஆரம்பித்துவிட்டானே. பாத்திரங்களை வாங்கிகொண்டு அதுவும் 1 நாளைக்கு 1 ரூபாய்க்கு 1/2 அணா வட்டிக்குக் கொடுத்து 2, 3 மாதத்தில் முதலைவிட இரண்டு மூன்று பங்குகள் அதிகமாக ஆக்கிக்கொள்ளும் அடகுக் கடை, ஜவுளிக்கடை, பாத்திரக்கடை மாதிரி ஆயிவிட்டதே! இந்நாட்டு ஏழை மக்கள் பிழைக்கவேண்டுமானால் நீ அவனையல்லவா முதலில் வெளியே தள்ள வேண்டும். முல்தானி கொள்ளை பெரிய கொள்ளையாய் போய்விட்டதே இவர்களால் நமது வியாபாரிகள் பாப்பராகிறார்கள். நமது நாட்டுச் செல்வம் நமக்கே இருக்க வேண்டும் என்பதும் நமது மொழி, கலை நமக்கே இருக்க வேண்டும் என்பதும் தான் தமிழ்நாடு தமிழருக்கே என்பதாகும்.


‘கிடக்கிறதெல்லாம் கிடக்கிட்டும் கிழவியைத் தூக்கி மணையில் வை’ என்பதுபோல் ஆச்சாரியார் இந்தியை தூக்கி வைத்தாரே. அவர் ஒரு உண்யைான தமிழனாக இருந்தால் அப்படி வைப்பாரா? சத்தியமூர்த்தி ஒரு தமிழனாக இருந்தால் சமஸ்கிருதத்தை கட்டாயமாக்குவேன் என்பாரா? நம்முடைய அரசியல் லட்சியம் எப்படி இருந்தாலும் “தமிழ்நாடு தமிழருக்கே” என்ற உணர்ச்சியை எங்கும் கிளப்ப வேண்டும். அதற்காக குறைந்தது 2 லட்சம் பேராவது ஜெயிலுக்கு போவதற்கும் இன்று முதலே தயாராக இருக்க வேண்டும். அதுதான் நமது அடுத்த போராட்டமாகும்.


மற்றபடி நீங்கள் செய்த அளவற்ற உபசாரத்திற்கு நான் மிகுதியும் நன்றியறிதலுள்ளவனாக இருக்கிறேன்!


(18.2.939இல் திருவாரூரில் பொதுக்கூட்டத்தில் பெரியார் ஈ.வெ.ராமசாமி ஆற்றிய சொற்பொழிவின் பிற்பகுதி)

(குறிப்பு: இவ்வுரையின் முதல் பகுதி பெரியார் களஞ்சியம் குடிஅரசு தொகுதி -27இல் இறுதிக் கட்டுரையாக வெளியிடப்பட்டுள்ளது)

– தோழர் பெரியார், குடிஅரசு – சொற்பொழிவு – 07.01.1940

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *