கலிகால அதிசயம்! ஆண்டவனின் அதியற்புத அலாதி லீலை! பக்தர்களின் மனம் மகிழ மகேசனின் மயக்கவரம்!
ஆம்! முதல்நாள் போட்ட மர்க்குரி மாரனை எரித்த தியாகராஜனுக்கு தாபத்தை உண்டாக்கியதாம். அல்ல, அல்ல கடுங்கோபத்தையே உண்டாக்கியதாம்! முனிகொண்டால் முப்புரம் எரிக்கும் மாயரல்லவா அவர்! ஆலய சிப்பந்தியின் உடம்பை எரித்தார் காயம் படாமல்!
வெளியூர் 27. 10. 1949 ஆம் தேதிய சுதேசமித்திரனில் காணப்படுகிறது மேலே கண்ட செய்தி.
முதல்நாள் போடப்பட்டதாம் மர்க்குரி லைட்; அடுத்த நாள் ஆண்டவனின் சந்நிதானத்திற்கு (!) நெய்த்தீபம் ஏற்றும்போது உணர்ச்சியற்றுபோனாராம். சிப்பந்தி பலவித சிட்சை செய்தபின் கொஞ்சம் வந்ததாம். “பிரக்ஞை உடனே உத்திரவிட்டாராம் என் உடம்புபற்றி எரிகிறது, மர்க்குரியை எடுங்கள் என்று”
ஆஹா! ஆஹா! என்ன அதிசயம் பாருங்கள்! ஆண்டவனுக்கே அடுக்கவில்லை ஆத்மீகத்தை விட்டு ஆபாசமான, மேல்நாட்டு முறைகளை நம்மவர் பின்பற்றுவது என்று, திண்ணை மாநாட்டிலே குப்பண்ண சாஸ்திரியார் கூறுவது நம் காதில் விழுகிறது!
ஆனால், நம் ஆபீஸ் பையன் படுசுட்டியாச்சே, அவன் கூறுவதைப் பாருங்கள், “ஏன் சார் அப்படின்னா இனிமே, திருவண்ணாமலை, தில்லை தீட்சிதாள் கோயில், மதுரை மீனாட்சியம்மன் கோயில், நம்ம ஊர் சிவன் கோயில் இதுகளெல்லே இருக்கிற லைட்டையெல்லாங் கழட்டி தூர எறிந்திடுவாங்களா? “ என்று கேட்கிறான்.
“என்ன திமிருடா உனக்கு, உலகப் பிதாவைக் குற்றம் சொல்லுகிறாயே, மடையா!“ என்றேன்.
”நானா சார் மடையன், அவங் கண்டுபிடிச்ச ரயில்லே ஏறி, ஊரூராப்போயி சாமி கும்பிடறாங்களே அவுங்களை என்ன சொல்லி கூப்பிடறது சார்,” என்கிறான் ஆத்திரத்தோடு.
“சாமிகளுக்கு எப்பவுமே இதுங்கள்ளாம் புடிக்காதுரா! குழவிக் கல்லு அளவுள்ள விக்ரகத்தை பெரிய தேர்லே வைச்சு, ஆயிரக்கணக்கான பேருங்க சேர்ந்து இழுக்கிறபோதே, தெரிஞ்சுக்க வேண்டாமா, சாமிங்கெல்லாம் துவாபரயுதத்தைத்தான் விரும்புது“ என்றுகூறி சமாதானப்படுத்தினேன்.
நீங்கள் என்ன கூறுகிறீர்களோ! மர்க்குரி ஒழிக! எண்ணெய்த் திரி வாழ்க!