பெரியார் எழுத்து, பேச்சுக்களை முழுமையாகத் தொகுத்து – எவரும் இலவசமாகப் பயன்படுத்திக் கொள்ளும் வகையில் – இலகுவாகப் பயன்படும் வடிவில் – யூனிகோட் எழுத்து வடிவில் இணையதளத்தில் பதிவேற்றும் பணியை ஜூலை 1 முதல் தொடங்க உள்ளோம். உலகெங்கிலும் வாழும் பெரியார் தொண்டர்கள், அவர்கள் எந்த அமைப்பில் பணியாற்றினாலும், அந்தந்த அமைப்பின் தலைமையில் அனுமதி பெற்று ஒன்றிணைந்து பணியாற்ற வரவேண்டும் என வேண்டுகோள் விடுக்கிறோம்.

தனிப்பட்ட எந்த ஒரு நபரின் கட்டுப்பாட்டிலோ, எந்த ஒரு அமைப்பின் கட்டுப்பாட்டிலோ இந்தப்பணி நடைபெறாது. பெரியார் திராவிடர் கழகம் வெளியிட்ட குடி அரசு தொகுப்புப்பணியில் முக்கியப் பணியாற்றிய தோழர்கள் சிலர் இணைந்து தான் காட்டாறு வெளிவருகிறது. அந்தத் தோழர்களோடு, தமிழிலிருந்து ஆங்கிலத்தில் மொழிமாற்றம் செய்யத் தெரிந்தவர்கள், இந்தியில் மொழிமாற்றம் செய்யத் தெரிந்தவர்கள், தமிழ், ஆங்கிலம் தட்டச்சு செய்யத் தெரிந்தவர்கள், எழுத்துக்களை மெய்ப்புப் பார்க்கும் அனுபவம் உள்ளவர்கள், இணையதள வடிவமைப்பு செய்யத் தெரிந்தவர்கள், மொபைல் அப்ளிகேசன் வடிவமைப்பளர்கள் ஆகியோர் இணைந்து இப்பணியைத் தொடங்க வேண்டும்.

மேற்கண்ட பணிகளை நமது அடிப்படைக் கடமையாக எண்ணி, பொருளாதார ரீதியாக எதையும் எதிர்பாராமல் உழைப்புக் கொடுக்க விரும்புபவர்களை மட்டும் அழைக்கிறோம். தட்டச்சு செய்வதோ, மொழிமாற்றம் செய்வதோ, பிழைதிருத்துவதோ, கருத்துக்களைச் சரிபார்ப்பதோ, இணையதள வடிவமைப்போ, ஒலிப்புத்தகங்கள் தயாரிப்போ, எந்தப்பணியையும் தங்களது இடத்திலிருந்தே மேற்கொள்ளலாம். திண்டுக்கல்லில் வந்து தங்கி பணியாற்ற விரும்புபவர்களுக்கு எளிமையான உணவும், தங்குமிடமும் மட்டும் ஏற்பாடு செய்யப்படும்.

திராவிடர் இயக்கங்களின் தலைவர்களுக்கு வேண்டுகோள் 

முக்கியமாக கருத்துத் திரிபுவாதம் ஏற்பட்டுவிடாமல் தடுக்கும் தன்மை வாய்ந்த - பெரியார் எழுத்துக்களையும் பெரியாரியலையும் நன்கு அறிந்து ஆய்ந்த அறிஞர்கள், தலைவர்கள், நூலகங்கள், பதிப்பகங்கள் என அனைவரது ஒத்துழைப்போடும், அனைவரது அனுமதியோடும், ஆதரவோடும், உதவியோடும் இந்தப் பணியைத் தொடங்க நினைக்கிறோம். 

திராவிடர் கழகத் தலைவர் தோழர் கி.வீரமணி, திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் தோழர் கொளத்தூர் மணி, தந்தைபெரியார் திராவிடர் கழகத் தலைவர் கு.இராமக்கிருட்டிணன், மார்க்சிய பெரியாரியப் பொதுவுடைமைக் கட்சித் தலைவர் தோழர் வே.ஆனைமுத்து, திராவிட இயக்கத் தமிழர் பேரவைத் தலைவர் தோழர் சுப.வீரபாண்டியன், தலித்முரசு ஆசிரியர் புனிதப்பாண்டியன், எஸ்.வி.இராஜதுரை, அ.மார்க்ஸ், பசு.கவுதமன், செந்தலை கவுதமன் போன்ற பல தலைவர்களையும், அறிஞர்களையும் நேரில் சந்தித்து உதவிகளைக் கேட்க உள்ளோம். 

முதற்கட்டமாக www.periyarwritings.org என்ற பெயரில் ஒரு இணையதளத்தைப் பதிவுசெய்துள்ளோம். இதில் முதலில் பெரியாரின் சிறுநூல்களை உரியவர்களிடம் தேவையான அனுமதிகளைப்பெற்று யூனிகோடாக பதிவேற்றம் செய்வோம். அடுத்து, குடி அரசு, ரிவோல்ட், பகுத்தறிவு, புரட்சி, விடுதலை ஏடுகளில் பெரியார் பேசிய, எழுதியவற்றைத் தொகுத்து யூனிகோட் வடிவிலும், பி.டி.எஃப் வடிவிலும் பதிவேற்றம் செய்ய உள்ளோம். 

அடுத்து, ஒரு 10 தலைப்புகளில் பெரியாரின் பேச்சுக்களைத் தேர்வு செய்து ஆங்கிலம், இந்தியில் மொழிபெயர்த்து பதிவேற்றம் செய்ய உள்ளோம். அனைத்தையும் மொபைல் அப்ளிகேசனாகவும் வெளிடுவோம். தொடர்ச்சியாகப்  பணிகளை மேற்கொள்வோம். வரும் 2015 செப்டம்பர் 17 தோழர் பெரியாரின் பிறந்தநாள் அன்று முதற்கட்டப் பணிளை முடித்து இணையதளத்தைத் தொடங்கிவைக்க உள்ளோம். தமிழில் முழுமையாகவும், ஆங்கிலம், இந்தியில் தேவையான அளவு மொழிமாற்றம் செய்தும் இணையதளத்தொகுப்புப் பணியை முழுமையாக நவம்பர் 26 இல் முடிக்கத் திட்டமிட்டுள்ளோம். 

அனைத்துப் பெரியார் இயக்கங்களின் தோழர்களும், தலைவர்களும் இப்பணிக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென வேண்டுகோள் விடுக்கிறோம். அனைத்து தலித் அமைப்புகள், பொதுவுடைமை அமைப்புகள், முற்போக்கு அமைப்புகளின் தோழர்களும் ஆதரவு அளிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுக்கிறோம்.

Add comment


Security code
Refresh

Share this post

Submit to FacebookSubmit to Google PlusSubmit to TwitterSubmit to LinkedIn

புரட்சி மொழிகள்

"பார்ப்பான், சூத்திரன், பறையன் என்கிற ஜாதி அமைப்பு இருக்கிற வரையில் இந்த நாட்டில் ஒரு இஞ்ச் அளவுகூட முன்னேற்றம் காண முடியாது என்று உறுதியாகக் கூறுவேன்" - பெரியார்

தொடர்புக்கு

Periyar web version
கைப்பேசி: +919787313222
மின்னஞ்சல்:pwversion@gmail.com

To Get Latest Articles

Enter your email address: