Translate

enfrdeitptrues

“விக்ரக ஆராதனை (சிலை வணக்கம்)யைக் கண்டித்துத் தாங்களும் இயக்கத் தோழர்களும், அடிக்கடி பேசியும் எழுதியும் வருகிறீர்கள். திராவிடர் கழகம் ஒரு அரசியல் கட்சி இயக்கம். சுயமரியாதை இயக்கத்தைப் போல் வெறும் சமுதாய சீர்திருத்த இயக்கமல்ல. அரசியல் கட்சியில் பல்வேறு கொள்கைகளையுடையவர்களும் இருப்பார்கள் இருக்கிறார்கள். ஜஸ்டிஸ் கட்சி என்ற பெயரே இப்போது திராவிடர் கழகமாக மாறியிருக்கிறது என்பதை மறந்து விடக்கூடாது. தென் இந்திய நல உரிமைச் சங்கம் என்ற பெயரால் ஒரு 10 - 20 பேர் தனியாகப் பிரிந்து போனாலும், அவர்களைப் பற்றி மக்கள் கடுகளவு கூட அக்கறையெடுத்துக் கொள்வதில்லை. அந்தப் பத்து இருபது பேர்களிலேயே ஒரு சிலர் மெள்ள மெள்ளத் திராவிடர் கழகத்திற்குள் வழுக்கிக் கொண்டிருக்கிறார்கள்.

இந்த மாதிரி நிலைமையில் தாங்கள் சிலை வணக்கத்தைப் பற்றி கண்டிக்காமலிருப்பதே நல்லது என்று யோசனை கூறுகிறேன். நம்முடைய கழகமானது பல விதமான ஆறுகள் வந்து விழப் கூடிய பெருங்கடலாக இருக்க வேண்டுமென்பதே எனது ஆசை. ஆகையால் தயவு செய்து சிலை வணக்கத்தைக் கண்டிப்பதை நிறுத்திவிடக் கோருகிறேன்”

இந்தக் கடிதம் நமது இயக்கத்தைச் சேர்ந்த நண்பர் ஒருவரால் பெரியார் அவர்களுக்கு எழுதப்பட்டதாகும். இதை எழுதியவர் பெரியாரோடு நெருங்கிப் பழகுபவரும் பல ஆண்டுகளாய்த் தோழராய் இருந்து வருபவருமாகும்.

இவரைப் போன்றே இன்னும் பல தோழர்கள் அடிக்கடி கடித மூலமாகவும், நேரிலும் இதே சந்தேகத்தைக் கேட்டு வருகிறார்களாதலால் இக்கடிதக்காரருக்கும் பிறருக்கும் பதில் கூற வேண்டியது நம் கடமையாகிறது.

அதுமட்டுமல்ல, இம்மாதிரியான காரணங்களைக் கூறியே நம் எதிரிகளும் கட்சியை விட்டுச் சிதறிப்போன தோழர்களில் இரண்டொருவரும் தமிழ்மக்களிடையே விஷமப் பிரசாரம் செய்து வருகிறார்கள் என்பதையும் நாம் அறிவோம்.

திராவிடர் கழகம் அரசியல் கட்சிதான். அதுவும் இனிமேல் தென் இந்தியாவில் முதல் தரமான அரசியல் கட்சியாக விளங்கப்போகிற கட்சியுங்கூட பல கொள்கைக்காரர்கள் இக்கட்சியில் கலந்திருக்கிறார்கள். ஆனாலும், இந்துக்கள் அல்லாதவர்கள் என்று கூறப்படும் வேறு மதத்தினரும் வேறு பிரிவினரும் தங்களுக்கென தனித்தனிக் கட்சிகளை வைத்துக்கொண்டிருக்கின்றனர்.

உதாரணமாக, இந்தியக் கிறிஸ்தவர்கள் தனிக்கட்சியாக இருக்கின்றனர். முஸ்லிம்களும் தனிக்கட்சியாக இருக்கின்றனர். ஆங்கிலோ இந்தியர் தனிப்பிரிவாக இருக்கின்றனர். தாழ்த்தப்பட்ட வகுப்பினரில் சிலர் கூடத் தங்களுக்கென ஷெட்யூல் வகுப்பு பெடரேஷன் என ஒரு தனி அமைப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றனர். ஆனாலும் பெரும்பாலான தாழ்த்தப்பட்ட மக்கள் திராவிடர் கழகத்தில் இரண்டறக் கலந்திருக்கின்றனர் என்பதும் பகிரங்க ரகசியம்.

ஆகவே, திராவிடர் கழகத்தின் அடிப்படையான தத்துவங்களில் நம்பிக்கை வைத்து அதன் முக்கியக் குறிக்கோள்களில் கவலையும் வைத்திருக்கும் ஆரியரல்லாத “இந்துக்கள்” என்பவர்களே இக்கழகத்தில் அங்கத்தினராக இருந்து வருகின்றனர் என்பதை மறுக்க முடியாது. ஆனாலும், அநேக முஸ்லிம் தோழர்களும், கிறிஸ்துவ நண்பர்களும் பிறரும் திராவிடர் கழகத்தின் அனுதாபிகளாக இருந்து உதவி செய்து வருகின்றனர் என்பதையும் நன்றியறிதலுடன் ஒப்புக்கொள்ளக் கடமைப்பட்டிருக்கிறோம்.

தென் இந்தியச் சமுதாய அமைப்பில் ஆரியரல்லாத நம் இனத்தவர் இப்போதுள்ள இழிநிலையை அடைந்திருப்பதற்குக் காரணம் இந்து மதம் என்று கூறப்படும் ஆரிய மதமேயாகும் என்பதைச் சரித்திரம் படித்தவர்கள் உணர்வர். இந்து மதத்தில் இருக்கும் ஜாதி வேற்றுமை, சிலை வணக்கம், மூடநம்பி்க்கைகள் முதலியவற்றைக் கண்டு வெறுத்தே பலர் பிற மதங்களைத் தழுவியிருக்கின்றனர். இன்னும் தழுவி வருகின்றனர் என்பதையும் யாராவது மறுக்க முடியுமா? இந்த உண்மையை உணர்ந்திருக்கும் நாம், “இந்து மதத்தை விட்டு விலக வேண்டும். அதாவது நாம் இந்து வல்ல திராவிடர்” என்று முடிவு செய்திருப்பதில் தவறென்ன என்று கேட்கிறோம். இந்துவல்ல என்று கூறுவதற்கே துணிந்திருக்கவேண்டிய திராவிடர், இந்துமதத்திற்கே தனிப்பட்ட உரிமை என்று கூறப்படும், சிலை வணக்கத்தை விட்டொழிப்பதில் தாமதமோ, தயக்கமோ, வெட்கமோ, பயமோ, இருக்குமானால் நம் அடிப்படைக் கொள்கையையே சிலர் சரியாக உணர்ந்து கொள்ளவில்லையென்றுதான் கூறவேண்டும்.

சிலை வணக்கத்தை ஒழிப்பதென்றும், இதர மூட நம்பிக்கைகளைக் கைவிடுவதென்பதும், இந்துக்களல்லாதவர்களின் அதாவது திராவிடர்களின் முக்கியமான குறிக்கோள்களில் ஒன்று. இதனால் “தனிப்பட்ட கடவுள் நம்பிக்கை கூடவா இருக்கக் கூடாது?” என்று சிலர் கேட்கலாம். அதைப் பற்றி நாம் எதையும் வலியுறுத்துவதில்லை. இந்த விஷயம் அவரவர் சொந்த அறிவு? ஆராய்ச்சி, அனுபவம் முதலியவற்றைப் பொறுத்தது. தனிப்பட்டவன் மனதிலுள்ள கடவுள் நம்பிக்கையைப் பற்றியோ நம்பிக்கை இல்லாத உணர்ச்சியைப் பற்றியோ நமக்குக் கவலையில்லை. ஏனெனில் ஒருவருடைய தனிப்பட்ட ஆஸ்திக - நாஸ்திகக் கொள்கையானது பொதுநல விஷயங்களைப் பாதிக்காது. ஏனெனில் பண்டித ஜவகர்லால் நேரு அவர்கள் தனக்குக் கடவுள் நம்பிக்கை இல்லை என்கிறார். அதைப் பற்றி யாரும் லட்சியம் செய்வதில்லை. ஆனால் சிலை வணக்கம் என்பது அப்படியல்ல. திராவிடர் பொருளைச் சுரண்டுவதற்குக் காரணமாயிருந்ததும், இன்று வரையில் அப்படியல்ல. திராவிடர் பொருளைச் சுரண்டுவதற்குக் காரணமாயிருந்ததும், இன்று வரையில் காரணமாய் இருந்துவருவதும் சிலை வணக்கமேயாகும். ஆரிய நச்சு மரத்திற்கு எருப்போட்டு நீர் ஊற்றி வருவது இந்தச் சிலை வணக்கமேயாகும். திராவிட அறிஞர்களில் பலர் இன்று ஒரு சோம்பேறி ஆரியனிடம் தலைவணங்கி, வாய்பொத்தி நின்று “பிரசாதம்” வாங்கும்படியான மானமற்ற அடிமைத்தனமான காட்சியைக் காணும்படியான நிலையில் திராவிட இனத்தைத் தாழ்த்தி வைத்திருப்பதும் இச்சிலை வணக்கமேயாகும். தமிழ் வளர்ச்சி என்னும் பேராலும், திராவிடர் செல்வத்தை நல்ல வழியில் பயன்படுத்தமுடியமால் தேர்த் திருவிழாக்களிலும், கோவில்கட்டுவதிலும், பஜனைக் கூடங்களிலும், கொட்டிப் பாழாக்குவதற்குக் காரணமாயிருப்பதும் இந்தச் சிலை வணக்கமேயாகும்.

சுருக்கமாகக் கூற வேண்டுமானால், சிலை வணக்கமுறையை ஒழித்துவிட்ட அதே நேரத்தில் ஆரிய நச்சு மரத்தின் ஆணிவேர் ஆட ஆரம்பிக்கும். நம் அனுபவத்திலிருந்தும், பல வரலாற்று ஆதாரங்களிலிருந்துமே நாம் இந்த முடிவுக்கு வந்திருக்கிறோம். இந்த நமது முடிவுக்கு ஒரு உரைகல் தருகிறோம். சிலை வணக்கத்தை ஆதரித்துப் பேச்சளவிலும் எழுத்தளவிலும் ஆவேச உணர்ச்சியுடன் பேசியும் எழுதியும் வருகிற ஆரிய இனத்தைச் சேர்ந்த எவராவது கோவில் கட்டுவதற்கும், வாகனம் வாங்குவதற்கும், சிலைகளுக்கு நகைகள் வாங்குவதற்கும், சாப்பாடு படைப்பு முதலியவைகளுக்கும் பணம், நிலம் தந்திருக்கிறதாகக் கேள்விப்படுகிறோமோ என்பதை, நமது நிருபர் ஆற அமர ஆலோசித்துப் பார்க்கட்டும், இந்த விஷயத்தில் நம்மைவிட அவர்கள் புத்திசாலிகள் தான், இதில் வெட்கப்பட்டுப் பலன் என்ன? காரியத்தில் அல்லவா அறிவுடைமையைக் காட்ட வேண்டும்?

இறுதியாக, அரசியல் கட்சியில் சமுதாயச் சீர்திருத்தக் கொள்கையைக் கலக்கலாமா? என்ற சந்தேகத்தைப் பற்றியும் ஒரு வார்த்தை . அரசியல் என்பதே சமுதாயக் கோளாறுகளை ஒழிப்பதற்காக ஏற்பட்டுள்ள ஒரு சாதனம் என்பதுதான் நம் கொள்கை. சமுதாய வேலையைக் கலக்காத ஒரு அரசியல் மனித சமுதாயத்திற்கு எதற்காக வேண்டும்? அரசியலையும் சமுதாயத்துறையையும் பிளந்து கூறுபோட்டு விற்கும் அரசியல் வியாபாரிகள் இந்நாட்டில் பெருகியிருப்பதற்குக் காரணம், ஒரே இனத்தவர், மற்ற இனத்தவரை அழுத்திவைத்து சுரண்டிக் கொண்டு இருப்பதற்காக மறைமுகமாக ஏற்படுத்தி வைத்துக் கொண்டிருக்கும் ஏற்பாடேயாகும். இந்த உண்மை ஆரியர் விஷயத்தில் மட்டுமல்ல ஆங்கிலேயர் விஷயத்திலும் பொருந்தும்.

ஆனால், இச்சந்தர்ப்பத்தில் மற்றொரு முக்கிய விஷயத்தையும் வற்புறுத்திக் கூறிவிட விரும்புகிறோம். இச்சமயம் இது விஷயமாய் நாம் செய்யும் பிரசாரம் சிலைகளை அடியோடு அகற்றுவதோ, அழிப்பதோ அல்லது சிலை வணக்கம் செய்வோரின் மனதைப் புண்படும்படியாக செய்வதோ அல்ல என்றும், கண்டிப்பாக அல்ல என்றும், மற்றபடி மக்களை இதுபற்றிச் சிந்திக்குமாறு செய்வதும், அது பற்றிய செலவை வேறு நல்ல வழிக்குத் திருப்புவதும் நம் வேலை என்பதையும் வலியுறுத்திக்கூற விரும்புகிறோம். இச்சமயத்தில் ஒரு மகிழ்ச்சியான சேதியைத் தெரிவிக்கிறோம். அதாவது இன்றைய மந்திரிகள் கோவில், மடங்களில் மீதியாய் இருக்கும் செல்வத்தைக் கல்விக்குக் செலவு செய்ய சட்டமியற்றப் போகிறார்களாம்.

அவர்கள் இவ்விஷயத்தில், சொல்வதுபோல் நடந்தால், கடவுள் கோபித்துக் கொண்டாலும் மக்களுக்கு நலம் தான். ஆனால் ஆரியர்கள், அவர்களை அப்படிச் செய்ய விடுவார்களா என்றாலும் பார்ப்போம், சொன்னபடி நடப்பார்களா என்று.

குடிஅரசு – தலையங்கம் - 29.06.1946

Add comment


Security code
Refresh

Share this post

Submit to FacebookSubmit to Google PlusSubmit to TwitterSubmit to LinkedIn

புரட்சி மொழிகள்

"பார்ப்பான், சூத்திரன், பறையன் என்கிற ஜாதி அமைப்பு இருக்கிற வரையில் இந்த நாட்டில் ஒரு இஞ்ச் அளவுகூட முன்னேற்றம் காண முடியாது என்று உறுதியாகக் கூறுவேன்" - பெரியார்

தொடர்புக்கு

Periyar web version
கைப்பேசி: +919787313222
மின்னஞ்சல்:pwversion@gmail.com

To Get Latest Articles

Enter your email address: