Translate

enfrdeitptrues

16.01.1946 மாலை 4:00 மணிக்குத் தனிக்காரில் பெரியாரவர்களும் மற்றும் பலரும் சின்னாளப்பட்டி வந்து சேர்ந்தனர். உடனே ஒரு மாபெரும் ஊர்வலம் புறப்பட்டு முக்கிய தெருக்களின் வழியாகச் சென்றது. வழி நெடுக மலர் மாலைகள் அணிவிக்கப்பட்டன. 41/2 மணிக்குக் கூட்டம் ஆரம்பமாகியது. ஒலிபெருக்கி அமைக்கப்பட்டிருந்தது. ஆயிரக்கணக்கான மக்கள் அமைதியுடன் உட்கார்ந்து பெரியாரவர்களின் உணர்ச்சிமிக்க சொற்பொழிவைக்கேட்டுக் கொண்டிருந்தனர். இவ்வுணர்ச்சியைக் கண்ட காங்கிரஸ்காலிகள் தூரத்தில் நின்று கூச்சலிட்டுக் கூட்டத்தைக் கலைக்க முயன்றனர். ஒலிபெருக்கி நன்றாக இருந்ததால் பெரியாரவர்கள் கூச்சலை லட்சியம் செய்யாமல் மிக உணர்ச்சியுடன் பேசிக் கொண்டிருந்தார். பெரியார் விடாமல் பேசுவதையும், மக்கள் கேட்டுக்கொண்டிருப்பதையும் கண்ட காலிகளுக்கு மிகவும் அவமானம் உண்டாகவே எப்படியேனும் காலித்தனம் செய்ய வேண்டுமென்று கருதி கற்களை வீசனர். உடனே பெரியாரவர்கள், சால்வையை எடுத்துகத் தலையில் கட்டிக் கொண்டு “எல்லோரும் தலையில் துண்டைக்கட்டிக்கொள்ளுங்கள் ஒருவரும் கலையவேண்டாம்” என்று கூறி மீண்டும் பேசிக்கொண்டே இருந்தார். இதைக் கண்ட காலிகள் மிகவும் அதிகமாகக் கூச்சலிட்டுக் கற்களை மாரிபோல் வீசினர். உடனே அங்கு வந்திருந்த போலிசார்கள் தடியடிப் பிரயோகம் செய்தனர். உடனே கூட்டம் கலைய ஆரம்பித்தது. அவ்வூரில் போலிஸ் இல்லாததால் வெளியூரிலிருந்து இங்கு ஒன்றும் கலவரம் நடக்காதென்று கருதி இரண்டு போலிஸ்களும், ஒரு சப் இன்ஸ்பெக்டரும் வந்திருந்தனர். கலவரம் அதிகமாகவே சப் இன்ஸ்பெக்டர் பெரியாரிடம் கூட்டத்தைக் கலையுங்கள் என்று சொன்னார். உடனே பெரியார் நீங்கள் “என்னால் சமாளிக்க முடியவில்லை கலைத்து விடுங்கள்” என்று எழுதிக் கொடுங்கள். என்று சொல்லிவிட்டு மீண்டும் பேச ஆரம்பித்தார். பின்பு சப் இன்ஸ்பெக்டர், நாளையோ மறுநாளோ வேண்டுமானால் நான் பாதுகாப்போடு உங்கள் கூட்டத்தை நடத்தித் தருகிறேன் என்று கூறிவிட்டு அவரே ஒலிபெருக்கி முன்னால் நின்று, காலிகள் கலகம் செய்வதாலும், நான் போதிய பந்தோபஸ்துடன் வராததாலும் இக்கூட்டத்தைக் கலைக்கிறேன் என்று கூறினார். பின்பு உள்ளூர்த் தோழர்களும் பெரியாரை வேண்டிக்கொள்ள பெரியார் கூட்டத்தை முடித்தார். இவ்வளவு கலவரம் நடந்தும் பெரியாரவர்கள் 1மணி நேரம் பேசினார். திராவிடர் கழகத்தின் சார்பிலும், முஸ்லிம் லீக்கின் சார்பிலும், சித்தையன்கோட்டை திராவிடர் கழகத்தின் சார்பிலும் வாழ்த்திதழ்களும், மலர் மாலைகளும் அணிவிக்கப்பட்டன. அன்று இரவே பெரியாரவர்கள் திண்டுக்கல் வந்து சென்னை செல்ல புறப்பட்டு ஈரோடு வந்து சேர்ந்தார்.

குடிஅரசு - செய்தி -19.06.1946

நம்மியக்கம் இப்பொழுது எல்லாத் திராவிடத் தோழர்களாலும் பல்துறையிலும் பலப்படுத்தப்பட்டு வருகிறதென்றும், தேசியத் தோழர்கள் “தங்கள் தியாகத்தை”க் காட்ட வேண்டுமானால் மந்திரிகளாக முடியும். ஆனால் திராவிடர் கழகமோ ஒரு காலத்தில் உலகம் முழுவதும் போற்றும் நிலையை அடையும் என்பது உறுதி, இதற்காகக் கருஞ்சட்டைப் படையினர் கட்டுப்பாட்டுடனும் ஒழுங்காகவும் நடந்து கொள்ள வேண்டும் என்று கூறினார். திராவிடத் தோழர்கள் சமுதாயத்தில் தங்களுக்குள்ள இழிநிலையைத் தங்களின் வருங்காலச் சந்ததியார்களுக்கு விட்டு வைக்காது. தங்கள் காலத்திலேயே அதை நீக்க ஆவன செய்ய வேண்டுமென்று கேட்டுக் கொள்வதாயும், அப்படித் தங்கள் இழிவைத் தாங்கள் போக்க வேண்டுமென்று கூறுவது பிற இனத்தவரைத் தூஷிப்பதாகாதென்றும், தமக்கு எவர்மீதும் தனிப்பட்ட கோபம் கிடையாதென்றும், அதேபோல தன்னையும் யாருமே விரோதிப்பதில்லை என்றும், தம் இனத்தவரின் முன்னேற்றமேயொழிய வேறு கிடையாதென்றும் கூறினார். குறிப்பாக வாலிபர்கள் தன்னைப்போல் வாலிப பருவத்தை வீணாக்கிவிட்டால் பின் கஷ்டப்பட்டு வருந்த வேண்டி நேரிடுமென்றும், தன்னையே உதாரணமாகக் கொண்டு தக்கத் தொண்டாற்ற இன்றே கிளம்ப வேண்டுமென்றும் கூறி, தானும் தோழர் ஜின்னா அவர்களும் பல காலம் காங்கிரசிலிருந்து தொண்டாற்றியபின்தான் இந்நிலையை உணர்ந்திருப்பதாகவும், காங்கிரசிலிருந்து வெளிப்பட்ட இன்றைய நிலையில் தான் தோழர் ஜின்னா அவர்கள் காங்கிரசுக்கும் அரசாங்கத்திற்கும் நிபந்தனைகளை அறிவுறுத்தக்கூடிய நிலையிலே உயர்ந்துள்ளார் என்பதையும் உணர்ந்து, இனியும் இளைஞர்கள் மோசம் போகக்கூடாதென்று வற்புறுத்தினார்.

(16.06.1946 அன்று ஈரோட்டில் நடந்த கோவை மாவட்ட திராவிடர் கழக மாநாட்டில் கலந்துகொண்டு பெரியார் ஈ.வெ. ராமசாமி ஆற்றிய உரை)

(குறிப்பு: மேற்கண்ட சொற்பொழிவு முழுவதும் அயற்கூற்றாக அமைந்துள்ளதால் அதன் அசல் தன்மை (Original) மாறக்கூடாது என்பதால் சிதைக்காமல் அப்படியே வெளியிட்டுள்ளோம்!)

குடிஅரசு – சொற்பொழிவு - 29.06.1946

“விக்ரக ஆராதனை (சிலை வணக்கம்)யைக் கண்டித்துத் தாங்களும் இயக்கத் தோழர்களும், அடிக்கடி பேசியும் எழுதியும் வருகிறீர்கள். திராவிடர் கழகம் ஒரு அரசியல் கட்சி இயக்கம். சுயமரியாதை இயக்கத்தைப் போல் வெறும் சமுதாய சீர்திருத்த இயக்கமல்ல. அரசியல் கட்சியில் பல்வேறு கொள்கைகளையுடையவர்களும் இருப்பார்கள் இருக்கிறார்கள். ஜஸ்டிஸ் கட்சி என்ற பெயரே இப்போது திராவிடர் கழகமாக மாறியிருக்கிறது என்பதை மறந்து விடக்கூடாது. தென் இந்திய நல உரிமைச் சங்கம் என்ற பெயரால் ஒரு 10 - 20 பேர் தனியாகப் பிரிந்து போனாலும், அவர்களைப் பற்றி மக்கள் கடுகளவு கூட அக்கறையெடுத்துக் கொள்வதில்லை. அந்தப் பத்து இருபது பேர்களிலேயே ஒரு சிலர் மெள்ள மெள்ளத் திராவிடர் கழகத்திற்குள் வழுக்கிக் கொண்டிருக்கிறார்கள்.

இந்த மாதிரி நிலைமையில் தாங்கள் சிலை வணக்கத்தைப் பற்றி கண்டிக்காமலிருப்பதே நல்லது என்று யோசனை கூறுகிறேன். நம்முடைய கழகமானது பல விதமான ஆறுகள் வந்து விழப் கூடிய பெருங்கடலாக இருக்க வேண்டுமென்பதே எனது ஆசை. ஆகையால் தயவு செய்து சிலை வணக்கத்தைக் கண்டிப்பதை நிறுத்திவிடக் கோருகிறேன்”

இந்தக் கடிதம் நமது இயக்கத்தைச் சேர்ந்த நண்பர் ஒருவரால் பெரியார் அவர்களுக்கு எழுதப்பட்டதாகும். இதை எழுதியவர் பெரியாரோடு நெருங்கிப் பழகுபவரும் பல ஆண்டுகளாய்த் தோழராய் இருந்து வருபவருமாகும்.

இவரைப் போன்றே இன்னும் பல தோழர்கள் அடிக்கடி கடித மூலமாகவும், நேரிலும் இதே சந்தேகத்தைக் கேட்டு வருகிறார்களாதலால் இக்கடிதக்காரருக்கும் பிறருக்கும் பதில் கூற வேண்டியது நம் கடமையாகிறது.

அதுமட்டுமல்ல, இம்மாதிரியான காரணங்களைக் கூறியே நம் எதிரிகளும் கட்சியை விட்டுச் சிதறிப்போன தோழர்களில் இரண்டொருவரும் தமிழ்மக்களிடையே விஷமப் பிரசாரம் செய்து வருகிறார்கள் என்பதையும் நாம் அறிவோம்.

திராவிடர் கழகம் அரசியல் கட்சிதான். அதுவும் இனிமேல் தென் இந்தியாவில் முதல் தரமான அரசியல் கட்சியாக விளங்கப்போகிற கட்சியுங்கூட பல கொள்கைக்காரர்கள் இக்கட்சியில் கலந்திருக்கிறார்கள். ஆனாலும், இந்துக்கள் அல்லாதவர்கள் என்று கூறப்படும் வேறு மதத்தினரும் வேறு பிரிவினரும் தங்களுக்கென தனித்தனிக் கட்சிகளை வைத்துக்கொண்டிருக்கின்றனர்.

உதாரணமாக, இந்தியக் கிறிஸ்தவர்கள் தனிக்கட்சியாக இருக்கின்றனர். முஸ்லிம்களும் தனிக்கட்சியாக இருக்கின்றனர். ஆங்கிலோ இந்தியர் தனிப்பிரிவாக இருக்கின்றனர். தாழ்த்தப்பட்ட வகுப்பினரில் சிலர் கூடத் தங்களுக்கென ஷெட்யூல் வகுப்பு பெடரேஷன் என ஒரு தனி அமைப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றனர். ஆனாலும் பெரும்பாலான தாழ்த்தப்பட்ட மக்கள் திராவிடர் கழகத்தில் இரண்டறக் கலந்திருக்கின்றனர் என்பதும் பகிரங்க ரகசியம்.

ஆகவே, திராவிடர் கழகத்தின் அடிப்படையான தத்துவங்களில் நம்பிக்கை வைத்து அதன் முக்கியக் குறிக்கோள்களில் கவலையும் வைத்திருக்கும் ஆரியரல்லாத “இந்துக்கள்” என்பவர்களே இக்கழகத்தில் அங்கத்தினராக இருந்து வருகின்றனர் என்பதை மறுக்க முடியாது. ஆனாலும், அநேக முஸ்லிம் தோழர்களும், கிறிஸ்துவ நண்பர்களும் பிறரும் திராவிடர் கழகத்தின் அனுதாபிகளாக இருந்து உதவி செய்து வருகின்றனர் என்பதையும் நன்றியறிதலுடன் ஒப்புக்கொள்ளக் கடமைப்பட்டிருக்கிறோம்.

தென் இந்தியச் சமுதாய அமைப்பில் ஆரியரல்லாத நம் இனத்தவர் இப்போதுள்ள இழிநிலையை அடைந்திருப்பதற்குக் காரணம் இந்து மதம் என்று கூறப்படும் ஆரிய மதமேயாகும் என்பதைச் சரித்திரம் படித்தவர்கள் உணர்வர். இந்து மதத்தில் இருக்கும் ஜாதி வேற்றுமை, சிலை வணக்கம், மூடநம்பி்க்கைகள் முதலியவற்றைக் கண்டு வெறுத்தே பலர் பிற மதங்களைத் தழுவியிருக்கின்றனர். இன்னும் தழுவி வருகின்றனர் என்பதையும் யாராவது மறுக்க முடியுமா? இந்த உண்மையை உணர்ந்திருக்கும் நாம், “இந்து மதத்தை விட்டு விலக வேண்டும். அதாவது நாம் இந்து வல்ல திராவிடர்” என்று முடிவு செய்திருப்பதில் தவறென்ன என்று கேட்கிறோம். இந்துவல்ல என்று கூறுவதற்கே துணிந்திருக்கவேண்டிய திராவிடர், இந்துமதத்திற்கே தனிப்பட்ட உரிமை என்று கூறப்படும், சிலை வணக்கத்தை விட்டொழிப்பதில் தாமதமோ, தயக்கமோ, வெட்கமோ, பயமோ, இருக்குமானால் நம் அடிப்படைக் கொள்கையையே சிலர் சரியாக உணர்ந்து கொள்ளவில்லையென்றுதான் கூறவேண்டும்.

சிலை வணக்கத்தை ஒழிப்பதென்றும், இதர மூட நம்பிக்கைகளைக் கைவிடுவதென்பதும், இந்துக்களல்லாதவர்களின் அதாவது திராவிடர்களின் முக்கியமான குறிக்கோள்களில் ஒன்று. இதனால் “தனிப்பட்ட கடவுள் நம்பிக்கை கூடவா இருக்கக் கூடாது?” என்று சிலர் கேட்கலாம். அதைப் பற்றி நாம் எதையும் வலியுறுத்துவதில்லை. இந்த விஷயம் அவரவர் சொந்த அறிவு? ஆராய்ச்சி, அனுபவம் முதலியவற்றைப் பொறுத்தது. தனிப்பட்டவன் மனதிலுள்ள கடவுள் நம்பிக்கையைப் பற்றியோ நம்பிக்கை இல்லாத உணர்ச்சியைப் பற்றியோ நமக்குக் கவலையில்லை. ஏனெனில் ஒருவருடைய தனிப்பட்ட ஆஸ்திக - நாஸ்திகக் கொள்கையானது பொதுநல விஷயங்களைப் பாதிக்காது. ஏனெனில் பண்டித ஜவகர்லால் நேரு அவர்கள் தனக்குக் கடவுள் நம்பிக்கை இல்லை என்கிறார். அதைப் பற்றி யாரும் லட்சியம் செய்வதில்லை. ஆனால் சிலை வணக்கம் என்பது அப்படியல்ல. திராவிடர் பொருளைச் சுரண்டுவதற்குக் காரணமாயிருந்ததும், இன்று வரையில் அப்படியல்ல. திராவிடர் பொருளைச் சுரண்டுவதற்குக் காரணமாயிருந்ததும், இன்று வரையில் காரணமாய் இருந்துவருவதும் சிலை வணக்கமேயாகும். ஆரிய நச்சு மரத்திற்கு எருப்போட்டு நீர் ஊற்றி வருவது இந்தச் சிலை வணக்கமேயாகும். திராவிட அறிஞர்களில் பலர் இன்று ஒரு சோம்பேறி ஆரியனிடம் தலைவணங்கி, வாய்பொத்தி நின்று “பிரசாதம்” வாங்கும்படியான மானமற்ற அடிமைத்தனமான காட்சியைக் காணும்படியான நிலையில் திராவிட இனத்தைத் தாழ்த்தி வைத்திருப்பதும் இச்சிலை வணக்கமேயாகும். தமிழ் வளர்ச்சி என்னும் பேராலும், திராவிடர் செல்வத்தை நல்ல வழியில் பயன்படுத்தமுடியமால் தேர்த் திருவிழாக்களிலும், கோவில்கட்டுவதிலும், பஜனைக் கூடங்களிலும், கொட்டிப் பாழாக்குவதற்குக் காரணமாயிருப்பதும் இந்தச் சிலை வணக்கமேயாகும்.

சுருக்கமாகக் கூற வேண்டுமானால், சிலை வணக்கமுறையை ஒழித்துவிட்ட அதே நேரத்தில் ஆரிய நச்சு மரத்தின் ஆணிவேர் ஆட ஆரம்பிக்கும். நம் அனுபவத்திலிருந்தும், பல வரலாற்று ஆதாரங்களிலிருந்துமே நாம் இந்த முடிவுக்கு வந்திருக்கிறோம். இந்த நமது முடிவுக்கு ஒரு உரைகல் தருகிறோம். சிலை வணக்கத்தை ஆதரித்துப் பேச்சளவிலும் எழுத்தளவிலும் ஆவேச உணர்ச்சியுடன் பேசியும் எழுதியும் வருகிற ஆரிய இனத்தைச் சேர்ந்த எவராவது கோவில் கட்டுவதற்கும், வாகனம் வாங்குவதற்கும், சிலைகளுக்கு நகைகள் வாங்குவதற்கும், சாப்பாடு படைப்பு முதலியவைகளுக்கும் பணம், நிலம் தந்திருக்கிறதாகக் கேள்விப்படுகிறோமோ என்பதை, நமது நிருபர் ஆற அமர ஆலோசித்துப் பார்க்கட்டும், இந்த விஷயத்தில் நம்மைவிட அவர்கள் புத்திசாலிகள் தான், இதில் வெட்கப்பட்டுப் பலன் என்ன? காரியத்தில் அல்லவா அறிவுடைமையைக் காட்ட வேண்டும்?

இறுதியாக, அரசியல் கட்சியில் சமுதாயச் சீர்திருத்தக் கொள்கையைக் கலக்கலாமா? என்ற சந்தேகத்தைப் பற்றியும் ஒரு வார்த்தை . அரசியல் என்பதே சமுதாயக் கோளாறுகளை ஒழிப்பதற்காக ஏற்பட்டுள்ள ஒரு சாதனம் என்பதுதான் நம் கொள்கை. சமுதாய வேலையைக் கலக்காத ஒரு அரசியல் மனித சமுதாயத்திற்கு எதற்காக வேண்டும்? அரசியலையும் சமுதாயத்துறையையும் பிளந்து கூறுபோட்டு விற்கும் அரசியல் வியாபாரிகள் இந்நாட்டில் பெருகியிருப்பதற்குக் காரணம், ஒரே இனத்தவர், மற்ற இனத்தவரை அழுத்திவைத்து சுரண்டிக் கொண்டு இருப்பதற்காக மறைமுகமாக ஏற்படுத்தி வைத்துக் கொண்டிருக்கும் ஏற்பாடேயாகும். இந்த உண்மை ஆரியர் விஷயத்தில் மட்டுமல்ல ஆங்கிலேயர் விஷயத்திலும் பொருந்தும்.

ஆனால், இச்சந்தர்ப்பத்தில் மற்றொரு முக்கிய விஷயத்தையும் வற்புறுத்திக் கூறிவிட விரும்புகிறோம். இச்சமயம் இது விஷயமாய் நாம் செய்யும் பிரசாரம் சிலைகளை அடியோடு அகற்றுவதோ, அழிப்பதோ அல்லது சிலை வணக்கம் செய்வோரின் மனதைப் புண்படும்படியாக செய்வதோ அல்ல என்றும், கண்டிப்பாக அல்ல என்றும், மற்றபடி மக்களை இதுபற்றிச் சிந்திக்குமாறு செய்வதும், அது பற்றிய செலவை வேறு நல்ல வழிக்குத் திருப்புவதும் நம் வேலை என்பதையும் வலியுறுத்திக்கூற விரும்புகிறோம். இச்சமயத்தில் ஒரு மகிழ்ச்சியான சேதியைத் தெரிவிக்கிறோம். அதாவது இன்றைய மந்திரிகள் கோவில், மடங்களில் மீதியாய் இருக்கும் செல்வத்தைக் கல்விக்குக் செலவு செய்ய சட்டமியற்றப் போகிறார்களாம்.

அவர்கள் இவ்விஷயத்தில், சொல்வதுபோல் நடந்தால், கடவுள் கோபித்துக் கொண்டாலும் மக்களுக்கு நலம் தான். ஆனால் ஆரியர்கள், அவர்களை அப்படிச் செய்ய விடுவார்களா என்றாலும் பார்ப்போம், சொன்னபடி நடப்பார்களா என்று.

குடிஅரசு – தலையங்கம் - 29.06.1946

திருமணம் முதலாகிய சமுதாய சடங்குகளுக்குப் பெரியார் ஈ.வெ.ரா. இனி அழைக்குமிடங்களுக்கு எல்லாம் போக வசதி இல்லை என்றும், அப்படி போவதானால் இயக்க வேலைகள் குந்தகப்படுகிறதென்றும், இயக்கத் தோழர்களும் உடல் நலம் முதலியவை கருதி பெரியார் இந்தக் காரியங்களுக்குச் செல்வதை நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று சொல்லுகிறார்கள் என்றும் கருதி இனி அப்படிப்பட்ட காரியங்களுக்கு அழைத்து அசவுகரியப் படுத்தக்கூடாது என்றும், இயக்கத் தோழர்களுக்கு வேண்டுகோள் குடிஅரசின் மூலம் விட்டதோடு, அப்படி கண்டிப்பாக பெரியாரே வரவேண்டுமென்று அவசியமாய்க் கருதுகிறவர்கள் குறைந்தது 50 ரூபாயாவது விடுதலைக்கு நன்கொடை அளித்து அழைக்க வேண்டுமென்றும் வேண்டிக்கொண்டோம்.

அப்படி இருந்தும் அதை சரியாய் கவனிக்காமல் பல தோழர்கள் அழைக்கிறார்கள், ஆதலால் ஒவ்வொருவருக்கும் தனித்தனி எழுதுவதற்கு பதிலாய் அந்த அறிக்கையைத் தயவு செய்து படித்து அதற்கு மதிப்புக்கொடுக்க வேண்டுகிறோம்.

குடிஅரசு – துணைத்தலையங்கம் - 29.06.1946

தோழர்களே! இந்தியாவைவிட்டுப் பிரிட்டிஷ் ஆட்சி அடியோடு விலகப் போகிறதா இல்லையா? அது காந்தி கோஷ்டியார், பிரிட்டிஷ் தூது கோஷ்டியார் பேசிக் கொள்ளும் இரகசியப் பேச்சின் தத்துவத்தைப் பொறுத்தது.

காங்கிரசார் பதவி ஏற்ற இந்த காலத்தில் மக்களுக்காவது ஒரு சமரச முடிவு இல்லையானால் நாடு சீரழியப் போவது நிச்சயம். இதனால் பிரிட்டிஷ்காரருக்கு நஷ்டமில்லை. அவர்கள் ஆதிக்கம் இன்னும் பல நாளைக்கு பலப்படத்தான் இடமாகும். ஆரியர்களுக்கும் கஷ்டமில்லை. ஆரியர் பிரிட்டிஷாருடன் இன்னும் பலமான ஒப்பந்தம் செய்து கொள்ளுவர். காந்தியாருக்கும் குறைவு வராது. அவர் அவதாரக் கடவுள்தன்மை மாறி உண்மைக் கடவுளாகிவிடுவார். தொல்லைப் படப்போவது நாம் தான். முஸ்லிம், திராவிடர், ஷெட்யூல் வகுப்பார் ஆகியவர்களும், இக்கூட்டத்தில் உள்ள ஏழை, எளியவர், தொழிலான கூலியாட்கள் ஆகிய பாட்டாளி மக்களும் தான் - அதோடு மாத்திரமல்ல நம் கடமைகளும் இன்றைய மந்திரி (ஆரிய) அதிகாரத்தை ஒழித்து முன்போலவே (டெலிவரன்ஸ்) விடுதலை நாள் கொண்டாடவேண்டியதே ஆகும். இந்த முயற்சிக்கு முன்போல் நம்மில் 1000, 2000 பேர் செல்வதாலோ, இருவர், மூவர் இறப்பதாலோ ஆகக்கூடிய காரியமாயிராது. ஏராளமான மக்கள் ஈடுபடவேண்டி இருக்கும்.

கண்டிப்பாக இந்து முஸ்லிம் இரத்தம் சிந்துதலும், மேல்ஜாதி, கீழ்ஜாதி இரத்தம் சிந்துதல், சோம்பேறிபாட்டாளி ரத்தம் சிந்துதலும், முதலாளி தொழிலாளி இரத்தம் சிந்துதலும் நடந்துதான் தீரும். இப்போதே எங்கும் தொழிலாளிகள் ஸ்ட்ரைக், ரயில்வே சிப்பந்திகள் தபால் சிப்பந்திகள் ஸ்ட்ரைக், போலிசார் ஸ்ட்ரைக், கணக்குப் பிள்ளை பட்டா மணியக்காரர்கள் ஸ்ட்ரைக் என்பவைகள் உற்சாடனம் பெருகுகின்றன. இனி இராணுவத்தினர் ஸ்ட்ரைக்கும் ஏற்பாடாகக்கூடும். இப்படி ஆகுமா னால் நம் நிலை என்ன ஆகும்? பார்ப்பனர்கள் இவ்வளவுக்கும் இப்போதிருந்தே பந்தோபஸ்தாக இருக்க முயலுகிறார்கள். இரு கட்சியிலும் அதாவது ஸ்ட்ரைக்கிலும், சர்க்காரிலும் சரிபாதியாய் கலந்து அமைந்துவிட்டார்கள். நமக்கு சாந்தியோ, சமாதானமோ இல்லாமல் நாம் ஒருவரை ஒருவர் துன்பப்படுத்திக் கொள்ளப் போகிறவர்களாக ஆவோம்.

உண்மையில் நான் திராவிடத் தோழர்களை அவர்கள் எந்தக் கட்சியில் இருந்தாலும், இந்து - முஸ்லிம் கலவரத்தில் கட்சிப் பிணக்கில் அவர்களுக்கு ஏன் சம்பந்தமிருக்கவேண்டும்? அதுவும் ஆரியனும் முஸ்லிமும் செய்துகொள்ளும் போராட்டத்தில் திராவிடன் ஏன் கலக்கவேண்டும் என்கிறேன்.

இன்றைய அரசியல் போராட்டம் என்பது என்ன? இந்தியன் - வெள்ளையன் போராட்டமா? இல்லையே? காந்தியாரே சொல்லிவிட்டாரே பிரிட்டிஷார் நல்லவர்கள், நல்லெண்ணமுடையவர்கள், அவர்கள் நல்லெண்ண விஷயத்தில் சந்தேகப்படாதீர்கள் என்று அதுவும் பிரார்த்தனையில் சொல்லிவிட்டாரே. இது கடவுள் அனுமதியின் பேரில் சொல்லப்பட்டதாகத்தான் இருக்கமுடியும். ஆகவே, இன்றைய இந்தியப் பிரச்சனை சுயராஜ்யப் பிரச்சனை அல்லவே, சுதந்திரப் பிரச்சனை அல்லவே, ஆங்கிலேய அன்னியன் பிரச்சனை அல்லவே, இந்து, முஸ்லிம் பிரச்சனையாகத்தானே ஆகிவிட்டது. இப்போது இந்துக்களுக்கு முஸ்லிம் அன்னியனாகவும், முஸ்லிமுக்கு இந்து அன்னியனாகவும்தானே காணப்படுகிறான். இந்து, முஸ்லிம் ஆதிக்கத்தில் இருந்து விடுபடுவதும், முஸ்லிம், இந்து ஆதிக்கத்தில் இருந்து விடுபடுவதும், இந்து மதம் காப்பாற்றப்படுவதும், இஸ்லாம் காப்பாற்றப்படுவதுந்தானே இன்று சுதந்திரப் போராக ஆகிவிட்டது.

இந்தப் பிரச்சினையில் தான் பிரிட்டிஷ் தூது கோஷ்டி தோல்வி அடைவதாக இருக்கிறதே அல்லாமல் வெள்ளையன் வெளியேறுவதில், வீட்டைவிட்டுப் போகிற அல்லது எடுத்துக் கொண்ட போகிற சாமான்கள் பற்றிய தகராறு இருந்துவருகிறதா என்று யோசித்துப்பாருங்கள். நேற்றே காங்கிரஸ் பத்திரிகைகள் எழுதிவிட்டன. என்னவென்றால் முஸ்லிம் ஆட்சியைவிட “வேவல் ஆட்சியே மேல்” என்று எழுதிவிட்டன. இந்தக் கருத்தின்மீது தானே ஆரியர்கள் முன் காலத்தில் நல்ல கெட்டியான முஸ்லிம் ஆட்சி இருக்கும்போது வேவல் (ஆங்கில) ஆட்சியை இங்கே அழைத்து வந்து தங்களுக்கு ஏற்றபடியான மனு ஆட்சியாக அமைத்துக் கொண்டார்கள் (என்று சரித்திரம் கூறுகிறது). இந்த நிலையில் இன்று இந்திய சுயராஜ்யப் பிரச்சனை மாநாடு முறிவது என்பது முஸ்லிம் ஆதிக்கம் இல்லாமல் இருக்கவும், வேவல் (ஆங்கில) ஆட்சியை நிலைநிறுத்தவும் அல்லாமல் வேறு என்ன காரியத்திற்கு?

காங்கிரஸ் கொள்கையோடு அது உண்மையாக இருந்தாலும் பித்தலாட்டமாக இருந்தாலும் எங்களுக்கு இன்று சண்டை இல்லை. அவைகளை வேண்டுமானலும் நாம் ஒப்புக் கொள்ளுவோம். உண்மை சொல்லுகிறேன். ஆனால் நாம் காங்கிரஸ் கொள்கைக்கு மேற்கொண்டும் இரண்டொரு திட்டம் வைத்து இருக்கிறோம். அதற்கு என்ன செய்வது? அதைக் காங்கிரஸ் திராவிடர்களாவது ஒப்புக்கொண்டால் போதுமே. அதற்கு ஒத்துழைக்கக் காங்கிரஸ் திராவிடர்கள் தலையாட்டினாலும் போதுமே, திராவிடர் கழகத்தை கலைத்துவிட்டு காங்கிரசையே பலப்படுத்தத் தயங்கமாட்டோம்.

காங்கிரசுக்கும் நமக்கும் என்ன பேதம்?

  • 1. ஆரியன், திராவிடரை அடக்கி அனுப்பி வைப்பதை, மனு ஆட்சி புரிவதைச் சுயராஜ்யம், தர்மராஜ்யம், ராமராஜ்யம் என்கின்றான்.

திராவிடன் ஆரிய ஆதிக்கத்தில் இருந்து மீண்டு தனித்தன்மை பெறுவதை சுயராஜ்யம் என்கிறான்.

  • 2. காங்கிரஸ் அன்னியன் ஆதிக்கத்தில் இருந்து விலக வேண்டும் என்கின்றது.

நாமும், ஆம் அது சரி, அதுதான் முதல்வேலை என்கிறோம். ஆனால், அன்னியர் என்கின்ற பட்டியலில் திராவிடனல்லாதான் எவனும் அன்னியன் என்று விளக்கம் எழுதிக்கொள் என்கிறோம்.

  • 3. காங்கிரஸ், அன்னியன் சுரண்டுதல்கூடாது என்கிறது.

நாம், ஆம் கூடாது என்கிறோம். ஆனால், அன்னியன் என்கிறபடியால் அயல் மாகாணத்தவனும் அன்னியன் என்று எழுதிக்கொள் என்கிறோம்.

  • 4. நம் நாடு பாரத நாடு என்கிறது காங்கிரஸ்

 நாம், நம் நாடு திராவிட நாடு என்கிறோம்.

  • 5. ஆங்கிலேயன் தவிர மற்றபடி இந்தியன் என்ற பெயரால் எவன் பிழைத்தாலும் எவன் திராவிட நாட்டைக் கொள்ளைகொண்டாலும் சரி என்கிறது காங்கிரஸ்.

நாம், திராவிட நாட்டைத் திராவிடத்தில் நிரந்தரமாய் வாழும் திராவிட நாட்டுக் குடிகள் தவிர, பிர்லா, பஜாஜ், காந்தி, நேரு, பட்டேல், பட்டாணி, குஜராத்தி, மார்வாடி, பனியா, சிந்தி, காஷ்மீரி, பட்டான், மேமன், எல்லைப்புறக்காரன் எவரும் சுரண்டக்கூடாது என்கிறோம்.

  • 6. இந்தியாவில் திராவிடம் உள்ளடங்கியது என்கிறது காங்கிரஸ்.

இந்தியா வேறு, திராவிட நாடு வேறு என்று பிரிக்கப்பட வேண்டியது திராவிடத்தை என்கிறோம்.

  • 7. இந்தியன் மட்ட ஜாதியல்ல, வெள்ளையன் உயர்ந்த ஜாதி அல்ல. இருவருக்கும் சமஉரிமை வேண்டும் என்கிறது காங்கிரஸ்.

ஆம். இருவருக்கு மாத்திரமல்ல, மூவருக்கும் அதாவது திராவிடன், ஆரியன், வெள்ளையன் ஆகிய மூவருக்கும் சமஉரிமை வேண்டும். திராவிடன் சூத்திரனல்லன், பறையன் அல்லன், தீண்டப்படாதவன் அல்லன். ஆரியன் பிராமணன் அல்லன். மேல்ஜாதி அல்லன், பூதேவன் அல்லன், சமஉரிமையில், சம விகிதாச்சாரத்தில் சமபோகபோக்கியத்தில் சமஉழைப்பில் இருக்கவேண்டிய மக்கள் என்கிறது திராவிடர் கழகம்.

8.இந்தியா முழுமைக்கும் ஒரு சுயராஜ்யம் போதும் என்கிறது காங்கிரஸ்.

பிரிக்கப்பட்ட ஒவ்வொரு நாட்டுக்கும் தனித்தனி சுயராஜ்யம் வேண்டும். மற்றதைப் பற்றி யோசிக்காவிட்டாலும் திராவிட (சென்னை) மாகாணத்தைப் பொறுத்தவரைத் தனி சுயராஜ்யம் ஏற்படுத்த வேண்டும் என்கிறது திராவிடர் கழகம்.

இவைகளைத்தானே முக்கியமாக எடுத்துச்சொல்லிப் பரிகாரம் செய்யும்படி கோருகிறது இவைகளைப் கேட்பது எப்படிக் காங்கிரஸ் தேசபக்தர்களுக்கு தேசத் துரோகமாகும்? இவைகள் கேட்கப்படுவதால் எப்படிக் கிடைக்கப்போகும் சுயராஜ்யம் தடைபட்டுப்போகும் என்று கேட்கிறேன்.

நாங்கள் கேட்பவைகளுக்கு, சொல்லுபவைகளுக்கு ஆதாரம், அவசியம் பிரத்யட்ச அனுபவம், பொருத்தம் இல்லை என்று எந்தக் காங்கிரஸ் பக்தராவது சொல்லட்டுமே. ஜின்னா பிரிவினை கேட்டால் அவர் தேசத்துரோகி, முட்டுக் கட்டைவாதி, அம்பேத்கர் மனிதத்தன்மை, சமஉரிமை கேட்டால் அவர் தேசத்துரோகி, முட்டுக்கட்டைவாதி, கம்யூனிஸ்டுகள் பொருளாதார சமஉரிமை கேட்டால் அவர்கள் ஒழிக்கப்படவேண்டிய இழிமக்கள். திராவிடர்கள் பாதுகாப்பு சமுதாய உரிமை கேட்டால் அவர்கள் தேசத்துரோகிகள், முட்டுக்கட்டைவாதிகள் என்று அழைக்கப்படுவதும், கலகம், குழப்பம் கல்வீச்சு, சாணி உருண்டை வீச்சு, மிருகக் கூப்பாடு, காலித்தனம் ஆகியவைகளும்தானா பரிகாரம் என்று கேட்கிறேன். தோழர்களே! கலகத்தில், காலித்தனத்தில் ஆரியன் எவனாவது சிக்கிக்கொள்கிறானா? திராவிடன் கையில் சாணி உருண்டையையும் கல்லையும் கொடுத்து திராவிடன் மீதே எறியச் சொல்லிவிட்டு மறைவில் இருந்து வேடிக்கைப் பார்க்கிறானே. இதுவா விடுதலை முயற்சி? எனவே எங்களிடம் காங்கிரஸ் திராவிடர்கள் சந்தேகம் கொள்ளவேண்டிய தில்லை. எங்கள் முயற்சி வெற்றிபெற்றால் காங்கிரஸ் திராவிடர்களுக்கும் பங்குண்டு. அம்பேத்கர் முயற்சி வெற்றிபெற்றால் காங்கிரஸ் திராவிடருக்கும் பங்குண்டு. காங்கிரஸ் முயற்சி வெற்றிபெற்றால் எங்களுக்கு என்ன உண்டு? சூத்திரப்பட்டம் போகுமா? பஞ்சமப்பட்டம் போகுமா? மனுசாஸ்திரம் ஒழியுமா? சமுதாயத்திலாவது சமயத்திலாவது சர்வத்திலும் தீண்டாமை அண்டாமை, நுழையாமை, படியாமை, பதவிகிட்டாமை ஆகியவை ஒழிந்து யாவரும் சம தொண்டாற்றும் தன்மை ஏற்படுமா? சொல்லுங்கள் நாளையே சேருகிறோம். இத்தனை நாள் சேராததற்கு வருத்தத்தைத் தெரிவிக்கிறோம்.

காங்கிரஸ் திராவிடத் தோழர்களே! இளைஞர்களே! ஏமார்ந்து போகாதீர்கள்! ஆரியருக்கு கால்பிடித்து வாலிபத்தை வீணாகக் கழிக்காதீர்கள். நாங்கள் ஏமாந்து உஷார் ஆனவர்கள். நானும் காங்கிரஸ்கொடி தூக்கித் திரிந்தவன்தான். கதர் கட்டினவன் மாத்திரமல்ல, ராட்டினம் சுமந்து நூற்று , நெய்து ஊரெல்லாம் தலையில் சுமந்து விற்றவன். ஜின்னா சாயபு யார்? காங்கிரஸ் வாலண்டியர், கொடி தூக்கி “ஜே” போட்டவர். மகமது அலி, சவுகத் அலி கொடி தூக்கி “ஜே” போட்டவர்கள். டாக்டர் நாயர், தியாகராயர் காங்கிரஸ் தலைவர், காரியதரிசி, பொக்கிஷதாரர்களாக இருந்தவர்கள். எனவே, எங்கள் அனுபவம் உங்களுக்குப் போதாதா? நீங்கள் அனுபவம் பெற எங்களைப்போல ஆகுங்காலத்தில் உங்களால் தனியே நிற்க முடியாது. மற்றவர்கள்போல் அஞ்ஞாதவாசம் செய்யவேண்டியவர்களாகி விடுவீர்கள்: நல்ல திராவிடராகப் பிறந்து ஏன் விபீஷணர்களாக ஆகிறீர்கள்? பதவிக்கு, பட்டத்துக்கு, பணத்துக்கு இருப்பவர்கள் அங்கு இருக்கட்டும். விட்டுவிடுங்கள். அவர்களைப்போல் அப்படி ஒரு கூட்டம் உலகம் தோன்றிய நாள்தொட்டு திராவிடரிலும் இருந்துதான் வந்திருக்கிறார்கள். ஆனால் அந்தக் கூட்டத்தில் தியாக வீரர்களான திராவிட மணிகளே நீங்கள் சேரவேண்டாம் வீணுக்குழைக்காதீர்கள். மாற்றானுக்கு மண்டி இடாதீர்கள் என்றுதான் விண்ணப்பித்துக் கொள்ளுகிறேன். சிந்தியுங்கள்! சிந்தியுங்கள்!! மான லட்சியம் வைத்து சிந்தியுங்கள்!!!

(12.06.1946, 13.06.1946 ஆகிய நாட்களில் பள்ளிக் கொண்டை மற்றும் வேலூர் பொதுக்கூட்டங்களில் பெரியார் ஈ.வெ.ரா. ஆற்றிய சொற்பொழிவு)

குடிஅரசு - சொற்பொழிவு - 22.06.1946

புரட்சி மொழிகள்

"பார்ப்பான், சூத்திரன், பறையன் என்கிற ஜாதி அமைப்பு இருக்கிற வரையில் இந்த நாட்டில் ஒரு இஞ்ச் அளவுகூட முன்னேற்றம் காண முடியாது என்று உறுதியாகக் கூறுவேன்" - பெரியார்

தொடர்புக்கு

Periyar web version
கைப்பேசி: +919787313222
மின்னஞ்சல்:pwversion@gmail.com

To Get Latest Articles

Enter your email address: