Translate

enfrdeitptrues

“பிறப்பொக்கும் எல்லா வுயிர்க்கும்”  என்ற பழந்தமிழ் கொள்கையை நிலைநாட்டத் தமிழ் நாட்டில் ஆரம்பிக்கப்படும் கிளர்ச்சியில் தமிழ் மக்கள் அதிகமாகப் பங்கு கொள்ள வேண்டுமென்று திருச்சி சோமரசம்பேட்டையில் 15.12.1940ஆம் தேதி தோழர் சி.என். அண்ணாதுரை எம்.ஏ.,  அவர்கள் தலைமையில் நடைபெற்ற திருச்சி ஜில்லா 12வது ஜஸ்டிஸ் மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது.

இவ்வுணர்ச்சி திருச்சி ஜில்லா மக்களிடையே மட்டும் இருப்பதாக யாரும் கருதுவதற்கில்லை. கடந்த 10 நாட்களாக பெரியார் அவர்கள் இந்நாட்டில் அதாவது தமிழ்நாட்டில் செய்துவரும் சுற்றுப் பயணத்தில் போகும் ஊர்களில்  தங்கள் உணர்ச்சியை காட்டுவதில் ஒரு ஜில்லாவை மற்றொன்று போட்டியிட்டுக்கொண்டு வருகிறதென்பதை ஆங்காங்கு மக்கள் காட்டிவந்த ஆர்வங்களிலிருந்தும் உற்சாகத்திலிருந்தும் தெரிந்து கொள்ளலாம்.

மேற்படி மாநாடு குறுகிய காலத்தில் கூட்டப்பட்டிருந்தும் அதிக விளம்பரமில்லாதிருந்தும் சுமார் 6000 மக்கள் விஜயம் செய்திருந்ததே மக்களிடை எவ்வளவு உணர்ச்சி கொழுந்து விட்டெரிகிறது என்பதைக் காட்ட போதிய சான்றாகும்.

பிறப்பொக்கும் எல்லாவுயிர்க்கும் என்ற பழந்தமிழ்க் கொள்கையை நிலை நாட்ட ஆரம்பிக்கப்படும் கிளர்ச்சியெனக் குறிப்பிட்டிருப்பதிலிருந்து மேற்படி பழந்தமிழ்க் கொள்கை நிலை குலைந்திருக்கிறது என்பது சொல்லாமல் சொல்லி விளக்கப்பட்டிருக்கிறது. நிலை குலைந்திருப்பதற்குக் காரணம் என்ன என்பதை மேற்படி  மாநாட்டில்  நீதிக்கட்சிக் கொடியை -தராசு கொடியை  பறக்கவிட்ட  காஞ்சிபுரம் தோழர் டி. ஆதி லட்சுமி  அம்மாள் அவர்கள், “தமிழ் சமுதாயம் தாராளமனதினால் தரித்திரராகி, பக்தி பரவசத்தினால் சித்தம் சோர்ந்து குருட்டுக் கொள்கையினால் நிலை குலைந்து இருக்கிறோம்” என்று கூறியிருப்பதையாவது தமிழர்கள் -திராவிடர்கள் கருத்தில் கொள்வார்களேயானால், யார் செய்த தவறால் நாம் இந்நிலைக்கு ஆளானோம்  என்பதை உணர்வர் என்பதில் சந்தேகமில்லை. நகரத்திலுள்ள மாந்தர் மட்டும் உணர்தல் போதாது. ஏன்? நம் நாடு கிராமங்கள்  நிறைந்த நாடு. ஆதலாலே மேற்படி மாநாட்டு வரவேற்புக் கழகத் தலைவர் தோழர் சி. சுந்தரநாடார் அவர்கள்  கூறுவது போல, நமது இயக்கத்தை கிராமங்கள் தோறும் நிலைக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்பதே நமது பேரவா, ஏதாவது ஒரு நாள் கிராமங்களுக்குச் சென்று பேசிவிட்டு வந்து விடுவதினாலே தங்கள் பொறுப்பு நீக்கி விட்டதெனக் கருதாமல் தோழர் நாடார் அவர்கள் கூறுவது போல் ஒவ்வொரு கிராமத்திலும் இரண்டு பத்திரிகையாவது போவதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும். கிராமங்களில் வருடத்திற்கு 12 ரூபாய் வசூல் செய்து விடுதலை தினசரியானது நாடோறும் கிராமத்திற்கு தபால் மூலம் அனுப்ப ஏற்பாடு செய்ய வேண்டும். இதற்கு தோழர் சுந்தர நாடார் போன்ற வாலிபர்கள் முன்வந்தால் இது மிக எளிதான காரியமாய் விடும் என்பதில் நமக்கு எள்ளளவும் சந்தேகமில்லை.

இதனை நாம் என்று செய்கிறோமோ அன்று தான்,

“பாகிஸ்தான் திட்டத்தையும் திராவிட நாட்டுப் பிரிவினைத் திட்டத்தையும் ஆதரிப்பவர்கள் இந்நாட்டு ஆதிநாள் ஆட்சிக் கர்த்தர்களும் உரிமைக்காரர்களுமாவர் என்பதைத் தெளிவுபட ஒவ்வொருவரும் அறிந்து கொள்ள வேண்டும். இவர்கள் தான் இந்நாட்டு ஆதிக்குடிகள் என்பதை மறக்கக் கூடாது”

என, மேற்படி மாநாட்டிற்குத் தலைமை வகித்த இளங்காளை தோழர் அண்ணாதுரை அவர்கள் கூறியிருப்பது  விழலுக்கிறைத்த நீர்போலாகாமல் நெல்லுக்கிறைத்த நீர்போலாகும்.

தலைவரவர்கள் தமது சொற்பொழிவில்,

“நீதிக்கட்சி சர்க்காருக்கு தனது மனப்பூர்வமான ஆதரவைத் தந்து வந்திருக்கிறது. இருந்தும் சர்க்காரோ மற்றவர்களைவிட காங்கிரசின் பங்கே காதல் காட்டி வருகிறது. காங்கிரசிற்கே அதிக மதிப்புத் தருவதுபோல் நடந்து கொள்ளுகிறது” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

சர்க்காரின் இப்போக்கைக் குறித்து இச்சபல புத்தியைக் குறித்த அதிசயப்படக் கூடிய காரியம் ஒன்றுமில்லையென்றே கருதுகிறோம்.

காதல் கொள்வதிலே பல வகைகளுண்டு. அவைகளில் எவ்வாறு மடியிலிருப்பதை பறிக்கும் வரை காட்டப்படும் காதலும் ஒரு வகையைச் சேர்ந்ததோ அதுபோலவே, காங்கிரஸ் பால் சர்க்கார் காட்டிவரும் காதலும் அவ்வகையைச் சேர்ந்ததென்றே சொல்லலாம். இதைக் கண்டு யாரும் கவலை கொள்ளார். எவ்வளவுக்கெவ்வளவு சர்க்காரார் காங்கிரஸிடம் காதல் காட்டி வருகிறார்களோ அவ்வளவுக்கவ்வளவு சர்க்காரிடத்தில் ஏனைய அரசியல் கட்சிகள் கொண்டுள்ள நம்பிக்கை குறையும் என்பதோடு அக்கட்சிகளின் கொள்கைகளும் லட்சியங்களும் உறுதிப்படும் என்பதிலும் சந்தேகமில்லை.

ஆனால், சர்க்கார் இதற்கு சிறிதும் இடம் கொடார் என்ற நம்பிக்கை நமக்கு பலமாக உண்டு. தங்கள் காலத்திலே, திராவிடர்களும், முஸ்லிம்களும் தங்கள் தங்கள் கலை, மொழி நாகரீகத்தைக் காக்கப் பிரிந்து கொண்டார்கள். தங்கள் தங்கள் பூர்விக பெருமையை பழைய கொள்கையை நிலைக்கச் செய்துவிட்டார்கள். அதற்கு தாங்கள் பெரிதும் பொறுப்பாளியாயிருந்தோம் என்பதை எதிர்கால உலகம் கண்டு மகிழும் பேற்றை பெற வேண்டுமென்ற ஆசை பிரிட்டிஷாருக்கு இருக்காது என்று யாரும் கூறத் துணிய மாட்டார்கள் என்பதை நாம் அறிவோம். 40 கோடி மக்கள் கேட்கும் சுதந்திரத்தை தருவதுதான் தங்களது நோக்கம் எனக் கூறுபவர் 5, 6 கோடி திராவிடர்களும் 8, 9 கோடி முஸ்லிம்களும் கோரும் சுதந்திரத்தை - சுயமரியாதையை காக்ககோரும் உரிமையை வழங்க ஒரு நாளும் பின்வாங்கார். செய்ய வேண்டுவதெல்லாம் தலைவர் பிரசங்கத்தில் கூறியிருப்பதுபோல,

“நமது மாபெருந்தலைவர் பெரியார் அவர்களின் தலைமையில், சமுதாய உயர்வு தாழ்வு அனாச்சாரம் கட்டுதிட்டங்களை உடைத்தெறியத் தன் மதிப்புத் தனித் திராவிட உதிர வீரமா  இளைஞர் பெரும் படை கடல் போல் திரண்டு விடுதலை பரணி பாடி வெஞ்சமர் கொடுத்து நீதிக்கு நீதி கண்டு நீதிக் கட்சிக்கொடி உலக நீதிக்கொடி மக்கள் இழந்த பிறப்புரிமைகளை தேடித் தந்து அணிவிக்கும்  நாட்டு நலக்கொடி என்று நல்லோரும் நாட்டோரும் உலகோரும் அறிய வெற்றி முரசு கொட்ட வேண்டும்” என்பதேயாகும். இன்றேல், பிறப்பொக்கும் எல்லாவுயிர்க்கும் என்ற பழந் தமிழ்க் கொள்கை எட்டலங்காரமாக இருக்க முடியுமேயொழிய தமிழர்களின் வாழ்வின் அணியாக அலங்காரமாக இருக்க முடியாது என்பதனை மனதில் கொண்டு தமிழர்கள் ஒன்றுபட்டு பணியாற்ற முன்வருவார்களாக.

குடிஅரசு - துணைத் தலையங்கம் - 22.12.1940

Add comment


Security code
Refresh

Share this post

Submit to FacebookSubmit to Google PlusSubmit to TwitterSubmit to LinkedIn

புரட்சி மொழிகள்

"பார்ப்பான், சூத்திரன், பறையன் என்கிற ஜாதி அமைப்பு இருக்கிற வரையில் இந்த நாட்டில் ஒரு இஞ்ச் அளவுகூட முன்னேற்றம் காண முடியாது என்று உறுதியாகக் கூறுவேன்" - பெரியார்

தொடர்புக்கு

Periyar web version
கைப்பேசி: +919787313222
மின்னஞ்சல்:pwversion@gmail.com

To Get Latest Articles

Enter your email address: