Translate

enfrdeitptrues

இந்நாட்டிலேனும் அல்லது வேறு எந்நாட்டிலேனும் நடைபெற்று வரும் நிகழ்ச்சிகளைப்பற்றி குறிப்பிடுகையிலும் அல்லது நடந்த நிகழ்ச்சிகளைப்பற்றிக் குறித்து எழுதுகையிலும் ஆரிய வர்க்கத்தினர் தங்கள் ஆதிக்கம் நிலைக்க எந்தெந்த வகைகளில் எவை எவைகளைச் செய்ய வேண்டுமோ அவைகளைச் செய்து வருகிறார்கள்; செய்தும் வந்திருக்கிறார்கள். மறந்தும் அதைச் செய்யத் தவறியதில்லை. இதை ஏன் இங்கு எடுத்துக் காட்டுகிறோம் என்றால், சென்ற 12ஆம் தேதி லண்டனில் நடந்த விருந்தொன்றில் இந்தியா மந்திரி கர்னல் அமெரி அவர்கள் பேசுகையில், “ஆரியர்களும் இந்தியாவில் தங்கள் மதத்தையும், மொழியையும் பரவச் செய்தார்கள்” எனக் குறிப்பிட்டிருப்பதை  அதே பேச்சை வெளியிட்ட 14ஆம் தேதிய “சுதேசமித்திரன்” பத்திரிகை “ஆரியர்கள்தான் இந்தியாவில் பெரும்பாகத்திற்கு மத தத்துவங்களையும், பாஷையையும் ஏற்படுத்திக் கொடுத்தார்கள்” எனத் திருத்தி தங்கள் குலாச்சாரத்திற்குச் சிறிதும் வழுவாது தனது கடமையை ஆற்றியிருக்கிறது என்பதை எண்ணிப் பார்த்தாவது, ஆரியர்களால் எழுதப்பட்டு வரும்  தமிழ்த்தாள்களிலே அதிலும் இந்த இருபதாவது நூற்றாண்டிலே இவ்வாறு தங்கள் ஆதிக்கத்தை நிலைக்கச் செய்ய இவ்வாறு எழுதப்படுமேயானால், அந்நாளிலே அதுவும் அவர்கள் மொழிகளிலே எழுதப்பட்ட நூல்களிலே தங்களைக் குறித்து எவ்வளவு  உயர்வாகவும், மற்றவர்களைக் குறித்து எவ்வளவு இழிவாகவும், எழுதியிருக்கமாட்டார்கள் என்பது விளங்கட்டும்; மனதில் படட்டும் என்பதற்கேயாகும்.

இந்தச் சாதாரண விஷயத்தை இவ்வளவு புரட்டாகத் திருத்திக் கூறும் வர்க்கத்தார், பண்டைய நாட்களில் நடைபெற்ற நிகழ்ச்சிகளைக் குறித்தும் ஒருவருக்கொருவர் பேசியதாக ஆதாரங்கள் எடுத்துக் காட்டுகையிலும் பழைய நூல்களைப் புதுப்பிக்கையிலும் எவ்வளவு புரட்டுகள் செய்திருக்கமாட்டார்கள். அவைகளை இன்னும் நம்மவர்கள் நம்பலாமா என்பதையும் ஆத்திரங் கொள்ளாமல் எண்ணிப்பார்க்கக் கோருகிறோம்.

“சுதேசமித்திரன்” திருத்திக் கூறியிருப்பதுபோல் கர்னல் அமெரி கூறியிருப்பாரேயானால்  நாம் அதைக் குறித்து ஒன்றும் ஆச்சரியப்படப் போவதில்லை.

“விட்டகுறை தொட்டகுறை” என்றே சமாதானமடைந்திருப்போம். கர்னல் அமெரி ஆரியர்களும் இந்தியாவில் தங்கள் மதத்தையும், மொழியையும் பரவச் செய்தார்கள் எனக் குறிப்பிட்டிருக்கிறார் என்றாலும், கர்னல் அமெரி உட்படப் பெரும்பாலும் எல்லா வெள்ளையர்களுக்கும், ஆரியர்கள்தான்  இந்தியாவில் நாகரிகம் வாய்ந்த மக்கள், கற்ற மக்கள் எனக் கருதிவருகிறார்கள் என்பதை யாவரும் ஒப்புக்கொண்டே தீர வேண்டும். அதன் காரணம், இனம் இனத்தையே தேடும் என்பதற்கிணங்க, மொழியாராய்ச்சியாளர் மொழிகளின் பிறப்பைக் குறித்து, வகுத்து எழுதுகையில் ஆங்கிலமும், சமஸ்கிருதமும் ஒரு மதத்தைச் சேர்ந்ததென்றும், திராவிட மொழிகளும் மற்றும் சில மொழிகளும் வேறு மதத்தைச் சேர்ந்தவை. அதாவது வேறு பிரிவைச் சேர்ந்தவை என்று எழுதியிருக்கிறார்கள். எனவே, தங்கள் மொழியின் வர்க்கத்தைச் சேர்ந்த மொழியைத்தான் அவர்கள் சுலபமாக அந்நாட்களில் கற்றிருப்பார்கள். அம்மொழி (வடமொழி) நூல்களில் ஆடுமாடுகளை ஓட்டிக்கொண்டு வந்து குடியேறிய வர்க்கத்தார் பன்னெடு நாட்களாகப் பாராண்ட மக்களை இழிவுபடுத்தி எழுதியிருந்ததைத்தான் அறிந்திருக்கக் கூடும். நாம் இவ்வாறு கூறுவது எவ்வளவு தூரம் உண்மையென்பது மாக்ஸ்முல்லர் கிரெளண்டு ஒர்க் முதலிய பழைய வெள்ளையர்கள் எழுதிய பழைய சரித்திர புத்தகங்களைப் புரட்டிப் பார்ப்பவர்களுக்கு நன்கு விளங்கும்.

அந்நாட்டிலுள்ள வெள்ளை ஆரியர்கள், இந்நாட்டிலுள்ள பார்ப்பன ஆரியர்களுக்கு ஆதரவு காட்டுவதினாலோ, சலுகை காட்டுவதினாலோ, நமக்குச் சிறிதும் கவலையில்லை. ஏன்? ஆரிய ஆதிக்கம் எத்தகைய உருவத்தில் நம் மீது ஆதிக்கம் செலுத்துவதாயிருந்தாலும் அதை எதிர்த்துக் கடைசிச் சொட்டு இரத்தம் இருக்கும்வரை போராடுவதென உறுதி கொண்டிருப்பதினாலே அதைக் குறித்து நமக்குக் கவலையில்லையெனக் கூறுகிறோம்.

கர்னல் அமெரி, பேசியிருப்பதிலிருந்து ஒன்றுமட்டும் நன்கு புலனாகும். அதாவது ஆரியர்கள் இந்நாட்டில் தங்கள் மதத்தையும், மொழியையும் பரப்பினார்கள் என்பதிலிருந்து ஆரியர்கள் இந்நாட்டிற்குப் புறம்பேயிருந்து குடியேறியவர்கள் என்பதை அவர் ஒப்புக் கொண்டுவிட்டார்  என்பதோடு, ஆரியர்கள் இந்நாட்டிற்கு வருவதற்கு முன்னமே இந்நாட்டிலிருந்த மக்கள் தனிமொழி, தனிக் கலையையும், தனிப் பழக்கவழக்கங்களையும் கொண்டு விளங்கியிருக் கிறார்கள் என்பதை அவர்கள் ஒப்புக்கொண்டு விட்டார் என்பதும் நன்கு விளங்கும்.

எனவேதான், குடியேறிய ஒரு வர்க்கத்தார் இந்நாட்டுப் பழங்குடி மக்களாகிய திராவிடர்கள் மீது ஆதிக்கம் செலுத்தலாகாது திராவிடர்கள் நாடு திராவிடர்களுக்கே உரியது. அதில் மாற்றானுக்கு இடமில்லை. அவர்கள்  கலை நாகரிகங்கள் காக்கப்பட வேண்டும்; அவர்களே தங்கள் ஆட்சியை வகுத்துக்கொள்ள வேண்டும் எனக்  கோருகின்றனர். கர்னல் அமெரியின் வாதப்படி திராவிடர்கள் கோருவது ஒரு நாளும் தவறு என்று கூறமுடியாது என்பதையும் அறிந்துகொள்ளலாம். கடைசியாக ஆரிய வர்க்கத்தின் சூழ்ச்சிகள், சாணக்கிய தந்திரங்கள் இனித் திராவிடர்களிடை செல்லா என்பதை அவர்கள் உணர வேண்டும் என நாம் எச்சரிப்பதோடு நம்மவர்களும் இதுவரை காட்டிவந்த தாராள சிந்தையையும், குருட்டு நம்பிக்கையையும் சிறிது நாளைக்காவது மறந்திருக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொள்ளுகிறோம்.

குடிஅரசு - (அண்ணா அவர்கள் எழுதிய) தலையங்கம் - 22.12.1940

Add comment


Security code
Refresh

Share this post

Submit to FacebookSubmit to Google PlusSubmit to TwitterSubmit to LinkedIn

புரட்சி மொழிகள்

"பார்ப்பான், சூத்திரன், பறையன் என்கிற ஜாதி அமைப்பு இருக்கிற வரையில் இந்த நாட்டில் ஒரு இஞ்ச் அளவுகூட முன்னேற்றம் காண முடியாது என்று உறுதியாகக் கூறுவேன்" - பெரியார்

தொடர்புக்கு

Periyar web version
கைப்பேசி: +919787313222
மின்னஞ்சல்:pwversion@gmail.com

To Get Latest Articles

Enter your email address: