Translate

enfrdeitptrues

சென்னையில் 08.12.1940 ஆம் தேதி மைலாப்பூர் மணி அய்யர் ஹாலில் நடந்த தமிழ்நாடு ஆரியர் மாநாட்டில் தலைமை வகித்த திவான்பகதூர் வி. பாஷ்யம் அய்யங்கார் அவர்கள் அம்மாநாட்டின் கருத்தை நன்றாய் விளக்கியிருக்கிறார். தோழர் பாஷ்யம் அய்யங்கார் சென்னைக் காங்கிரஸ் ஆதிதிராவிட சங்கத்திற்குப் பிரமுகராய் இருந்து சீர்திருத்த உபன்யாசங்கள் பல புரிந்தவர். அப்படிப்பட்ட சீர்திருத்தவாதியாகிய அய்யங்கார் பேசி இருப்பதையே பார்ப்போம்.

“இந்துக்களுடைய மதமானது ஆரிய மதம் என்பதுதான். ஆனால் இப்போது அந்த ஆரிய மதம் இந்து மதம் என்று சொல்லப்படுகிறது. அது தவறாகும். இந்துக்கள் என்றும் இந்து மதம் என்றும் சொல்லப்படுகிற வார்த்தைகள் அந்நியர்களால் (முஸ்லிம்களால்) கொடுக்கப்பட்ட பெயர்களாகும்.

மற்றும் ஆரிய மதம் (இந்து) அல்லாத மற்ற மதக்காரர்களிடத்தில் பொறுமை காட்டினதும்  கண்டவர்களையெல்லாம் ஒரு காலத்தில் ஆரிய (இந்து) மதத்தில் சேர்த்துக் கொண்டது ஆரிய மதத்தின் பலவீனமேயாகும்.” என்று பேசி இருக்கிறார்.

இந்தக் கருத்தானது ஒரு சீர்திருத்தக்கார பார்ப்பனர் (ஆரியர்)  இடமிருந்து வெளியிடப்பட்டதாகும் என்றால் ஒரு வருணாசிரம  பார்ப்பனர்  (ஆரியர்) வாயிலிருந்து இந்து மதத்தைப் பற்றிய பேச்சு வந்திருந்தால் அது இன்னமும் எவ்வளவு வேகமான பேச்சாக இருந்திருக்கும்?

தவிர இந்து(ஆரிய) மதத்திற்கு ஆதாரம் வேதம்தான் என்றும் பேசி இருக்கிறார்கள். ஆகவே இந்து மதம் என்பது ஆரிய மதம் தான் என்பது பற்றி இனி எந்த தமிழனுக்கும், திராவிடனுக்கும் சந்தேகமிருக்க இடமிருக்காதென்றே கருதுகிறோம்.

ஆரிய மதம், ஆரியக் கடவுள்கள், அவைகளைப் பற்றிய ஆதாரங்கள், கதைகள், ஆரியப் பக்தர்கள் பாடிய பிரார்த்தனைப் பாட்டுகள், உற்சவங்கள், பண்டிகைகள் ஆகியவைகள் திராவிடர்களுக்கு சம்மந்தப்பட்டதல்ல என்பதாகச் சுமார் 20 வருட காலமாகப் பெரியார் ஈ.வெ.ரா. அவர்களும் அதற்கு முன்பு இருந்தே பல உண்மைத் தமிழர்களும் ஆராய்ச்சியாளரும் சொல்லியும் எழுதியும் வருவதைப் பற்றி இதுவரை யார் எப்படி நினைத்துக் கொண்டு எவ்வளவு அலட்சியமாயிருந்து வந்தாலும் இனியாவது தமிழர்களுக்கு புத்தி வந்து சமய சம்பந்தமாக தங்கள் சுயமரியாதையை காப்பாற்றிக் கொள்வார்கள் என்றே நினைக்கிறோம்.

மற்றும் திவான்பகதூர் அய்யங்கார் அவர்கள் பேசியிருப்பதில் ஒரு முக்கிய விஷயமென்னவென்றால் “ஆரியரல்லாத மற்ற மதக்காரர்கள் இடத்தில் பொறுமை நாட்டினதும் கண்டவர்களையெல்லாம் ஆரிய மதத்தில் சேர்த்துக்கொண்டதும் ஆரிய மதத்தின் பலவீனமேயாகும்” என்று சொல்லியிருப்பதேயாகும். இதிலிருந்து இனி ஆரியரல்லாதார்களிடம் பொறுமை காட்டக் கூடாது என்றும் வேதத்தை ஒப்புக் கொள்ளாதவர்களையெல்லாம் இந்து (ஆரிய) மதத்தில் இருந்து விரட்டி அடிக்க வேண்டும் என்பதும் நன்றாய் விளங்குகிறது.

உண்மை இந்து மதத்தின் யோக்கியதை, இப்படி இருக்க தோழர் டாக்டர் வரதராஜலு நாயுடு அவர்கள் போதிக்கும் இந்து மதமும் இந்து மகாசபையும் இந்தியாவில் உள்ள எல்லா மக்களையும் உள் அடக்கியதென்பதும் திராவிடர்களும் ஆரிய மதத்தில் சேர்ந்தவர்கள்தான் என்பதும் எல்லாம் கலந்து விட்டது என்பதும் சரியான பேச்சாகுமா என்று கேட்பதோடு இனி ஆரியர்கள் மற்றவர்களிடம் காட்டப்போகும் பொறுமை அற்ற தன்மைக்கும் ஆரியரல்லாத வர்கள் தயாராய் இருக்க வேண்டும் என்பதும் வெளியாகின்றது.

இனி அந்த ஆரிய மாநாட்டில் நடந்த தீர்மானங்களைப்பற்றி சற்று ஆலோசிப்போம்.

வேதம் எல்லா மக்களுக்கும் சம்பந்தப்பட்டதென்றும் சமஸ்கிருதம் வேத பாஷை ஆனதால் சமஸ்கிருதமும் எல்லா மக்களுடைய பொதுபாஷை ஆகுமென்றும், இதற்கு விரோதமாக பிரசாரம் செய்யப்படும் சங்கங்களையும் ஸ்தாபனங்களையும் கண்டிக்க வேண்டுமென்றும், நாட்டுப் பிரிவினைப் பிரச்சினையையும் கண்டிக்க வேண்டுமென்றும் தமிழ்நாட்டில் ஆரியம் பரவத்தக்க வேலை, பத்திரிகை, பிரசாரம் ஆகியவை நடக்க வேண்டுமென்றும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டிருக்கின்றன.

எனவே இனியாவது தமிழர்கள் பார்ப்பனர் மதம் என்ன? தமிழர் மதம் என்ன? அவர்கள் கருத்து என்ன?  தமிழர் கருத்து என்ன? என்பனவாதிகளை உணர்வார்கள் என்றே கருதுகிறோம்.

உண்மையில் வேதம் என்பது பார்ப்பனர்கள் அல்லாமல் மற்றவர்கள் பார்க்கவோ படிக்கவோ உச்சரிக்கவோ கூடாதது என்றும் யாராவது அப்படிச் செய்தால் அவர்கள் கண், நாக்கு, உயிர் ஆகியவைகள் ஒழிக்கப்பட வேண்டியனவாகும் என்றும் அதுசம்பந்தமான சாஸ்திரம் ஸ்மிருதி முதலியவைகளில் இருப்பதை இன்று யாரும் மறுக்க முடியாது.

இப்படி இருக்கும்போது ஒரு தமிழன் தன்னை ஒரு இந்து என்று சொல்லிக் கொள்வானானால் அவன் தனது தாய் தந்தை முதலிய பெற்றோர்களை மாற்றிக் கொள்ள சம்மதிக்கிறவனாவான் என்று விளங்குகின்றதா இல்லையா என்று கேட்கிறோம்.

இந்தக் காரணங்களாலேயே திராவிடர்கள் தங்களை இந்துக்கள் என்று அழைத்துக் கொள்ளக் கூடாது என்று திராவிடர் (S.I.L.F) மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. இது எவ்வளவு சரியான காரியம் என்பதை இப்போதாவது அதிருப்திபட்டவர்கள் உணர்வார்கள் என்று கருதுகிறோம்.

அது மாத்திரமல்லாமல் ஆரியர் சமய சமுதாய அரசியல் பிடிப்பிலிருந்தும் ஆதிக்கத்திலிருந்தும் விடுவித்துக் கொள்ள திராவிட நாட்டு பிரிவினை எவ்வளவு அவசியமும் அவசரமுமான காரியமென்றும் அதுவும்கூட திராவிடரின் (S.I.L.F) மாநாட்டில் நிறைவேற்றப்பட்டிருப்பது எவ்வளவு நல்ல காரியம் என்பதும் யாருக்கும் விளங்காமல் போகாது.

ஆகவே, ஆரியர் - திராவிடர் போராட்டம் துவக்கப்பட்டு விட்டது என்பது திராவிட மக்கள் வெற்றி பெறவோ அல்லது அப்போராட்டத்தில் மடியவோ தயாராயிருக்க வேண்டிய காலத்திலும் நெருக்கடியிலும் நாம் இருக்கிறோம் என்பது ஒவ்வொரு தமிழரும் ஞாபகத்தில் வைத்துக்கொள்ள வேண்டியதாகும்.

(விடுதலை)

குடிஅரசு - கட்டுரை - 15.12.1940

Add comment


Security code
Refresh

Share this post

Submit to FacebookSubmit to Google PlusSubmit to TwitterSubmit to LinkedIn

புரட்சி மொழிகள்

"பார்ப்பான், சூத்திரன், பறையன் என்கிற ஜாதி அமைப்பு இருக்கிற வரையில் இந்த நாட்டில் ஒரு இஞ்ச் அளவுகூட முன்னேற்றம் காண முடியாது என்று உறுதியாகக் கூறுவேன்" - பெரியார்

தொடர்புக்கு

Periyar web version
கைப்பேசி: +919787313222
மின்னஞ்சல்:pwversion@gmail.com

To Get Latest Articles

Enter your email address: