Translate

enfrdeitptrues

பாவலர் பாலசுந்தரம்

(கட்டபொம்மு மெட்டு)

போர்க்கொடி ஈ.வெ.ரா கைதனிலே - இன்று

பொன்னிறக் கொடியாய்த் தோணுதய்யா                         (போ)

ஆரியத்தை வீழ்த்த ஆரூரிலே - அன்று

ஆர்வமுள்ளோர் கூடி தந்த கொடி                               (போ)

செந்தூள்  பறந்திடும் போரினிலே - நாட்டுச்

சொந்தப் புதல்வரே சேருமய்யா                                 (போ)               

மானமுடன் வாழ்ந்தால் வாழ்வோமய்யா - இன்றி

மாள்வதென்றால் போரில் மாள்வோமய்யா                      (போ)

கஞ்சிக்கு வற்றி மடிவதிலும் - போரில்

நெஞ்சைக் காட்டி மாள்தல் மேல்தானய்யா                      (போ)

சாதியிழிவு சமுதாயத்தும் - அது

தட்டுக்கெட்டோடி மறையுமய்யா                               (போ)

சூத்திரப்பட்டமும் போகுமய்யா - போரால்

சொந்தச் சுதந்தரம் சேருமய்யா                                 (போ)

சாதிக் கொருநீதி யென்று சொல்லும் - அந்தச்

சண்டாள ஆரியம் ஓடுமய்யா                                         (போ)

இப்போரில் தப்பிடும் புல்லுருவி - களை

எப்போதும் நம்முடன் சேரோமய்யா                             (போ)

சத்தப்புதல்வரைக் கண்டெடுக்க - இப்போ

இத்தரைப் போரொன்று மூளுதய்யா                             (போ)

ஈ.வெ.ராமன் போரால் இந்நாட்டிலே - வெற்றி

ஏந்திக்கொடியுடன் வாழ்வோமய்யா                             (போ)

நம் படைத்தலைவன் பன்னீர் செல்வன் - இன்று

நற்போர்த் தலைவனாயில்லையய்யா                            (போ)

ஆவன  செய்தொன்று சேர்வீரய்யா - போரில்

பாவலனும் பங்கு கொள்வானய்யா                              (போ)

 

ஏன் இந்த ஆத்திரம்?

பாகிஸ்தான் பேச்சு கிளம்பிய நாள்தொட்டு, திராவிட நாட்டுப் பிரச்சினை தோன்றிய நாள்தொட்டு, இந்தியா ஒரே நாடு என்று சொல்லிக்கொண்டு ஏகபோக மிராசு செலுத்திவந்த வர்க்கத்தார்கள் எல்லாம் ஆத்திரமடைந்து சீறிவிழுகிறார்கள். இவர்கள் ஆத்திரமடைந்து அப்பிரச்சினையை எதிர்த்து வருவதின் காரணம் தாங்கள் (ஆரியர்கள்) மதத்தின் பேராலும், கடவுளின் பேராலும், அரசியலின் பேராலும், சமுகத்தின் பேராலும் மற்றவர்களை அடக்கி ஒடுக்கிவந்த வாழ்வுக்குச் சாவுமணி அடித்துவிடும் என்பதைத் தவிர, வேறு இல்லையென்பது விளங்கும்.

ஜனாப் ஜின்னாவையும், பெரியார் ஈ.வெ.ராமசாமி அவர்களையும், ஆரிய வர்கக்கத்தைச் சேர்ந்த  ஆரியத் தாள்களும், ஆரியத்தை ஆதரிக்கும் அரசியல் தலைவர்களும், கட்சிகளும், ஆரியர்களும் கண்டித்து எழுதியும் சொல்லியும் வருவதிலிருந்து அவர்கள் ஆத்திரம் எவ்வளவு தூரம் உச்ச நிலையை அடைந்திருக்கிறது என்பதைத் தெரிந்துகொள்ளலாம்.

இந்தியா ஒரே நாடு என்றும், இயற்கையமைப்பின்படி அது ஒரே நாடாக இருக்கிறதாகவும், எனவே அதைப்பிரிப்பது என்பது ஆகாது என்றும் சொல்லப்படுவது அர்த்தமற்ற கூற்று என்பதை நாம் பலமுறை எடுத்து விளக்கியிருக்கிறோம். இன்றும் கூறுகிறோம். இந்தியா இயற்கையமைப்பின்படி ஒரே நாடு என்று சொல்லப்படுமேயானால், அய்ரோப்பாக் கண்டத்தை ஏன் ஒரே நாடென்று சொல்லப்படாதென்று அய்ரோப்பாக் கண்டத்தை ஆசியாக் கண்டத்திலிருந்து யூரல்மலை பிரிப்பதுபோல், இந்தியாவை ஆசியாக் கண்டத்திலிருந்து இமயமலை பிரிக்கிறது. நிலப்பரப்பில், இந்தியாவைவிட அய்ரோப்பா சுமார் இரண்டு பங்குக்கு சற்று அதிகமாயிருக்கலாம். ஆனால், ஜனத் தொகையில் அவ்வளவு அதிக பிரமாத வித்தியாசமிருக்காதென்றே சொல்லிவிடலாம். அய்ரோப்பாவைப், பல நாடுகள் பல வர்க்கங்கள் கொண்ட ஒரு கண்டம் என்பதை ஒப்புக்கொள்ளும் வர்க்கங்கள், இந்தியாவை மட்டும் அவ்வாறு தனித்தனி வர்க்கங்கள், நாடுகள் கொண்ட கண்டம் என்று சொல்லுவதை ஏன் ஒப்புக்கொள்ள மறுக்கிறது என்று கேட்கிறோம்.

எனவே, இயற்கையமைப்பின்படி இந்தியா ஒரே நாடு என்று சொல்லப்படுவது பகுத்தறிவுலகம் ஒப்புக்கொள்ளக்கூடியதல்லவென்பது விளங்கும்.

இந்தியாவில் என்றாவது சமாதானமும் ஒழுங்கும் நிலவவேண்டுதற்கு இன்றைய அய்ரோப்பிய நிலையைச் சற்று ஆராய்ந்து பார்ப்பார்களேயானால். என்ன செய்ய வேண்டுமென்பது விளங்கும், பல நூற்றாண்டுகளாக சுதந்திரத்துடனும் யதேச்சையாகவும் வாழ்ந்துவந்த மக்கள், ஹிட்லரின் புதிய உலகமைப்பின்படி ஒன்று, ஒரு நாட்டு மக்கள் எனக் கருதப்படும்படி செய்துவிட்டார் என வாதத்திற்காக வைத்துக்கொள்வோம். அதன்படி வாழ அந்நாடுகளிலுள்ள மக்கள் ஒருப்படுவார்களா? ஒன்றுபட வேண்டுமென எவரேனும் விரும்புவார்களா? என்று கேட்கிறோம்.

அதை மறுக்கும்போது, இந்தியாவை மட்டும் ஒரு நாடென்றும், ஒருகுல மக்கள் என்றும், ஏய்க்கப் பார்ப்பதும் முதலைக்கண்ணீர் வடிப்பதும் எதற்கு என்று விளங்கவில்லை. வெள்ளையர் இந்தியாவில் அரசு செலுத்த ஆரம்பித்த பிறகே அதுவும் கடந்த 75,80 வருடங்களாக அவர்கள் தம் ஆளுகையின் சவுகரியத்தை உத்தேசித்து இந்தியாவை ஒரு நாடு என்று சொல்லி வருகின்றனரேயல்லாது இந்தியா ஒரு நாடு என்பதற்கு வேறு என்ன ஆதாரம் எடுத்துக் காட்டமுடியும் என்பதை எண்ணிப் பார்க்கக் கோருகிறோம்.

இந்தியாவின் பழைய சரித்திரத்தைப் பார்ப்பவர்களுக்கும், வழக்கத்திலிருந்து வரும் சொற்களைப் பார்ப்பவர்களுக்கும், இந்நாட்டை பரத கண்டம் என்றும், 56 நாடுகளைக் கொண்ட தேசம் (கண்டம்) என்றும், சொல்லப்படுவதிலிருந்தும் அறிந்துகொள்ளலாம். மேலும், உலகில் வேறு பாகங்களில் ஒரு நாடு மற்ற நாடுகளின் மீது பாய்ந்து சண்டையிட்டு ஒன்றையொன்று  தனதாதிக்கத்திற்குட்படுத்தி வந்தது போலவே, இந்தியாவிலும் ஒரு நாடு மற்றொன்றுமீது பாய்ந்து தனதாதிக்கத்திற்குட்படுத்தி வந்திருப்பதையும் தோல்வியுற்ற நாடுகள் பின்னால் விழிப்படைந்து தன்னை ஜெயித்த நாட்டின் ஆதிக்கத்தை உடைத்தெறிந்ததையும் காணலாம்.

ஏதோ, இந்தியாவில் கடந்த சில வருஷங்களாக பிரிட்டிஷ் ஆட்சியின் அரசியல் தந்திரத்தால் உள்ள பல்வேறு நாடுகள் வர்க்கங்கள் சுதந்திரமிழந்து, சுயமரியாதையிழந்து ஆரிய வர்க்கத்தாருக்கு அடிமையானதோடு ஆரிய ஆதிக்கத்திற்கு இடங்கொடுத்து வருவதோடு பிரிட்டிஷாருக்கும் அடிமையாயிருந்து வருகிறது என்பதினால், என்றென்றும் இந்த நிலை நிலைத்திருக்க வேண்டும் என விரும்புவதை எவரேனும் ஒப்புக்கொள்வார்களா? என்று கேட்கிறோம்.

எனவேதான், இந்தியாவுக்குச் சுதந்திரம் வந்தாலும் சரி, வராவிட்டாலும் சரி, அந்தந்த வர்க்கங்கள்  தனித்தனியாகப் பிரிந்து தங்கள் தங்கள் நலனுக்கான காரியங்களை வகுத்துக்கொள்ள வேண்டும் என முடிவுசெய்து கொண்டுவிட்டனர். இதைக்கண்டு ஆத்திரங்கொள்வதில் பலன் ஏதேனும் ஏற்படுமா? என்பது நமக்கு விளங்கவில்லை.

தோழர் எஸ். சத்தியமூர்த்தியார் 13ஆம் தேதி சிறைக்குப் போகுமுன் வெளியிட்ட அறிக்கையொன்றில், “இந்தியா என்றால் முழு இந்தியா என்பது பொருள். இயற்கைச் சரித்திரம் இவற்றால் ஆக்கப்பட்ட இந்தியாவை நான் குறிப்பிடுகிறேன். இந்தியாவில் எண்ணிலாத வேற்றுமைகளிருந்தபோதிலும் அடிப்படையான ஒற்றுமை இருந்துவருகிறது. தற்கால இந்தியாவையும் எதிர்காலத்தில் அது எப்படியிருக்க வேண்டுமென்று  நாம் விரும்புகிறோமோ அதையும் நான் குறிப்பிடுகிறேன்” என கர்னல் அமெரி கூறுவது பாகிஸ்தான் வேண்டுமென்று செய்யப்படும் கிளர்ச்சிக்கு இது ‘நிராகரிப்பாகும்’ எனக் குறிப்பிட்டு ஆனந்தத் தாண்டவமாடுகிறார்.

கர்னல் அமெரி, இந்தியாவை “முழு இந்தியா” எனக் குறிப்பிடுவதைக் கண்டுதான் தோழர் மூர்த்தியார் ஆனந்தக் கூத்தாடுகிறார் என்பதில் நமக்குச் சந்தேகமில்லை.

கர்னல் அமெரி, இந்தியாவை “முழு இந்தியா” எனக் கூறுவதைக்கண்டு எவரும் ஆச்சரியப்படுவதற்கில்லை. ஏனெனில், இந்தியாவை, “முழு இந்தியா” என்று சொல்லிக்கொண்டு வந்தால்தான் இந்தியாவுக்கு சுதந்திரமளிப்பதற்குத் தடையாகயிருப்பது “உங்களிடையே ஒற்றுமைக் குறைவு” என்று சொல்லிக் காலங் கடத்தி வரலாம் என்பதேயாகும். அய்ரோப்பாவிலே பிரஞ்சு மக்களையும் நாஜியர்களையுமோ அல்லது போலிஷ் மக்களையும், நாஜியர்களையுமோ ஒற்றுமையாயிருங்கள் அப்பொழுது உங்களுக்குச் சுதந்திரம் தருகிறேன் என ஹிட்லர் கூறுவாரேயானால் அது சாத்தியமாகக்கூடிய காரியமா அல்லது ஹிட்லருக்குச் சுதந்திரமளிக்க உள்ளபடியே மனமிருக்கிறதா என்று ஒருவர் சந்தேகங்கொள்வது எப்படித் தவறாகாதோ அதுபோலவே இந்தியாவிலுள்ள பல்வேறு வர்க்கங்களுக்கிடையே ஒற்றுமை ஏற்பட வேண்டுமென்று சொல்வதைக் குறித்து அதன்பிறகு சுதந்திரமளிப்பதைக் குறித்தும் சந்தேகங்கொள்வது தவறாகாது என்றே கருதுகின்றோம்.

உண்மையிலே இந்நாட்டில் ஒற்றுமை ஏற்பட வேண்டுமானால், அந்தந்த வர்க்கத்தாருக்கு தங்கள் தங்கள் நலன்களைச் சீர்படுத்திக்கொள்ள,  வகுத்துக்கொள்ள உரிமைகளிருக்க வேண்டும். அத்தகைய உரிமை அவரவர்கள் தங்கள் தங்கள் ஆட்சிமுறையை வகுக்கத் தொடங்கினால்தான் பெறமுடியும். அவரவர்கள் தங்கள் சுதந்திரத்தைப் பெற வேண்டும் என விரும்புவதைக் கண்டு வீண் பீதியும் ஆத்திரமும் கொள்ள வேண்டாமென்று  கேட்டுக்கொள்கிறோம்.

கடைசியாக 2ஆம் தேதி லண்டனில் நடந்த விருந்தொன்றில் கர்னல் அமெரி, அவர்கள் பேசுகையில், “ஆரியர்கள்தான் இந்தியாவில் பெரும் பாகத்திற்கு மத தத்துவங்களையும், பாஷையையும் ஏற்படுத்திக் கொடுத்தார்கள்” எனக் குறிப்பிட்டிருப்பது எவ்வளவு பேதமை என்பதை அடுத்த இதழில் விளக்குவோம்.

குடிஅரசு - (அண்ணா அவர்கள் எழுதிய) தலையங்கம் - 15.12.1940

Add comment


Security code
Refresh

Share this post

Submit to FacebookSubmit to Google PlusSubmit to TwitterSubmit to LinkedIn

புரட்சி மொழிகள்

"பார்ப்பான், சூத்திரன், பறையன் என்கிற ஜாதி அமைப்பு இருக்கிற வரையில் இந்த நாட்டில் ஒரு இஞ்ச் அளவுகூட முன்னேற்றம் காண முடியாது என்று உறுதியாகக் கூறுவேன்" - பெரியார்

தொடர்புக்கு

Periyar web version
கைப்பேசி: +919787313222
மின்னஞ்சல்:pwversion@gmail.com

To Get Latest Articles

Enter your email address: