சேலம் தகராறு மறுக்கமுடியாத ருஜúக்கள்

பொம்மைப் பிரதிநிதிகள் மெளனம்!

சேலம் தண்ணீர்த் திட்டத் தகராறு விஷயமாக சுகாதார மந்திரி கனம் டாக்டர் ராஜன் சார்பில் பிரதம மந்திரி கனம் ராஜகோபாலாச்சாரியார் சென்னை அசம்பிளியில் கூறிய சமாதானம் வழக்கம் போல் மழுப்பல் சமாதானமாகவே இருக்கிறது. தகராறு பற்றிய பூரா விஷயங்களையும் அசம்பிளியில் விளக்கிக் கூறாமல் அவரது செயலுக்கு ஆதாரமாக விஷயங்களைத் திரித்துக் கூறுவது காங்கரஸ் ராஜ்ய தந்திர முறையானால் அந்த முறை ஆதரிக்கத்தக்கதா என்பதை சேலம் நகரத்தாரே முடிவு செய்ய வேண்டும். தண்ணீர் திட்டச் செலவு 24 லட்சம் ரூபாயில் 12 லக்ஷத்தைக் கடனாகவும் 12 லக்ஷத்தை மானியமாகவும் சர்க்கார் கொடுப்பதினால் தண்ணீர்த் திட்ட விஷயத்தில் சர்க்கார் அதிக கவலை செலுத்துவதை எவரும் ஆட்சேபிக்கவில்லை. தண்ணீர் திட்டத்துக்கு செலவாகும் 24 லக்ஷமும் பாழாகக் கூடாதென்னும் விஷயத்தில் சர்க்காருக்கு எவ்வளவு கவலையும் பொறுப்பும் உண்டோ அவ்வளவு கவலையும் பொறுப்பும் சேலம் நகரசபையாருக்கும் உண்டு. சிக்கனத்தைக் கருதியும் உறுதியைக் கருதியும் பத்ராவதி டெண்டர் ஒப்புக் கொள்ளப்பட்டிருப்பது உண்மையானால் சேலம் நகரசபையார் குறுக்கே விழுந்து தடை செய்யவே மாட்டார்கள். ஆனால் சென்னை சர்க்கார் ஆதரிக்கும் பத்ராவதி கம்பெனியாரின் வார்படக்குழாய் உறுதியற்றதாகவும் அதிகச் செலவு பிடிக்கக் கூடியதாயும் இருப்பதால் சேலம் நகரசபையார் நம்புவதினாலேயே அவர்கள் பத்ராவதி கம்பெனியார் டெண்டரை ஒப்புக்கொள்ள மறுக்கிறார்கள். நீண்ட நாள் அனுபவத்தினால் உறுதியுடையதாக மதிக்கப்படும் பழைய வார்ப்பட இரும்புக் குழாய்களே மேலானவையென கனம் ஆச்சாரியார் கூறுவதற்கு ஆதாரமென்ன? கனம் ஆச்சாரியார் அபிப்பிராயப்படி உறுதியானதாய் மதிக்கப்படும் வார்ப்பட இரும்புக் குழாயை சேலம் தண்ணீர்த் திட்ட வேலைக்கு சர்க்கார் நிபுணர்களிடம் அபிப்பிராயம் கேட்டபோது உபயோகிக்கக் கூடாதென்றும் சிமண்டு குழாய்களையே உபயோகிக்க வேண்டுமென்றும் சென்ற டிசம்பர் 4ந்தேதி ஜி.ஒ.நெ.1580- உத்தரவு அனுப்பியதை கனம் ஆச்சாரியார் அறியாரா? டிசம்பர் 4ந் தேதி பத்ராவதி கம்பெனி குழாய்களை ஒப்புக்கொள்ளக் கூடாதெனக் கூறிய ஆச்சாரியார் சர்க்காரின் நிபுணர், டிசம்பர் 30ந் தேதி அதாவது 26 நாட்களுக்குப் பிறகு பத்ராவதி குழாய்களை ஒப்புக்கொள்ளுமாறு அபிப்பிராயத்தை மாற்றிக் கொண்டதின் மர்மம் என்ன? கரூர், திருப்பூர், பெஜவாடா முனிசிபாலிட்டிகள் தண்ணீர் திட்டங்களுக்கு ஹியூம் கம்பெனி குழாய்களை உபயோகித்து வரும்போது சேலத்துக்கு மட்டும் ஹியூம் கம்பெனி குழாய்கள் ஏன் விஷமாக வேண்டும். நாகப்பூர் நகரசபையில் தண்ணீர்த் திட்ட விஷயமாகக் கிளம்பிய ஒரு தகராறில் வார்ப்படக் குழாயை உபயோகிப்பதா சிமெண்டு குழாயை உபயோகிப்பதா என்னும் விஷயத்தை முடிவு செய்ய (1) மைசூர் சர்க்கார் மாஜி இஞ்சிநீயர் ரங்கையாவையும் (2) நைஜாம் சர்க்கார் சீப் இஞ்சீனியர் நவாப் எ.ஹசன் எர்டிங் பகதூரையும் (3) மத்திய மாகாண சர்க்கார் எக்ஸிகியூட்டிவ் இஞ்சினீயர் மெக்கல்லி அவர்களையும் ஒரு கமிட்டியாக நியமித்தபோது அவர்கள் பரிசீலனை செய்து முடிவு செய்தபடி நாகப்பூர் நகரசபையார் சிமெண்டு குழாய்களை உபயோகித்து வேலை நடத்தி வருவதை கனம் ஆச்சாரியார் இதுவரை அறியவில்லையானால் இனியாவது அறிய முயல்வாரா? மற்றும் நாகப்பூர் நகரசபையாருக்கு பத்ராவதி கம்பெனியார் அந்தர் எடை 5ரூபா விகிதத்துக்கு வார்ப்படக் குழாய்களுக்கு டெண்டர் போட்டிருக்கையில் சேலம் திட்டத்துக்கு அந்தர் எடை 8 ரூபாய் விகித டெண்டர் அனுப்பியிருப்பது நயமானதென்றும் இலாபகரமானதென்றும் கனம் ஆச்சாரியார் கூறுவதற்கு ஆதாரமென்ன? சேலம் நகரசபையார் விளம்பரம் செய்திருந்தபடி வந்த 16 டெண்டர்களில் இந்தியன் ஹியூம் கம்பெனி டெண்டர் உட்பட மூன்று டெண்டர்கள் தானே சர்க்கார் நிபந்தனைப்படி பூர்த்தியான டெண்டர்களாயிருந்தன. அத்தகைய பூர்த்தியான டெண்டர்களில் உட்படாத பத்ராவதி கம்பெனி டெண்டருக்கு ஆச்சாரியார் சர்க்கார் சலுகை காட்டக் காரணம் என்ன? சர்க்கார் விதிப்படி பூர்த்தியான அந்த மூன்று டெண்டர்களில் எதை ஒப்புக்கொள்ளலாமென சேலம் நகரசபையார் சென்னை சர்க்கார் சானிட்டரி இன்சினீயரின் அபிப்பிராயம் கேட்ட போது ஹியூம் கம்பெனி டெண்டரே எல்லா வகைகளிலும் சிலாக்கியமானதென்றும் சீக்கிரத்தில் வேலை பூர்த்தியாகக் கூடியதென்றும் சென்ற நவம்பர் 11ந் தேதி அபிப்பிராயம் கூறியதை கனம் ஆச்சாரியார் மறைப்பதின் நோக்கம் என்ன? வார்ப்பட இரும்புக் குழாய்களே சிலாக்கியமானவை என கனம் ஆச்சாரியார் முடிவு கட்டியதற்கு ஆதாரமென்ன? வார்ப்பட இரும்புக் குழாய்களை உபயோகித்தால் வருஷா வருஷம் தண்ணீர் பம்பு செய்யும் போது துருப்பிடித்து தண்ணீர் வரும் அளவு குறைந்துவிடுமென்று 11.12.37ல் வெளிவந்த "ஹிந்து" பத்திரிகையில் லண்டன் இஞ்சினீயர்கள் சங்க அங்கத்தினரும், பெர்மிங்காம் தண்ணீர் சப்ளை பிரதம இஞ்சினீயருமான எப்.டப்ளியூ மெக்காலே எழுதியிருப்பதை கனம் ஆச்சாரியார் படித்துப் பார்ப்பாரா? அந்த வியாசத்தில் சிமெண்டு குழாய்களே சிலாக்கியமானவை யென்றும் குறிப்பிடப்பட்டிருக்கிறது. சேலம் தண்ணீர்த் திட்ட தகராறு விஷயங்கள் இவ்வளவு தெளிவாக இருந்தும் கனம் ஆச்சாரியார் திறந்த சட்டசபையிலே இந்திரஜாலம் செய்து ஏய்க்கத் துணிந்து நிற்பதுதான் ஆச்சர்யமாக இருக்கிறது. இந்த விஷயங்கள் எல்லாம் சேலம் நகரசபை மெம்பர் தோழர் வெங்கடப்ப செட்டியாருக்கும் தோழர் சடகோப முதலியாருக்கும் செவ்வையாகத் தெரிந்திருந்தும் அசம்பிளியிலும் கெளண்சிலிலும் அவர்கள் இவ்விஷயங்களை விளக்கிக் கூறாதது ஆச்சரியமாகவே இருக்கிறது. சேலம் ஜில்லாப் பிரதிநிதிகளாக அசம்பிளியிலும் கெளண்சிலிலும் சுமார் அரை டஜன் பேர் இருந்தும் காங்கரஸ் கட்டுப்பாட்டுக்கு பயந்து அவர்கள் வாய்மூடி மெளனிகளாகவே இருந்து வருகிறார்கள். இத்தகைய பொம்மைப் பிரதிநிதிகளால் சேலம் ஜில்லாவுக்கு ஏற்படப்போகும் நன்மை என்ன? மஞ்சள் பெட்டியை நிரப்பியதற்கு சேலம் ஜில்லா வாசிகளுக்குக் கிடைத்த பலன் இது தானா?

தோழர் பெரியார், குடி அரசு - கட்டுரை - 27.03.1938

 

காந்தியார் மந்திரிகள் ஒழுக்கமுடையவர்களாக இருக்க வேண்டுமென்று எச்சரிக்கை செய்திருப்பதாக பத்திரிகைகளில் பார்த்தேன். இதற்குக் காரணம் சில நாட்களுக்கு முன் சென்னையில் ஒரு மந்திரி தனது அந்தரங்க நண்பனுடன் நடு ஜாமத்தில் பெண் வேட்டைக்குச் சென்று திரும்பும் வேகத்தில் ஒரு நபரின் மீது மோட்டாரை விட்டுத் தள்ளினதோடு அந்த அடிபட்ட நபரை சிகிச்சைக்கு வேண்டிய காரியம் கூட செய்யாமல் விட்டு விட்டு ஓடிப்போய் விட்டதாகக் கூறப்படும் விஷயம் காந்தியாருக்குத் தெரிந்துதான் இம்மாதிரியான எச்சரிக்கை விட்டிருக்கலாம் என்று கருதுகிறேன்.

போலீஸ் இலாக்கா கமிஷனருக்குக்கூட இது சேதி எட்டி கவர்னர் பிரபு காதுக்கு எட்டி இருப்பதாகவும் சொல்லிக் கொள்ளப்படுகிறது.

குடி அரசு - செய்திக் குறிப்பு - 01.05.1938

 

இவ்வூர் பீபிள்ஸ் பார்க்கிலிருக்கும் மிருக காக்ஷிற்கு முனிசிபல் கமிஷனரின் வேண்டுகோளுக் கிணங்கி சென்னை கார்ப்பொரேஷன் சங்கத்தார் 2 பெண் சிங்கங்களும், 2 மான்களும் இலவசமாய் அளித்ததை இவ்வூர் முனிசிபாலிட்டியார் தங்களிடமிருக்கும் லாரி மூலம் சென்னையி லிருந்து அம் மிருகங்களை கொண்டுவந்திருக்கிறார்கள். ஏற்கனவே மிருகக் காக்ஷியில் இருந்து வரும் கரடி, முதலை ஆகிய நூதன மிருகங்களுடன் இம்மிருகங்களையும் வைத்து நன்கு போஷிக்கப்பட்டு வருவதோடு பொதுஜனங்கள் சொற்ப கட்டணத்தில் மிருகங்களைப் பார்வையிடவும் ஏற்பாடு செய்திருக்கிறார்கள்.

ஏற்கனவே இருக்கும் கரடிகள் இரண்டும் பெண் கரடிகளாக விருப்பதால் அவைகளில் ஒரு பெண் கரடியைக் கொடுத்து ஒரு ஆண் கரடியை இந்த சிங்கம் கொண்டு வந்த இடத்திற்கே கொடுத்து பெற்றுக்கொண்டால் மிக நலமாக விருக்கும் அதேபோல் சிறுத்தையையும் மாத்திக் கொள்ளலாமென நினைக்கிறோம்.

(பர்)

குடி அரசு பத்திராதிபர் குறிப்பு 13.01.1935

 

ஓ தமிழனே! தமிழ் அன்னை உன் கடமையைச் செய்ய அழைக்கிறாள்.

ஆரியக் கொடுமையில் இருந்து தன்னை விடுவித்துவிடும்படி ஓலமிட்டுக் கெஞ்சுகிறாள்.

தாய்நன்றி கொன்ற மகனும், தாய்ப் பணிக் கடமை கொன்ற மகனும் மனிதனாவானா?

குடி அரசு - வேண்டுகோள் - 29.08.1937

 

ஈரோடு தாலூக்கா சுற்றுப் பக்கங்களில் கன்று காலிகளுக்கு தீவனப் பஞ்சம் நாளுக்கு நாள் வளர்ந்து வருவதால் ஈரோட்டு முனிசிபாலிட்டியில் உள்ள கால்நடைகளுக்குத் தீவனத்துக்காக தஞ்சை ஜில்லா நீடாமங்கலம், திருவாரூர் முதலிய இடங்களிலிருந்து தீவனம் (வைக்கோல்) தருவிக்கலாம் என்ற யோசனை மீது விஷயங்களை விசாரணை செய்து பார்த்ததில் வைக்கோல் ஈரோட்டு விலையைவிட பகுதி பங்கு சகாயமாய் இருந்தாலும் ரயில் சார்ஜ்ஜானது அதிகமாய் இருப்பதால் கட்டுபடி இல்லாமல் இருந்து வருவதால் தருவிக்க முடியவில்லை.

அதனால் ஈரோடு முனிசிபல் கமிஷனர் அவர்கள் தென்னிந்திய ரயில்வே அதிகாரிகளுக்கு வைக்கோலைப் பொருத்தவரை சகாய ரேட்டு ஏதாவது ஏற்படுமானால் ஏராளமான அளவு தருவிக்கக் கூடும் என்று தெரிவித்து வேண்டிக் கொண்டிருக்கிறார்.

மாடு கன்றுகளுடைய நன்மையை உத்தேசித்தும், தஞ்சை ஜில்லாவில் உள்ள வைக்கோல்கள் பெரிதும் செலவு இல்லாமல் வீணாய் போகாமலும், விவசாயிகளுக்கு வைக்கோல் மூலம் ஏதோ சிறிது பணம் கிடைத்து அவர்களுக்குச் சவுகரியம் ஏற்படும்படியும் தீவனப் பஞ்சமுள்ள இடங்களில் சௌகரியம் ஏற்படும்படியும் கவனித்து மனது வைத்து ஏதாவது சிறிது ரயில் சார்ஜ்ஜில் குறைவுபடுத்திக் கொடுப்பார்களானால் அது மிக நல்ல காரியமாகவும் புத்திசாலித்தனமான காரியமாகவும் இருக்கும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

குடி அரசு துணைத் தலையங்கம் 03.02.1935

புரட்சி மொழிகள்

"பார்ப்பான், சூத்திரன், பறையன் என்கிற ஜாதி அமைப்பு இருக்கிற வரையில் இந்த நாட்டில் ஒரு இஞ்ச் அளவுகூட முன்னேற்றம் காண முடியாது என்று உறுதியாகக் கூறுவேன்" - பெரியார்

தொடர்புக்கு

Periyar web version
கைப்பேசி: +919787313222
மின்னஞ்சல்:[email protected]

To Get Latest Articles

Enter your email address: