அடுத்த  தேர்தலை  மனதில்  வைத்துக்கொண்டு  மீண்டும்  காங்கிரஸ்காரர்கள்  தங்கள்  தேர்தல்  முழக்கத்தை  ஆரம்பித்துவிட்டார்கள்.  அவர்கள்  தேர்தல்  முழக்கம்  அளவு  கடந்தது  என்று  சொல்லத்தக்க  நிலைக்கு  அவர்கள்  வந்துவிட்டார்கள்.  அத்துடன்  மட்டுமல்ல.  இவர்கள்  இந்நாட்டு  மக்களை  என்றென்றும்  தங்கள்  காலின்  கீழ்  மிதித்தே  வாழ்வதற்கு  எதைச்  செய்ய  வேண்டுமோ  அதையும்  செய்து  வருகிறார்கள். இம்  முறையானது  இவர்கள்  ஏழை  மக்களை  இதுவரை  ஏமாற்றியதைவிட  கொடுமையானது.

சீர்திருத்தத்தில்  வரும்  பங்குவிகிதங்கள்  இந்நாட்டில்  இதுவரையில்  இல்லாத  முறையிலெல்லாம்  வரவிருக்கிறது.  இதை  மக்கள்  சாதாரணமாகக்  கவனித்தால்  தங்களின்  தந்திர  முறைகளை  உணர்ந்து  தங்களைத்  தட்டிப்  பேசித்  தாக்க  ஆரம்பிப்பார்கள்.  இப்படி  மக்கள்  விழிக்காதிருக்க  என்ன  செய்வதென்று  யோசித்து  அத்  துறையில்  இறங்கிவிட்டார்கள்.  சீர்திருத்தத்தில்  தங்களுக்கு  வெறுப்பிருப்பது  போலவும்  வெறுப்புடைய  இந்த  சீர்திருத்தத்தால்  மகத்தான  பிளவு  இந்நாட்டில்  உண்டாகுமென்று  தாங்கள்  நம்புவதாகவும்  இத்தகைய  பயனற்றதையும்,  பிளவு  உடையதையும்,  வெள்ளைக்காரர்கள்  தங்கள்  மீதும்  தங்கள்  நாட்டுமீதும்  பலவந்தமாக  திணிப்பதாகவும்,  இந்திய  தேசபக்தர்கள்  இவைகளுக்கு  இம்மிகூட  சம்பந்தமில்லாது  இருந்ததால்தான்  இன்று  வெள்ளை  அறிக்கையை  காந்தியும்  காங்கிரசும்  எதிர்ப்பதாகவும்  பாமர  மக்கள்  எண்ணும்படிசெய்ய  வேண்டுமென்பதே  இவர்கள்  அவாவாகும்.  இப்படி  மக்கள்  மனதை  வேறுவழியில்  திருப்பிவிட்டால்  இவர்கள்  மாமூல்  காரில்  மகிழ்ச்சியுடன்  சுற்றி  வாழலாம்  என்பதும்  இவர்கள்  எண்ணம்.  இப்படி  இவர்கள்  சொல்லி  விடுவதில்  உண்மை  கொஞ்சமாவது  இருக்கிறதா?  என்பதை  சிந்திக்கக்  கோருகிறோம்.

அறிக்கைப்  பிரயோஜனமற்றது,  எங்களுக்குப்  பிடிக்காதது  அத்துடன்  வகுப்புவாதமும்  நிறைந்திருக்கிறது  என்பதுவே  இவர்களின்  முதல்  பல்லவியாகும்.  இந்  நாட்டின்  சகல  மக்களுக்கும்  நன்மையுண்டாகக்  கூடியமாதிரியில்  ஓர்  திட்டத்தை  தயார்  செய்ய  ஒரு  கூட்டம்  இனி  கூட்டப்  போகிறோம்  என்பது  அனுபல்லவியாகும்.  இவைகள்  உண்மையா?

இந்நாட்டில்  1926ம்  வருடத்திலிருந்து  1931ம்  வருடம்  வரையில்  கூடிய,  அகில  இந்திய  சம்மேளனங்களெத்தனை,  அகில  இந்திய  காங்கிரஸ்களெத்தனை  அகில  இந்திய  சர்வ  கட்சி  மகாநாடுகளெத்தனை,  அகில  இந்திய  சமஷ்டியல்  மகாநாடுகளெத்தனை,  இன்னும்  ஞாபகம்  கூட  இல்லாத  எத்தனையோ  "பெயரினால்"  அகில  இந்திய  கூட்டங்களை  இக்கூட்டத்தார்  கூட்டியதையும்,  நேரு  திட்டம்  போன்ற  வஞ்சனை  நிறைந்த  பல  அரசியல்  திட்டங்கள்  தயார்  செய்ததையும்  இவைகள்  அத்தனையும்  எறிந்து  தணலானதையும்  பொது  மக்கள்  மறந்தா?  விட்டார்கள்!  ஐந்து  வருடங்களில்  சுமார்  20க்கு  உள்பட்ட  அகில  இந்திய  மகாநாடும்,  10க்குள்பட்ட  அகில  இந்திய  அரசியல்  திட்டங்களும்  தயார்  செய்யப்பட்டு  ஒன்றிலாவது  ஒற்றுமையையோ,  ஐக்கியத்தையோ  காண  முடியாது  தானே?  லண்டனுக்குச்  சென்றார்களென்பதையும்,  பொது  மக்கள்  மறந்து  விட்டார்கள்  என்று  இவர்கள்  நம்புகிறார்களா?

லண்டன்  வட்டமேஜை  மகாநாட்டில்  15  தினங்கள்  முதலில்  திட்டம்  ஒன்றுபட்டு  தயாரிப்பதில்  வீணாக்கப்பட்டதா?  இல்லையா?  என்று  வினவுகிறோம்.  1931ம்  வருடம்  18ந்  தேதியன்று  பிரதம  மந்திரி  அவர்களால்  இந்திய  பிரதிநிதிகள்  ஒன்றுபட்ட  மனத்துடன்  வருமாறும்,  ஒரு  திட்டம்  தயார்  செய்யுமாறும்  கேட்டுக்கொண்டாறா?  இல்லையா?  இது  நடந்த  பதினைந்து  தினம்  கழித்து  ஒவ்வொரு  பிரிவிலும்  இருவர்  வீதம்,  சிறுபான்மையோர்  கமிட்டி  நியமிக்கப்பட்டு  ஒருவாரம்  இராப்பகலாக  சிந்திக்க வில்லையா?  இக்  கூட்டத்துக்குக்கூட  காந்தி  தலைமை  தாங்க வில்லையா?  இவ்வளவு  முயற்சிகளுக்குப்  பின்  மீண்டுமொருமுறை  முதன்  மந்திரியார்  இந்திய  பிரதிநிதிகளை சமரச முடிவுக்கு வருமாறு வேண்டிக்  கொள்ளவில்லையா!  என்றும்  கேட்கிறோம்.  இத்தனைக்கும்  பின்பு,  காந்தி  முஸ்லீம்களையும்  கிறிஸ்தவர்களையும்  சேர்த்துக்கொண்டு  ஆதிதிராவிடர்களை  சதி  செய்ய  முயலவில்லையா  என்று  கேட்கிறோம்.  இப்பிரமாண்ட  முயற்சிகளுக்குப்  பின்  அதாவது,  இந்திய  நாட்டு  பிரதிநிதிகள்  தங்களுக்குள்

1. இன்னின்ன  அதிகாரங்களும்,  உரிமைகளும்  எங்களுக்கு  இருக்க  வேண்டும்.

2. அதை  இங்குள்ள  பிரிவினர்களான  நாங்கள்  இன்ன  விகிதப்படி  அனுபவித்துக்கொள்ளுகிறோம்  என்பது  போன்ற  ஓர்  திட்டத்தை  தயார்  செய்ய  முடியாமல்  போகவில்லையா  என்று  கேட்கிறோம்.  இதன்  பின்பு  தானே!  பிரிட்டீஷ்  கனம்  முதன்  மந்திரி  கீழ்க்கண்ட  அறிக்கையை  வெளியிட்டார்.

அறிக்கை:

1. இந்தியாவுக்கு  மாகாண  முழுதும்  சுய  ஆட்சியும்  மத்திய  அரசாங்கத்தில்  பொறுப்புள்ள  ஆட்சியுமே  கொடுக்கப்படும்.

2. இராணுவ  இலாக்காவும்,  வெளிநாட்டுச்  சம்பந்த  இலாக்காவும்,  கவர்னர்ஜெனரல்  பொறுப்பில்தான்  இருக்கும்.

3. சில  நிபந்தனைகளும்,  சில  நீதி  சம்பந்தமான  பொருப்பை  மத்திய  அரசாங்கத்துக்குக்  கொடுக்கப்படும்.

4. இந்தியாவின்  செல்வ  நிலைக்குத்  தீங்கு  வராத  நிலையில்  பாதுகாக்கும்  பொருப்பு  கவர்னர்  ஜெனரல்  இடமே  இருக்கும்.

5. குறைந்த  வகுப்பினர்களின்  உரிமைகளைப்  பாதுகாக்கும்  பொறுப்பும்  கவர்னர்ஜெனரல்  இடமே  இருக்கும்.

6. தேசத்தின்  அமைதியைப்  பாதுகாக்கும்  பொருப்பும்  அவருடையதே.

7. உங்களால்  இதுவரையில்  சிறுபான்மை  வகுப்புப்  பிரச்சினையைச்  சமரசமாகத்  தீர்த்துக்கொள்ள  முடியவில்லை.

8. இனியாவது  நீங்கள்  முயன்று ஓர்  முடிவுக்கு  வாருங்கள்.

9. இல்லாவிட்டால்  நானே  முடிவுசெய்து  விடுகிறேன்.

10. இந்தியாவிலுள்ள  எல்லா  வகுப்புகளுக்குள்ளும்  சமரசம்  ஏற்படாததே  பொருப்பாட்சி  ஏற்படுத்தத்  தடையாக  இருக்கிறது.  இவைகளை  ஒருமுறை  ஞாபகப்படுத்திப்  பாருங்கள்.  அன்று  பிரிட்டிஷ்  முதல்  மந்திரியார்  தான்  தரப்  போவதாகச்  சொன்ன  அதிகார  உரிமை  எல்லையைவிட  இன்று  ஏதாவது  குறைத்துக்  கொடுக்கப்பட்டிருக்கிறதா,  அல்லது  அன்று  மந்திரியார்  சொன்ன  அதிகார  அளவு  இருக்கிறதே  அதைப்  போதாதென்றும்  அதிக  மதிகாரம்  இருக்க  வேண்டுமென்றும்  கேட்டவர்கள்  யாராவது  இன்று  இருக்கிறார்களா?  அதிகார  அளவில்,  உரிமை  அளவில்  அன்று  முதன்  மந்திரி   சொன்னதற்கு  ஒத்துத்  தாளம்  போட்டவர்கள்தானே  அத்தனை  வ.மே.ம.நா.  பிரதிநிதிகளும்.  இதில்  காந்தி,  மாளவியா,  சரோஜினி,  சாப்ரூ  இவர்கள்  மாட்டேன்  என்றவர்களா?  அன்று  பார்ப்பவர்களுக்குப்  பிரிட்டீஷ்  மந்திரியார்  கூறிய  அதிகார  எல்லை  இருக்கிறதே,  உரிமை  அளவு  இருக்கிறதே  இதில்  எதிர்த்துப்  பேசியவர்கள்  எவறாவதுண்டா? எதிர்த்துத்  தாங்கள்  கூறுவதை  மந்திரியும்  மற்றவர்களும்  ஒப்புக்கொள்ளச்  செய்தவர்கள்  தான்  யாரேனும்  உண்டா.  இவைகளை  சிறிது  சிந்தித்தாலே  சீர்திருத்த  அறிக்கையை  எதிர்க்கும் காங்கிரஸ்காரர்களின்  யோக்கியதை  நன்கு  தெரியும்.

இவ்விதம்  உரிமை  பெருகுவதில்  இதை  விட  அதிகம்  ஒன்றுமில்லை  என்று  காந்தி  உள்பட  சகலரும்  தலையை  ஆட்டி  விட்டு  இங்கு  வந்து  திடுக்கிட்டேன்  என்றால்  இது  நாணையமானதா?  இதுதான்  போகட்டும்  மேலே  சொன்ன  அளவுக்கு  கொடுக்கப்போகும்  உரிமைகளை  பங்கு  போடுவது  அதாவது  இன்னின்ன  சமூகத்தாருக்கு  இவ்வளவு  தான்  என்று  முடிவு  செய்வது  இருக்கிறதே!  அதிலாகிலும்  நாணையமுண்டா!

இன்று  கண்டிப்பதைப்  பாருங்கள்.  பஞ்சாப்பிலும்,  வங்காளத்திலும்,  எல்லைப்புறத்திலும்  முஸ்லீம்களுக்கு  அதிக  உரிமை  கூடாது  என்று  சொன்னார்கள்.  இன்றும்,  சகல  இந்து  வடநாட்டு  பார்ப்பனர்களும்  இதைத்தான்  சொல்லுகிறார்கள்.

அடுத்தாற்போல்  வகுப்பு  உரிமை  வழங்கப்பட்டது  இருக்கிறதே!  அது  கூடாது  என்றார்கள்.

இப்பங்கு  விகிதமானது  வற்புறுத்திக்  கொடுக்கப்பட்டதா?  என்பதே  இன்றைய முக்கிய  கேள்வியாகும்.  வற்புருத்தியல்ல.  நமது  காந்தி  மாளவியா  சரோஜனி  உள்பட  அத்தனை  பிரதிநிதிகளும்,  எங்கள்  நாட்டில்,  நாங்கள்  யார் யார்  எவ்வளவு  உரிமையை  அனுபவிக்க  வேண்டும்  என்பதைப்பற்றி  முடிவு  செய்துகொள்ள  முடியவில்லை.  ஹே  முதன்  மந்திரியே!  நீங்களே  கூறும்  முடிவுக்கு  நாங்கள்  எல்லோரும்  ஒப்புக்கொண்டு  ஒத்துப்  போகிறோம்  என்று  சொன்னதுடன்  அவ்விதம்  எழுதி  கையொப்பமிட்டுக் கொடுத்து  விட்டு  வந்த  பின்புதானே?  முதன்  மந்திரியார்  பங்கு  விகிதாச்சாரத்தை வெளியிட்டார்  என்று  கேட்கிறோம்.

இவர்கள்  ஒப்புக்கொள்வதுடன்  மட்டுமல்ல  உறுதி  கூறுவதாகவும்  கூட  எழுதியிருக்கிறார்களா?  இல்லையா?  என்றும்  கேட்கிறோம்.  சீக்கியர்,  ஹிந்து,  முஸ்லீம்  பிரச்சினையைத்  தீர்க்கும்படி  கொடுத்த  கடிதத்தில்  காந்தி,  கையெழுத்து  போடவில்லை.  ஆனால்,  மாளவியா,  சரோஜினி,  ரங்கசாமி  ஐயங்கார்,  பிர்லா,  இவர்களும்  தர்பங்கா  மகாராஜா  நரேந்திரநாத்,  மூஞ்சே,  ஜெயக்கர்,  இவர்களும்  ஸர். ஸாப்ரூ,  சாஸ்திரி,  செத்தல்  வாட்பாத்ரோ,  சேத்னா,  இவர்களும்  கையொப்பமிட்டார்களா  இல்லையா  என்று  கேட்கிறோம்.  இவைகளை  நேரில்  காந்தி  பார்த்தாரா  இல்லையா  என்றும்  கேட்கிறோம்?  மேலேகண்ட  கையொப்ப  நகல்களின்  கருத்துப்படி  ஓர்  கடிதம் தனியாகக்  காந்தியால்  முதன்  மந்திரிக்கு  கொடுக்கப்பட்டதா  இல்லையா  என்று  வினவுகிறோம்?  அத்துடன்  முதன்  மந்திரிக்கு  காந்தி  எழுதிய  கடிதத்தில்  தான்  மாளவியாஜி  எழுதிய  கடிதத்தில்  கையெழுத்து  இடாததால்,  பிரதம  மந்திரியின்  தீர்ப்பை  காங்கிரஸ்  எதிர்க்குமென்பது  அர்த்தமல்ல  என்றும்  குறிப்பிட  வில்லையா?  இவ்விதம்  அங்கு  நடந்து  கொண்டவர்கள்,  கையெழுத்திட்டவர்கள்  இங்கு  மீண்டும்  ஒவ்வொருவராகக்  கிளம்பி  கண்டிக்கிறோம்  என்பது  நாணையமானதாக  இருக்க  முடியுமா?  இதில்  ஒரு  வேடிக்கை  என்ன  வென்றால்  நேற்று  ராஞ்சியில்  கூடிய  கூட்டத்தில்  வகுப்புப்  பிரிவினை  சம்பந்தமான  பிரச்சினையைப்பற்றியொன்றும்  சொல்லாமல்  ஒதுக்கி  வைத்துவிட்டு  அரசியலறிக்கையை  மட்டும்  கண்டிக்கிறோம்  என்றார்களே!  அதிலும்  ஓர்  முஸ்லீம்  தலைமையில்.  இதற்கு  முன்பு  வட்டமேஜை  மகாநாட்டிலும்  இவ்விதமோர்  தீர்மானம்  கொண்டு  வந்தபோது  இது  ஏமாற்றும்  தீர்மானம்.  பங்கு  விகிதத்தைக்  கூறி  பின்பு  எவ்வளவு  வேண்டுமென்பதை  முடிவு  செய்ய  வேண்டுமென்று  தீர்மானிக்கப்படவில்லையா.  ஆனால்  ராஞ்சியிலோ  அத்தகைய  பிரதிநிதிகள்  பிர்லா  மாளிகையில்  ஹிந்து  மகாசபையார்  கூட்டத்தில்  தலைவரென்று  பேரெடுக்க  ஆசை  உள்ள  ஓர்  முஸ்லீம்  தலைமையில்  நடந்த  ஏமாற்றும்  நாடகம்தானே  இது?

வட்டமேஜை  மகாநாட்டுக்கு  சென்ற  ஓர்  முஸ்லீம்  கனவான்  காந்தி  மந்திரிக்கு  எழுதிய  கடிதத்தில்,  இன்ன  நிபந்தனை  மீதுதான்  காங்கிரஸ்  வகுப்புத்  தீர்ப்பை  ஒப்புக்கொள்ளுமென்று  குறிப்பிடவில்லையே  என்று  கேட்கிறாரே  இதற்குத்  தான்  தேசீய  வாதிகள்  என்ன  சொல்லப்போகிறார்கள்.

நாளை  பாட்னாவில்  கூடவிருக்கும்  அகில  இந்தியக்  காங்கிரஸ்  காரியக்  கமிட்டியில்  வெள்ளை  அறிக்கை  கண்டனப்  புரட்டு  நடக்கும்.  அத்துடன்  அன்சாரியின்  அபேதவாதத்  திட்டமும்  தோழர்  மசானியின்  அபேதவாதத்  திட்டமும்  ஆலோசனைக்கு  வருகிறது.  இக்  கூட்டத்திலும்  இன்னும்  எந்த  மாதிரியான  நாடகத்தை  நடத்துகிறார்கள்  என்று  பார்ப்போம்.  நமது  தலைவர்  சிறையினின்று  விடுபட்டு  வந்துவிடுவார்.

தமிழ்நாட்டு  ஐயர்களும்  ஐயங்கார்களும்  அசம்பளி  தேர்தலுக்கு  ஆர்ப்பாட்டம்  செய்யும்  இன்று,  நமது  தலைவர்  வெளிவருவது  மகிழ்ச்சியூட்டக்  கூடியதாகுமென்று  நம்புகிறோம்.

தலைவர்  தோழர்  ஈ.வெ. இராமசாமியே!  வருக!  நின்வரவு  நல்வரவாகுக!  தமிழ்நாட்டுக்கு  தேவையாகுக!  என்று  கூறி  வரவேற்கிறோம்.

புரட்சி - தலையங்கம் -  13.05.1934

Add comment


Security code
Refresh

Share this post

Submit to FacebookSubmit to Google PlusSubmit to TwitterSubmit to LinkedIn

புரட்சி மொழிகள்

"பார்ப்பான், சூத்திரன், பறையன் என்கிற ஜாதி அமைப்பு இருக்கிற வரையில் இந்த நாட்டில் ஒரு இஞ்ச் அளவுகூட முன்னேற்றம் காண முடியாது என்று உறுதியாகக் கூறுவேன்" - பெரியார்

தொடர்புக்கு

Periyar web version
கைப்பேசி: +919787313222
மின்னஞ்சல்:[email protected]

To Get Latest Articles

Enter your email address: