முதலில். . . . . .

1925 - 1938 காலகட்டம் வரை பெரியாரின் எழுத்துகளையும் பேச்சு களையும் குடி அரசு, புரட்சி, பகுத்தறிவு இதழ்களிலிருந்து தொகுத்திடும் பணியில் பின்பற்றிய நெறிமுறைகளை விளக்கிட விரும்புகிறோம்.

பெரியாரின் எழுத்துகளையும் பேச்சுகளையும் எந்த மாற்றமும் இன்றி வெளியிடுவதில் அல்லது அப்படியே வெளியிடுவதில் முழுமையான கவனமும் கவலையும் செலுத்தினோம்.

பெரியாரின் எழுத்துகள் குறித்து திருநெல்வேலியில் 28.11.1927 இல் நடைபெற்ற மாவட்ட சுயமரியாதை சங்க மாநாட்டில், மாநாட்டைத் திறந்து வைத்து உரையாற்றிய தமிழறிஞர் இரசிகமணி டி.கே.சிதம்பரநாத முதலியார் பேசியதையும் அதற்கு பெரியார் தந்த பதிலையும் இங்கு குறிப்பிடுவது பொருத்தமாக இருக்கும் என்று கருதுகிறோம்.

“ குடி அரசுக்கு இன்றிருக்கும் யோக்கியதை உங்கட்க்குத் தெரியும். அதில் மக்கள் மனதை கவரத்தக்க அளவுகடந்த சக்தி இருப்பதற்குக் காரணம் அழகான ஆராய்ச்சியா? தமிழா? இல்லை. பின்? அவர் உள்ளக்கிடக்கிலுள்ளதை அப்படியே எடுத்துச் சொல்லுவது, அதுவும் மிகச்சாதாரண தமிழிலேயே தான் இருக்கிறது. நாயக்கர் படிப்பில் பட்ட தாரி அல்ல. எத்தகைய கல்வியாளரும், கோடிக்கணக்கான ஜன சமூக மும் திகைக்கத்தக்க வன்மையுடைய பத்திரிகையை இவர் கொடுத்தது நமது பூர்வ புண்ணியமேயாகும்.” ( குடி அரசு 04.12.1927, ப. 6 )

என்று டி.கே.சிதம்பரநாத முதலியார் குறிப்பிட்டதற்கு பெரியார் இவ்வாறு பதிலளித்தார்.

“ குடி அரசைப் பற்றி மிக அதிகமாகக் கூறினார்கள். அதில் உள்ள குற்றமெல்லாம் எனக்குத் தெரியும். அதில் உள்ள மெல்லின வல்லினம் போன்ற பல இலக்கணப் பிழைகளும், மற்றும் பல பிழைகளும் எனக்குத் தெரியும். இதற்காக நான் இலக்கணம் கற்கப் போவதில்லை.” ( குடி அரசு 04.12.1927, ப. 6 )

பெரியாரின் மொழிநடை பற்றி அவரது வாழ்க்கை வரலாற்றை ‘தமிழர் தலைவர்’ என்ற தலைப்பிட்டு நூலாக எழுதிய தமிழறிஞர் சாமி.சிதம்பரனார் குறிப்பிடுவதையும் சுட்டிக்காட்ட வேண்டும்.

“இவர் எதைப்பற்றியும் அஞ்சாமல் எழுதுவார். இவருக்கு இலக்கணம் தெரியாது. எழுதுவதில் எழுத்துப் பிழைகளும் மலிந்திருக்கும். சொற் பிழைகள் நிறைந்திருக்கும். ஒரு வாக்கியம் எப்படி இருக்க வேண்டும் என்பதே இவருக்குத் தெரியாது. இவர் எழுதுவதில் காற்புள்ளி, அரைப்புள்ளி, முற்றுப்புள்ளிக்கு வேலையில்லை. ‘ கிணர்’ ‘வயிர்’ ‘சுவற்றில்’ ‘ஆக்ஷி’ ‘சூக்ஷி’ ‘ஆருதல்’ ‘ பொருமை’ போன்ற பிழை கள் தாராளமாகக் காணப்படும். சாதாரணமாகப் பேசுந் தமிழில்தான் எழுதுவார். அதிலும் எழுவாயெங்கேயிருக்கிறது, பயனிலை எங்கே யிருக்கிறது என்று தேடினாலும் சில சொற்றொடர்களில் அகப்படா. ஒரு வாக்கியம் நான்கு முழம் அய்ந்து முழம் நீண்டிருக்கும். இவ் வளவு பிழைகள் மலிந்திருந்தாலும் படிப்போரை தன்வசமாக்கும் சக்தி இவர் எழுத்துக்கு மட்டும் தனியாக அமைந்துள்ளது. அது என்ன சக்தி என்று நம்மாற் சொல்ல முடியாது.” ( ‘தமிழர் தலைவர்’ .ப. 169 )

என்று குறிப்பிடுகிறார்.

இப்படி மொழி இலக்கணங்களுக்கு அப்பால், அவற்றினுள் முடங்கிக் கொள்ளாமல் ஆயிரமாயிரம் ஆண்டுகளாய் அடிமைப் பட்டுக்கிடந்த தமிழினத்தை விடுதலை செய்யும் எதிர்நீச்சல் தொண்டுக்கே முன்னுரிமை தந்த அந்த சமூகப் புரட்சியாளரின் எழுத்துகளையும் பேச்சுகளையும் உள்ளது உள்ளபடியே வெளிக்கொணர வேண்டும் என்ற கவலையோடு இத் தொகுப் புப் பணிகள் நடந்தன. எடுத்துக்காட்டாகக் குறிப்பிட வேண்டுமானால் பெரியார் சில வேளை ஒரே பத்தியில்

அனுகூலம் - அநுகூலம்

அன்னியர் - அந்நியர்

தகரார் - தகறாரு

நீச்சல் - நீச்சம்

சோம்பேறி - சோம்பேரி

கட்சி - கக்ஷி

கேட்கிறோம் - கேள்க்கிறோம் - கேழ்க்கிறோம்

சூழ்ச்சி - சூட்சி - சூக்ஷி

கடைசி - கடசி

தவிற - தவிர

நாணயம் - நாணையம்

ஒரு புறம் - ஒரு புரம்

பழைய - பழய

பறித்து - பரித்து

எவரும் - யெவரும்

முஸ்லீம் - முஸ்லிம்

தேசீய - தேசிய

முத்தையா - முத்தய்யா - முத்தய்ய

வரதராஜுலு - வரதராஜலு

கல்யாணசுந்தர முதலியார் - கலியாணசுந்திர முதலியார்

ரெங்கசாமி - ரங்கசாமி

ஜெயவேலு - ஜயவேலு

பந்தலு - பந்துலு

ஜெயகர் - ஜயகர்

என்று பலபட எழுதியுள்ளார். அவற்றை ‘ குடி அரசு’ இதழ்களில் உள்ள வாறே கொடுத்திருக்கின்றோம்.

ஆண்டு , மாதம், தேதி ஆகியவற்றைக் குறிக்க முறையே ௵, ௴, ௳ என்ற குறியீடுகளும் ‘மேற்படி’ என்பதைக் குறிக்க ௸ என்ற குறியீடும் ரூபாய், அணா, பைசா எனும் அன்றைய நாணயமுறைக் கணக்குகளையும் அப்படியே கொடுத்திருக்கின்றோம்.

பெரியார் முதல் முதலாக எழுத்துச் சீர்திருத்தத்தை குடி அரசில் அறிமுகப்படுத்த எண்ணினாலும் அறிமுகப்படுத்தியது 06.01.1935 பகுத்தறிவு வார இதழில்தான். இதற்கான அறிவிப்பு 30.12.1934 பகுத்தறிவு இதழில் ( துணைத் தலையங்கம் ) வெளிவந்திருக்கிறது.

....“இன்னமும் தமிழ் பாஷை எழுத்துகளில் அனேக மாறுதல்கள் செய்ய வேண்டி இருந்தாலும் இப்போதைக்கு இந்த சிறு மாறுதலை அனுபவத்திற்குக் கொண்டு வரலாம் என்று கருதி அந்தப்படியே எழுத்துக்களை உபயோகித்து அடுத்தாப்போல் பிரசுரிக்கப்போகும் ‘குடி அரசு’ பத்திரிகையைப் பிரசுரிக்கலாம் என்று இருக்கிறோம்”.....

( பகுத்தறிவு 30.12.1934, ப.12)

எழுத்துச் சீர்திருத்தத்தை, நின்றுபோய் மீண்டும் வெளிவந்த குடி அரசில் நடைமுறைப்படுத்துவதற்கான அறிவிப்பை வெளியிட்டாலும் 05.01.1935 சனிக்கிழமை வரை அஞ்சலகத்தின் ஆணை கிடைக்காததால் 06.01.1935 இதழ் பகுத்தறிவு என்ற பெயரிலேயே வெளிவருகிறது. இங்கே ஒன்றைக் குறிப்பிட வேண்டும். 1935 க்குப் பிறகுதான் பெரியார் எழுத்துச் சீர்திருத்தத்தை நடை முறைப்படுத்தினார் என்றாலும் இத்தொகுப்பு முழுமையிலும் சீர்திருத்த எழுத்து முறையே தவிர்க்க முடியாமல் பயன்படுத் தப்பட்டிருக்கிறது. பழைய எழுத்துவடிவங்களைப் பயன்படுத்துவதில் உள்ள நடைமுறைச் சிக்கல்களே இதற்குக் காரணம். ஆனாலும் பழைய எழுத்து முறையை பெரியார் கடைசியாகப் பயன்படுத்திய 30.12.1934 பகுத்தறிவு இதழில் வெளிவந்த துணைத் தலையங்கம், 06.01.1935 பகுத்தறிவு இதழில் வெளிவந்த அறிக்கை, இவற்றை மட்டும் இளந் தலைமுறையினர் அறிந்து கொள்வதற்காக பழைய எழுத்து வடிவத்திலேயே கொடுத்துள்ளோம்.

பெரியார் பல்வேறு புனைப் பெயர்களில் கட்டுரைகளை எழுதியுள் ளார். இவற்றில், ‘சித்திரபுத்திரன்’, ‘பழைய கருப்பன்’ என்பவை நன்கு அறியப்பட்ட புனைப்பெயர்களாகும். எனவே அப்பெயரில் வெளிவந்த கட்டுரைகளை தொகுப்பில் சேர்த்துள்ளோம். இதைத்தவிர தேசீயத்துரோகி, ஒரு தொழிலாளி, சுமைதாங்கி, யார் எழுதினாலென்ன, எவர் எழுதினா லென்ன, ஒரு நிருபர், நமது அரசியல் நிருபர், பொதுநலப்பிரியன், குறும்பன், உண்மை காண்போன், நம்பிக்கையிழந்தவன், பார்ப்பனரல்லாதான், உண்மை விளம்பி, வம்பளப்போன், பழைய காங்கிரஸ்காரன், வம்பன் என்ற புனைப் பெயர்களில் வெளிவந்த கட்டுரைகள் பெரியாரால் எழுதப்பட்டவை என் பதை உறுதிப்படுத்த முடியவில்லையானாலும் கட்டுரையின் முக்கியத்துவம் கருதி இத்தொகுப்பில் இணைத்துள்ளோம். அதே போன்று சில இதழ்களில் பல காரணங்களால் பிறரும் தலையங்கம் எழுதியுள்ளனர். அவ்வாறான குடி அரசு தலையங்கங்கள் ஈ.வெ.கி., சா.கு., ளு.சு., மா.வா., சா.மா., யம்.வீ என்ற பெயர்க்குறிப்புகளோடு வெளிவந்துள்ளன. இவற்றை வேறு சிந்தனையாளர் கள் எழுதியிருந்தாலும் அக்காலகட்ட நிகழ்வுகளை அறியத் தரும் நோக் கோடு அவையும் இத்தொகுப்பில் அப்பெயர்க் குறிப்புகளுடனேயே இணைத்துள்ளோம். 13.12.1931 அய்ரோப்பிய சுற்றுப்பயணம் மேற்கொண்டது முதல் 11.11.1932 ஈரோடு வந்த சேர்ந்த நாள் வரையிலான காலத்தில் குடி அரசில் எழுதப்பட்டுள்ள தலையங்கங்களும், துணைத் தலையங்கங்களும் தொகுப் பில் இடம்பெற்றுள்ளன.

தலையங்கம், கட்டுரைகள் இவைகளை முழுமையாகப் புரிந்து கொள் வதற்கு உதவியாக இயன்றவரையில் அடிக்குறிப்புகளைத் தந்துள்ளோம். உதாரணமாக, ஒரு மாநாட்டுத் தீர்மானம் பற்றி தலையங்கம் தீட்டும் போது அத்தீர்மானம் முழுமையாக அடிக்குறிப்பில் தரப்பட்டுள்ளது. பெரியார் நிகழ்த்திய சொற்பொழிவுகள் வெளிவந்த குடி அரசு இதழின் தேதியுடன் அந்த சொற்பொழிவை நிகழ்த்திய ஊர், தேதி முதலிய விவரங்களும் தரப்பட்டுள்ளன. இது தவிர குடி அரசில் இதழ் ஆசிரியரின் கருத்துக்கள் பத்திராதிபர் குறிப்பு என்ற தலைப்பில் வெளியிடப்பட்டிருக்கின்றன. அந்தக் குறிப்பைப் புரிந்து கொள்வதற்கு உதவிடும் தகவல்களும் சேர்த்துத் தரப் பட்டுள்ளன. சான்றாக ஸ்ரீமான் வீரய்யன் கொண்டுவந்த லோக்கல் போர்டு சட்ட திருத்த மசோதா பற்றி பத்திராதிபர் குறிப்பு எழுதப்பட்டுள்ளது. குறிப்பைப் புரிந்துகொள்வதற்கு உதவிட அந்த சட்ட திருத்த மசோதாவின் விவரங்களும் கொடுக்கப்பட்டுள்ளன.

குடி அரசில் இந்தியச் சிந்தனையாளர்கள், மேலைநாட்டு அறிஞர்கள் ஆகியோரின் கட்டுரைகளும் இயக்கங்களின் அறிக்கைகளும் மொழி பெயர்க்கப்பட்டு வெளிவந்துள்ளன. மொழிபெயர்ப்புக்கு முகவுரையாகவும் பத்திராதிபர் குறிப்புகளாகவும் எழுதியுள்ள குறிப்புகளும் தொகுப்பில் இடம் பெற்றுள்ளன. அவற்றில் இரண்டு முக்கிய மொழிபெயர்ப்புக்களைக் குறிப் பிட்டாக வேண்டும்.

ஒன்று, 1931 இல் வெளிவந்துள்ள “ சமதர்ம அறிக்கை” ( Communist Manifesto ) 04.10.1931 குடி அரசில் தொடங்கி 01.11.1931 முடிய 5 இதழ்களில் ‘சமதர்ம அறிக்கை’யின் முதல்பாகம் தொடர்ந்து வெளிவந்துள்ளது. அறிக் கையின் மொழிபெயர்ப்பு முகவுரையாக,

“ .....சமதர்மக் கொள்கை சம்பந்தமாக அந்தக்காலத்தில் வெளியான ஒரு அறிக்கையை மக்கள் உணரும்படியாக வெளிப்படுத்தலாம் என்று நாம் கருதுவதால் அதை மொழிபெயர்த்து வெளியிடலாம் என்கின்ற கருத்துக்கு மேல்கண்ட வாக்கியங்களை முகவுரையாக எழுதினோம்........” ( குடி அரசு - 04.10.1931 )

என்று பெரியார் குறிப்பிடுகிறார்.

மற்றொன்று, பேரறிஞர் அம்பேத்கரின் 1936 இல் லாகூர் ஜாட்- பட் - தோடக் மண்டலத்தார் ( ஜாதி ஒழிப்புச் சங்கத்தார் ) ஆண்டு மாநாட்டு தலைமையுரை ( மாநாடு நடக்காததால் அவரது உரை நூலாக அச்சிட்டு வெளி யிடப்பட்டது.) ‘ஜாதி யொழிய வேண்டும்’ என்ற தலைப்பில் மொழி பெயர்க் கப்பட்டு வெளிவந்துள்ளது. ( குடி அரசு - 19.07.1936 )

‘சமதர்ம அறிக்கை,’ ‘ஜாதி யொழிய வேண்டும்’ இவையிரண்டும் இந்தியமொழிகளில் தமிழிலும், ஏடுகளில் ‘குடி அரசி’லும் தான் முதலில் வெளிவந்தன என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

தொகுக்கப்பட்ட எழுத்து, பேச்சுகளை தலையங்கம், துணைத் தலையங்கம், கட்டுரை, சொற்பொழிவு, உரையாடல், மதிப்புரை, பயணக் கடிதங்கள், பெட்டிச்செய்தி, செய்திவிளக்கம், செய்திக் குறிப்பு, இரங்கல் செய்தி, இரங்கலுரை, அறிவிப்பு, பத்திராதிபர் குறிப்பு, செய்தி விமர்சனம் என்று வகைப்படுத்தி குறிப்புகளுடன் தரப்பட்டுள்ளன.

‘குடி அரசு’ இதழில் மட்டுமல்லாது ‘புரட்சி’, ‘பகுத்தறிவு’ இதழ்களில் வெளிவந்த பெரியாரின் கட்டுரைகளும் இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ளன. ஒரே காலத்தில் ‘விடுதலை’ நாளேடும் ‘குடி அரசு’ம் வெளிவந்த போது குடி அரசில் மறுபதிப்பு செய்யப்பட்டுள்ள விடுதலை தலையங்கங்களும் தேவை கருதி சேர்க்கப்பட்டுள்ளன. குடி அரசு வெளியிட்ட தலைப்புகளில் மாற்றம் எதுவும் செய்யவில்லை. தலைப்பின்றி வெளி வந்த பெரியார் சொற்பொழி வுகளுக்கு மட்டும் அதன் பொருள் குறித்த தலைப்புகள் தரப்பட்டுள்ளன.

கிடைத்த இதழ்கள் கிழிந்து அரித்த நிலையில்தான் இருந்தன. சிலவற் றில் கட்டுரையின் வரிகள் மறைந்துபோய்விட்டன. இதை நிரப்புவதற்கு முழுமையான பக்கங்கள் கிடைக்க பெரும் முயற்சிகள் மேற்கொண்டும் கிடைக்கவில்லை. எனவே விடுபட்ட வரிகளைக் குறிக்க ............................. என்ற குறியீட்டைப் பயன்படுத்த வேண்டியிருந்தது.

கட்டுரையில் இடம்பெற்றுள்ள சொற்கள் காலத்தால் பழைமை யானவை. தற்காலத்தில் புழக்கத்தில் இல்லாதவை. எனவே அவற்றின் பொருள் புரிவதற்கு அருஞ்சொல் பொருள் விளக்கம் ஒவ்வொரு தொகுதி யின் இறுதியிலும் இணைக்கப்பட்டுள்ளது.

குடி அரசு : எதிர்நீச்சல் பயணம்

1922 ஆம் ஆண்டு கள்ளுக்கடை மறியலில் ஈடுபட்டு, கோவை சிறையில் பெரியார் அடைக்கப்பட்டபோது, அவரும் அவருடன் சிறையில் உடனிருந்த ஈரோடு கருங்கல்பாளையம் வழக்கறிஞர் தங்கபெருமாள் பிள்ளையும் இணைந்து சிந்தித்த திட்டத்தின் விளைச்சல்தான் ‘ குடி அரசு.’ சிறையிலிருந்து வெளியே வந்தவுடன், 1923 ஆம் ஆண்டிலேயே ‘ குடி அரசை’ பதிவுசெய்த பெரியார், 02.05.1925 ஈரோட்டில் ஞானியார் அடிகளைக் கொண்டு வெளியிட்டார். ஞாயிறுதோறும் ஓரணா விலையில் வெளிவரத் தொடங்கியது குடி அரசு. முதலில் அட்டையில் பாரதத் தாய், இராட்டை சுற்றும் காந்தியார், நெசவு செய்யும் பெண், உழவு செய்யும் விவசாயி, சுத்தி யால் அடிக்கும் தொழிலாளி, மூட்டை சுமக்கும் பாட்டாளி படங்களோடும், ‘எல்லோரும் ஓர்குலம், எல்லோரும் ஓர் இனம்,’ ‘ சாதிகள் இல்லையடி பாப்பா’ என்ற பாரதி பாடல்களோடும் குடி அரசு வெளிவரத் தொடங்கியது.

தொடக்கக் காலங்களில் வார இதழின் 12 பக்கங்களையும் தாமே எழுதி வந்ததாய் பெரியார் குறிப்பிடுகிறார். ( குடி அரசு 18.04.1926 ) பின்னர், ம.சிங்கார வேலர், சாமி.சிதம்பரனார், கைவல்ய சாமியார், மயிலை.சீனி. வேங்கடசாமி, சா.குருசாமி, சந்திரசேகர பாவலர், ஈழத்து சிவானந்த அடிகள், பண்டிதர் முத்து சாமி, கோவை அய்யாமுத்து, ஜனக சங்கர கண்ணப்பர், அ.இராகவன், ஆர்.நீலாவதி, அ.அன்னபூரணி போன்ற சிந்தனையாளர்களின் கட்டுரை களும் பாரதிதாசன், ஜீவானந்தம் போன்ற கவிஞர்களின் கவிதைகளும் இடம் பெற்றுள்ளன.

1925 இல் தொடங்கிய ‘குடி அரசு’ 1933 ஆம் ஆண்டில் அரசின் அடக்குமுறைக்கு உள்ளானது. “இன்றைய ஆட்சி ஏன் ஒழிய வேண்டும்?” என்ற தலைப்பில் பெரியார் எழுதிய தலையங்கத்துக்காக பிரிட்டிஷ் ஆட்சி பெரியார் மீது அரசு துரோகக் குற்றச்சாட்டுகளின் கீழ் வழக்கு தொடர்ந்தது. 9 மாத சிறை தண்டனையும் ரூ.300 அபராதமும் விதிக் கப்பட்டு பெரியார் சிறை யேகினார். ‘ குடி அரசி’ன் பதிப்பாளர் பெரியாரின் தங்கை கண்ணம்மாளும் 6 மாத சிறைத் தண்டனைக்கு உள்ளானார். ரூ.100 அபராதமும் விதிக்கப்படு கிறது. இந்த நிலையில் 19.11.933 - லிருந்து ‘ குடி அரசு’ தற்காலிகமாக நிறுத்தப் பட்டு மீண்டும் 13.01.1935 - லிருந்து வெளிவரத் தொடங்குகிறது. தொடர்ந்து 29.12.1940 வரை வெளிவந்த ‘குடி அரசு’ மீண்டும் நிறுத்தப்பட்டு 16.10.1943 - லிருந்து வெளிவரத்தொடங்கி, 1949 ஆம் ஆண்டில் மீண்டும் அரசின் ஒடுக்கு முறைக்கு உள்ளானது. மேலும் ரூ.3000 ஜாமீன் தொகை கேட்கவே ‘ குடி அரசு’ விடைபெற்றுக் கொண்டது.

 “பார்ப்பனீயத்தின் வலையில் வீழ்ந்து நாம் இன்னதுதான் செய் கிறோம் என்பதை அறியாமலேயே, ஒன்றன் மேல் ஒன்றாகப் புசு புசுத்த அம்புகளைப் பாய்ச்சும் சுயராஜ்ய சர்க்காரே! உங்களுக்குச் சிந் தித்துப் பார்க்கும் போக்கு சிறிதாவது உண்டா? ‘ விடுதலை’க்கு ரூ.1000 என்கி றீர்கள்! ‘ திராவிட நாட்டு’க்கு 3000 என்கிறீர்கள். இதற்கு இந்த நாட்டு மக்கள் அளிக்கும் பதில் என்ன?

 இரண்டணா, நான்கணாவாக எத்தனை ஆயிரம் பாட்டாளிமக்கள் வீசி எறிந்து உங்கள் உத்தரவை எவ்வளவு கேவலமாகத் துளைத்து விட்டிருக்கிறார்கள் என்பதை ஏன் நீங்கள் சிந்திக்கக் கூடாது? இந்த ஜாமீன் கூத்தைக் கண்டு எத்தனை ஆயிரம் ஏழைகள் வயிறெரிந்து ‘வாழ்த்து’கிறார்கள் என்பதை ஏன் நீங்கள் எண்ணிப்பார்க்கவில்லை? இதுதான் நாம் உங்களுக்குக் கூறும் புத்திமதி!” ( குடி அரசு 02.07.1949)

‘குடி அரசு’ 1933 ஆம் ஆண்டில் அடக்குமுறைக்குள்ளாகிய சூழ்நிலையில், “ அடுத்தவாரம் ‘குடி அரசு’ பத்திரிகை வரத் தவறும் பட்சத் தில் வேறு பத்திரிகை வெளிவரும்” என்ற அறிவிப்பு 19.11.1933 ஆம் நாளிட்ட ‘ குடி அரசு’ இதழிலேயே வெளிவந்து விடுகிறது. அறிவித்தது போலவே ‘குடி அரசி’ன் அடுத்த இதழ் வெளிவரவேண்டிய 26.11.1933 ஆம் நாள் ‘குடி அரசு’க்கு பதிலாக ‘ புரட்சி’ என்ற பெயரில் இதழ் வெளிவருகிறது. “ குடி அரசை ஒழிக்கச் செய்த முயற்சியால் ‘ புரட்சி’ தோன்ற வேண்டியதா யிற்று. உண்மையிலேயே பாமர மக்களின் - அதாவது பெரும்பான்மையான மக்களின் ஆட்சியாகிய குடி அரசுக்கு உலகில் இடமில்லையானால், கண்டிப்பாகப் புரட்சி தோன்றியேதான் ஆகவேண்டும்” என்ற அறிவிப் போடு ‘புரட்சி’ வெற்றிநடைபோடத் தொடங்கியது. “ புரட்சி”யும் அடக்கு முறைக்குத் தப்பவில்லை. ஆசிரியர் பெயர் இல்லாமல் ‘புரட்சி’ வெளி யிட்டதற்காக வெளியீட்டாளர் சா.ரா. கண்ணம்மாள் மீது வழக்கு தொடரப் பட்டு 1000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. 1934 ஆம் ஆண்டில் மட்டும் 3 வழக்குகள் அடுக்கடுக்காய் தொடரப்பட்டன. அரசால் ஜாமீன்தொகை ரூ.2000 கேட்கப்பட் டது. ரூ.5000 - த்துக்கும் மேல் இழப்பை சந்தித்த ‘ புரட்சி’ ஏடு 17.06.1934 இதழோடு நிறுத்தப்படும் நிலைக்கு வந்தது.

‘புரட்சி’ ஏடு வெளிவரும்போதே 15.04.1934 முதல் ‘பகுத்தறிவு’ எனும் நாளிதழைத் தொடங்கினார். ஆனால், அது வெளிவந்தது குறுகிய காலம்தான். 27.05.1934 ஆம் நாளோடு அந்த நாளேடு நின்று போனது.

பெரியார் ஓய வில்லை. புரட்சி நின்றபின் சுமார் 2 மாத இடை வெளி யில் 26.08.1934 முதல் ‘பகுத்தறிவு’ வார இதழ் வெளிவரத் தொடங்கியது. 1934 மே 20 இல் பெரியார் சிறையிலிருந்து விடுதலையானார். பகுத்தறிவு வார ஏட்டைத் தொடங்கும் போதே பெரியார் எழுதினார்.

“முடிவாய்க் கூறுமிடத்து, ‘பகுத்தறிவு’ மனித ஜீவாபிமானத்துக்கு மக்களை வழிநடத்திச் செல்லுமேயொழிய எக்காரணம் கொண்டும் மக்கள் பின் நடந்து செல்லும்படியான அடிமை வாழ்வில் உயிர் வாழாது என்பதேயாகும்.” ( பகுத்தறிவு - தலையங்கம் - 26.8.1934)

06.01.1935 இல் பகுத்தறிவு வார ஏடு நின்றுபோய் விடுகிறது. “பகுத் தறிவு” ஏட்டையும் அரசு விட்டுவைக்கவில்லை. பகுத்தறிவு வார இதழ் நின்று, மாத இதழாகவும் காலணா தினசரிப் பதிப்பாகவும் நடத்த முயன்றபோது பகுத்தறிவு இதழுக்கும் உண்மை விளக்கம் அச்சகத்துக்கும் இரண்டாயிரம் ரூபாய் பிணையத் தொகை கட்டவேண்டும் என்று 29.01.1935 இல் அரசு ஆணை பிறப்பித்தது. பிறகு மாத ஏடாக வெளிவரத் தொடங்கியது. 1935 இல் தொழி லாளர் தினமான மே முதல் நாளிலிருந்து பகுத்தறிவு மாத இதழாக பகுத்தறிவு நூற்பதிப்புக் கழகத்தின் சார்பில் வெளிவரத் தொடங்கியது.

01.06.1935 முதல் வாரம் இருமுறை இதழாக ‘விடுதலை’ வெளிவரத் தொடங்கியது. அப்போது ‘குடி அரசும்’ வார இதழாக வெளிவந்து கொண்டிருந்தது. 29.05.1937 இதழோடு விடுதலை வாரம் இருமுறை பதிப்பு நிறுத்தப்படுகிறது. 01.07.1937 முதல் ‘விடுதலை’ நாளேடாக வெளிவருகிறது. அதற்குமுன் ஜஸ்டிஸ் கட்சி சார்பில் ‘விடுதலை’ ஏடு வெளி வந்து பிறகு நின்றுபோய் இருந்தது குறிப்பிடத்தக்கது. பெரியார் இவ்வளவு அடக்கு முறைகளை எதிர்கொண்டே பத்திரிகைகளை நடத்தியுள்ளார்.

குடி அரசு : தோற்றத்தில் நிகழ்ந்த மாற்றங்கள்

பெரும்புரட்சிக்கு வித்திட்ட பெரியாரின் ‘குடி அரசு’ தொடக்க காலங் களில் பச்சை நிற அட்டையுடனே வெளிவந்தது. எனவே பச்சை அட்டைக் ‘குடி அரசு’ என்ற செல்லப் பெயரையும் வாசகர்கள் சூட்டினர். ‘குடி அரசு’ ‘கொங்கு நாடு’ எனும் பெயர்களில் பெரியார் 19.01.1923 லேயே பத்திரிக் கைக்கான பதிவை செய்துள்ளார் என்றாலும் சுமார் இரண்டு ஆண்டுகள் கழித்து 02.05.1925 அன்றுதான் முதல் இதழ் வெளிவந்தது. ( 2-5-25 சனிக்கிழமை. இனி ஞாயிறுதோறும் வெளிவரும் -அட்டை ) தொடர்ந்து ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் இதழ் வெளிவருகிறது.

ஆண்டின் முதல் இதழ், ஆசிரியர் பெயர் மாற்றம் பெற்றவை, மாற்றம் பெற்ற முகப்பு அட்டைகள் அந்தந்தத் தொகுதியில் இணைக்கப்பட்டுள்ளன. ஆண்டுக்கு ‘மாலை’ என்றும், இதழுக்கு ‘மலர்’ என்றும் பெயர் சூட்டப் பட்டிருக்கிறது.

முதல் பக்க அட்டையில் பாரதியார் பாடல் வரியுடன் தான் இதழ் தொடங்கியது.

“எல்லோரும் ஓர் குலம், எல்லோரும் ஓர் இனம்”

“சாதிகள் இல்லையடி பாப்பா”

என்ற பாடல்கள் அட்டையில் இடம் பெற்றுள்ளன. 08.11.1925 இதழ் அட்டை யில் பாரதி பாடல் வரிகள் நீக்கப்பட்டு,

பிறப்பொக்கு மெல்லா வுயிர்க்குஞ் சிறப்பொவ்வா

செய்தொழில் வேற்றுமை யான்.

ஒழுக்க முடைமை குடிமை யிழுக்க

மிழிந்த பிறப்பாய் விடும்.

என்ற குறள்கள் இடம்பெறுகின்றன. 18.04.1926 இதழில் குறள்கள் நீக்கப்பட்டு ‘மகாத்மா காந்தி வாழ்க! ’ என்ற முழக்கம் இடம்பெறுகிறது. அதே இதழில் அட்டையில் மாலை, மலருக்கு குறிக்கப்பட்ட தமிழ் எண்கள் நீக்கப்பட்டு நடைமுறையில் உள்ள எண்கள் குறிக்கப்பட்டுள்ளன. பக்கத்தின் எண்கள் மட்டும் தமிழ் எண்களால் குறிக்கப்பட்டுள்ளன. 20.11.1927 இதழில் ‘மகாத்மா காந்தி வாழ்க! ’ முழக்கம் போய் ‘கதர் வாழ்க! ’ முழக்கம் வருகிறது. 25.12.1927 இதழ் அட்டையில் எந்தப் படமும் இல்லாமல் வெளிவருகிறது. 25.12.1938 இதழ்வரை இந்நிலையே தொடர்கிறது. ‘ குடி அரசு’ எழுத்து வடிவம் மட்டும் மாறி மாறி வருகிறது. ஈரோட்டில் தொடங்கப்பட்டு வெளிவந்த குடி அரசு 16.06.1929 நாளிட்ட இதழிலிருந்து 29.12.1929 இதழ்வரை சென்னையிலிருந்து வெளி வருகிறது. 16.06.1929 இதழிலிருந்து பக்கத்தின் எண்களும் நடைமுறை எண்களாக குறிக்கப்படுகின்றன. 19.01.1930 முதல் மீண்டும் ஈரோட்டில் இருந்து வெளிவரத் தொடங்குகிறது. 19.11.1933 இதழோடு ‘குடி அரசு’ நிறுத்தப் படுகிறது. மீண்டும் 13.01.1935 இல் இருந்து ‘குடி அரசு’ வெளிவருகிறது. 13.01.1935 குடி அரசின் அட்டையில்,

எப்பொருள் யார்யார் வாய்க் கேட்பினும் - அப்பொருள்

மெய்ப் பொருள் காண்பதறிவு

எப்பொருள் எத்தன்மைத் தாயினும் - அப்பொருள்

மெய்ப் பொருள் காண்பதறிவு

என்ற குறள்கள் இடம்பெற்றுள்ளன. 25.12.1938 இதழ்வரை மேற்சுட்டிய குறள்கள் இடம் பெற்றுள்ளன.

குடி அரசு : ஆசிரியர், பதிப்பாளர் மாற்றங்கள்

‘குடி அரசு’ முதல் இதழின் ஆசிரியர்கள் ஈ.வெ.ராமசாமி நாயக்கர், வா.மு.தங்கப்பெருமாள் பிள்ளை ஆகியோர்ஆவர். 07.06.1925 இதழில் வா.மு.தங்கப்பெருமாள் பிள்ளையின் ‘சாதி’ப் பட்டம் நீங்குகிறது. 26.07.1925 இதழிலிருந்து ஈ.வெ.ராமசாமி நாயக்கர் மட்டுமே ஆசிரியராகிறார். 25.12.1927 இதழிலிருந்து ஈ.வெ.ராமசாமி நாயக்கர் பெயரிலுள்ள ‘சாதி’ப்பட்டம் நீங்குகிறது. 1931 இல் பெரியார் உலகப்பயணம் மேற்கொண்டதால் 01.11.1931 முதல் சாமி. சிதம்பரனார் ஆசிரியராகப் பொறுப்பு ஏற்கிறார். பயணம் முடிந்து ஈரோடு திரும்பும் வரையில் அப்பொறுப்பில் இருக்கிறார். 29.11.1931 குடி அரசு முதல் 19.11.1933 குடி அரசு வரை அட்டையில் ஆசிரியர் பெயர் இல்லாமல் இதழ் வெளிவருகிறது. 19.11.1933 இதழோடு இதழ் தற்காலிகமாக நிறுத்தப்பட்டு மீண்டும் 13.01.1935 முதல் வெளிவரத் தொடங்குகிறது. அப்போது ஆசிரியர் ஈ.வெ.கிருஷ்ணசாமி. 25.12.1938 வரை அவரே ஆசிரியராக நீடிக்கிறார்.

முதல் இதழின் பதிப்பாளரான க. அப்பையா 20.09.1925 இதழ்வரை பதிப்பாளராக இருக்கிறார். 27.09.1925 முதல் ஈ.வெ.ராமசாமி நாயக்கரும் 18.04.1926 முதல் சா. ராமசாமி நாயக்கரும் பிறகு 09.01.1927 முதல் ஈ.வெ.ரா. நாகம்மாளும் பதிப்பாளர் ஆகிறார்கள். குடி அரசு அலுவலகம் சென்னைக்கு மாறியது முதல் 16.06.1929 இதழில் இருந்து ஜே.எஸ்.கண்ணப்பர் பதிப்பாளர். மீண்டும் ஈரோட்டுக்கு அலுவலகம் மாறியதும் 19.01.1930 இதழில் இருந்து ஈ.வெ.ரா. நாகம்மாள் பதிப்பாளர் ஆகிறார். அவரது மறைவு வரை அவர்தான் பதிப்பாளர். 16.07.1933 இதழ் முதல் சா.ரா.கண்ணம்மாள் ( பெரியாரின் சகோதரி) பதிப்பாளர் ஆகிறார். 19.11.1933 வரை இவரே நீடிக்கிறார். 13.01.1935 இதழில் இருந்து ஆசிரியர் மற்றும் பதிப்பாளராக ஈ.வெ.கிருஷ்ணசாமி (பெரியாரின் சகோதரர்) வருகிறார்.

‘குடி அரசு’ இடையில் நிறுத்தப்பட்டதைத் தொடர்ந்து வெளிவந்த ‘புரட்சி’ வார ஏட்டுக்கு 26.11.1933 லிருந்து 28.01.1934 வரை சா.ரா.கண்ணம்மாள் அவர்களே பதிப்பாளராகத் தொடர்கிறார். முதல் நான்கு ‘புரட்சி’ இதழ்கள் அட்டையில் ஆசிரியர் பெயர் இல்லாமலேயே வெளி வருகிறது. 24.12.1933 ஒரு இதழில் மட்டும் ஆசிரியர் ஈ.வெ.ராமசாமி. 31.12.1934 முதல் ஈ.வெ.கிருஷ்ணசாமி ஆசிரியராகிறார். 04.02.1934 முதல் 17.06.1934 வரை ஈ.வெ.கிருஷ்ணசாமி பதிப்பாளராகிறார். பெரியார் தொடங்கிய ‘பகுத்தறிவு’ 26.08.1934 முதல் வார இதழாகவும், பிறகு மே 1935 முதல் மாத இதழாகவும் வெளிவருகிறது. பகுத்தறிவு வார இதழுக்கு ஆசிரியராகவும் பதிப்பாளரா கவும் ஈ.வெ. கிருஷ்ணசாமியே நீடிக்கிறார். பகுத்தறிவு மாத இதழுக்கு பொறுப் பாசிரியராக ஈ.வெ.கிருஷ்ணசாமியும் முதன்மை ஆசிரியராக பண்டிதர் சாமி. சிதம்பரனாரும் இருக்கின்றனர். பதிப்பாளர் பொறுப்பில் ஈ.வெ. கிருஷ்ண சாமியே நீடிக்கிறார்.

தலையங்கப் பக்கம் மாற்றங்கள்

தொடக்கத்தில் தலையங்கங்கள் இதழ்களின் நடுப்பக்கத்தில் வெளிவந் துள்ளன. 10.02.1935 (மாலை 9 - மலர் 27) முதல் 09.06.1935 (மாலை 9 - மலர் 44) முடிய உள்ள குடி அரசு இதழ்களில் மூன்றாம் பக்கத்தில் தலையங்கங்கள் வெளி வந்துள்ளன.

02.05.1925 (மாலை 1 - மலர் 1) முதல் இதழ் தலையங்கப் பக்கத்தில் கை இராட்டினமும்

பிறப்பொக்கு மெல்லா வுயிர்க்குஞ் சிறப்பொவ்வா

செய்தொழில் வேற்றுமை யான்.

ஒழுக்க முடைமை குடிமை யிழுக்க

மிழிந்த பிறப்பாய் விடும்.

வேலன்று வென்றி தருவது மன்னவன்

கோலதூஉங் கோடா தெனின் (குறள்)

என்ற மூன்று குறட்பாக்களும் இடம் பெற்றுள்ளன. 23.08.1925 இதழி லிருந்து குறள்கள் எடுக்கப்பட்டு கை இராட்டினத்துடன்

அனைத்துயிர் ஒன்றென் றெண்ணி

அரும்பசி யெவற்கும் ஆற்றி

மனத்துளே பேதா பேதம்

வஞ்சம் பொய் களவு சூது

சினத்தையும் தவிர்ப்பா யாகில்

செய்தவம் வேறொன் றுண்டோ

உனக்கிது உறுதியான

உபதேசம் ஆகும் தானே.

என்ற பாடல் இடம் பெறுகிறது. 08.05.1927 இதழில் “அனைத்துயிர் ஒன்றென்றெண்ணி” எடுக்கப்பட்டு கை இராட்டினம் மட்டுமே இடம் பெறுகிறது. 13.11.1927 இதழில் மீண்டும் “அனைத்துயிர் ஒன்றென்றெண்ணி” பாடல் இடம் பெறுகிறது. அவ்வப்போது ‘அனைத்துயிர் ஒன்றென்றெண்ணி’ என்ற பாடல் மட்டும் இடம் பெற்றும், கை இராட்டினம் மட்டும் இடம் பெற்றும், இராட்டினம் - பாடல் இரண்டும் இல்லாமலும் இதழ்கள் வெளி வந்துள்ளன.

10.08.1930 குடி அரசு இதழிலிருந்து “அனைத்துயிர் ஒன்றென் றெண்ணி” பாடலும் கை இராட்டினமும் தலையங்கப் பக்கத்தில் இடம் பெறவில்லை. 25.12.1938 இதழ் வரை இந்நிலை தொடர்கிறது.

வெளிவந்துள்ள இதழ்கள்

(அ) குடி அரசு (வார இதழ்)

மாலை - 1

02.05.1925 (மாலை 1 - மலர் 1 ) முதல் 25.04.1926 மாலை 1 - மலர் 48) முடிய 48 வாரம் மட்டுமே இதழ் வெளிவந்துள்ளது.

1. 04.10.1925 இல் வெளிவரவேண்டிய இதழ் அச்சுக்கூடம் மாற்றியக் காரணத்தால் வெளிவரவில்லை.

2. 21.02.1926 இல் வெளிவரவேண்டிய இதழ் அச்சு இயந்திரம் ஒடிந்து போனதால் வெளிவரவில்லை.

3. 04.04.1926 மற்றும் 11.04.1926 ஆகிய நாள்களில் வெளிவரவேண்டிய இதழ்கள் புதிய அச்சுக்கூடம் ஏற்பாடு செய்வதில் ஏற்பட்ட கால நீட்டத் தால் வெளிவரவில்லை.

மாலை - 2

02.05.1926 (மாலை 2 - மலர் 1 ) முதல் 24.04.1927 (மாலை 2 -மலர் 52) முடிய 52 வாரமும் இதழ் வெளிவந்துள்ளது.

மாலை - 3

01.05.1927 (மாலை 3 - மலர் 1 ) முதல் 22.04.1928 (மாலை 3- மலர் 52) முடிய 52 வாரமும் இதழ் வெளிவந்துள்ளது.

மாலை - 4

29.04.1928 (மாலை 4 -மலர் 1 ) முதல் 28.04.1929 (மாலை 4-மலர் 53) முடிய 53 வாரமும் இதழ் வெளிவந்துள்ளது.

மாலை - 5

05.05.1929 (மாலை 5 - மலர் 1 ) முதல் 27.04.1930 ( மாலை 5 - மலர் 48 ) முடிய 48 வாரம் மட்டுமே இதழ் வெளிவந்துள்ளது.

1. 05.01.1930 மற்றும் 12.01.1930 ஆகிய நாள்களில் வெளிவரவேண்டிய இதழ்கள் ‘குடி அரசு அலுவலகம் சென்னையிலிருந்து ஈரோட்டிற்கு மாற்றப் பட்டதால்’ வெளிவரவில்லை.

2. 26.01.1930 இல் வெளிவரவேண்டிய இதழ் ‘குடி அரசு அலுவலகம் சென்னையிலிருந்து ஈரோட்டிற்கு மாற்றப்பட்டு ஆட்சியர் அலுவலகத்தில் பதிவு (டிக்ளரேஷன்) ஆணை பெறுவதில் ஏற்பட்ட கால நீட்டத்தால்’ வெளி வரவில்லை.

மாலை - 6

04.05.1930 (மாலை 6 - மலர் 1 ) முதல் 26.04.1931 (மாலை 6 -மலர் 52) முடிய 52 வாரமும் இதழ் வெளிவந்துள்ளது.

மாலை - 7

03.05.1931 (மாலை 7 - மலர் 1) முதல் 24.04.1932 (மாலை 7- மலர் 52) முடிய 52 வாரமும் இதழ் வெளிவந்துள்ளது.

மாலை - 8

01.05.1932 (மாலை 8 - மலர் 1 ) முதல் 23.04.1933 (மாலை 8 -மலர் 52 ) முடிய 52 வாரமும் இதழ் வெளிவந்துள்ளது.

மாலை - 9

30.04.1933 (மாலை 9 -மலர் 1) முதல் 11.08.1935 (மாலை 9 - மலர் 53) முடிய 53 வாரமும் இதழ் வெளிவந்துள்ளது.

1. 21.05.1933 முதல் 09.07.1933 முடிய எட்டு வாரம் திரு. ஈ.வெ.ரா. நாகம் மாள் மறைவுக்குப்பின் பதிவு (டிக்ளரேசன்) மாற்ற வேண்டியதில் ஏற்பட்ட கால நீட்டத்தால் இதழ்கள் வெளிவரவில்லை.

2. 19.11.1933 இதழோடு குடி அரசு நிறுத்தப்பட்டு 13.01.1935 இல் தான் குடி அரசு மீண்டும் வெளிவருகிறது.

மாலை - 10

‘குடி அரசு’ ஒன்பதாவதாண்டு மாலை (மாலை 9) க்குப்பின் பதினோ ராவதாண்டு பதினோராவது மாலையாக (மாலை 11) வெளிவருகிறது. பத்தாவது ஆண்டில் ‘குடி அரசு’ வெளிவராத நிலையில் அக்காலத்தில் புரட்சி, பகுத்தறிவு இதழ்கள் வெளிவந்ததை பத்தாவதாண்டு பத்தாவது மாலையாக வைத்துக் கொண்டு பதினொராவது மாலை வெளிவருகிறது.

மாலை - 11

18.08.1935 (மாலை 11 - மலர் 1) முதல் 09.08.1936 (மாலை 11 - மலர் 52) முடிய 52 வாரமும் இதழ் வெளிவருகிறது.

மாலை - 12

16.08.1936 (மாலை 12 - மலர் 1) முதல் 08.08.1937 (மாலை 12 - மலர் 52) முடிய 52 வாரமும் இதழ் வெளிவருகிறது.

மாலை - 13

15.08.1937 (மாலை 13 - மலர் 1) முதல் 14.08.1938 (மாலை 13 - மலர் 52) முடிய 52 வாரமும் இதழ் வெளிவருகிறது.

28.11.1937 இல் வெளிவரவேண்டிய இதழ் - விடுதலை நாளேட்டுக்கு புதிய அச்சு இயந்திரம் பூட்டப்படுவதால் வெளிவரவில்லை.

மாலை - 14

21.08.1938 (மாலை 14 - மலர் 1) முதல் 25.12.1938 (மாலை 14 - மலர் 19) முடிய 19 வாரமும் இதழ் வெளிவருகிறது.

(ஆ) புரட்சி (வார இதழ்)

மாலை - 1

26.11.1933 (மாலை 1 - மலர் 1) முதல் 17.06.1934 (மாலை 1 - மலர் 30) முடிய 30 வாரம் மட்டுமே இதழ் வெளிவருகிறது. 17.06.1934 இதழோடு ‘புரட்சி’ நின்றுவிடுகிறது.

(இ) பகுத்தறிவு (வார இதழ்)

மாலை - 1

26.08.1934 (மாலை 1 - மலர் 1) முதல் 06.01.1935 (மாலை 1 - மலர் 20) முடிய 20 வாரம் இதழ் வெளிவருகிறது. 06.01.1935 இதழோடு ‘பகுத்தறிவு’ நின்றுவிடுகிறது.

(ஈ) பகுத்தறிவு (மாத இதழ்)

1935 மே மாதம் முதல் தேதியிலிருந்து ‘பகுத்தறிவு’ மாத இதழாக வெளிவருகிறது.

1935 மே .1 (மலர் 1 - இதழ் 1) முதல் 1938 திசம்பர் 1 (மலர்4 - இதழ் 8) முடிய எல்லா மாதமும் 44 இதழ் வெளிவந்துள்ளது.

1925 - 1938 வெளிவந்துள்ள இதழ்கள்

மொத்தம்

குடி அரசு - 637

புரட்சி - 30

பகுத்தறிவு (வா) - 20

பகுத்தறிவு (மா) - 44

மொத்தம் - 731

கிடைக்கப்பெறாத இதழ்கள்

1. 10.02.1925 ( மாலை 1 - மலர் 2 ) இரண்டாவது இதழின் முக்கிய ஆறு பக்கங்கள் கிடைக்கவில்லை.

2. 28.03. 1926 ( மாலை 1 - மலர் 46 ) இதழின் இரண்டு பக்கம் மட்டுமே கிடைத்துள்ளது.

3. 27.04.1930 (மாலை - 5 மலர் 48 ) இதழின் முக்கிய இரண்டு பக்கங்கள் கிடைக்கவில்லை.

முடிவாய் . . . .

‘குடி அரசு’ தொடங்கி 83 ஆண்டுகள் உருண்டோடி விட்டன. பத்தா யிரத்துக்கும் அதிகமான ‘குடி அரசு’ இதழ்கள் வாரந்தோறும் வெளிவந்து தமிழகத்தில் அதிர்ச்சி அலைகளை உருவாக்கின. சமூக வரலாற்றில் விடி வெள்ளியாய் வந்து உதித்த அந்த வரலாற்றுப் பெட்டகத்தை காலவரிசைப்படி தொகுப்பதற்கு நான்கு தலைமுறை இடைவெளி தேவைப்பட்டுள்ளது. இந்தக் கனவு நிறைவேறுமா என்ற கவலையுடன் தமிழின உணர்வாளர்கள், பெரியாரியலாளர்கள் எழுப்பி வந்த கேள்விக்கு இப்போதுதான் விடை கிடைத்துள்ளது. எத்தனையோ தடைகள், முட்டுக்கட்டைகள், மிரட்டல்களைக் கடந்து பெரியார் திராவிடர் கழகம் களத்தில் இறங்கியது. குடி அரசு இதழ் களை தமிழகம் முழுதும் தேடத் தொடங்கியது. இடைவிடா முயற்சிக்குப் பின்னும் எல்லா இதழ்களும் கிடைக்கப்பெறவில்லையே என்ற வேதனை நமக்கு உண்டு. எவ்வளவோ முயற்சித்தும் கிடைக்க பெறாத மூன்று இதழ் களின் சில பக்கங்களைத் தவிர அனைத்து குடி அரசு, புரட்சி, பகுத்தறிவு இதழ்களிலிருந்தும் பெரியாரின் கருத்துக் கருவூலங்களை முழுமையாகத் திரட்டி தொகுத்து நூலாக்கி எதிர்கால இளம் தலைமுறையிடம் பெரியார் திராவிடர் கழகம் ஒப்படைத்து இவ் வரலாற்றுக் கடமையை ஆற்றியதில் பெரும் மனநிறைவு கொள்கிறது.

- தொகுப்புக்குழு

Add comment


Security code
Refresh

Share this post

Submit to FacebookSubmit to Google PlusSubmit to TwitterSubmit to LinkedIn

புரட்சி மொழிகள்

"பார்ப்பான், சூத்திரன், பறையன் என்கிற ஜாதி அமைப்பு இருக்கிற வரையில் இந்த நாட்டில் ஒரு இஞ்ச் அளவுகூட முன்னேற்றம் காண முடியாது என்று உறுதியாகக் கூறுவேன்" - பெரியார்

தொடர்புக்கு

Periyar web version
கைப்பேசி: +919787313222
மின்னஞ்சல்:[email protected]

To Get Latest Articles

Enter your email address: