1925 மே திங்களில் பெரியார் ‘குடி அரசு’ இதழை தனது நண்பர் ஈரோடு வா.மு.தங்கப்பெருமாள்பிள்ளையையும் ஆசிரியராக உடன் இணைத்துக்கொண்டு தொடங்குகிறார். உடல் நலம் சீர்கெட்ட வா.மு.த 19.7.1925 இதழுடன் விலகிட பெரியார் மட்டுமே தொடர்ந்து நடத்துகிறார்.

2.5.1925 இல் திருப்பாதிரிப்புலியூர் ஞானியார் அடிகளைக்கொண்டு ‘குடி அரசு’ இதழை வெளியிட்ட பெரியார், சோவியத் புரட்சி நாளான நவம்பர் 7 ஆம் நாளைத் தேர்ந்தெடுத்து 1928 இல், ‘ரிவோல்ட்’ ( சுநஎடிடவ ) என்ற ஆங்கில வார ஏட்டைத் தொடங்கி 55 இதழ்கள் வரையும் வெளி யிட்டுள்ளார். 20.11.1933 இல் ‘புரட்சி’ என்ற வார ஏட்டைத் தொடங்கி சிறிது காலம் நடத்தியுள்ளார். அதன்பின் 15.3.1934 இல்‘பகுத்தறிவு’ என்ற நாளேட் டைத் தொடங்கி இரண்டு மாத காலத்தில் நிறுத்தி, அதையே தொடர்ந்து வார ஏடாகவும் 1.5.1935 முதல் மாத ஏடாகவும் ஏறத்தாழ நான்கு ஆண்டுகள் நடத்தியுள்ளார். 1.6.1935 இல் தென்னிந்திய நல உரிமைச் சங்கம் என்னும் நீதிக்கட்சியால் வாரம் இருமுறை ஏடாகத் துவங்கப்பட்ட ‘விடுதலை’ இரண் டாண்டுகள் கழித்து நாளேடாக மாற்றம் பெற்று இன்று வரை வெளிவருகிறது. 1970 ஜனவரியில் மாத ஏடாகத் தொடங்கப்பட்ட ‘உண்மை’ ஏடு இன்றுவரை மாதம் இருமுறை ஏடாக வெளிவருகிறது. 1971 செப்டம்பரில் துவங்கப்பட்ட ‘கூhந ஆடினநசn சுயவiடியேடளைவ’ என்ற ஆங்கில மாத ஏடும் இன்று வரை வெளி வருகிறது.

இவ்விதழ்களில் மிகவும் குறிப்பிடத்தக்கது ‘குடி அரசு’ ஆகும். தமிழ் இதழியல் வரலாற்றில் பெரும் சிந்தனைப் புரட்சியையும், தமிழ்நாட்டு மக்கள் வாழ்வியலில் பெரும் தாக்கத்தையும் உண்டாக்கிய பெருமை ‘குடி அரசு’க்கு உண்டு.

குடி அரசு ஏடு துவங்கப்பட்டபோது எல்லோரும் ஓர் குலம் எல்லோரும் ஓர் இனம்’, ‘சாதிகள் இல்லையடி பாப்பா’ போன்ற பாரதி பாடல்களும், தலையங்கப் பகுதியில் ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’, ‘ஒழுக்கமுடைமை குடிமை,’ ‘வேல்அன்று வென்றி தருவது’ ஆகிய குறள்களும்,

அனைத்துயிர் ஒன்றென் றெண்ணி

அரும்பசி எவர்க்கும் ஆற்றி........

 என்ற பாடலும் வெளியிட்டது. மக்கள் அனைவரும் சமம் என்னும் கோட்பாட்டை அவ்வேடு வலியுறுத்துவதாக அமைந்துள்ளது. முகப்பின் ஒரு பக்கத்தில் மசூதி, மாதா கோயில், இந்துக்கோயில் மூன்றும் பொறிக்கப் பட்டிருந்தாலும், `குடி அரசு’ துவங்கிய சில இதழ்களிலேயே மத மூட நம்பிக்கைகளை விமர்சனம் செய்யும் பகுத்தறிவுக் கட்டுரைகள் இடம்பெறத் துவங்கியுள்ளன.

ஏறத்தாழ எண்பது ஆண்டுகளுக்கு முந்தைய ‘குடி அரசு’ இதழ்கள் நமக்கு முழுமையாகக் கிடைப்பது அரிதாகவே உள்ளது. அவை அச்சேறி வெளிவந்தால்தான் பெரியாரைச் சரியாகப் புரிந்து கொள்ள முயல்வோ ருக்கும், பெரியார் ஆய்வாளர்களுக்கும், பெரியார் ஆர்வலர்களுக்கும் பெரியாரின் உருமலர்ச்சி - வளர்ச்சியை மட்டுமின்றி, அன்றைய சமுதாய, அரசியல் சிக்கல்களையும் புரிந்துகொள்ளப் பேருதவியாக இருக்கும். 1983 இல் பல பெரியார் பற்றாளர்கள் ஒரு குழுவாக இணைந்து, தொடர்ந்து மூன்று கோடைவிடுமுறைகளில் பணியாற்றி, ‘குடி அரசு’ இதழ்களில் இருந்து, பெரியார் எழுதியதாக அவர்கள் கருதிய கட்டுரைகள், இதழில் வெளிவந்த பெரியாரின் சொற்பொழிவுகள், இரங்கலுரைகள் ஆகியவற்றைத் தொகுத்து கையெழுத்துபடி எடுத்து, திராவிடர்கழகத் தலைமையிடம் ஒப்படைத்துள் ளனர். ( காண்க : பிற்சேர்க்கை ஐ, ஐஐ, ஐஐஐ )

ஆனால், என்ன காரணத்தாலோ அவை இதுவரை அச்சேற்றப் படாம லேயே கிடந்து போய்விட்டது.

இந்நிலையில் தொகுக்கப்பட்ட அக்கட்டுரைகளின் படிகள் எங்களுக் குக் கிடைத்தன. கிடைத்த கட்டுரைகளில் சில முழுமையாக இல்லாதிருந் ததையும் நாங்கள் உணர்ந்தோம். எப்படி இருப்பினும் அவற்றை அச்சு வடிவில் வெளிக்கொணர வேண்டும் என்ற ஆவல் எங்களிடம் மேலோங்கி நின்றது.

எழுதியவர் பெயர் குறிப்பிடாமல் எழுதப்பட்டிருந்த அக்கட்டுரை களில் எவை எவை பெரியாரால் எழுதப்பட்டவையாக இருக்கலாம் என்பதை நாங்களாகவே எழுத்து நடை, வாதிடும் முறை, வெளிப்படும் உணர்வு ஆகிய வற்றை வைத்து ஊகித்து, தொகுத்து எழுதப்பட்டிருந்தவற்றில் சிலவற்றை நீக்கி விட்டோம். மற்றபடி தொகுத்து எழுதியிருந்தவற்றை அப்படியே அச்சேற்றியதன்றி நாங்கள் எவ்வித ஒப்பீடும், ஆய்வும் , தேடலும் செய்யவில்லை என்பதை வெளிப்படையாகவே கூறிக்கொள்கிறோம். ‘அரசியல் நிலை’ என்ற தலைப்பில் எழுதப்பட்டுள்ள மூன்று தலையங் கங்கள், ‘ஸ்ரீமான் பி.தியாகராயச் செட்டியார் மரணம்’ என்ற இரங்கல் செய்தி ஆகியவற்றின் எழுத்து நடையையும், பொருளடக்கத்தையும் கருதிப்பார்க் கிறபோது யார் எழுதியது என்பதில் அய்யமுள்ளது. மேலும் ‘குடி அரசு’ இதழ் தொடக்க விழாவில் திருப்பாதிரிப்புலியூர் ஞானியார் அடிகள் ஆற்றிய உரையையும், இதழியல் அறநெறியைச் சுட்டிக்காட்ட, சுதேசமித்திரனுக்கு எழுதி அதில் வெளியிடப்படாத கோவை திரு.ஏ.சண்முக சுந்தரம்பிள்ளை என்பாரின் மறுப்புக் கடிதத்தையும் படிப்போர் அறியவெனத் தந்துள்ளோம்.

 எனவே, தொகுப்பு முழுமையான தொகுப்பு என்று எங்களால் உறுதிபடக்கூறமுடியாவிட்டாலும், எங்களின் இம்முயற்சி ஒரு முழுமையான தொகுப்பில் முடியாதா என்ற ஏக்கமும், முடியவேண்டும் என்ற ஆசையும், முடியும் என்ற நம்பிக்கையும் எங்களுக்கு உறுதியாக உண்டு.

ஓலைச்சுவடிகளாக இருந்த தமிழ் நூல்களெல்லாம் அழிந் தொழி வதைக் கண்டு அவற்றை அச்சு வடிவில் கொண்டுவர வாழ்நாள் முழுவ தையும் ஒப்படைத்துக்கொண்டவரும், உ.வே.சாமிநாத அய்யர் பிறப்பதற்கு ஓராண்டுக்கு முன்பாகவே தமிழிலக்கியப் பதிப்புகளை வெளிக் கொண்டு வரத் தொடங்கிவிட்டவருமான அறிஞர் சி.வை. தாமோதரனார்

`` நல்ல தமிழ் நூல்களுக்கு வந்த விதியையும், கையெழுத்துப் பிரதிகளின் கதியையும் அவை அடைந்திருக்கும் ஸ்திதியையும் பார்த்துச் சகிக்க முடியாமையொன்றே என்னை இத்தொழிலில் வலிப்பது``

“...................... ஆதலால், பண்டிதர், கவிராஜபண்டிதர், மகாவித்துவான், புலவர் என்றின்ன பெரும் பட்டச்சுமையைத் தலைமேலேற்றிக் கொள்ளாது இன்னும் பலகாலந் தமிழ் படித்தற்கு உரிமை பூண்டு நிற்கும் என் போலியரே இதில் கையிடுவது பேரவசியமாயிற்று”என்று ஓர் பதிப்புரையில் கூறியிருப் பதுவும்,

தமிழர் உரிமை மீட்பர் பெரியார் `` .......... அந்தத் தொண்டு செய்ய எனக்கு யோக்கியதை இருக்கிறதோ இல்லையோ, இந்த நாட்டில் அந்தப்பணி செய்ய யாரும் வராததினால், நான் அதை மேற்போட்டுக் கொண்டு தொண் டாற்றி வருகிறேன்.......`` என்று கூறுவது போலவேதான் எங்கள் முயற்சியும் என்பதைத்தான் இந்த நிலையில் நாங்கள் கூறிக்கொள்ள முடியும்.

1925 நவம்பர் இறுதிவரை பெரியார் காங்கிரஸ் கட்சியில் - தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் செயலாளராக இருந்தார் என்பதை மனதில் நிறுத்திக் கொண்டு படித்தால் பெரியாரை இன்னும் சரியாகப் புரிந்துகொள்ளமுடியும்.

‘குடி அரசு’ ஏட்டிலிருந்து இவற்றை எடுத்து எழுத தங்களது மூன்று கோடை விடுமுறைகளை எவ்வித எதிர்பார்ப்புமில்லாமல் செலவிட்டு பெரியார் சிந்தனைகளை வெளிக்கொணர்வது மட்டுமே தங்கள் எதிர்பார்ப்பு என்ற உயரிய நோக்கத்தோடு உழைத்த அந்த உயர்ந்த உள்ளங்களுக்கும், ( காண்க : பிற்சேர்க்கை ஐ ) எடுத்து எழுதப்பட்ட ‘குடி அரசு’ கட்டுரைகளின் படியை, அணுகிக்கேட்டவுடன் தயங்காது எங்களுக்குக் கொடுத்துதவிய தஞ்சை வழக்குரைஞர் தோழர் இரா.பாண்டியன் அவர்களுக்கும், கணினி யாக்கம் செய்துகொடுத்த சின்னாளப்பட்டி தோழர் தி. தாமரைக்கண்ணன் அவர்களுக்கும், கட்டுரைகளை வகைப்படுத்தி முழுவடிவமாக்கியும், மெய்ப்பு பார்த்து பிழை திருத்தியும் இரவுபகல் பாராது உழைத்துதவிய மேட்டூர் தோழர் ப. தமிழ்க்குரிசில் அவர்களுக்கும், அவருக்குதவிய மேட்டூர் கழகத் தோழர்களுக்கும், மேலட்டையை வடிவமைத்துக் கொடுத்த தோழர் யாக்கன் அவர்களுக்கும், அழகுற அச்சிட்டுக்கொடுத்த மதுரை அன்பு அச்சகத்தாருக்கும் எங்கள் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள் கிறோம்.

இதையொத்த தொகுப்புகளைத் தொடர்ந்து வெளியிடத் திட்டமிட் டுள்ள எங்களுக்குப் பெரியாரின் எழுத்துக்கள், சொற்பொழிவு ஒலிப் பேழைகள் உள்ளவர்கள் அனுப்பியும், குறைகளைச் சுட்டியும், நூல்களை வாங்கியும் ஊக்குவிக்குமாறு அன்புடன் வேண்டுகிறோம்.

தோழமையுடன்,

கொளத்தூர் தா. செ. மணி

தலைவர்,

தந்தை பெரியார் திராவிடர் கழகம்

நாள் : 29. 11. 2003

குடி அரசு தோற்றம் கொண்ட காலம்

1925 மே மாதம் டிசம்பர் வரை எட்டு மாதங்கள் அந்த இதழ் பதிவு செய்துள்ள பெரியாரின் எழுத்தும் பேச்சும் அடங்கிய தொகுப்புதான் உங்கள் கரங்களில் தவழ்கிறது. இதே போன்று ஒரு தொகுதியை 2003 ஆம் ஆண்டிலேயே பெரியார் திராவிடர் கழகம் சேலத்தில் நடத்திய தமிழர் வழி பாட்டுரிமை மாநாட்டில் வெளியிட்டதைக் குறிப்பிட விரும்புகிறோம். பெரியாரின் எழுத்து பேச்சுக்களை காலவரிசைப்படி தொகுத்து வெளிச் சத்துக்குக் கொண்டுவந்து விட வேண்டும் என்ற எமது பெரும் வேட்கையில் எழுந்த முதல் முயற்சி என்றே கூறலாம். தொடர்ந்து 2005 ஆம் ஆண்டில் 1926 ஆம் ஆண்டு குடி அரசு பதிவுசெய்த பெரியாரின் எழுத்து, பேச்சுகளை இரண்டு தொகுதிகளாக வெளிக்கொண்டு வந்தோம். அதன் பிறகே மற்றொரு புதிய சிந்தனைக்கு வந்தோம். ஒவ்வொரு ஆண்டாக அவ்வப்போது தொகுதி களை வெளியிடுவதை விட ஒரு காலகட்டத்தை நிர்ணயித்து பெரியாரின் எழுத்துப் பேச்சுகளைத் தொகுத்து காலவரிசைப்படி ஒரே நேரத்தில் வெளி யிடலாம் என்பது தான் அந்த சிந்தனை. அதன்படி சுயமரியாதைக் கொள்கை களைப் பரப்புவதில் பெரியார் முழுவீச்சில் களமிறங்கிய 1925 முதல் 1938 வரையிலான காலத்தைத் தேர்வு செய்தோம்.

இந்தப்பணியின் சுமை எங்களுக்குத் தெரிந்தே இருந்தது. ஆயினும் கடமையில் இறங்கினோம். வரலாற்றின் போக்கினைத் திருப்பிய ஒரு தலைவருக்கு முறையான வரலாற்றுப் பதிவுகளே இல்லாத அவல - சோகச் சூழலில் எங்களின் தேடுதல் முயற்சிகள் தொடங்கின. எங்கெங்கே எவரிட மெல்லாம் இந்த வரலாற்றுப் புதையல் புதைந்திருக்கிறதென்பதைக் கண்டறிய முயற்சித்த போது நம்பிக்கை ஒளி பளிச்சிட்டது. உண்மைப் பெரியாரியலா ளர்கள் பலரும் காலம் காலமாகப் பாதுகாத்து வைத்திருந்த அந்த அறிவுச் சொத்துக்களை ஆர்வமுடன் கையளித்து எங்கள் பணிக்கு ஊக்கமும் உற்சாகமும் அளித்தபோது நாங்கள் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.

சேலத்தில் 2003 இல் நாங்கள் வெளியிட்ட குடி அரசு முதல் தொகுப் பில் இடம் பெற்றிராத பல கட்டுரைகள் இந்தத் தொகுப்பில் இணைக்கப்பட்டி ருப்பதைச் சுட்டிக்காட்ட விரும்புகின்றோம். எங்கள் முதல் முயற்சியில் இடம்பெற்ற கட்டுரைகள் அனைத்தும் 1980 களில், பெரியாரியல் சிந்தனை யாளர்கள் பலரின் கூட்டுழைப்பால் அவர்களுக்கு அப்போது கிடைத்த குடி அரசு இதழ்களிலிருந்து மட்டும் தொகுத்தவைதான். அதன்பிறகு தேடி சேகரிக்கப்பட்ட பல குடி அரசு இதழ்களிலிருந்து கிடைத்த கட்டுரைகளை இந்தத் தொகுதியில் இணைத்திருப்பதால் இதன் பக்கங்களும் கட்டுரைகளும் அதிகரித்துள்ளன. 2003 இல் வெளியிட்ட முதற் பதிப்பின் பக்கங்கள் 248 இப்போது உங்கள் கரங்களில் தவழும் இந்தத் தொகுப்பின் பக்கங்கள் 488 விடுபடுதல் இருந்துவிடக்கூடாது என்ற துடிப்போடு எம்மால் இயன்றவரை திரட்டிய கட்டுரைகள் இதில் அடங்கியுள்ளன.

தமிழின உணர்வாளர்களும், சிந்தனையாளர்களும், ஆய்வாளர்களும் காலவரிசையில் வெளிவரும் இக்காலப்பெட்டகத்தைக் கால வரலாற்றுச் சூழலோடு இணைத்துப் பரிசீலிக்கப் பெரிதும் உதவும் என்று நம்புகிறோம்.

- பதிப்பாளர்

Add comment


Security code
Refresh

Share this post

Submit to FacebookSubmit to Google PlusSubmit to TwitterSubmit to LinkedIn

புரட்சி மொழிகள்

"பார்ப்பான், சூத்திரன், பறையன் என்கிற ஜாதி அமைப்பு இருக்கிற வரையில் இந்த நாட்டில் ஒரு இஞ்ச் அளவுகூட முன்னேற்றம் காண முடியாது என்று உறுதியாகக் கூறுவேன்" - பெரியார்

தொடர்புக்கு

Periyar web version
கைப்பேசி: +919787313222
மின்னஞ்சல்:[email protected]

To Get Latest Articles

Enter your email address: