ஜஸ்டிஸ் கட்சி தலைவர் பொப்பிலிராஜா அவர்களும் மற்றும் சில ஜஸ்டிஸ் கட்சி பிரமுகத் தலைவர்களும், தோழர்கள் ஆர்.கே. ஷண்முகம், ஈ.வெ. ராமசாமி, W.P.A சௌந்திரபாண்டியன் ஆகிய சுயமரியாதை இயக்கப் பிரமுகர்களும் சென்ற வாரம் மூன்று நான்கு நாள் தொடர்ந்து பொப்பிலிராஜா வீட்டில் ஜஸ்டிஸ் கட்சி வேலைத் திட்டத்தைப் பற்றியும், பத்திரிகைகளைப் பற்றியும், தோழர் ஈ.வெ. ராமசாமி கொடுத்திருந்த வேலைத் திட்டத்தைப்பற்றியும், சுயமரியாதை இயக்கத்துக்கும் ஜஸ்டிஸ் கட்சிக்கும் உள்ள சம்பந்தா சம்பந்தத்தைப் பற்றியும் கலந்து ஆலோசித்தார்கள்.

சில வாசக திருத்தத்தோடு தோழர் ஈ.வெ.ரா. தீர்மானங்களை ஒப்புக் கொண்டு நிர்வாக கமிட்டிக்கு வைப்பதாக முடிவு செய்திருக்கிறது. அடுத்த மாதம் முதல் மாதம் ஒரு ஜில்லா மகாநாடு கூட்டுவதென்றும், ஜஸ்டிஸ் கட்சியின் வேலைத் திட்டத்தையும் அதற்குள்ளாகவே முடிவு செய்து அம்மகாநாடுகளில் பிரசாரம் செய்து தீர்மானிக்கச் செய்ய வேண்டும் என்றும் தீர்மானித்தார்கள்.

தோழர் ஈ.வெ. ராமசாமி தெரிவித்தது போல் தமிழ் தெலுங்கு முதலிய சுய பாஷை பத்திரிகைகள் ஆரம்பிக்க திட்டம் போடப்பட்டது. மத்திய ஸ்தாபனமும் பிரசார வேலையும் ஏற்படுத்தவும், செய்யவும் யோசிக்கப்பட்டது.

இங்கிலீஷ் பத்திரிகையையும் புதிய முறையில் சுலப விலையில் வெளிப்படுத்த உத்தேசிக்கப்பட்டது.

ஈ.வெ.ரா. தீர்மானம்

வாசகங்களைப் பொறுத்தவரை சில திருத்தங்களைச் செய்ததோடு அத் திட்டங்களை மூன்று தலைப்பாகப் பிரித்து அதாவது பொருளியல், சமுதாய இயல், அரசியல் என்பதாகப் பிரித்து அவைகள் தனித்தனி தலைப்பின் கீழ் திருத்தி அமைக்கப்பட்டிருக்கிறது. அதாவது:

பொருளியல்

1. விவசாயிகளைக் கடன் தொல்லையில் இருந்து விடுவிக்கவும், மேலால் கடனால் கஷ்டப்படாமலிருக்கவும் ஆன காரியங்களை கடனுக்காக பூமியை கடன்காரர் கைப்பற்றாதிருக்கச் செய்வது முதலிய மார்க்கங்களை கொண்டு சட்ட மூலமாகவும் வேறு முறைகள் மூலமாகவும் கூடுமானதையெல்லாம் செய்ய வேண்டும்.

2. அனியாய வட்டி லேவாதேவிக்காரர்களால் விவசாயிகளுக்குக் கஷ்டம் நேரிடாமல் இருக்கும்படி கோவாப்ரேட்டிங் பாங்கிகளையும், லேண்ட் மார்ட்டிகேஜ் (பூமி அடமான) பாங்கிகளையும் விஸ்தரிக்க வேண்டும். இந்தப் பாங்கிகளின் நிர்வாகம் சர்க்கார் அதிகாரிகளாலேயே நடைபெறச் செய்ய வேண்டும்.

3. விவகாரங்களைக் குறைப்பதற்காக முக்கியமாய் சொத்துக்கள் விஷயத்தில் சர்க்காரே தெளிவான ரிக்கார்டுகள் வைக்க வேண்டும். இப்பொழுது அமுலில் இருந்து வரும் "நிமித்திய மாத்திரம் எழுதி வைக்கப்பட்டது" என்கின்ற (ஆஞுணச்ட்டி) வாதத்தை சர்க்கார் கோர்ட்டுகளில் இனி செல்லுபடியற்றதாக்க வேண்டும்.

4. விவசாயக்காரர்கள் விளைவின் பயனை அனுபவிக்காமல் தடுக்கும் தரகர் மத்திய வியாபாரிகள் ஆகியவர்களை விலக்குதல் செய்து விளை பொருள் சாமான்களை வாங்குபவர்களுடன் நேரில் கலந்து கொள்ளத் தக்க ஸ்தாபனங்கள் ஏற்படுத்தி நல்ல விலையை விவசாயிகளே பெறும்படியாக செய்ய வேண்டும்.

5. பொது ஜனங்களுடைய உபயோகத்துக்காக இருந்து வரும் ரயில்வே, தந்தி தபால், தண்ணீர் சப்ளை, எலக்ட்ரிசிடி முதலியவைகளை சர்க்கார் எப்படி நிர்வகித்து வருகிறார்களோ, அந்த முறையே இனியும் மற்ற காரியங்களுக்கும் உபயோகப்படுத்தி எப்போதும் சர்க்காராலேயே நடந்து வரும்படி செய்ய வேண்டும்.

6 . இன்ஷûரன்ஸ் விஷயத்தில் சர்க்கார் உத்தியோகஸ்தர்களுக்கு சர்க்கார் செய்து கொடுத்திருக்கும் சவுகரியத்தை அதாவது போஸ்ட் ஆபிசைப் போல் மற்ற ஜனங்களும் அடையும்படியாகச் செய்ய வேண்டும்.

சமுதாய இயல்

1. ஒரு குறிப்பிட்ட காலத்துக்குள் எல்லா மக்களுக்கும் படிப்பு ஏற்படும்படி செய்துவிட வேண்டும்.

2. ஒரு குறிப்பிட்ட காலத்துக்குள் மதுபானம் ஒழியும்படி சட்ட மூலமாகவே செய்ய வேண்டும்.

3. தீண்டாமைக்குச் சட்டத்திலாவது அரசியல் நிர்வாகத்திலாவது இடமே இருக்கக் கூடாது.

4. பெண்களுக்கு அரசியல் நிர்வாகத்தில் ஆண்களைப் போலவே உத்தியோகமும் பிரதிநிதித்துவமும் வகிக்க வசதி ஏற்படுத்த வேண்டும்.

5. தொழிலாளர்களின் வேலை நேரத்தைக் குறைத்து வேலையில்லாத் திண்டாட்டத்தைக் குறைப்பதோடு அவர்களுடைய சவுகரியங்களைத் தாராளமாய் கவனித்து அவற்றிக்குக் குறையாத வரும்படி கிடைக்கும்படி நிர்ணயப்படுத்திவிட வேண்டும்.

அரசியல்

1. உத்தியோகங்களில் நமது மாகாணத்தில் உள்ள எல்லா வகுப்பார் களையும் அவர்களது எண்ணிக்கையையும் கவனித்து தக்கபடி பிரதிநிதித்துவமும் உத்தியோகமும் கிடைக்கும்படி செய்ய வேண்டும்.

2. தற்கால நிர்வாக முறையானது மக்களுக்கு மிகவும் பாரமாக இருப்பதால் நியாயமான செலவில் திறமையான நிர்வாகத்தை அமைக்க முயல வேண்டியதோடு சம்பளங்களை இந்தியர் சராசரி வாழ்க்கையையும் இந்திய பொருளாதார நிலைமையும் கவனித்து ஏற்படுத்த வேண்டும்.

3. வரிப்பளுவை மக்களுக்குச் சம பாகமாக, பங்கிடுவதற்கு நில வருமானத்தையும், பொருள் சம்பாதனையையும் பொறுத்து வரி விதிப்பதில் ஒரு படிப்படியான விகிதாச்சார முறையை அமுலுக்குக் கொண்டு வரவேண்டும்.

ஒரு குறிப்பிட்ட குறைந்த வரும்படி உள்ளவர்கள் விஷயத்தில் நில வரியையும் ரொக்க வருமான வரியையும் தள்ளுபடி செய்ய வேண்டும்.

4. முனிசிபாலிட்டி, லோக்கல் போர்ட், கோவாப்ரேட்டிவ் முதலிய ஸ்தாபனங்களுக்கு இன்னும் அதிகமான வேலைகளைச் செய்ய சந்தர்ப்பம் அளிக்கப்பட வேண்டும். அதன் நிர்வாகங்கள் ஸ்டேட் உத்தியோகஸ்தர்களாலேயே நடைபெற வேண்டும்.

5. இந்தக் காரியங்கள் நடைபெறும் பொருட்டு அவசியமான இடத்தில் சட்டம் செய்வதோடு இக் கொள்கைகளை பொது ஜனங்களுக்கு விளங்கும்படி பிரசாரம் செய்ய வேண்டும்.

இந்தப்படியான வாசகங்களால் திருத்தி அமைக்கப்பட்டு தோழர்கள், ஆர்.கே.ஷண்முகம், W.P.A சவுந்தரபாண்டியன் முதலிய சுயமரியாதை இயக்கத் தலைவர்களுடையவும் மற்றும் பல ஜஸ்டிஸ் கட்சிப் பிரமுகர்களுடையவும் சம்மதத்தைப் பெற்று கட்சித் திட்டமாய் ஒப்புக் கொள்ள சிபார்சு செய்து நிர்வாக சபைக்கு வைக்கப்பட்டு விட்டது.

குடி அரசு தீர்மானங்கள் 10.02.1935

Add comment


Security code
Refresh

Share this post

Submit to FacebookSubmit to Google PlusSubmit to TwitterSubmit to LinkedIn

புரட்சி மொழிகள்

"பார்ப்பான், சூத்திரன், பறையன் என்கிற ஜாதி அமைப்பு இருக்கிற வரையில் இந்த நாட்டில் ஒரு இஞ்ச் அளவுகூட முன்னேற்றம் காண முடியாது என்று உறுதியாகக் கூறுவேன்" - பெரியார்

தொடர்புக்கு

Periyar web version
கைப்பேசி: +919787313222
மின்னஞ்சல்:pwversion@gmail.com

To Get Latest Articles

Enter your email address: