விருதுநகரில் ராமநாதபுரம் ஜில்லா முதலாவது ஜஸ்டிஸ் மகாநாடு சென்ற மார்ச் மாதம் 30, 31 தேதிகளில் திவான் பகதூர் ஏ. ராமசாமி முதலியார் அவர்கள் தலைமையில் நடந்த மகாநாடு

தோழர் ஈ.வெ. ராமசாமி தீர்மானங்கள்

1. விவசாயிகளை கடன் தொல்லையிலிருந்து விடுவிக்கவும், அவர்கள் மேலால் கடன்காரராகி கஷ்டப்படாமல் இருக்கவும் வேண்டிய காரியங்களை கடனுக்காக கடன்காரர்கள் பூமியை கைப்பற்ற முடியாமல் செய்வது முதலிய மார்க்கங்களைக் கொண்டு சட்ட மூலமாகவும் வேறு முறைகள் மூலமாகவும் கூடுமானதை எல்லாம் செய்ய வேண்டும்.

2. அனியாய வட்டி லேவாதேவிக்காரர்களால் விவசாயிகள் அழிந்து போகாமல் இருக்கும்படி கூட்டுறவு நாணைய ஸ்தாபனங்களையும், நில அடமான பாங்குகளையும் தாராளமாக பெருக்கவேண்டும். நில அடமான பாங்கை மாகாணம் பூராவும் நல்ல அமைப்பில் ஏற்படுத்தி அதை ராஜாங்கத்தாரே நடத்த வேண்டும்.

3. சொத்து உரிமை சம்பந்தமாக விவகாரங்களைக் குறைப்பதற்காக சொத்து பாத்தியங்களைக் குறிப்பிடத்தகுந்த தெளிவான ஆதாரங்களை சர்க்காரார் வைத்திருக்க வேண்டும். அன்றியும் நிமித்த மாத்திரமாகவும் மலரணையாகவும் எழுதி வைக்கப்பட்டது என்று எதிர் வழக்கு வாதாடும் (ஆஞுணச்ட்டி) முறையை இல்லாமல் செய்ய வேண்டியதோடு அப்படிப்பட்ட வாதங்களை கோர்ட்டுகளில் ஒப்புக் கொள்ளாமல் இருக்கும்படியும் ஏற்பாடுகள் செய்துவிட வேண்டும்.

4. விவசாயக்காரர்கள் விளைவின் பயனை அனுபவிக்காமல் தடுக்கும் தரகர் மத்திய வியாபாரிகள் ஆகியவர்களை விலக்குதல் செய்து விளைபொருள் சாமான்களை வாங்குபவர்களுடன் நேரில் கலந்து கொள்ளத்தக்க ஸ்தாபனங்கள் ஏற்படுத்தி நல்ல விலையை விவசாயிகளே பெறும்படியாக செய்ய வேண்டும்.

5. பொது ஜனங்களுடைய உபயோகத்துக்காக இருந்து வரும் ரயில்வே, தந்தி தபால், தண்ணீர் சப்ளை, எலக்ட்ரிசிட்டி முதலியவைகளை சர்க்கார் எப்படி நிர்வகித்து வருகிறார்களோ, அந்த முறையே இனியும் மற்ற காரியங்களுக்கும் உபயோகப்படுத்தி எப்போதும் சர்க்காராலேயே நடந்து வரும்படிச் செய்ய வேண்டும்.

6. இன்ஷûரன்ஸ் விஷயத்தில் சர்க்கார் உத்தியோகஸ்தர்களுக்கு சர்க்கார் செய்து கொடுத்திருக்கும் சவுகரியத்தை அதாவது போஸ்ட் ஆபீசைப் போல் மற்ற ஜனங்களும் அடையும்படியாகச் செய்ய வேண்டும்.

7. தேசப் பொது மக்களின் வாழ்க்கை நிலையை உயர்த்தவும், அதற்கேற்ற வரும்படி கிடைக்கும்படி வரும்படி விகிதத்தை நிர்ணயிக்கவும் முயற்சி எடுத்துக் கொள்ள வேண்டும்.

8. 10 வருஷ காலத்துக்குள் சகல மக்களுக்கும் ஆரம்பப் படிப்பு ஏற்படும்படி செய்து விட வேண்டும்.

9. மதுபானம் ஒழியும்படியாக கூடிய முயற்சிகளையும், சட்டங்களையும் செய்துவிட வேண்டும்.

10. மனித சமூகத்தில் இருந்து வரும் தீண்டாமையையும், பிறவிக் காரணமாக உள்ள வித்தியாசக் கொடுமைகளையும் அடியோடு ஒழித்துவிட வேண்டும்.

11. பெண்களுக்கு அரசியலில் ஆண்களைப் போல் எல்லா உத்தியோகங் களையும் அடைய சுதந்திரமும் கவுரவ ஸ்தாபனங்களில் சரி பிரதிநிதித் துவமும் கிடைக்கும்படி செய்ய வேண்டும்.

12. அரசியல் உத்தியோகங்கள் இந்த மாகாணத்தில் உள்ள எல்லா வகுப்பார் களுக்கும் அவரவர்கள் ஜனத்துகை பெருக்கத்துக்குத் தக்கபடியும் அரசியல் லக்ஷியத்துக்குத் தக்கபடியும் கிடைக்கும்படியாக செய்ய வேண்டும்.

13. பூமி வரி விதிக்கும் முறையானது எல்லா மக்களுக்கும் சமமான வரிப் பளுவாய் இருக்கும்படியாகவும், அவசியமான இடங்களில் விலக்கு செய்யும்படியானதாகவும் மாற்றி அமைக்க வேண்டும். (அதாவது ஏழைக் குடியானவர்களுக்கு கொஞ்ச விகிதமும் இருக்க வேண்டும்.)

14. முனிசிபாலிட்டிகளுக்கும், கூட்டுறவு ஸ்தாபனங்களுக்கும், ஜனங் களுக்கும் இன்னும் அதிகமான காரியங்கள் செய்யும்படியான சுதந்திரங்கள் கொடுத்து அவைகளை சர்க்கார் அதிகாரிகளின் மேல் பார்வையில் நடைபெறச் செய்ய வேண்டும்.

15. தற்கால நிர்வாக முறையானது மக்களுக்கு மிகவும் பாரமாக இருப்பதால் நியாயமான செலவில் திறமையான நிர்வாகத்தை அமைக்க முயல வேண்டியதோடு சம்பளங்களை இந்தியர் சராசரி வாழ்க்கையையும் இந்திய பொருளாதார நிலைமையையும் கவனித்து ஏற்படுத்த வேண்டும்.

16. இந்தக் காரியங்கள் நடைபெறும் பொருட்டு அவசியமான இடத்தில் சட்டம் செய்வதோடு இக் கொள்கைகளை பொது ஜனங்களுக்கு விளங்கும்படி பிரசாரம் செய்ய வேண்டும்.

17. ஜில்லா போர்டார்களும், முனிசிபாலிட்டியாராலும் நியமிக்கப்படும் எல்லா உத்தியோகங்களுக்கும் வகுப்புவாரி பிரதிநிதித்துவம் முறைப்படியே நியமிக்க வேண்டுமென்ற சட்டசபை தீர்மானத்தை இம்மகாநாடு ஆதரிக்கிறது.

18. இது சம்பந்தமாக மந்திரியாரால் ஏற்பாடு செய்து வெளியிட்டிருக்கிற விதிகளை உறுதியாக்க வேண்டுமென்று அரசாங்கத்தாரைக் கேட்டுக் கொள்ளுகிறது.

19. மற்றும் நீதி இலாக்காவிலும், குறிப்பாக ஐகோட்டாரால் நியமிக்கப் படும் உத்தியோகங்களிலும், நீதி ஸ்தலங்கள் மூலம் ஏற்படுத்தும் உத்தியோகங்களிலும் கோர்ட்டாவ்வாட்ஸ் (அரசாங்கத்தாரால் நிர்வாகம் செய்யப்படும் சமஸ்தானங்களிலும்) கவர்ன்மெண்டார் ஏற்கனவே ஒப்புக் கொண்டு இருக்கிற வகுப்புவாரி பிரதிநிதித்துவக் கொள்கையை அநுட்டிக்க வேண்டுமென்று தெரிவித்துக் கொள்கிறது.

20. இந்த மாகாணத்தில் இருந்து வரும் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவக் கொள்கையை இந்தியா கவர்ன்மெண்டும் செக்ரட்டரி of ஸ்டேட் (சீமையில் இருக்கும் இந்திய செக்ரட்டரியின் ஆபீசும்) ஏற்றுக் கொண்டு அந்த முறையையே எல்லா இந்திய உத்தியோகங்களிலும் நியமிக்கப்படும் விஷயங்களிலும் அமுலுக்குக் கொண்டுவர வேண்டு மென்றும் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவ விஷயமாக அரசாங்கத்தார், புது சீர்திருத்தத்தில் ஏற்பாடு செய்து இருக்கும் புதிய விதிகளில் இந்த முறையையும் சேர்த்து திருத்த வேண்டுமென்றும் இந்த மாகாணத்திற்கு நியமிக்கப்படும் எல்லா இந்திய உத்தியோக விஷயங்களில் வகுப்புவாரி கொள்கையை முக்கியமாய் கவனிக்க வேண்டுமென்று அபிப்பிராயப்படுகிறது.

இவை தோழர் ஈ.வெ. ராமசாமியால் பிரரேபிக்கப்பட்டு தோழர்கள் பொன்னம்பலம், சி.டி. நாயகம் ஆகியவர்களால் ஆதரிக்கப்பட்டது.

குடி அரசு - 07.04.1935

Add comment


Security code
Refresh

Share this post

Submit to FacebookSubmit to Google PlusSubmit to TwitterSubmit to LinkedIn

புரட்சி மொழிகள்

"பார்ப்பான், சூத்திரன், பறையன் என்கிற ஜாதி அமைப்பு இருக்கிற வரையில் இந்த நாட்டில் ஒரு இஞ்ச் அளவுகூட முன்னேற்றம் காண முடியாது என்று உறுதியாகக் கூறுவேன்" - பெரியார்

தொடர்புக்கு

Periyar web version
கைப்பேசி: +919787313222
மின்னஞ்சல்:[email protected]

To Get Latest Articles

Enter your email address: