திருத்தப்பட்டபடி நிறைவேறிய சுயமரியாதை இயக்க லக்ஷியம்.

1.பிரிட்டிஷ் முதலிய எந்தவித முதலாளித் தன்மைகொண்ட ஆட்சி யிலிருந்தும் இந்தியாவை பூரண விடுதலை அடையச் செய்வது.

2. தேசத்தின் பேரால் கொடுக்கப்படவேண்டிய எல்லா கடன்களை ரத்து செய்வது.

3. எல்லா தொழிற்சாலைகளையும், ரயில்வேக்களையும், பாங்கி களையும், கப்பல் படகு நீர் வழி போக்குவரத்து சாதனங்களையும் பொது மக்களுக்கு உரிமையாக்குவது.

4. எந்தவிதமான பிரதிப் பிரயோஜனமும் கொடுபடாமல் தேசத்தில் உள்ள எல்லா விவசாய நிலங்களையும், காடுகளையும் மற்ற ஸ்தாவர சொத்துக்களையும் பொது ஜனங்களுக்கு உரிமையாக்குவது.

5. குடியானவர்களும், தொழிலாளிகளும், லேவாதேவிக்காரர் களிடம் பட்டிருக்கும் கடன்களையெல்லாம் (கேன்சில்) செல்லுபடி யற்றதாக ஆக்கி விடுவது, அடிமை ஒப்பந்தங்களை ரத்து செய்து விடுவது.

6. சுதேச சமஸ்தானங்கள் என்பவைகளை யெல்லாம் மாற்றி இந்தியா முழுவதையும் தொழிலாளிகள், குடியானவர்கள், சரீர வேலைக்காரர்கள் என்பவர்களுடைய நேரடியான ஆட்சிக்கு கொண்டு வருவது.

7. தொழில் செய்பவர்கள் 7 மணி நேரத்திற்கு மேல் வேலை செய்யக்கூடாது என்பதுடன், அவர்களுடைய வாழ்க்கை நிலை உயர்த் தப்படுவது. தொழிலாளிகளுக்கு கூலியை உயர்த்தி, அவர்களது சுகவாழ்க்கைக்கு வேண்டிய சவுகரியங்களையும் இலவச நூல் நிலையங்கள் முதலிய வசதிகளையும் ஏற்படுத்துவது. தொழில் இல்லா மல் இருக்கின்றவர்களை சர்க்கார் போஷிக்கும் படியும் செய்வது.

என்பவைகள் சுயமரியாதை இயக்கத்தின் அடிப்படையான லட்சியங் களாகும்.

திருத்தப்பட்டபடி நிறைவேறிய வேலைத்திட்ட தீர்மானம்

சுயமரியாதை இயக்கமானது தென் இந்தியாவில் சென்ற 7, 8 வருஷ காலமாக பாமர மக்களிடையே ஏராளமாய் புதைந்து கிடந்த ஜாதி, மதம் முதலியவைகளைப் பற்றிய குருட்டு நம்பிக்கைகள் மூடப் பழக்க வழக்கங்கள் ஆகியவைகளைப் பற்றியும், பொருளாதாரத் தன்மையின் கீழ்நிலையைப் பற்றியும் செய்து வந்த புரட்சி பிரசாரத்தின் பலனாய் ஒரு பெருத்த உணர்ச்சி யைக் கிளப்பி விட்டிருப்பதாலும், பகுத்தறிவுக்கு ஏற்காத முறையில் நடை பெற்று வரும் மேல்கண்ட பழக்க வழக்க முறைகளை சட்ட மூலமாகவன்றி வேறு வழியில் ஒழிப்பது என்பது முடியாது என்கின்ற அபிப்பிராயம் நாளுக்கு நாள் பலப்பட்டு வருவதாலும்,

பாமர மக்களைப் பல அரசியல் ஸ்தாபனங்களும், சமூக கட்டுப் பாடுகளும் அந்தந்த விஷயங்களில் அடக்கியும், பொருளாதாரத் துறையில் ஒடுக்கியும் வைப்பதற்கு சாதனமாக அரசியல் ஸ்தாபனங்களே உபயோகப் படுத்தப்பட்டு வருகிறது என்பது ஆட்சேபிக்க முடியாத உண்மையாய் இருப்பதாலும்,

வட்டமேஜை மகாநாட்டின் பயனாய் பாமர மக்களின் பகுத்தறிவு வளர்ச்சிக்கு நாசத்தை உண்டாக்கும் கொடுமையான பழய பழக்க வழக்கங் களுக்கும் மனிதத் தன்மைக்கு முரணான ஜாதி வித்தியாசங்களுக்கும் மற்றும் பல கெடுதிகளுக்கும் பாதுகாப்பும், ஆக்கமும் அளிப்பதாய் இருப்பதாலும்,

சுயமரியாதை இயக்கத்தாருக்குள் சமதர்ம (ளுடிஉயைடளைவ யீயசவல) கட்சி என்பதாக ஒரு அரசியல் பிரிவை ஏற்படுத்தி, அதற்கு அடியிற் கண்ட திட்டத்தை வகுத்து, அதன் மூலம் பரிகாரம் தேடுவது என்று தீர்மானிக்கப் படுகிறது.

திட்டங்களாவன:-

1. பொது ஜன சௌகரியங்களுக்கு ஏற்பட்ட சாதனங்களை தனிப் பட்ட மனிதர்கள் அனுபவிப்ப தென்பதற்கும் ஜாதிமத சம்பந்தமான கொடுமைகளுக்கும் பாதுகாப்புகளாய் இருக்கும் அறிவுக்கு ஒவ்வா முறைகளை ரத்து செய்ய வேண்டும். பாமர ஜனங்களை அவர்களது பொருளாதாரக் கொடுமையில் இருந்தும், ஜாதி மதக் கொடுமையில் இருந்தும் விடுவித்தும் சுதந்திர மனிதர்கள் ஆக்குவதற்கும், பொது ஜன அவசியத்திற்கு என்று ஏற்படுத் தப்படுகிற தொழில் முறைகள் போக்குவரத்து சாதனங்கள் ஆகியவைகளின் நிர்வாகத்தையும் அதன் இலாபத்தையும் தனிப்பட்ட மனிதர்கள் அடையாமலிருப்பதற்கும் வேண்டிய காரியங்களை அரசியல் ஸ்தாபனங்களின் மூலமாகச் செய்ய வேண்டும்.

2. எல்லாச் சட்டசபை, முனிசிபல் தாலூக்கா ஜில்லா சபை ஆகியவற்றின் தேர்தலுக்கு வயது வந்த யாருக்கும் ஓட்டுரிமை ஏற்படும்படி செய்ய வேண்டும். தனிப்பட்ட தொழிற்சாலைகள், ரயில், கப்பல் முதலியவைகளில் தொழிலாளிகளுக்கு எப்பொழுதும் தொழில் இருப்பதற்கு ஒரு ஜவாப்தாரித்தனத்தையும் அவர்களுடைய நல் வாழ்க்கைக்கு வேண்டிய ஊதியத்தை நிர்ணயப் படுத்தி அதற்கு ஒரு உறுதிப் பாட்டையும் செய்வதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும்.

3. நில சொந்தக்காரர்களாயில்லாமல் விவசாயத்தில் ஈடுபட்ட தொழி லாளிகளுக்கு வெள்ளாமையில் ஒரு ஞாயமான பங்குவிகிதம் கிடைக்கும்படி செய்ய வேண்டும்.

4. கோவில், பிரார்த்தனை இடங்கள் முதலிய மத ஸ்தாபனங்களின் சொத்துக்கள், வரும்படிகள் ஆகியவைகளைப் பொது ஜனங்களின் தொழில், கல்வி, சுகாதாரம், வீட்டு வசதி, அனாதைப் பிள்ளைகள் விடுதி ஆகியவைகளுக்கு பயன்படுத்த அனுமதி பெற வேண்டும்,

5. இந்திய சமூகத்தில் ஜாதி மத பிரிவு முதலியவைகளைக் குறிக்கக் கூடிய குறிப்புகள் எதையும் பொது ஆதாரங்களில் (ரிகார்டுகளிலி ருந்து) எடுத்து விடுவதற்கும், அம்மாதிரிப் பட்டம் உடையவர்களைப் பொது வேலைகளில் இடம் பெறாமல் இருக்கும்படி செய்வதற்கும் அனுமதி பெறுதல்.

6. முனிசிபாலிடி முதலிய ஸ்தல ஸ்தாபனங்களின் மூலமாகவே போக்குவரவு சாதன வசதி, வீட்டு வசதி, பால் வசதி, வைத்திய வசதி முதலியவைகள் நடை பெறும்படி ஏற்பாடு செய்ய வேண்டும்.

7. இவைகளை நிறைவேற்ற சட்டசபை, முனிசிபாலிட்டி முதலிய ஜனப் பிரதிநிதி ஸ்தாபனங்களுக்கு மேல்கண்ட கட்சியினர் பேரால் அபேக்ஷகர்களை நிறுத்த வேண்டும்.

8. கட்சி அபேட்சகர்கள் மேல் கண்ட திட்டங்களுக்கு உறுதிகூறி கையெழுத்திட வேண்டும்.

9. மேல்கண்ட சட்டங்கள், சீர்திருத்தங்கள் முதலியவைகளை எல்லாம் சட்டசபைப் பிரவேசம் மூலம், பிரசங்க மூலம், சொல்லுவதன் மூலம், பத்திரிகைத் துண்டுப் பிரசுரம் முதலியவைகள் மூலம் சட்டத்தை அனுசரித்துச் செய்ய வேண்டியது.

 குடி அரசு - 01.01.1933

Add comment


Security code
Refresh

Share this post

Submit to FacebookSubmit to Google PlusSubmit to TwitterSubmit to LinkedIn

புரட்சி மொழிகள்

"பார்ப்பான், சூத்திரன், பறையன் என்கிற ஜாதி அமைப்பு இருக்கிற வரையில் இந்த நாட்டில் ஒரு இஞ்ச் அளவுகூட முன்னேற்றம் காண முடியாது என்று உறுதியாகக் கூறுவேன்" - பெரியார்

தொடர்புக்கு

Periyar web version
கைப்பேசி: +919787313222
மின்னஞ்சல்:[email protected]

To Get Latest Articles

Enter your email address: