இம்மாதம் 24, 25ம் தேதிகளில் பிறையாற்றில் நடந்த தஞ்சை ஜில்லா சுயமரியாதை மகாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் மற்றொரு பக்கம் பிரசுரிக்கப்பட்டிருக்கின்றன. அவற்றுள் முக்கியமாகக் கருதப் படுவதும், பலருக்கு திடுக்கிடும்படியான அளவுக்கு பிரமாதமாய் காணப்படு வதுமான தீர்மானங்கள் மூன்று.

அதாவது,

1. “மக்களுக்குள் இருந்துவரும் தீண்டாமையும், ஜாதி வித்தியாசமும் அடியோடு ஒழிக்கப்பட வேண்டுமானால் அதற்கு முட்டுக்கட்டையாக விருக்கும் ‘இந்து மதம்’ என்பது அழிக்கப்பட வேண்டியது மிக்க அவசிய மாகும்.”

2. “மக்கள் உண்மையான சுதந்திரமும், சமதர்மமும், பொது வுடைமைத் தத்துவமும் அடைய வேண்டுமானால் அவற்றிற்கு இடை யூறாக விருக்கும் கடவுள் நம்பிக்கையும், எதற்கும் அதையே பொறுப் பாக்கும் உணர்ச்சியும் ஒழிக்கப்பட வேண்டியது அவசியமாகும்.”

3. “பெண்கள் ஆண்களைப் போன்ற விடுதலையையும், சமதர்ம ஒழுக்கத்தையும், சுதந்திரத்தையும் அடைய வேண்டுமானால் அவற்றிற்கு தடையாயிருக்கும் பிள்ளைப்பேற்றை (கர்ப்பத்தை) அடக்கி ஆள வேண்டியது அவசியமாகும்”

என்பவைகளாகும்

ஆகவே இதன் கருத்து மத உணர்ச்சி, கடவுள் உணர்ச்சி ஆகியவை மக்கள் வாழ்க்கைக்குள் புகுந்து கொண்டு இருக்கக் கூடாதென்பதேயாகும்.

பொதுவாக நமது நாடானது உண்மையான விடுதலையும், சுதந்திரமும், சமதர்மமும் அடைவதற்கு நாம் வெகுகாலமாகவே மேல்கண்ட இம்மூன்று தன்மைகள் அதாவது மக்களுக்குள் தீண்டாமை ஒழிவதும், ஜாதி வித்தியாசம் நீங்குவதும், பொருளாதார சமதர்மம் ஏற்பட வேண்டுமென்பதும், பெண்கள் விடுதலையும், சம உரிமையும் அடைய வேண்டுமென்பதையுமே முக்கிய மாய்ச் சொல்லி வந்திருக்கின்றோம். இதை அன்று முதல் இன்று வரை மறுப்பவர்கள் - மறுத்தவர்கள் யாருமில்லை. ஆகவே இம்மூன்று காரியங் களும் ஏற்படவேண்டுமென்று உண்மையாயும், யோக்கியமாயும் விரும்பும் - ஒப்புக்கொள்ளும் ஒவ்வொருவரும் அவற்றிற்கு இடையூறுகளாயிருப் பவைகளை ஒழிப்பதின் மூலம் தான் அவைகளை அடைய முடியுமென்பதை ஒப்புக்கொண்டே தீருவார்கள்.

இந்நிலையில் பார்த்தோமானால் நமக்கு தீண்டாமைக்கும், ஜாதி வித்தியாச உயர்வு - தாழ்வுக்கும் ஆதாரமாக “நமது மதம்” என்று சொல்லப் படும் “இந்துமதம்” என்பதாக ஒன்று இருந்து கொண்டுதான் முட்டுக்கட்டை யாக இருக்கின்றதே யொழிய, வேறொன்றுமில்லை.

இந்து மதம் என்பதின் ஜீவ நாடியே தீண்டாமையும், ஜாதி வித்தியாச முந்தான் என்பதை, “இந்து மத” சம்பந்தமான ஒரு சிறிது ஞானமுள்ள மக்களும் உணருவார்கள்.

அன்றியும், இன்றைய தினம் தீண்டாமையையும், ஜாதி வித்தியா சத்தையும் ஒழிக்க விடாமல் தடுத்துக் கொண்டிருப்பவர்களான நமது எதிரிகள் எதை பிரதானமாய்ச் சொல்லுகின்றார்களென்றால் “இந்து மதத்தை”த் தான் பிரதானமாய்ச் சொல்லுகின்றார்கள்.

ஆகவே இந்து மதத்தின் நிழலில் தான் தீண்டாமையும், ஜாதி வித்தியாசமும் அடைக்கலம் புகுந்து கொண்டிருக்கின்றதே யொழிய வேறு எவருடைய பலத்தாலும் ஆதாரத்தாலும் அவை இருக்கவில்லை. அன்றி யும் ஜாதி வித்தியாசத்தைக் காப்பாற்றுவது தான் இன்று இந்துமத சம்பர தாயமாக இருக்கின்றதே யொழிய, வேறு ஒரு காரியமும் இந்துமதத்தின் அனுபவமாய் எந்த இந்து மக்களிடமுமில்லை என்பதும் அனுபவ ஞான முள்ள யாவரும் நன்றாய் அறியலாம்.

முதலாவது, இந்த ஜாதி வித்தியாசம், தீண்டாமை ஆகியவைகள் அனுபவத்திலிருப்பது தான் இந்து மதம் என்பதைத்தவிர, மற்றபடி இந்து மதம் என்றால் என்னவென்று இந்துக்கள் என்பவர்களில் கோடிக்கு ஒருவராவது விளக்க முடியுமா? அல்லது தங்களுக்காவது தெரியும்படி விளக்கிக் கொண்டிருக்கின்றார்களா? என்று பந்தயம் கூறிகேட்கின்றோம். வார்த்தையளவு அல்லாமல் கருத்தளவில் யாருக்காவது விளங்குமா? விளங்கியிருக்கின்றதா? என்றும் கேட்கின்றோம்.

தவிரவும், இந்து மதம் என்று சொல்லப்படுவதற்கு ஆதாரமென்று சொல்லக்கூடியதும், இந்துக்கள் என்ற தலைப்பின் கீழ் கட்டுப்பட்ட மக்களில் 100க்கு 25 பேராவது தெரிந்து, ஒப்புக்கொள்ளக் கூடியதுமான ஆதாரமோ, தர்மமோ, கொள்கைகளோ, கோட்பாடுகளோ எதுவுமில்லையென்று நம்மால் தைரியமாய்ச் சொல்லக்கூடுமானாலும், ஒரு சமயம் வேறு யாராவது இருப்பதாகச் சொல்லி கட்டாயப்படுத்தி மக்களை ஒப்புக்கொள்ளச் செய்யும் எந்த ஆதாரத்திலாவது தீண்டாமையையும், ஜாதி வித்தியாசத்தையும் வற்புறுத்தாத ஆதாரமோ, தருமமோ, கொள்கையோ கோட்பாடோ இருக் கின்றதா யென்றும் கேட்கின்றோம்.

இஸ்லாம் மதத்திற்கு குர் ஆன், கிறிஸ்துவ மதத்திற்கு பைபிள் என்பவை இருப்பது போல் இந்து மதத்திற்கு என்னயிருக்கின்றது என்பதாக இந்துமத அபிமானிகள் யாராவது சொல்லமுடியுமா? இந்துக்களுக்கு மேற்கண்டதைப் போன்ற ஒரு வேதமிருக்கின்றதா? இருந்தால் அது இந்துக் களென்பவர்கள் தெரியக்கூடியதா? அது இந்துக்கள் என்பவர்கள் எல்லோ ரையும் கட்டுப்படுத்தக் கூடியதா? என்று கேட்பதோடு இந்து மதத்தைக் காப்பாற்றக் கவலைக் கொண்டவர்கள் என்பவர்களாவது அதில் உள்ளவற் றிற்கு கட்டுபட சம்மதிப்பார்களா? என்பதின் மூலம்தான் ஒரு மதத்தின் ஆதாரமின்னதென்பதை நிச்சயிக்க முடியுமேயொழிய, மற்றபடி எவருக்கும் புரிவிக்கப்பட முடியாமலும், தங்களுக்கே புரியாமலும் பேசுவதில் யாதொரு பயனும் ஏற்படாதென்பதுடன் இந்த நிலையில் உள்ள இந்து மத சம்பந்தமான வக்காலத்தே பரிகாசத்திற்கு மிடமாகுமென்பதையும் ஞாபகப்படுத்துகிறோம்.

இந்திய பாமரமக்களின் முட்டாள் தனத்தையும், கற்ற மக்களின் அயோக்கியத்தனத்தையும் உலகுக்கு எடுத்துக் காட்டுவதற்கறிகுறியாகத் தான் இந்து மதமென்ற உணர்ச்சி இருக்கின்றேதே என்பதோடு இந்தியாவில் 100-க்கு 10-பேருக்குக்கூட இந்துமதமென்றாலென்ன வென்பது விளங்காமலே அதற்கு அடிமையாக வாழ்ந்து கொண்டிருக்கின்றார்களென்றும் நாம் பந்தயம் கூறிச்சொல்லுவோம்.

மேலும், தீண்டாமையும், ஜாதி வித்தியாசமும் ஒழிவதற்கு மாத்திர மல்லாமல், இந்து மக்களின் அறிவு விர்த்திக்குமான உதயத்திற்கும் இந்து மதம் என்கின்ற உணர்ச்சியொழிய வேண்டியதவசியமென்று மேலும் மேலும் வலியுறுத்திச் சொல்லுவோம் . ஆகவே, இவ்வித இந்துமதமென் பதைக் கட்டிக் கொண்டு அழுவதும், அதற்கு ஏதேதோ வியாக்யானங்கள் சொல்லு வதும், அசிங்கத்தையெடுத்து மேலே பூசிக்கொள்ளுவதை யொக்குமே தவிற புத்திசாலித்தனம் ஒன்றும் விளங்காது. பொதுவாக மதங்கள் என்பதே “அதாவது கடவுளுக்கும், மனிதனுக்குமுள்ள சம்பந்தத்தைக் காணவும் - கடவுளை மனிதன் அடையவும்” என்று சொல்லப்படுவதான மதங்கள் என்பதே “மூட நம்பிக்கை”யென்றும், “ஹம்பக்” யென்றும் உலக மக்கள் பெரும்பாலோரால் சொல்லிக்கொண்டு வருகின்ற இந்தக் காலத்தில் பல இடங்களில் அவை யொழிக்கப்பட பிரசாரங்கள் செய்துகொண்டும் வரப் படுகின்ற இந்தக் காலத்தில் கேவலம் அர்த்தமில்லாத, ஆதாரமில்லாத இந்துமதம் என்பதற்கு ஒருவர் வக்காலத்துப் பேசவருவதென்றால் இதைவிட பரிகாசத்திற்கிடமான காரியம் வேறில்லை என்றே சொல்லுவோம். அடுத்தபடியாக இந்துமதம் எதற்காகக் காப்பாற்றப்பட வேண்டு மென்பதே நமக்குப் புலப்படவில்லை. அதில் ஏதாவது உயர்ந்த கொள்கைகளோ, பிரயோஜனப்படத்தக்க தத்துவங்களோ அல்லது ஞானங்களோ இருக்கின்ற தென்று யாராவது சொல்லவந்தால், அவர்களைப் பற்றி நாம் சிரிப்பதுடன் அவர்களுக்கு , உவமையாகவுமொரு பழிமொழியைச் சொல்லிக்காட்ட வேண்டியவர்களாகவுமிருக்கின்றோம். அதாவது, ஒருவன் “பஞ்சபாண்டவர் களை எனக்குத் தெரியாதா? கட்டில் கால்கள் போல் மூன்றுபேர்களென்று சொல்லி, இரண்டு விரல்களைக்காட்டி, தரையில் ஒன்றை எழுதி, கடைசியில் அதையும் காலால் தேய்த்து விட்டானாம்.” என்பதை யொக்கும்.

ஆகவே, இப்பழமொழிப்படி எப்படி இந்த நபர் பஞ்சபாண்டவர்கள் என்பவர்கள் கட்டில் குத்துக்கால்கள் ஐந்து, நான்கு, மூன்று, இரண்டு, ஒன்று ஆகிய இவையொன்றுமே தெரியாதவர் என்று ஏற்படுகின்றதோ, அது போல் இந்துமதம் என்பது “எனக்குத் தெரியாதா?, அது அநேக உயர்ந்த தத்துவங் கள், ஆத்ம ஞானங்கள் முதலியவைகள் கொண்ட பழமையான” தென்று சொல்லுபவர்களுமாவார்கள் என்றுதான் நாம் அபிப்பிராயப்பட வேண்டி யிருக்கிறது.

எனவே, இப்படிப்பட்ட மக்களின் அபிப்பிராயத்திற்கு யாரும் பயப் படவேண்டியதில்லை யென்பதைத் தவிற, வேறு சாமாதானம் பொது மக்களுக்கு நாம் சொல்ல வேண்டியதில்லை யென்றே கருதுகின்றோம்.

மற்றபடி சமதர்மத்திற்கும் பொதுவுடைமைக் கொள்கைக்கும் கடவுள் உணர்ச்சி ஒழிக்கப்பட வேண்டிய தென்பதும் நமது உறுதியான அபிப்பிராய மேயாகும். கடவுள் நம்பிக்கையும், கடவுள் மீது பொறுப்பு போடுபவனும் சுதந்திரமனிதனாயிருக்க நியாயமேயில்லையென்று பல தடவைகளிலும் சொல்லி வந்திருக்கின்றோம்.

கடவுள் உண்டா? இல்லையா? என்கின்ற பிரச்சினையில் நாம் புக வில்லை. அதுமுடிந்த விஷயமாகும் எப்படியெனில், “தொட்டதிற் கெல்லாம் கடவுள் ! கடவுள்!!” யென்று சொல்லி சதா பிரார்த்தனை செய்து கொண்டி ருக்கும் திரு. காந்தியும், சைவசமய நிபுணர்களின் மகாநாடு கூட்டமும், ஏற்கனவே இதைப்பற்றி ஒரு முடிவு சொல்லியாய்விட்டது. அதாவது, “கடவுளிருப்பதாய் மனிதன் நினைத்துக் கொள்வது நல்லது” என்று மாத்திரந் தான் சொல்லிவிட்டார்கள். ஆதலால், அது ஒரு மனிதன் ஒரு பலனையுத் தேசித்து நினைத்துக் கொள்ளவேண்டிய விஷயமாய் போய்விட்டதென்ப தினால் புலனாகின்றது. ஆகையால், நாம் இனியும் அதில் பிரவேசிக்க வேண்டிய வேலையில்லை. ஆனால், மனிதனுடைய தற்கால நிலைக்கு கடவுள்தான் காரணமென்றால் மனிதனின் நிலையை மாற்ற வேண்டுமென்று சொல்ல நமக்கு யோக்கியதை ஏது? இப்படிப் பட்டவர்களுக்கு முயற்சி செய்யத்தான் மனம் எப்படி வரும்? என்பதுதான் நமது கருத்து. ஆதலால்தான் கடவுள் உணர்ச்சியையும், அதன் மேல் பொறுப்பு சுமத்துவதையும் அழிக்க வேண்டுமென்கிறோம்.

பிறகு, பெண்கள் கர்ப்பத்தடை விஷயம்.

நாம் பெண்கள் பிள்ளைகளைப் பிரசவிக்கவே வேண்டாமென சொல்லவரவில்லை. அச்செய்கையினால் பெண்கள் அடிமைகளாகின்றார் களென்பதற்காகவே, முக்கியமாய் அதைத் தங்களாதீக்கத்தில் வைத்து, இஷ்டப்படி தாங்கள் சுதந்திரமாயிருக்கத் தக்க மாதிரியாக உபயோகித்துக் கொள்ளச் சொல்லுகின்றோம். ஆண்கள், பெண்களைத் தங்களைப் போலெண்ணுவார்களானால், அப்போது பிள்ளைகளைப் பிரசவிப்பதன் கஷ்டமும், அதனாலேற்படுமடிமைத்தனமும் அவர்களுக்கு விளங்கும். அவர்களை அடிமைகளென்று கருதிக்கொண்டிருப்பவர்களுக்கு, இதிலுள்ள கஷ்டம் விளங்காது.

மற்றபடி பெண்களின் “கற்பு ஒழுக்க”த்தில் சம சுதந்திரம் இருக்க வேண்டுமென்னும் விஷயத்தில், சிலருக்கு - அதாவது சில ஆண்களுக்குப் பெரிய கஷ்டமிருப்பதாகத் தெரிய வருகின்றது. பெண்கள் கற்புள்ளவர் களாயிருக்க வேண்டுமென சொல்லுவதற்கு, எந்த ஆணுக்குரிமை யுண்டென நாம் கேட்கின்றோம்.

தவிறவும், பெண்களுக்கு புத்தி சொல்ல ஆண்கள் யாரெனவும் கேட்கின்றோம். “கற்பு” என்னும் பூச்சாண்டியின் யோக்கியதை யாவருமறிந்த இரகசியமே யொழிய, அது ஒருவருக்கும் தெரியாததல்ல. பெண்களை நாம் உலகத்திலுள்ள எல்லா மனிதர்களுக்கும் பொது மகளிராயிருக்க வேண்டு மென சொல்லவரவில்லை. ஆனால் மற்றபடி நாம் சொல்லுவதென்ன வென்றால், எல்லா விஷயங்களிலும் ஆண்களுக்குள்ள சுதந்திரம், பெண்களுக்குமிருக்க நியாயமுண்டு. ‘கற்புத்தவறும்’ விஷயத்திலும், ஆண்களுக்குள்ள நிபந்தனை களும் தண்டனைகளும் தான் பெண்களுக்கு மிருக்க வேண்டுமென்று சொல்லுகின்றோமே யொழிய, வேறில்லை. கற்பு என்பதாக ஒரு குணம் உண்டா? இல்லையா? அது இயற்கைக்கும் சாத்தியத்திற்கும் ஏற்றதா என்கின்ற பிரச்சினைகள் அது வேறு விஷயம். ஆனாலும் யோக்கியமான ஆண் பிள்ளைகள் இதற்குப் பயப்பட வேண்டிய தவசியமேயில்லை.

எவனொருவன், தான் “கற்புள்ளவனாயிருக்க” இருக்கவில்லையோ, எவனொருவானால் இருக்க முடியவில்லையோ அவனுக்குத்தான் இதில் அதிகமான கவலையும் பயமுமிருக்க நியாயமுண்டே தவிற மற்றவர்கள் இதைப்பற்றி கவனிக்க வேண்டியதேயில்லை. அல்லாமலும் நாமாவது “ஆண்கள் கற்புள்ளவர்களாயிருந்தாலும், பெண்கள் கற்புள்ளவர்களா யிருக்கக்கூடா”தென்று சொல்லியிருந்தால்தான், நம்மீதுமொருவர் கோபித் துக் கொள்ளவும் ஒருவருக்கு உரிமையுண்டு. இப்படிக்கெல்லாம் இல்லா மல் சும்மா வீணே “கற்புப் போய்விட்டதே, கற்புப் போய்விட்டதே” யென்று யாராவது கூப்பாடு போட்டால், அதைப் போலிக்கூச்சலென்று தான் கருதி, குப்பைத் தொட்டியில் போடவேண்டுமே தவிற அதற்காக யாரும் கவலைப்பட வேண்டியதில்லை.

ஆகவே, தஞ்சை ஜில்லா சுயமரியாதை மகாநாட்டுத் தீர்மானங்கள் மிக முக்கியமானதும், நியாயமானது மென்பதோடு, கூடிய சீக்கிரத்தி லிதுவே, உலகத்தீர்மானங்களாக யேற்படப் போகின்ற தென்பதோடு, இதே தீர்மானங் கள் இன்னும் வெகு சமீப காலத்திற்குள் “இந்திய தேசீய காங்கிரசிலும்” புகாதவரையில் அக்காங்கிரசே இருக்குமிடம் தெரியாமல் மறைந்து போகப் போகின்றதென்ற உறுதியையும் கொண்டிருக்கின்றோம்.

தோழர் பெரியார், குடி அரசு - தலையங்கம் - 31.05.1931

Add comment


Security code
Refresh

Share this post

Submit to FacebookSubmit to Google PlusSubmit to TwitterSubmit to LinkedIn

புரட்சி மொழிகள்

"பார்ப்பான், சூத்திரன், பறையன் என்கிற ஜாதி அமைப்பு இருக்கிற வரையில் இந்த நாட்டில் ஒரு இஞ்ச் அளவுகூட முன்னேற்றம் காண முடியாது என்று உறுதியாகக் கூறுவேன்" - பெரியார்

தொடர்புக்கு

Periyar web version
கைப்பேசி: +919787313222
மின்னஞ்சல்:[email protected]

To Get Latest Articles

Enter your email address: