பின்னர் கீழ்க்கண்ட தீர்மானங்கள் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டன:-

1. பொங்கல் உண்டி வசூலில் இருந்து ரூபாய் நூறு தியாகராயர் ஞாபக நிதிக்களித்து மிகுதியை இச்சங்க உபயோகத்திற்கு வைத்துக் கொள்ளும்படி அனுமதி கொடுக்க வேணுமாய்த் தீர்மானிக்கப்படுகிறது.

2. இச்சங்கம் மதுரைப் பார்ப்பனரல்லாதார் மகாநாட்டில் நிறைவேறிய எல்லாத் தீர்மானங்களையும் மனமுவந்து ஒப்புக் கொள்வதுடன் அவற்றை அனுபவத்தில் நடைபெறச் செய்வதற்குக் கீழ்க்கண்ட கனவான்கள் அடங்கிய நிர்வாக சபையை நியமிக்கிறது:-

போஷகர்கள்:-

ராவ்பகதூர் வீரப்ப செட்டியார், திருஞான சம்பந்த முதலியார்

உப பிரஸிடெண்டுகள் :-

முத்துக் குமாரசாமி முதலியார், ராஜரத்தின முதலியார்.

காரியதரிசி:- சாமி செட்டியார்.

கூட்டுக்காரியதரிசி:- முத்துச்சாமி நாயனார்.

நிர்மாண கர்த்தாக்கள்:- எம்.பி. ரங்கசாமி ரெட்டியார், ஆதி மூல உடையார்.

பொக்கிஷதார் :- ஆறுமுக முதலியார் மற்றும் பலர் நிர்வாக சபை மெம்பர்கள்.

3. தேவஸ்தான மசோதாவை சட்டமாக அங்கீகரித்ததற்காக மேன்மை தங்கிய ராஜப் பிரதிநிதி அவர்களையும் சென்னை கவர்னர் அவர்களையும் இக்கூட்டம் சந்தோஷத்துடன் பாராட்டுகின்றது. இந்தத் தீர்மானத்தை மேற்படியார்களுக்கு தந்தி மூலம் அனுப்பிவைக்கும்படி அக்கிராசனரைக் கேட்டுக்கொள்கின்றது.

4. நமது மாகாணத்தில் நமது சங்கத்தினர் பெயரால் கதர் போர்டு ஒன்றை ஏற்படுத்தியும் மற்றும் கூடுமான இடங்களிலும் இக்கதர் உற்பத்தி சாலையும் வியாபார சங்கத்தையும் ஏற்படுத்தி அத்தாக்ஷிப் பத்திரம் கொடுக் கவும், இதற்காக நிதி திரட்டவும் மகாத்மா காந்தி அவர்களின் வருகையை நாமும் கதரின் அபிவிருத்திக்காக வரவேற்கவும் தீர்மானிக்கிறது. இக்கதர் போர்டு தலைவராக இருக்கும்படி திரு.ஈ.வெ. ராமசாமி நாயக்கர் அவர்களைக் கேட்டுக் கொள்ளுகிறது.

5. பிராமணரல்லாதாரின் நன்மையைக் கோரி உழைத்து வரும் பத்திரிகைகளுள் முக்கியமான குடி அரசு, திராவிடன், ஜஸ்டிஸ் ஆகிய பத்திரிகைகளை அவசியம் ஒவ்வொருவரும் ஆதரித்து வரவேண்டு மென்றும், அப்படி மேற்படி பத்திரிகைகளை ஆதரிக்க சௌகரியமில்லாத வர்கள் பார்ப்பனரல்லாதாரின் சுயமரியாதையை அழிக்கவென்றே கங்கணம் கட்டிக் கொண்டு இருக்கும் பார்ப்பன பத்திரிகைகளை நிராகரிக்கவாவது செய்ய வேணுமாயும் கேட்டுக் கொள்ளுகிறது.

6. தென் பெண்ணையாற்றில் அணைகட்டும் விஷயமாய் செங்கம் மகாநாட்டில் தீர்மானித்த இடத்திலும் இன்னும் சில இடங்களிலும் அதனை கட்டி கால்வாய் பிடித்து ஜலாதாரம் செய்து கொடுக்க வேணுமாயும் எல்லா காடுகளிலும் (விவசாயிகளுக்கு) இலவசமாய் தழை அறுத்துக்கொள்ள அனுமதி கொடுக்க வேணுமாயும், துண்டு கேதுகளுக்கு வஜா செய்து கொடுக்க வேண்டுமாயும் செங்கம் டிவிஷனைச் சேர்ந்த குடிகள் சுமார் முப்பது மைலுக்கு மேலாக வந்து திருவண்ணாமலை கஜானாவில் பணம் செலுத்த வேண்டி இருப்பதால் இந்தக் குறையை நீக்க செங்கம் டிப்டி தாசில் தார் ஆபிசிலேயே பணத்தைக் கட்ட ஏற்பாடு செய்யும்படி கவர்ன்மெண் டாரைக் கேட்டுக் கொள்ளுகிறது.

7. இவ்வூரில் பார்ப்பனரல்லாத வாலிபர் சங்கம் ஒன்றைத் திறந்து வைக்கும்படி ஸ்ரீமான் சுரேந்திரநாத் ஆரியா அவர்களை கேட்டுக் கொள்ளப் படுகிறது.

மதுரை கோயில் சுவாமிக்கு சுயமரியாதையுடன் ஆராதனை செய்த ஸ்ரீமான் ஜே.என். ராமநாதன் அவர்களையும், சேலம் ஜில்லா ஆத்தூர் தாலுகா ஏத்தாபூரில் பிராமணர்களின் அக்கிரமங்களைப் பகிஷ்கார மூலமாய் நிவர்த்தி செய்துகொண்ட அவ்வூர்வாசிகளையும் இம்மகாநாடு பாராட்டுகின்றது. வருணாச்சிரம தர்மம்

நமது பார்ப்பனர்கள் தங்களை உயர்த்திக் கொள்ளுவதற்காக வேண்டிச் செய்த சூழ்ச்சியில் “வருணாச்சிரம தருமம்”என்பதாக ஒரு பிரிவை உண்டு பண்ணி மக்களுக்கும் பிறவியிலேயே உயர்வு தாழ்வைக் கற்பித்துத் தாங்கள் கடவுள் முகத்திற் பிறந்தவர்கள் என்றும் உயர்ந்தவர்கள் என்றும், தங்களுக்கடுத்தவர்கள் சிலர் கடவுளின் தோளிற் பிறந்தவர்கள் க்ஷத்திரியர்களென்றும் மற்றும் சிலர் கடவுளின் தொடையிற் பிறந்தவர் வைசியர்களென்றும், ஆனால் கலியுகத்தில் க்ஷத்திரியரும் வைசியரும் இல்லை என்றும் தங்களைத் தவிர மீதியுள்ளவர்களெல்லாம் கடவுளின் பாதத்தில் பிறந்தவர்கள் `சூத்திரர்கள்’ என்றும், அச்சூத்திரர்கள் தங்களது வைப்பாட்டி மக்கள், தங்களது அடிமைகள், தங்களுக்குத் தொண்டு செய்வ தற்கென்றே கடவுளால் பிறப்பிக்கப்பட்டவர்கள் என்றும் சொல்லுவதோடு இந்த சூத்திரர்களுக்கு எந்தவித சுதந்திரமுமில்லை என்றும், அவர்கள் சொத்து, சுகம் வைத்துக்கொள்ளுவதற்குக் கூட பாத்தியதையில்லாதவர்க ளென்றும், அப்படி மீறி வைத்திருந்தால் அவர்களிடமிருந்து பிராமணர்கள் பலாத்காரத்தினால் பிடுங்கிக் கொள்ளலாமென்றும் இன்னும் நினைப்பதற்கே சகிக்க முடியாததான அநேக இழிவுகளை யெல்லாம் கற்பித்து இவைகளுக் காதாரம் வேதத்திலேயே இருக்கிறதென்றும், வேதம் கடவுளால் சொல்லப் பட்டதென்றும், அவ் வேதத்தை தாங்கள்தான் படிக்கவேண்டுமென்றும், மற்றவர்கள் படிக்கக்கூடாது கேட்கக்கூடாதென்றும், அப்படிப் படித்தால் படித்தவர்கள் நாக்கையறுப்பதோடு கேட்டவர்கள் காதில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்றி அவர்கள் மனதைப் பிளந்து கொன்றுவிட வேண்டுமென்பது வேதத்தின் கட்டளையென்றும் சொல்லுவதோடு அதற்கு வேண்டிய ஆதாரங் களையும் செய்து வைத்து நம்மைத் தாழ்த்தி, இழிவுபடுத்தி வருவதைப் பல தடவைகளில் பேசியும் எழுதியும் வந்திருக்கிறோம். ஆனால், சில பார்ப்பனர் கள் இப்படியெல்லாம் இல்லையென்றும் இது வேண்டுமென்றே பார்ப்பனர் கள் பேரில் துவேஷத்தைக் கற்பிக்க எடுத்துச் சொல்லப்பட்டு வருகிற தென்றும் உயர்வு தாழ்வு வித்தியாசங்கள் இல்லையென்றும் சொல்லுவதும், பார்ப்பனரல்லாதாரில் சிலர் தாங்கள் வருணாசிரம முறைப்படி சூத்திர ரல்லவென்றும், க்ஷத்திரியரென்றும் மற்றும் சிலர் வைசியர் என்றும் சொல்லிக் கொண்டு வருணாசிரம தர்மத்தை ஆதரிப்பதும், சிலர் தங்களுக்கு வர்மா, குப்தா என்று பெயர் வைத்துக்கொள்ளுவதும் பூணூல் போட்டுக் கொள்ள முக்கியமாய் வேளாளர்கள், தாங்கள் பூவைசியரென்றும் தாங்கள் சூத்திரரில் அப்படிப் பட்டவர்கள் அல்லரென்றும் சொல்லிக் கொள்ளுவதையும் பார்த்து வருகிறோம். இதுகள் நமது பார்ப்பனர்கள் அவரவர்களுக்குத் தக்கபடி சொல்லி ஏமாற்றுவதை நம்பி மோசம் போவதே அல்லாமல் வேறல்ல. இதோடு நம்மைப் பற்றி குற்றம் சொல்லுவதையும் கண்டு வருகிறோம். நமது கூற்றுக்கு ஆதாரமாக சமீபத்தில் சென்னையில் இரண்டு முக்கியப் பார்ப்பன பிரசங்கங்கள் நடந்திருக்கின்றன. அவற்றில் ஒன்று சென்ற மாதம் 22 ந்தேதி சனிக்கிழமை சங்கராச்சாரியார் மடத்தில் பிராமண சபையின் ஆதரவில் வேதம் என்பது பற்றிப் பிரசங்கிக்க ஒரு கூட்டம் கூட்டப்பட்டு இருக்கிறது. இதற்கு ஸ்ரீமான் டி. ஆர். ராமச்சந்திரய்யரே அக்கிராசனம் வகித்திருக்கிறார். அதில் வருணாச்சிரம தருமம் வேதத்திற்கு சொல்லப்பட்டிருக்கிறதென்றும் அதோடு சநாதன தர்மமும் அதில் சொல்லி இருக்கின்றதெனவும் இவைகளை நன்கறிந்து காப்பாற்ற வேண்டும் எனவும் பேசி இருக்கிறார். இது ஜனவரி 27-ந் தேதி மித்திரனில் பார்க்கலாம். மறுபடியும் பிப்ரவரி 7-ந்தேதி திங்கட் கிழமை கும்பகோணம் சங்கராச்சாரியார் மடத்து ஆஸ்தானம் ஸ்ரீமான் வெங்கிட்டராம சாஸ்திரியார் சநாதன தர்மப் பிரசாரமாக வருணாசிரம தர்மம் என்று ஒரு பிரசங்கம் செய்திருக்கிறார். அதில் இக் கலியுகத்தில் இரண்டே வருணங்கள்தான் இருக்கின்றன என்றும் அது பிராமணர், சூத்திரர் என்கிற இரண்டுதான் என்றும் ஷத்திரியர்களும், வைசியர்களும் கலியுகத்தில் இல்லையென்றும் வருணம் என்பது ஜாதி என்றும் தற்காலத்திற்கு பராசரஸ் மிருதிதான் ஆதாரமென்றும் பேசி இருக்கிறார். இது பிப்ரவரி மாதம் 8 ந் தேதி மித்திரனிலிருக்கிறது. ஆகவே பார்ப்பனர்கள் நம்மை இழிவு படுத்துவ தற்காக வைத்திருக்கும் சங்கங்கள் மோட்ச சாதனங்களாகப் போய் விடுகின் றன. நம்மைத் தாழ்த்திப் பேசும் பேச்சுக்கள் சநாதன தர்மமாகி விடுகின்றன. நாம் அவற்றிலிருந்து விடுபடுவதற்கு ஏற்படுத்தப்படும் சங்கங்கள் தேசத் துரோக சங்கங்களாகவும், அதில் பேசும் பேச்சுக்கள் பிராமணத் துவேஷமா கவும் போய்விடுகின்றன. இதிலிருந்தாவது வருணாசிரம தர்மப் பயித்தியம் பிடித்தவர்களுக்கும் பார்ப்பனர்களின் வால்பிடித்துத் திரிந்து ஷத்திரியர், வைசியர் ஆகிவிடலாம் என்று நினைக்கிறவர்களுக்கும் புத்தி வருவதோடு நம்மைப்பற்றி முட்டாள் தனமாய் நினைத்துக் கொண்டிருக்கும் தப்பெண்ணங் களும் மாறக்கூடுமென்றும், மற்றவர்களை தங்களிலும் தாழ்ந்தவர்களென்றும் நினைத்துக் கொண்டிருக்கும் மடமையும் மாறி மக்கள் எல்லோரும் சமமான வர்களென்று நினைக்கக் கூடும் என்றும் நாம் எதிர்பார்ப்பதோடு ஒரு வகுப் பாரைத் தங்களைவிட தாழ்ந்தவர்கள் என்று எண்ணும் கொள்கையை ஒப்புக் கொள்வதால் மற்றொரு வகுப்பாருக்கு தாங்கள் வைப்பாட்டி மக்களாக வேண்டியிருப்பதையும் ஞாபகப்படுத்திக் கொள்ள வேண்டுகிறோம்.

தோழர் பெரியார், குடி அரசு - கட்டுரை - 13.02.1927

Add comment


Security code
Refresh

Share this post

Submit to FacebookSubmit to Google PlusSubmit to TwitterSubmit to LinkedIn

புரட்சி மொழிகள்

"பார்ப்பான், சூத்திரன், பறையன் என்கிற ஜாதி அமைப்பு இருக்கிற வரையில் இந்த நாட்டில் ஒரு இஞ்ச் அளவுகூட முன்னேற்றம் காண முடியாது என்று உறுதியாகக் கூறுவேன்" - பெரியார்

தொடர்புக்கு

Periyar web version
கைப்பேசி: +919787313222
மின்னஞ்சல்:[email protected]

To Get Latest Articles

Enter your email address: