பெரியார் காங்கிரசிலிருந்த காலையில் பார்ப்பனர்கள், பார்ப்பனரல்லாதவர்களை வஞ்சித்து சூழ்ச்சி செய்து தங்கள் ஆதிக்கத்தை நிலைக்கச் செய்வதை உணர்ந்து பார்ப்பனரல்லாதாருக்கு சகல துறைகளிலும் அவரவர்களுடைய விகிதாச்சாரத்திற்குத் தகுந்தாற்போல் பிரதிநிதித்துவம் அளித்துவர வேண்டும் என கர்ஜனை செய்து வெளியேறினார் என்பதையும், அந்தக் கொள்கையை நாடெங்கும் திக்விஜயம் செய்து முழக்கினார் என்பதையும், மக்கள் அதன் கருத்தை உணர்ந்து தெளிந்து மாநாடுகள் கூட்டி, தீர்மானங்கள் நிறைவேற்றி, அந்த நோக்கம் சித்தி பெறும் வரை கிளர்ச்சி செய்தனர் என்பதையும், சர்க்காரும் அதன் உண்மையான அவசியத்தைக் கண்டு கம்யூனல் ஜி.ஓ என்ற வகுப்புவாரி உத்தரவைப் பிறப்பித்தனர் என்பதையும் மக்கள் அறிவர்.periyar 281

ஆனால், இன்று வகுப்பவாரி பிரதிநிதித்துவம் அளிக்கப்பட்டாலும், ஆரியர் வர்க்கம் இந்நாட்டில் இருக்கும்வரை ஆரிய ஆதிக்கம் இந்நாட்டிலிருக்கும்வரை தமிழர்களோ, தமிழ்நாடோ தலை தூக்கமுடியாது, தமிழர்கள் சுயமரியாதையோடு மனிதனாக வாழமுடியாது. தமிழ்நாடும் ஏனைய நாடுகளைப்போல் சுதந்திரத்தோடு எழில் பொருந்தி திகழமுடியாதென்பதை 2.5 வருடத்திய ஆரிய ஆட்சியிலிருந்து பெரியார் தெரிந்துகொண்டு, தரணியில் தமிழர்கள் தன்மானத்தோடு இருக்க வேண்டுமானால், ஆரிய ஆதிக்கத்திலிருந்து தனியாகப் பிரிக்கப்படவேண்டும். அதாவது, திராவிட நாடு முன்போலவே தனித்து விளங்க வேண்டும் என கடந்த இரண்டு வருடமாக பெரியார் எழுதியும் பேசியும் வருகிறார். அதன் உண்மையை அவசியத்தை மக்கள் உணர்ந்துவிட்டனர் என்பதைக் காட்ட ஜூன் 2ஆம் தேதி காஞ்சியில் பிரிவினை மாநாடு ஒன்று கூடப்போகிறது. காஞ்சியில் கடைக்கால் போட்டு நம்மால் ஆரம்பிக்கப்பட்ட எந்தக் கிளர்ச்சியும் வெற்றி பெறவில்லையென்று நமது எதிரிகளாலும் சொல்ல முடியாதென்றால் அதன் முக்கியத்தைக் குறித்து நாம் ஒன்றும் சொல்லவேண்டியது இல்லையென்றே கருதுகின்றோம்.

அடுத்தபடியாக, மாநாட்டைக் கூட்டுவிக்கும் தோழர் தங்கவேலரைக் குறித்துநாம் ஒன்றும் நமது வாசகர்களுக்கு அறிமுகப்படுத்திவைக்க வேண்டியதில்லை என்றாலும், வியாபாரத் துறையில் அவருக்குப் பலவாண்டு அனுபவம் உண்டு என்பதையும், எடுத்த காரியத்தைத் தொடுத்து முடித்து வெற்றி காணும் திறம் படைத்தவர் என்பதையும் நம்மால் சொல்லாமல் இருப்பதற்கில்லை. அத்தகையவரால் நடத்தப்படும் மாநாடு எவ்வளவு சிறப்போடு நடைபெறும் என்பதைக் குறித்து நாம் ஒன்றும் கூறத் தேவையில்லை என்றே கருதுகிறோம். மாநாட்டிற்குப் பல பேரறிஞர்களும், தலைவர்களும் கலந்துகொள்கிறார்கள் என்பதை அறிந்து நாம் பெரிதும் மகிழ்வடைகிறோம். ஆகவே, தமிழர்கள் - ஏன் திராவிட மக்கள் யாவரும் ஒன்று சேர்ந்து தங்களாலான உதவிகளைச் செய்து மேற்படி மாநாட்டை வெற்றிகரமாக நடத்திவைக்க வேண்டியது தங்கள் கடமை என்பதை உணராமலிரார் என்றே கருதுகின்றோம்.

உலகமிருக்கும் நிலையென்ன? மக்கள் படும் பாடென்ன? நாடுகள் மறையும் மாயமென்ன? பல மன்னாதி மன்னர்கள் எல்லாம் மதிகலங்கி நிற்கும் காரியமென்ன? இவர்கள் கோருவதென்ன? எனச் சிலர் நையாண்டி செய்யக்கூடும். அத்தகைய தோழர்களுக்குச் சொல்லுகிறோம். மக்கள் வாடுவதும் வெள்ளையனால், மக்கள் மாளுவதும் வெள்ளையனால், மக்கள் அறிவற்றிருப்பதும் வெள்ளையனால், மக்கள் வறுமையில் மூழ்கிக்கிடப்பதும், வறுமையினால் மக்கள் காலமழை இல்லாமல் கண்கலங்கி நிற்பதும் வெள்ளையனால் என்று சொல்லி பாமரமக்களை ஏய்த்து, வஞ்சித்து வாக்குப்பெற்று சட்டசபையில் புகுந்து வெள்ளையனைப் புகழ்ந்து தாஸானுதாஸன் என்றும், வெள்ளையர் குரோட்டன்ஸ் செடிக்கொப்பானவன், தாய் நாட்டான் பனை மரத்திற்கொப்பானவன் என்றும், துதிப்பாடித் திரியும், யுத்தத்தை எதிர்க்க - வெள்ளையர் சர்க்காரை எதிர்க்க கிளர்ச்சி செய்யப்போகிறோம்; சத்தியாக் கிரகக் கமிட்டிகள் நிறுவியாய் விட்டதென்றும் பாமரரை மயக்கி பின்னால், சத்தியாக் கிரகக் கமிட்டிகள், யுத்தத்திற்கு வேண்டிய உதவி செய்யும் என்று வாய்கூசாது கூறித்திரியும் கயவாளிகள் கூட்டம் நாமல்லவென்பதையும், இன்று அய்ரோப்பாவில் இத்தகைய நிலைமை ஏற்பட்டிருக்காவிடில், திராவிடநாட்டுப் பிரிவினைக் கிளர்ச்சி இந்த நிலையிலா இருக்கும்? என பெரியார் பல தினங்களுக்கு முன்னமே தெரிவித்துவிட்டார் என்பதையும், மேலும் திராவிடநாடு இன்றோ, நாளையோ பிரிக்கப்படும் காரியம் அவ்வளவு சாதாரண விஷயம் அல்ல என்பதையும் நாமறிவோம் என்று சொல்லிக்கொள்வதோடு, யுத்தம் முடிந்த பிறகு இந்தியாவிற்கு ஏதாவது ஒரு அரசியல் முறை வழங்கப்படும் என்பது நிச்சயமாகையினால் அந்தச் சமயத்தில் இப்பிரிவினை விஷயத்தை கவனத்தில் வைக்க வேண்டும் என்பதை வற்புறுத்துவதற்கும், பொதுமக்களும் அதன் அவசியத்தை உணர்ந்து வற்புறுத்தி ஆவன செய்யட்டும் என்பதற்காகவே யாகும் என்று.

அடுத்தபடியாக, இந்தியா ஏன் பிரிக்கப்படவேண்டும்? என்பதை நாம் இதற்கு முன் பல சமயங்களில் விளக்கியிருக்கிறோம் என்ற போதிலும் ஒரு முக்கியமான விஷயத்தை எத்தனை தரம் எடுத்து கூறினாலும் தவறாகாதென்ற காரணத்தினால் மீண்டும் சுருக்கமாக விளக்குகிறோம்.

முதலாவது, சமுதாயத்துறையை எடுத்துக்கொள்வோம். இன்று திராவிட நாட்டில் காணப்படும் ஜாதி வித்தியாசமும், மத வித்தியாசமும் உயர்வு தாழ்வும், மூட நம்பிக்கையும் மக்களுக்குள் காணப்படும் பிரிவினையும் அன்று அதாவது ஆரியவர்க்கம் இங்கு புகுவதற்கு முன், ஆரியனிசம் இங்கு பரவுதற்கு முன் காணப்பட்டதா? என்று  கேட்கிறோம். ஒரு குலத்திற்கொரு நீதி வழங்கும் முறையிருந்ததா என்று கேட்கிறோம். இன்று வெள்ளையர் ஆளுகிறார்கள் என்றாலும் நீதி ஆரிய நூல்களில் கண்டுள்ளபடி,

ஆரிய அரணாகிய மனு (அ)நீதியின் படிதானே நீதி செலுத்தப்பட்டு  வருகிறது. இதை மறுப்பவர்கள் முதலில் சமீபத்தில், திராவிடர் ஒருவர், தாம் மணந்த பெண் மணப்பதற்கு முன்னமே கர்ப்பவதியாயிருந்தாள் என்பதற்காக தொடுத்தவழக்கில், மனுநீதியின் படி சூத்திரன் அத்தகைய மணம் புரிந்துகொள்ளலாம் என இருக்கிற தென்று நீதிபதி எடுத்துக்கூறி வழக்கைத் தள்ளுபடி செய்ததற்குப் பதில் சொல்லட்டும் என்றுதான் நாம்கேட்கிறோம். எனவே, சமுதாயத் துறையில் மாறுதல் ஏற்பட வேண்டும் எனில், தமிழர் முறை புகுத்தப்படவேண்டுமெனில் ஆரிய ஆதிக்கத் தினின்று நாடு விடுபட்டால்தான் முடியுமென்பது நன்கு தெளிவாகும் என்று கருதுகிறோம். திராவிட நாடு தனியாகப் பிரிக்கப்பட்டால்தான் ஆரிய ஆதிக்கம் ஒழிய முடியும். ஆரிய ஆதிக்கம் ஒழிந்தால்தான். ஆரிய ஆதிக்கத்தை நிலைக்கச் செய்துவந்த சாஸ்திரங்கள், நீதிநூல்கள் ஒழியும், அவைகள் ஒழிந்தால்தான், ஆரியனைப்போல் தங்களை உயர்ஜாதி எனக் கருதிக்கொண்டிருப்பவர்களின் ஆடல் பாடல்கள் அடங்கும். அது அடங்கினபின்தான் சரிநிகர் சமம் என்ற உணர்வுதோன்ற முடியும். அஃது தேவையில்லையென்று  சொல்லுபவர்கள், டாக்டர் முத்துலட்சுமி அம்மையார் அவர்கள் கொண்டுவந்த தேவதாசி ஒழிப்பு மசோதாவுக்கு எத்தகைய எதிர்ப்பிருந்தது? எதிர்ப்புக்கு எதை ஆதாரங்காட்டினார்கள் என்பதையும், இன்று ஆலயங்கள் யாவருக்கும் பொது இடம் என்று சொல்லுகையில், அதை மறுக்கிறவர்கள் எதை ஆதாரமாக எடுத்துக்காட்டுகிறார்கள் என்பதையும் சிறிது சிந்தித்துப் பார்ப்பார்களேயானால் நாம் கூறுவதின் உண்மை விளங்கும் என்பதில் சிறிதும் சந்தேகமில்லை.

பொருளாதாரத் துறையை எடுத்துச் சற்று எண்ணிப்பாருங்கள். நம்நாட்டின் பொருளாதார நிலைமைக்கும், வடநாட்டின் பொருளாதார நிலைமைக்கும் எவ்வளவு வித்தியாசமிருக்கிறது? எந்நாட்டு மக்கள் கடல் கடந்து, கொழும்பு, மலேயா, சிங்கப்பூர், நெட்டால், ஜாவா, சுமத்திரா முதலிய இடங்களுக்குச் சென்று அட்டைக் கடியிலும், கொசுக்கடியிலும் இருந்து துயருறுகிறார்கள் என்பதையும், எந்த நாட்டவர் மாடிமேல் மாடிகட்டி சீமான்களாக வாழ்கிறார்கள் என்பதையும், எந்நாட்டவர், மச்சுவீடும்போய் குச்சுவீடுமில்லாமல் அலைந்து திரிகிறார்கள் என்பதையும் இதற்குக் காரணம்  என்ன என்பதையும் எண்ணிப் பார்க்கட்டும் முதலில் நம்மை நையாண்டி செய்யும் தோழர்கள், திராவிடநாடு பிரிக்கப்படாத வரை திராவிட ஆட்சி தோன்றாத வரை, ஆரிய ஆதிக்கம் இந்நாட்டிலிருக்கும் வரை எத்தகைய ஆட்சி வந்தாலும் சரியே, எவ்வளவு பெரிய சுயராஜ்யம் அளிக்கப் பட்டாலும் சரியே, வடநாட்டாரின் சுரண்டுதல் ஒருநாளும் நீங்காதென்பதை நாம் எந்த மலை உச்சியினின்றும் கூறத் தயாராயிருக்கிறோம்.

நீர்வளம், நிலவளம் பொருந்திய 1,33,893 சதுரமைல் கொண்ட இச்சென்னை மாகாணத்திற்கு வெளிநாட்டிலிருந்து வருடமொன்றுக்கு 5,16,73,000 ரூபாய்க்கு அரிசியும், 6,90,0000-க்கு தேக்கு முதலிய மரங்களும் 50,49,000-க்கு பருத்தியும் 48,00,000-க்கு நவதானியமும், 37,99,000-க்கு பாக்கும், 23,53,000-க்கு காய்கறி, கனி வர்க்கங்களும், 17,98,000-க்கு நெல்லும், 14,57,000-க்கு புகையிலையும் 10,32,000-க்கு கொப்பரைத் தேங்காயும், 5,04,000-க்கு மிளகாயும், 6,19,000-க்கு மற்ற காரசார சாமான்களும், 2,26,000க்கு ரப்பரும், 33,000-க்கு காப்பிக் கொட்டையும், 25,000-க்கு சர்க்கரையும் இறக்குமதியாகிற தென்றால், இந்நாட்டின் செல்வம் வெளிநாடுகளுக்கு எவ்வளவு செல்லுகிறதென்பதைக் கவனிக்க வேண்டாமா? என்று கேட்டுக்கொள்வதோடு, இந்நிலை மாறி நம்நாட்டு நிலத்தைத் திருத்தி மேற்கண்ட பொருள்கள் உற்பத்தி யாவதற்குச் சலுகைகள் காட்டி வசதிகள் அளித்து, நாடு செழிக்க, மக்கள் இன்புறச் செய்ய தனியாக நாடு பிரிக்கப்பட்டாலல்லாது இந்தியா எல்லாம் ஒன்று என்று சொல்லிக்கொள்ளும் காலம் வரை எத்தகைய சுயராஜ்யம் வந்தாலும் நம் நாட்டவர் முன்னேற மார்க்கம் சிறிதும் இல்லை என்பதை ‘உள்ளங்கை நெல்லிக்கனிபோல்’ காணலாம் என்றும் தெரிவித்துக் கொள்ளுகிறோம். நம்நாடு என்று பிரிக்கப்பட்டு எல்லைக்கல் நாட்டப்படுகிறதோ அன்றே போட்டுவிடலாம் - வெளிநாட்டுக்குச் செல்லும் 8 கோடி ரூபாய்க்கும் முற்றுப்புள்ளி, அன்றே காணலாம். இந்நாட்டின் வறுமையை ஒழிக்க மார்க்கமதனை, எங்கும் தொழிற்சாலைகளைப் பெருக்கி வேலையில்லாத் திண்டாட்டத்தை ஒழிக்கலாம். அதில்லாத வரை வடநாட்டில் தான் தொழிலாளர்கள் குளிர நம் நாட்டுத் தொழிலாளர் மலையேறி சாகவும்தான் ஆகுமேயல்லாது வேறொன்றையும் நாம் காணப்போவதில்லை.

அரசியல் துறையிலும் இதே கதிதான், திராவிடநாடு தனியாகப் பிரிக்கப்பட்டால் தான், பர்மா, சிலோன் ஆகிய நாடுகளைப்போல், நிர்வாகத்தில் தனித்து சுதந்திரமாக விளங்கமுடியும் என்பதை அனுபவம் நன்கு விளக்கும். வடநாட்டுக்கும் இந்நாட்டுக்கும் அரசியல் துறையில் தொடர்பிருக்கும் வரை இந்நாடு ஒரு நாளும் முன்னேற்றமடையாது. அவர்கள் நாட்டு வாணிபம் செழிக்க, கைத்தொழில் செழிக்க, வறுமையொழிய வகைகள் தேடப்படுமேயொழிய இந்நாட்டு மக்கள் வறுமை நீங்க, தொழிற்சாலைகள் பெருக கடல் கடந்து சென்ற மக்கள் நாடு திரும்ப வகைகள் செய்யப்படாது. திராவிட மக்கள் கல்வியிலும் அறிவிலும் உயர வகை செய்யப்பட மாட்டாதென்பதைக் காங்கிரஸ் இரண்டரை ஆண்டு ஆண்டகாலத்தில் வடநாட்டு ஆதிக்கம் இந்நாட்டில் நிலைக்க இந்தி மொழியைக் கட்டாயப் பாடமாக்கியதே போதிய சான்றாகும்.

கடைசியாக அய்ரோப்பாவின் இன்றைய நிலைமையைக் கண்ட பின்னும், இந்தியாவை பிரிக்க எண்ணலாமா என்று சிலர் வினவக்கூடும். அவர்களைக் கேட்கிறோம். உலகில் சகல நவீன தளவாடங்களையும் படைகளையும் படைத்த நாடுகள் எல்லாம் உயிர்வாழத் தத்தளித்துக்கொண்டிருக்கையில் விரல்விட்டு எண்ணக்கூடிய ஆகாய விமானங்களையும், கப்பல்களையும், ஒரு சில ராணுவங்களையும் கொண்டு விளங்கும் இப்பரந்த நாட்டின் நிலை என்னவாகும் என்று. இந்நிலைமையில் நாமிருப்பதற்கு பிரிட்டிஷார்தான் பொறுப்பாளியென்று சொல்லப்பட்டாலும், பல ஜாதி வித்தியாசங்களையும், மத வித்தியாசங்களையும் கொண்டு விளங்கும் நாட்டிலே இராணுவத்திலும் அதைக் காட்டிவரும் மக்கள் ஆயுதம் தாங்கிகளாய் விட்டால் பின்னால் வரும் விளைவைக் குறித்து யார் தான் அஞ்சாமலிருக்க முடியும். ஆகவே, இந்தியா தனித்தனியாகப் பிரிக்கப்பட்டால்தான் அவரவர்கள் தனித்தனியாக இருந்து தங்கள், படைகளைப் பெருக்கிக்கொண்டு, தங்கள் தங்கள் படைகளுக்குள் வேற்றுமையில்லாது வேண்டுமானால், இந்தியாவிற்கு வேற்றுநாட்டவர்களால் ஏதேனும் ஆபத்து ஏற்பட்டால், எல்லோரும் ஒன்று சேர்ந்து எதிர்த்து ஏன் முறியடிக்கக் கூடாதெனக் கேட்கிறோம்.

எனவே, சமுதாயத் துறையிலும், பொருளாதாரத்துறையிலும், அரசியல் துறையிலும் நாடு தனித்தனியாகப் பிரிக்கபட்டால்தான், ஆரிய ஆதிக்கம், இந்நாட்டைவிட்டு ஒழிக்கப்பட்டால்தான் திராவிட மக்கள் சுயமரியாதையோடு, மானத்தோடு, மனிதனாக வாழமுடியும் என்பது விளங்கும். இதில் ஆர்வமும், ஊக்கமும், அக்கறையுமுள்ள ஒவ்வொருவரும் காஞ்சியில் நடைபெறப்போகும் பிரிவினை மாநாட்டில் கலந்து தங்கள் தங்கள் சந்தேகங்களைத் தெளிவுபடுத்திக்கொண்டு, தங்கள் லட்சியம் பூர்த்திபெற சங்கல்பம் செய்து கொள்வார்களாக.

குடிஅரசு – (அண்ணா எழுதிய) தலையங்கம் - 26.05.1940

Add comment


Security code
Refresh

Share this post

Submit to FacebookSubmit to Google PlusSubmit to TwitterSubmit to LinkedIn

புரட்சி மொழிகள்

"பார்ப்பான், சூத்திரன், பறையன் என்கிற ஜாதி அமைப்பு இருக்கிற வரையில் இந்த நாட்டில் ஒரு இஞ்ச் அளவுகூட முன்னேற்றம் காண முடியாது என்று உறுதியாகக் கூறுவேன்" - பெரியார்

தொடர்புக்கு

Periyar web version
கைப்பேசி: +919787313222
மின்னஞ்சல்:pwversion@gmail.com

To Get Latest Articles

Enter your email address: