காங்கரஸ் லட்சியம் "சுயராஜ்யம்" என முதன் முதல் கூறியது காலஞ் சென்ற தாதாபாய் நவரோஜி. அது போல "தமிழ்நாடு தமிழருக்கே"என தமிழர்களின் பிரதிநிதிகளான மூன்று பெரியார்கள் சென்ற 11-ந்தேதி சென்னை திருவல்லிக்கேணி கடற்கரையில் ஒன்றரை லக்ஷம் தமிழர்கள் முன்னிலையில் கூறிவிட்டார்கள். அக்கூட்டத்துக்குத் தலைமை வகித்த மறைமலை அடிகள் மதவாதிகள் பிரதிநிதி, அக்கூட்டத்தில் பேசிய தோழர் பாரதியார் காங்கரஸ்காரர் பிரதிநிதி, அன்று பேசிய ஈ.வெ. ராமசாமிப் பெரியார் பகுத்தறிவுவாதிகள் பிரதிநிதி. ஆகவே தமிழ்நாட்டின் அபிப்பிராயம் அக்கூட்டத்திலே பூரணமாகப் பிரதிபலித்தது என தைரியமாகக் கூறிவிடலாம். தமிழ் நாட்டார் மதவாதிகள், பகுத்தறிவுவாதிகள், காங்கரஸ் வாதிகள் என்ற மூன்று பெரும் பிரிவில் அடங்கி விடுவர். அந்த மூன்று பிரிவார் அபிப்பிராயத்தையே அந்த மூன்று பெரியார்களும் தமிழர்களுக்கு அன்று பகிரங்கமாகத் தெரிவித்திருக்கிறார்கள். இதனால் இப்பொழுது தோன்றியிருக்கும் தமிழர் இயக்கம் எந்தக் கட்சிக்கும் உரியதல்ல வென்பதும் ஜாதி மத நிற கட்சி வித்தியாசமின்றி தமிழர்கள் அனைவருக்கும் சொந்தமானது என்பதும் விளங்கிவிட்டது. இனி "தமிழ்நாடு தமிழருக்கு" என்பதே தமிழர்களின் மூல மந்திரமாக இருக்க வேண்டும். "தமிழ்நாடு தமிழருக்கு" என்னும் பொன் மொழியைத் தமிழர்கள் சதா ஞாபகத்தில் வைத்துத் தமிழர் இயக்கத்தை வலுப்படுத்த முயல வேண்டும். "தமிழ்நாடு தமிழருக்கே" என்ற பொன்மொழியே பெரிய எழுத்தில் அச்சிட்டு ஒவ்வொரு தமிழனும் தன் வீட்டுச் சுவரில் ஒட்டி வைக்க வேண்டும். அச்சுக்கூடச் சொந்தக்காரரான தமிழர்கள் எல்லாம் "தமிழ் நாடு தமிழருக்கே" என்ற பொன்மொழியை அழகிய எழுத்தில் அச்சிட்டு தமிழ் மக்களுக்கெல்லாம் இலவசமாக வழங்க வேண்டும். "தமிழ்நாடு தமிழருக்கே" என்ற பொன்மொழியை தமிழ்நாடு முழுதும் ஒலிக்க வேண்டும். உண்ணும் போதும், உறங்கும் போதும், நடக்கும் போதும், வேலை செய்யும்போதும், "தமிழ்நாடு தமிழருக்கே" என்ற ஞாபகமே தமிழருக்கு இருக்க வேண்டும். தமது மரபுக்கு ஆபத்துண்டாகும் காலத்துத் தமிழர்கள் கட்சி பேதங்களையும், அபிப்பிராய பேதங்களையும் மறந்து ஒன்றுபடத் தவற மாட்டார்கள் என்பது சந்தேகமற விளங்கிவிட்டது. பல பிரிவினராய்ப் பிரிந்து நின்ற தமிழர்கள் ஒன்றுபட ஒரு தருணமளித்த கனம் ராஜகோபாலாச்சாரியாருக்கு தமிழர்கள் எல்லாம் நன்றி செலுத்த வேண்டியதுதான். பன்னூற்றாண்டு காலம் ஆரியருக்கு அடிமைப்பட்டுக் கிடந்த தமிழர்கள் ஆங்கிலக் கல்வியால் அறிவு விளக்கம் பெற்று ஆரியப் பீடையிலிருந்து ஒருவாறு விடுபட்டு வருகையில் தேசீயத்தின் பெயரால் மீண்டும் தமிழர்களை ஆரியர்களுக்கு அடிமைப்படுத்தச் சூழ்ச்சி வேலைகள் நடைபெறுகின்றன. அச் சூழ்ச்சி வெற்றிபெறத் தமிழர்கள் சம்மதிக்கவே கூடாது. ஆரிய நாகரிகத்தை எதிர்த்துப் போராடிய சித்தர் இயக்கத்தை சூழ்ச்சிக்காரப் பார்ப்பனர்கள் தமது பார்ப்பன மதம் மூலம் அடக்கி விட்டனர். அப்பால் ஆரிய நாகரிகத்தை ஒழிக்கப்போராடி வெற்றி பெற்றுவரும் சுயமரியாதை இயக்கத்தை தேசீயத்தின் பேரால் ஒழிக்க காங்கரஸ் பார்ப்பனர் முயல்கின்றனர். இச்சூழ்ச்சியை உணராது காங்கரஸ் தமிழர்களும் பார்ப்பனர்களுக்கு உடந்தையாக இருந்து கொண்டு உதவிபுரிந்து வருகிறார்கள். காங்கரஸ்வாதியான பாரதியாரைப் பார்த்தாவது அவர்கள் நல்லறிவு பெறுவார்களாக.

தோழர் ஈ.வெ.ரா. 11ந்தேதி சென்னைக் கூட்டத்தில் கூறியது போல் தமிழ் நாட்டைத் தனியாகப் பிரிக்கத் தமிழர்கள் கிளர்ச்சி செய்ய வேண்டும். இந்தி எதிர்ப்பு இயக்கம் தமிழ் மாகாணப் பிரிவினை இயக்கத்துக்கு முதல்படியே. தமிழ்நாடு தனியாகப் பிரிக்கப்பட்டால் தமிழர் மொழியும் இலக்கண இலக்கியங்களும் கலைகளும் நாகரிகமும் விருத்தியடையும். தமிழ்மொழி வளரும் தன்மையுடைய சீரியமொழி - ஜீவமொழி. எல்லாக் கலைகளையும் எல்லா அறிவுகளையும் தன்னுள் அடக்கிக்கொள்ள தமிழுக்கு சக்தியுண்டு. தமிழர் கலைகளையும் மத அறிவையும் வடமொழியில் சேர்த்தே ஆரியப் பார்ப்பனர் வடமொழியை வளப்படுத்திக் கொண்டனர். இதனை ஒரு பார்ப்பனரான காலஞ்சென்ற பண்டித வி.கெ. சூரிய நாராயண சாஸ்திரியாரே ஒப்புக்கொண்டிருக்கிறார். தமிழர்களுக்கு இப்பொழுது முக்கியமாக வேண்டப்படுவது மேனாட்டு விஞ்ஞான அறிவு. மேனாட்டு விஞ்ஞான நூல்களை - தமிழில் - நல்ல சுத்தத் தமிழில் மொழிபெயர்த்தாக வேண்டும். மொழிபெயர்க்குங்கால் சொற் பஞ்சம் ஏற்படுமோ என அஞ்சத் தேவையில்லை. இன்றியமையாத இடங்களில் ஆங்கிலப் பதங்களையும் தாராளமாக வழங்கலாம். பிலாஸபி, லாஜிக், பிசிக்ஸ், கெமிஸ்டிரி முதலிய ஆங்கில அறிவு நூல்களில் வழங்கப்படும் சொற்கள் எல்லாம் ஆங்கில பதங்கள் அல்ல. கிரிக், லத்தீன், பிரஞ்சு, ஜெர்மன், ஸமஸ்கிருதம் முதலிய பதங்களை ஆங்கிலப் பேராசிரியர்கள் தாராளமாகக் கையாண்டிருக்கின்றனர். அம்முறை எம்மொழிக்கும் இழுக்காகாது. தமிழ் மொழியைப் பல வழிகளிலும் வளப்படுத்துவதே நமது முழு நோக்கமாக இருக்க வேண்டும். தமிழ் மொழி அவ்வுயரிய நிலையை அடைய வேண்டுமானால் அது ராஜாங்க பாஷையாகித் தீரவேண்டும். தமிழ் மாகாணம் தனியாகப் பிரிக்கப்பட்டால்தான் தமிழ் ராஜாங்க பாஷையாக முடியும். ஆகவே தமிழ் மாகாணப் பிரிவினை விஷயத்தில் தமிழர்கள் முக்கியமாக கவனம் செலுத்த வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறோம்.

காங்கரஸ் கொள்கைப்படி பாஷா வாரியாக மாகாணங்கள் பிரிக்கப்பட்டால் எல்லா மாகாணங்களுக்கும் பொதுவான ஒரு பொதுமொழி வேண்டியது அவசியமே. அதற்கு ஏற்றமொழி இப்பொழுது இந்தியப் பொதுமொழியாக இருக்கும் ஆங்கிலமே. ஆங்கிலம் இந்தியப் பொதுமொழியாக மட்டுமன்றி உலகப் பொதுமொழியாகவும் இருக்கிறது. மக்களுக்கு சுதந்தர உணர்ச்சியையும், நல்லறிவையும் புகட்டக் கூடியது ஆங்கிலமே. மறைமலையடிகள் 11-ந்தேதிக் கூட்டத்தில் கூறியதுபோல இந்தியர்களை மனிதராக்கியது ஆங்கிலமே. இந்தியர்களுக்கு சுதந்தர உணர்ச்சியைக் கொடுத்ததும் ஆங்கிலமே. இந்தியர்களைப் பகுத்தறிவாளராக்கியதும் ஆங்கிலமே. இந்தியமொழிகளுக்குப் புத்துயிரளித்ததும் ஆங்கிலமே. இந்திய மொழிகள் புதுமுறையில் உருப்பெற்று வருவதற்குப் பெரிதும் உதவி புரிந்தது ஆங்கிலமே. நேருணர்ச்சியுடைய மொழிவல்லாரெல்லாம் இதனை ஒப்புக்கொள்வர். ஆங்கிலம் இந்தியர்களுக்கு அடிமை மனப்பான்மையை உண்டுபண்ணி விட்டதென காங்கரஸ்காரர் கூறுவது மிகவும் நன்றிகெட்ட பேச்சாகும். இந்தியால் இந்தியாவில் ஒற்றுமை ஏற்படுமெனக் கூறுவது குறும்புத்தனம் - போக்கிரித்தனமானதாகும். இந்தியின் யோக்கியதைகளை விளக்கிப் பலர் "விடுதலை"யில் எழுதியிருப்பதினால் நாமும் மீண்டும் எழுத விரும்பவில்லை. ஆங்கிலத்தினால் நாம் பெற்ற நலங்களையெல்லாம் ஒழித்து தமிழரை வட நாட்டாருக்கும் ஆரிய நாகரிகத்துக்கும் அடிமைப் படுத்தவே காங்கரஸ் பார்ப்பனர்கள் முயல்கின்றார்கள். ஆகவே தமிழ் மாகாணத்தை தனியாகப் பிரித்து தமிழை ராஜாங்க பாஷையாக்குவதையும் ஆங்கிலத்தை இந்தியப் பொதுமொழியாக்குவதையும் லட்சியமாகக் கொண்டு தமிழர் இயக்கம் உழைக்க வேண்டுமென்பது நமது பேரவா.

- 19.09.1938 "விடுதலை" தலையங்கம்

தோர் பெரியார், குடி அரசு - கட்டுரை - 25.09.1938

Add comment


Security code
Refresh

Share this post

Submit to FacebookSubmit to Google PlusSubmit to TwitterSubmit to LinkedIn

புரட்சி மொழிகள்

"பார்ப்பான், சூத்திரன், பறையன் என்கிற ஜாதி அமைப்பு இருக்கிற வரையில் இந்த நாட்டில் ஒரு இஞ்ச் அளவுகூட முன்னேற்றம் காண முடியாது என்று உறுதியாகக் கூறுவேன்" - பெரியார்

தொடர்புக்கு

Periyar web version
கைப்பேசி: +919787313222
மின்னஞ்சல்:[email protected]

To Get Latest Articles

Enter your email address: