தமிழர் செய்ய வேண்டிய வேலை

தமிழர்கள் சமூக வாழ்வில் தமிழ்நாட்டிலேயே கீழ் ஜாதியாய் இழி ஜாதியாய் சூத்திரராய் கருதப்படுகிறார்கள்.

தமிழர் தலையில் சுமத்தப்பட்ட மதங்களும் தமிழர்களை 4-ம் ஜாதி 5-ம் ஜாதி சூத்திர ஜாதி சண்டாள ஜாதி என்று சொல்லுகின்றன.

தமிழர்களுக்குள் புகுத்தப்பட்ட கடவுள்களும் தமிழ் பெண்களிலேயே தாசிகள் இருக்கச் செய்வதோடு அக்கடவுள்கள் இந்தத் தாசிகள் வீட்டுக்கு போகும் உற்சவங்களும் கொண்டாடப்படுகின்றன.

தமிழர்கள் அறிவும் சமயத்தின் பேரால் மழுங்கச் செய்து மூட நம்பிக்கை குருட்டு பழக்கவழக்கங்களுக்கு ஆளாக்கப்பட்டு உலகிலேயே தமிழ் மக்கள் முதல்தர மூடர்கள் என்றும் காட்டுமிராண்டிகள் என்றும் கருதும்படி செய்யப்பட்டுவிட்டது.

தமிழன் செல்வ நிலையைப் பற்றி யோசிப்போமேயானால் ஆரியமுறை ஜாதிப்பிரிவு காரணமாகவே தமிழர்களில் 4-ல் ஒரு பங்கு மக்கள் படிப்புக்கும் வைத்தியத்திற்கும் அறவே வழியில்லாமலும் உணவிற்கு அரைவயிற்றுக் கஞ்சிக்குக்கூட வழிஇல்லாமல் கூலி கொடுத்தாலும் கொடுக்காவிட்டாலும் உழைத்துத் தீரவேண்டும் என்கின்ற நிலையில் தீண்டப்படாதவர்களாய் இருக்கிறார்கள். மற்ற 3 பாகத்தவர்களில் பெருமக்களும் சரீரப் பாடுபட்டு உழைப்பதே அவர்களது கடமை என்கின்ற முறையில் கூலிக்கும் கூழுக்குமே பிறந்தவர்கள் என்கின்ற நிலைமையில் இருக்கிறார்கள். ஏதோ சிலர் தேவைக்குமேல் தேடத்தக்க நிலையில் இருக்கிறார்கள் என்றாலும் அவர்கள் தேடுவதை தங்கள் “ஜாதியை” உயர்த்திக் கொள்ளவும் தங்கள் தொழில் ‘இழிவைீ மாற்றிக் கொள்ளவும், ‘மேல் உலோகத்தில் நல்லிடம்’ தேடிக் கொள்ளவும் சுயநல காரியத்தில் பாழாக்கி ஒரு சோம்பேறிக் கூட்டத்தின் நல்வாழ்வுக்கும் உயர்நிலைக்கும் ஆதிக்கத்திற்கும் பயன்படுத்தப்பட்டு விடுகிறது.

தமிழர் மேன்மைக்கு தமிழன் ஒரு சிறு உதவி செய்வதும் பொருளளிப்பதும் பிச்சையாகவும், ஈகையாகவும், தயவாகவும் கருதப்படுகிறது.

தமிழரல்லாத சோம்பேறிகளுக்கு உதவியளிப்பதும், பொருள் கொடுப்பதும் தமிழ் மக்களின் கடமையாகவும் ஒழுக்கமாகவும் கருதப்படுகிறது.

சமுதாய வாழ்க்கைப்படியில் சரீரப் பிரயாசைப்படவேண்டியது தமிழனின் தர்மமாகவும், கடமையாகவும், சரீரத்தால் பாடுபடாமல் அன்னியரின் உழைப்பிலும் பொருளிலும் வாழவேண்டியது தமிழனல்லாதவனுடைய கடமையாகவும் கற்பிக்கப்பட்டுவிட்டது.

உண்மை தமிழன் வேலை

இதற்கெல்லாம் இன்றைய ஒரு தனி மனிதனோ ஒரு குறிப்பிட்ட வகுப்பார்களோ பொறுப்பாளிகளல்ல என்றாலும் வேறு எந்த மனிதராவது அல்லது ஏதாவது ஒரு காரணமாவது இருந்து தீரத்தானே வேண்டும்? அதைக் கண்டுபிடித்து திருத்திக் கொள்ளுவதைவிட உண்மை தமிழனுக்கு இன்று வேறு வேலை என்ன என்று கேள்ப்பதற்காகவே இதை எழுதுகிறோம்.

இக்கொடுமைகளுக்கும், குறைகளுக்கும், இழிவுகளுக்கும் பிரிட்டிஷ் அரசாங்கத்தை குறைகூற முடியுமா? அல்லது பிரிட்டிஷ் அரசாங்கமே தமிழ்நாட்டில் இருந்து விரட்டி அடிக்கப்பட்டு விட்டால் இவை ஒழிக்கப்பட்டுவிடுமா?

அல்லது பிரிட்டிஷாருக்குமுன் இந்தியாவுக்கு வந்த முஸ்லிம் அரசாங்கம் இக்கேடுகளுக்கு காரணமாயிருந்தது என்றாவது சொல்லிவிட முடியுமா? அப்படியானால் முஸ்லிம் ஆட்சி ஒழிந்து இன்றைக்கு 200- வருஷங்கள் போல் ஆகின்றதே. இதற்குள் அக்கேடுகள் ஒழிந்திருக்க வேண்டாமா?

முஸ்லிமும் பிரிட்டிஷாரும் இக்கேட்டிற்கு சிறிதாவது காரணஸ்தர்கள் என்று சொல்ல ஏதாவது ஆதாரம் இருக்கிறதா? அவர்களது சமயங்களில் இக்கேடுகளுக்கு ஏதாவது கடுகத்தனை ஆதாரம் உண்டு என்று யாராவது காட்ட முடியுமா? அல்லது இன்று பிரிட்டிஷாரும் முஸ்லிம்களும் ஏகபோக ‘சுயஆட்சி’ புரியும் அவர்களது நாடுகளிலாவது நாம் மேலே கூறிய ஏதாவது குறைகள் உண்டு என்றோ ஒரு வகுப்பை மற்றொரு வகுப்பு சமயத்தையோ பிறவியையோ சொல்லிக் கொண்டு கொடுமைப்படுத்தி இழிவுபடுத்துவதாகவோ சொல்ல முடியுமா? என்பனவாதியவைகளை ஆராய்ந்து பார்த்தால் இக்கொடுமைகளை நமக்கு நாமே தேடிக் கொண்டு நம்மை நாமே இழிவுபடுத்திக் கொள்ளுகின்றோம் என்பது நன்றாய் விளங்கும்.

ஆரிய மதமே காரணம்

தமிழ்நாட்டில் தமிழ் மக்கள் இன்றைய þ இழிநிலைக்கு தமிழ் மக்களின் அறியாமையால் சுமத்தப்பட்டிருக்கும் இந்து மதம் என்னும் ஆரிய- “பிராமண” மதமே காரணம் என்பதாக சென்ற பத்தாண்டுகளாக கூறி வருகிறோம், எழுதி வருகிறோம்.

நமக்கு முன்னிருந்த அநேக பழந்தமிழ் மக்களும் கற்றறிந்த பெரியார்களும் அந்நிய நாட்டு ஆராய்ச்சிக்காரர்களும் இதை எவ்வளவோ எடுத்துக்காட்டி ஆயிரக்கணக்கான புத்தகங்கள் சரித்திர ஆதாரங்களோடு எழுதியிருக்கிறார்கள்.

இன்றும் தமிழர் கலைகள், தமிழர்களின் பழைய நாகரிகத்தைக் காட்டும் ஆதாரங்கள், தமிழர்கள் தங்களுடைய பழஞ் சமயம் என்று சொல்லிக் கொள்ளப்படுவதின் உண்மைகள், நூல்கள் ஆகியவைகளும் நம் கூற்றை நன்றாய் விளக்கிக் காட்டக் கூடியவைகளாக இருக்கின்றன.

மற்றும் தமிழ் மக்களிலேயே ஆரிய (இந்து) மதத்தை விட்டு வெளிவந்து வேறு மதத்தை தழுவின ஏராளமான தமிழ் மக்கள் மேலே குறிப்பிடப்பட்ட குறைகளையும் கொடுமைகளையும் இழிவுகளையும் பெரு அளவுக்கு நீங்கப்பட்டவர்களாகி சமுதாயப் போட்டியில் - வாழ்வுப் போட்டியில் - சரி சம உரிமையாளராக வாழ்கின்றார்கள்.

ஆகவே தமிழன் சமுதாயத் துறையில் கீழ்மை அடைந்து இழிவுபட்டு நிரந்தர ஏழையாய் கூலியாய் வாழ்வதற்கும், கல்வித்துறையில் தற்குறிகளாய் மூடர்களாய் பாமரர்களாய் இருப்பதற்கும் அரசியல் துறையில் அடிமையாய் ஏவலாளராய் இருப்பதற்கும் அவர்கள் மீது சுமத்தப்பட்டுள்ள ‘பிராமணீ மதமும் அதன் உதவியால் ஆதிக்கம் பெற்ற ஆரிய அரசியல் முறையுமேயாகும் என்பது நமது துணிபு.

முதற்காரியம்

தமிழ் மக்கள் இன்று தங்களை உண்மைத் தமிழரென்றும் கலப்படமற்ற தனித்தமிழ் ஜாதி (கீச்ஞிஞு) என்றும் ஒருவன் சந்தேகமாய் கருதுவனாயின் அவன் உடனே தன்மீது சுமத்தப்பட்டிருக்கும் - தனக்கு எவ்வகையிலும் எப்போதும் சம்மந்தமிருந்திராததான, தன்னை (தமிழ் மகனை) சூத்திரன் என்றும் சண்டாளன் என்றும் கூறும்படியான - சமயத்தை உதறித் தள்ளிவிட வேண்டியது முதற் காரியமாகும்.

அடுத்தாற்போல் அத்தமிழ்மகன் தமிழ்நாட்டின் விடுதலையும், சுதந்திரமும், செல்வப் பெருக்கும், தொழில் மேம்பாடும்தான் தன்னுடையது என்றும், இவற்றிற்காக உழைப்பதுதான் தனக்காக தமிழ் மக்களுக்காக தமிழ் நாட்டுக்காகச் செய்யும் தொண்டு கடமை என்றும் கருத வேண்டும். இப்படிக் கருதாததாலேயேதான் தமிழன் இன்று முற்கூறப்பட்ட பல இழிவுகளுக்கு ஆளாகி நிரந்தர இழி மகனாய் இருக்க வேண்டியவனாய் இருக்கிறான்.

சுருங்கக்கூறின் தமிழன் ஈனநிலைக்கு காரணம் இந்து மதத்தை தனது மதம் என்று கருதியதும், இந்தியா பூராவையும் தன் நாடு (தேசம்) என்று கருதியதும் இவ்விரண்டுக்கும் உழைக்கும் தொண்டே மக்கள் தொண்டு தேசத் தொண்டு (தேசாபிமானம்) என்று கருதியதும் கருதி வருவதுமேயாகும்.

இந்து மதம் என்று சொல்லப்படுவதாவது ஒரு வகுப்பாருக்கு மாத்திரமே மேம்பாடு தருவதாகும்.

இந்தியா தேச அபிமானம் என்பது தமிழன் பல நாட்டாரின் நலனுக்கு உழைத்து பல நாட்டாருக்கு அடிமையாய் இருப்பது என்பதாகும்.

இந்த இரு நிலையும் அடியோடு அழியாமல் தமிழனுக்கு விடுதலை - சுதந்திரம் - தன்மானம் என்பவை ஏற்படப் போவதில்லை.

தமிழ்நாட்டு தொழில்முறைகளை எடுத்துக் கொண்டோமேயானால் அதுவும் தமிழனுக்கு பயன்படுவதில்லை என்பது விளங்கும்.

இரும்புத் தொழில் பம்பாய்க்காரர் பார்சீகக்காரர் செய்து பயனடைகிறார்கள்.

உலோகத் தொழிலையும் பம்பாய்க்காரன் ஷோலாப்பூர்காரன் உரிமையாக்கி பயனடைகிறான்.

துணித் தொழிலைப் பம்பாய் ஆமதபாத்காரர்கள் கைப்பற்றி பயனடைகிறார்கள். இந்த தொழில்கள் யந்திர உதவியினால் செய்யப்படுவதையே இங்கு குறிப்பிடுகிறோம். அதனால் தமிழ் தொழிலாளிக்கு வேலையில்லை; தமிழ் முதலாளிக்கும் லாபமில்லை.

மற்றும் லேவாதேவி தொழிலை எடுத்துக்கொண்டால் அவை பெரிதும் மார்வாடி நாட்டானும், குஜராத்தி நாட்டானும் முல்தான் நாட்டானுமே ஏகபோக உரிமையாக்கிக் கொண்டு திரட்டிக் கொண்டு போகும் செல்வம் கொஞ்சமா? அவை எப்படிப் போகிறது என்பதைப் பார்த்தால் தமிழ்க் கூலிகள், தொழிலாளர்கள் ஏழைகள் ஆகியவர்களின் செல்வம் கையைத் திருகிப் பிடிங்கிக் கொண்டு போவது போல் மார்வாடிகள் கொண்டு போகிறார்கள்.

பகற்கொள்ளை

மற்றும் தமிழ் வியாபாரிகள் ஏழைக்கிராமக்குடியானவனையும் சாமான்கள் வாங்கும் பாமர மக்களையும் ஏமாற்றி வஞ்சித்துத் தேடும் செல்வம் அத்தனையும் பகல் கொள்ளை தீவட்டிக் கொள்ளை என்று சொல்லப்படுவதுபோல கோடி கோடியாய் சிந்து மாகாணத்துக்கு வட்டியின் பேரால் கடத்திச் செல்லப்படுகிறது. அதன் பயனாக தமிழ்நாட்டில் உள்ள பெரும் பெரும் வர்த்தகர்கள் மிக மோச நிலைக்கு வந்துவிட்டார்கள். மணல் வீடு சரிந்து மட்டமாவது போல் தமிழ் வியாபாரிகள் தினம் தினம் கடன்காரராகி, பாப்பராகி, இன்சால்வெண்டாகித் தற்கொலை செய்து கொள்ளும் நாட்டைவிட்டு ஓடுவதுமான நிலையில் இருந்து வருகிறார்கள். வியாபார நிலைய காரியஸ்தர் என்பவர்களுக்கோ, மாதம் 100 ரூ சம்பளம் வாங்கின குமாஸ்தாவுக்கோ, இன்று மாதம் 25 ரூ கொடுக்க வியாபாரிக்கு சக்திஇல்லை. மாதம் 7-ரூபாய்க்கும் 8-ரூபாய்க்கும் கணக்குப் பிள்ளைகள் தவிக்கிறார்கள். மூல்தானி - மார்வாடி - வீட்டுச் சமையல்காரன் மாதம் 60-ரூ சம்பாதிக்கிறான்.

கம்பிளத் தொழிலும் பஞ்சாப் மாகாணக்காரன் கொள்ளைக்கு உதவுகின்றது. இதுபோலவே மற்றும் அநேகமாக சரீரக் கூலித் தொழில் போக மற்ற லாபம்தரும் யந்திரத் தொழில்கள் மூளைத் தொழில்கள் என்பவைகளில் எல்லாம் பெரிதும் தமிழ் நாட்டல்லாதவர்களால் தமிழரல்லாதவர்களால் கைப்பற்றப்பட்டு செல்வம் தேடப்பட்டு திரட்டிய செல்வமனைத்தும் தமிழ்நாட்டை விட்டு வெளிநாட்டிற்குக் கடத்தப்படுகிறதுடன் தமிழனுக்கு விரோதமாயும் அவை உபயோகப்படுத்தப்படுகிறது. இந்தப்படி பாழாவதும் கடத்தப்படுவதுமானது மேல்நாட்டுக்குப் போனால் என்ன? வடநாட்டுக்குப் போனால் என்ன? அல்லது கீழ்நாட்டுக்குப் போனால் என்ன?

 அரசியல் துறையிலும் நாம் (தமிழன்) வேறு நாட்டானுக்கே அடிமையாய் இருக்க வேண்டுமானால் அது மேல் நாட்டானுக்கு அடிமையானால் என்ன, வடநாட்டானுக்கு அடிமையானால் என்ன? மத விஷயத்திலும் தமிழன் தனது சமயம் அதாவது தான் எவனுக்கும் சமயத்தாலே இழிவானவனல்ல என்கின்ற உரிமையும், வாழ்க்கையில் யாருடனும் எந்தப் போட்டியும் போடத் தனக்கு உரிமை உண்டு என்கின்ற உரிமையும் இல்லாத ஒரு அந்நிய சமயத்தையே சுமந்து திரிய வேண்டுமானால் அச்சுமை இந்து (ஆரிய) மதமானால் என்ன? இஸ்லாம் மதமானால் என்ன? கிறிஸ்தவ மதமானால் என்ன? புத்த மதமானால் என்ன? சீக்கிய மதமானால் என்ன?

தமிழனின் செல்வம் தானாகட்டும் தமிழ் நாட்டைவிட்டு கடத்தித்தான் ஆக வேண்டுமானால் அதுமேல் நாட்டுக்குப் போனால் என்ன? வடநாட்டுக்குப் போனால் என்ன?

எனவே, தோழர்களே! இக்கட்டுரையில் இக்கருத்து சம்மந்தமான சில விஷயங்களை மட்டும் வெகு சுருக்கமாக குறிப்பிட முடிந்தது. இன்னம் இதைப் பற்றி ஏராளமாகத் தக்க ஆதாரங்களோடு எழுதலாம்; எடுத்துக் காட்டலாம். ஒவ்வொரு தமிழ் மகனும் இவைகளை நன்றாய் சிந்தித்துப் பார்க்க வேண்டும். பார்த்தபின் ஆரியப் புரட்டு, வடநாட்டுப் புரட்டு ஆகியவைகள் இருந்து மனிதன் விடுதலையாக முயற்சிக்க வேண்டும். பாழும் தேசியத்தால் தமிழர்களாகிய நாம் 50 ஆண்டுகளை பாழாக்கி விட்டோம். நாட்டையும் மக்கள் சமூகத்தையும் உண்மையாய் மேன்மையடையச் செய்ய முயற்சித்த ஒப்பற்ற பெரியார்களை நாஸ்திகன், தேசத்துரோகி, மக்கள் துரோகி, சுயநலக்காரன் என்றெல்லாம் வைது அவர்கள் பாடு பயன்படாத முறையில் செய்துவிட்டோம்.

உதைக்கும் காலுக்கும் முத்தமிட்டுப் பூசை செய்கிறோம்! மலத்தை மனமார முகருகிறோம். மானமிழந்தோம். பஞ்சேந்திரியங்களின் உணர்ச்சியை இழந்தோம். மாற்றானுக்கு அடிமையாகி வணங்குகிறோம். இதற்குத் தானா தமிழன் உயிர் வாழ வேண்டும்? எழுங்கள்! நம்மை ஏய்த்து அழுத்தி நம் தலைமேல் கால் வைத்து ஏறி மேலே போக வட நாட்டானுக்கும் தமிழரல்லாதவனுக்கும் படிக்கல் ஆகிவிட்டோம்.

இனியாவது தமிழ்நாடு தமிழருக்கே என்று ஆரவாரம் செய்யுங்கள். உங்கள் கைகளில் தமிழ்நாடு தமிழனுக்கே என்று பச்சை குத்திக் கொள்ளுங்கள். உங்கள் வீடுகள் தோறும் தமிழ்நாடு தமிழனுக்கே என்ற வாசகத்தை எழுதிப் பதியுங்கள். நம் வீட்டுக்குள் அன்னியன் புகுந்து கொண்டதோடல்லாது அவன் நம் எஜமானன் என்றால் நமக்கு இதைவிட மானமற்ற தன்மை - இழிதன்மை - வேறு என்ன என சிந்தியுங்கள்.

புறப்படுங்கள்! தமிழ்நாட்டுக்கு பூட்டப்பட்ட விலங்கை உடைத்து சின்னாபின்னமாக்குங்கள்!!

தமிழ்நாடு தமிழருக்கே!

தமிழ்நாடு தமிழருக்கே!!

தமிழ்நாடு தமிழருக்கே!!!

தோழர் பெரியார்,குடி அரசு - தலையங்கம் - 23.10.1938

Add comment


Security code
Refresh

Share this post

Submit to FacebookSubmit to Google PlusSubmit to TwitterSubmit to LinkedIn

புரட்சி மொழிகள்

"பார்ப்பான், சூத்திரன், பறையன் என்கிற ஜாதி அமைப்பு இருக்கிற வரையில் இந்த நாட்டில் ஒரு இஞ்ச் அளவுகூட முன்னேற்றம் காண முடியாது என்று உறுதியாகக் கூறுவேன்" - பெரியார்

தொடர்புக்கு

Periyar web version
கைப்பேசி: +919787313222
மின்னஞ்சல்:[email protected]

To Get Latest Articles

Enter your email address: