காங்கரஸ் காலித்தனத்துக்கு ஆப்பு

அன்பார்ந்த தலைவர் அவர்களே! தோழர்களே!

இது இந்தியை எதிர்ப்பதற்காகப் போடப்பட்ட கூட்டமாகும். நாங்கள் இந்தியை எதிர்ப்பதற்குக் கூறும் காரணங்களைக் கேட்டு சிந்தித்துச் சரியென்று பட்டால் ஏற்றுக்கொள்ளுங்கள். பிடிக்காதவர்கள் இங்கு நாளை ஒரு கூட்டம் போட்டு ஆதாரமிருந்தால் நேர்மையான காரணங்களைக் கூறி மறுக்கட்டும். அதைவிட்டுப் பொறுப்பற்ற வகையில் காலித்தனமாக குழப்பம் விளைவிக்க முயலுவது இழிவான காரியமாகும். இதுதான் காங்கரஸ்காரர்களின் சமாதானம் என்றால் அதையும் சமாளிக்க தயாராயிருக்கிறோம். காங்கரஸ் அஹிம்சை என்று கூறிக்கொண்டு காலித்தனத்தைக் கையாளுகின்றது. ஆனால் தாங்கள் அஹிம்சைவாதிகள் என்று சொல்லி மக்களை ஏமாற்றுகின்றனர்.

யார் தேசத் துரோகி?

அதே மாதிரி தாங்கள்தான் வெள்ளையர்களை இந்நாட்டைவிட்டு விரட்டப் போகின்றவர்கள் என்று மக்களிடம் கூறுகின்றனர். ஆனால் வெள்ளைக்காரர்களிடம் சென்று உங்களை இந்நாட்டில் என்றென்றும் நிலைத்திருப்பதற்கு உதவி செய்கிறோம், எங்களுக்கென்ன செய்கிறீர்கள் என வெள்ளையரிடம் ரகசிய ஒப்பந்தம் பேசுகின்றனர். ஆதியில் அன்னிய ஆட்சியை இந்நாட்டிற்கு கொண்டு வந்தது யார்? இதே பார்ப்பனர்கள்தான். இப்பார்ப்பனர்கள் இந்நாட்டுக்குச் செய்ததென்ன? வாய்க்கால்கள் வெட்டினார்களா? சாலைகள் போட்டார்களா? வீடுகள் கட்டினார்களா? இவர்கள் வெட்டிப் புறட்டியதென்ன? இவர்கள் நம் நாட்டிற்குத் தந்ததெல்லாம் தர்ப்பைப் புல்லும் கோவில் மணியும் தவிர வேறென்ன? இத்தகைய யோக்கியர்கள் இவர்களின் சூழ்ச்சிகளை விளக்கித் தங்கள் நாட்டு மக்களுக்காகப் பாடுபடுவோரை தேசத்துரோகிகள் என்று கூறுகின்றனர். எங்கள் நாட்டு மக்களுக்கு உழைப்பதற்கு எங்களுக் கில்லாத கவலை இந்தியாவுக்கு வெளியிலிருந்து ஆடுமாடு மேய்த்துப் பிழைக்க வந்தவர்கள் என்று சரித்திரம் கொண்ட இப்பார்ப்பனர்களுக்கு எங்கிருந்து வந்தது என்று கேட்கின்றேன். எங்களைத் தேசத் துரோகிகள் என்று கூறும் இவர்களுக்கும் இந்த தேசத்துக்கும் என்ன சம்பந்தம்? வெள்ளைக்காரர்களுக்கு நாங்கள் இந்தத் தேசத்தை காட்டிக் கொடுக்கிறோம் என்கிறார்கள். வெள்ளையர்கள் எங்கள் சொந்தக்காரர்களா? அல்லது அவர்களுக்கும் எங்களுக்கும் இரத்தக் கலப்பு இருக்கிறதென்று சரித்திரம் எழுதி வைத்துக் கொண்டிருக்கிறோமா? பார்ப்பனர்கள்தான் எங்களை வெள்ளையரின் தாயாதிகள் என்று எழுதி வைத்துக் கொண்டிருக்கின்றனர்.

நான் அன்று காங்கரசிலிருந்த பொழுதும் என்னை சி.ஐ.டி.க்காரர்கள் கவனித்து வந்தனர். காங்கரசை விட்டு வெளியேறிய பிறகும் எனக்குத் தானே ‘ஷேடோ’ போட்டு பலமுறை ராஜத்துவேஷத்துக்கு தண்டித்தனர். இப்பொழுதும் எங்களைத்தான் வெள்ளைக்காரன் தங்களுக்கு விரோதியென்று கருதியிருக்கிறானே ஒழிய பார்ப்பனர்களையல்ல. இன்று சகல வெள்ளையரும் - கவர்னர் முதல் - பார்ப்பனருடன் கொஞ்சுகிறார்கள், குலாவுகிறார்கள். இன்று ஒரு பார்ப்பானுக்கும் சி.ஐ.டி. கிடையாது. எனவே வெள்ளைக்காரனுக்கு நல்ல பிள்ளைகள் யார், அவர்களது கூலிகள் யார், தேசத்துரோகிகள் யார், மக்களை காட்டிக் கொடுத்து மந்திரியானது யார் என்பதை நீங்களே முடிவு கட்டிக் கொள்ளுங்கள். வெள்ளையரை விரட்டுவதாக உங்களிடம் சொல்லி ஓட்டு வாங்கின பார்ப்பனர் இன்று வெள்ளையரோடு விருந்துண்கிறார்கள். வெள்ளையருக்கு விருந்தளிக்கிறார்கள். இந்த லக்ஷணத்தில் வெள்ளையரை விரட்ட மந்திரியாயிருக்கிறோம் என்று இன்னும் அவர்கள் பேசுகிறார்களே!

யார் கொள்ளையடிக்கிறார்கள்?

வெள்ளையர் நம் நாட்டைக் கொள்ளையடிக்கிறார்கள் என்று கூறுகிறார்கள். அதற்காக இதுவரை இவர்கள் என்ன செய்தார்கள்?

வடநாட்டான் தமிழர்களைக் கொள்ளையடிப்பதையும் நம்மை வடநாட்டாருக்கு அடிமைப்படுத்த முயற்சிப்பதையும் மறைத்து நம் கவனத்தை வேறு வழியில் திருப்புவதற்காக அவர்கள் வெள்ளையர் கொள்ளை பல்லவி பாடுவதாகும். மற்றும் நம்மை வடநாட்டார்க்கு அடிமைப்படுத்தவும் நம்மை அவர்களை இன்னமும் நன்றாய் சுரண்டுவதற்காகவும் தான் வடநாட்டான் பாஷையாகிய இந்தியை நம்மீது இன்று காங்கரஸ் பார்ப்பனர் வலிந்து சுமத்துகின்றார்கள். இதற்காக வடநாட்டார்களான தோழர்கள் பிர்லா, பஜாஜ் போன்றவர்களிடமிருந்து நம் நாட்டுப் பார்ப்பனர்கள் பெருந்தொகை பெறுகின்றனர்.

வடநாட்டார்கள் தமிழர்களைச் சுரண்டுவதையும் தமிழர்களின் நெசவு முதலிய கைத்தொழில்களை வேரறுப்பதையும் மறைப்பதற்காக “வெள்ளைக்காரன் அன்னியன்; அவன் நம் நாட்டைக் கொள்ளையடிக்கிறான்” என்று வெள்ளைக்காரன் மேல் நமக்கு துவேஷத்தை உண்டுபண்ணி அவன் துணியை வெளுக்க, கசக்கச் செய்து ஆமதாபாத்காரன் துணியை வாங்கச் செய்து சேலம், கோயமுத்தூர் நெசவாளிகள் தலையில் கை வைக்கிறார்கள். இந்நாட்டு தொழிலாளி மக்கள் லக்ஷக்கணக்கில் பட்டினி கிடக்க தாங்கள் உடல் நோவாது உண்டு, நம்மை வடநாட்டாருக்கு அடிமைப் படுத்தி நம் தொழிலையும் செல்வத்தையும் அவர் அனுபவிக்கச் செய்து நம் தொழிலாளர்களையும் முதலாளிகளையும் ஓட்டாண்டியாக்குகிறார்கள்.

இன்று தமிழ்நாட்டில் பெரும்பாலான நெசவுக்காரர் பிச்சை எடுக்கும்படியான நிலையில் இருப்பதற்குக் காரணம் காங்கரசுக்கு லஞ்சம் கொடுத்து ஆமதாபாத் முதலாளி அடிக்கும் கொள்ளைதான்.

இந்திக் கொடுமை

இந்த லக்ஷணத்தில் நம்மீது உள்ள அன்பால் இந்தியைக் கட்டாய பாடமாக வைத்திருப்பதாக கனம் ஆச்சாரியார் கூறுகிறார். தமிழர்களின் மீது இவர்களுக்கு உண்மையாக அன்பிருக்குமானால் இந்த நாட்டு தொழிலாளிகளான உண்மைத் தமிழர்கள் 100 க்கு 97 பேர் தற்குறிகளாக இருப்பதை அறிந்தும், காங்கரஸ் மந்திரிகள் தமிழ் பள்ளிக்கூடங்களை மூடச் செய்து இந்தி பள்ளிக்கூடங்களைத் திறப்பார்களா? தமிழை ஒவ்வொருவரும் கட்டாயமாய் படிக்க வேண்டுமென்று சொல்லாமல் இந்தியை கட்டாய பாடமாகக் கற்பிப்பார்களா? ஜஸ்டிஸ்காரர்கள் தமிழ் கட்டாயமாகவும் இலவசமாகவும் கற்றுக் கொடுக்க சட்டமும், திட்டமும் வகுத்தார்கள்; பணமும் ஒதுக்கி வைத்தார்கள். காங்கரஸ்காரர் அதை ஒழித்துவிட இன்று இந்திக்குச் சட்டமும், திட்டமும் வகுத்திருக்கிறார்கள். இவர்கள் தமிழர்களா, தமிழ் அன்பர்களா - தமிழ்நாட்டுப் பற்றுடையவர்களா?

தமிழர்களின் வரிப்பணத்தைக் கொண்டு தமிழர் மொழிக்கும், தமிழர் கலை, நாகரிகம் முதலியவைகளையும் கெடுக்கக்கூடிய வடநாட்டு பாஷையை தமிழர்கள் மீது வலுக்கட்டாயமாகச் சுமத்துவதென்றால் இதைவிட வேறு அக்ரமம் வேண்டுமா? தமிழர்களின் வரிப்பணத்தை தமிழர்களின் நன்மைக்காக உபயோகப்படுத்தாமல் தமிழர்களைக் கெடுப்பதற்கும் அடிமைப்படுத்தப்படுவதற்குமான பாஷைக்கு உபயோகப்படுவதுதான் கனம் ஆச்சாரியார் தமிழர்கள் மீதும் தமிழ்நாடு மீதும் தமிழ்பாஷை மீதும் கொண்டுள்ள அன்புக்கு அறிகுறியா?

பார்ப்பனர்கள் தமிழர்களை அடிமைப்படுத்த செய்துவரும் சூழ்ச்சிகளை விளக்கி மக்களுக்கு எடுத்துச் சொன்னால் அது சட்ட விரோதமாம். அதற்குப் பெயர் ராஜத் துவேஷமாம் - வகுப்புத் துவேஷமாம். சொல்லுகிறவர்கள் மீது நாடு கடத்தக்கூடிய சட்டங்களையும் தண்டனைகளையும் இந்த அஹிம்சா தர்ம காந்தி - ராமராஜ்ய சர்க்கார் பிரயோகம் செய்கிறது. இது வெகு நீதியாம்! இக்காரியங்கள் எல்லாம் தமிழர்களின் சுதந்தர உணர்ச்சியை அடக்கச் செய்யும் கொடுங்கோன்மை அல்லவா? இதற்காக நான் அஞ்சவுமில்லை ஆச்சரியப்படவும் இல்லை.

தமிழும் ஆரியமும் ஒன்றா?

ஆனால் ஒரு சில தமிழர் தங்களை தமிழ் ரத்தம் ஓடும் தமிழர் என்று சொல்லிக்கொண்டு திராவிடம் வேறு தமிழ் வேறு என்றும், திராவிடமும் ஆரியமும் ஒன்று என்றும், கன்னடமும், தெலுங்கும், மலையாளமும் தமிழ் அல்ல என்றும், கன்னடியரும், தெலுங்கரும், மலையாளிகளும் தமிழர்கள் அல்லவென்றும் குலைக்கிறார்களே! இவர்கள் கலப்படமற்ற தமிழர்களா? என்பது தான் எனக்கு ஆச்சரியமாய் இருக்கிறது. இவர்களுடைய இந்த உணர்ச்சிதான் சில தமிழ் பெண்களைப் பொட்டுக் கட்டிவிடச் செய்ததோ என்று கருதுகிறேன். இந்த நபர்கள் இனி எந்த இழிவான காரியத்தைத்தான் செய்ய அஞ்சுவார்கள்.

இவர்களை தமிழர்கள் என்று எந்த மடையன்தான் நினைக்க முடியும் ஆரியருடன் திராவிடர்கள் கலந்து விட்டார்கள் என்றும் தமிழர்களும் கலந்துவிட்டார்கள் என்றும் இவர்கள் சொல்லுவதற்குக் காரணம் இதுதான் போலும். இதுதான் ராமராஜ்யத்தில் தமிழனுக்கு ஏற்படும் புதிய புத்திபோலும். இந்த மாதிரி தமிழ் மக்களைப் பார்த்துத்தான் நம் பழந்தமிழ்ப் பெரியார்கள் பார்ப்பனர் ஆண்டால் நாடு உருப்படாதென்று ஆயிரக்கணக்கான வருஷங்களுக்கு முன் கூறியிருக்கிறார்கள் போலும்.

“நூலெனிலோ கோல் சாயும் (நூல் - பூணூலணிந்த பார்ப்பான் பூமி ஆளுவானேயானால் கோல் சாயும்) செங்கோல் முறை கெட்டுப்போம்" என்றும், “பாப்புப் பெருக்கல்லோ நாயக்கர் ராஜ்யம் பாழ்த்ததுவே” என மற்றோர் தமிழ் பெரியாரும் சொல்லியிருக்கிறார்களாக்கும். இவர்கள் கூறியது முற்றிலும் உண்மையென்பதை இன்று ஆச்சாரியாரின் ஆட்சி மெய்ப்பிக்கின்றது. பார்ப்பன ஆட்சியில் இனி உண்மைத் தமிழர்கள் மானத்தோடு, சுதந்திரத்தோடு வாழ முடியாதென்பதையும் ஆரிய ரத்தமும் திராவிட ரத்தமும் ஒன்றாக கலந்துவிட்டது என்று கருதுகிற - கலக்கச் சம்மதிக்கிற தமிழர்தான் வாழ முடியும் என்பதையும் ஆச்சாரியாரின் அடக்கு முறைப் பிரயோகங்கள் வெளிப்படுத்துகின்றன.

எனவே தமிழர்கள் இனி சும்மாயிருப்பதில் பயனில்லை. பார்ப்பானுக்கு தமிழ்நாட்டை தமிழ் மக்களைக் காட்டிக் கொடுத்து இம்மாதிரி ஈன வாழ்வு வாழ்ந்துகொண்டு கன்னடியனுக்கு ஆந்திரனுக்கு இந்த நாட்டில் என்ன வேலை என்று கேட்கும் அற்பர்கள் அயோக்கியர்கள் இழி பிறப்புக்காரர்களை லட்சியம் செய்வதில் பயனில்லை. தமிழர்களுக்குத் தனி மாகாணம் வேண்டும். ஆரியனும் நாமும் ஒன்றுதான் என்று கருதும் ஈனத்தமிழனுக்கும் வடநாட்டாருக்கும் நமக்கும் எத்தகைய தொடர்பும் இருக்கக்கூடாது. வேண்டுமானால் நமது விருந்தினர்களாக நட்பினர்களாக வாழட்டும்; நமக்கு எஜமானர்களாக - தமிழ்நாட்டின் தலைவிதியை நிர்ணயிப்பவர்களாக வடநாட்டாரும் ஆரியபுத்திரர்களும் இருப்பதை ஒழிக்க வேண்டும். தன் வீட்டுக்கு தானே எஜமானனாய் இருக்க வேண்டுமென்பது சில தமிழருக்கு அவமானமாய் - கேலியாய் இருக்கிறதாம். ஆரிய சாவகாசம் இந்த தமிழனுக்கு எவ்வளவு மானங்கெட்ட நிலையை உண்டாக்கிவிட்டது பாருங்கள். தமிழ்நாடு தமிழ் மக்களுக்கே என்ற உரிமையிருக்க வேண்டும். ஆரியரோ ஒரு அய்யர் - அய்யங்கார் - ஆச்சாரி - சாஸ்திரி - சர்மாவோ அல்லது ஒரு வடநாட்டாரான ஒரு காந்தி - படேல் - நேரு-போஸ்-பிரசாத் போன்றார்க்கோ தமிழ்நாட்டுக்கும், தமிழர்களுக்கும் ஆவனவற்றையும் - அல்லாதவற்றையும் பற்றிப் பேச என்ன உரிமை இருக்கிறது என்று கேட்கின்றேன்.

நம் விஷயத்தில் அவர்கள் அனாவசியமாகத் தலையிடுவதை ஆண்மையுள்ள தமிழன் எவனும் இனி பொறுத்துக் கொண்டிருக்க முடியாது. தமிழனை சூத்திரன் என்றும், தாசி மகன் என்றும் எழுதி வைத்துக் கொண்டிருக்கும் வேத புத்தகத்தை கிழித்து நெருப்பில் போட்டு சாம்பலாக்கச் சம்மதிக்க இஷ்டப்படாத காந்திகளும், ஆச்சாரிகளும், சத்தியமூர்த்திகளும் தமிழனைப் பற்றியோ தமிழரைப் பற்றியோ பேச உரிமை உண்டா? இவர்களுக்கு பேச உரிமையளித்திருக்கும் தமிழன் உண்மை கலப்படமற்ற தமிழனாவானா என்று கேட்கிறேன். வெள்ளையர் இந்த நிமிஷமே ஒழியட்டும் எனக்கு கவலை இல்லை. ஆனால் தமிழன் சூத்திரன், தமிழ்ப் பெண் சூத்திரச்சி தாசி மக்கள் என்கிற வருணாச்சிரமத்தையும் ராமராஜ்ஜியத்தையும் நிலைநிறுத்தும் காந்திகளும் ஆச்சாரிகளும் அதற்கு முன்பே ஒழிய வேண்டாமா? எனக் கேட்கிறேன்.

எனவே வடநாட்டாரும் ஆரியர்களும் சோம்பேறி பார்ப்பனர்களும் நமக்குக் கட்டளையிட்டு அதன்படி தான் அவர்கள் தலைமையில் தான் நாம் வாழ வேண்டும் என்றால் அதைவிட தமிழன் உயிர் விடுவதே மேல். வடநாட்டார் நம்மீது ஆதிக்கஞ் செலுத்துவதை தடுக்க வேண்டுமானால் வடநாட்டார், சுரண்டுவதைத் தடுக்க வேண்டுமானால் தமிழ்நாடு தனி மாகாணமாகப் பிரித்து ஆக வேண்டும். இதற்கு நாம் விடாது போராட வேண்டும். தமிழ்நாடு தமிழருக்கே என்று கிளர்ச்சிகளும் கூப்பாடுகளும் மூலை முடுக்குகளிலும் தோன்ற வேண்டும். உண்மைத் தமிழர்கள் அனைவரும் வீறுகொண்டெழுந்து போராட வேண்டும். அப்பொழுதுதான் தமிழர்கள் தமிழர்களாக மானமுள்ள மனிதர்களாக வாழ முடியும்.

குறிப்பு: சேலத்தில் 16.10.1938-இல் நடைபெற்ற இந்தி எதிர்ப்புக் கூட்டத்தில் ஆற்றிய சொற்பொழிவு.

தோழர் பெரியார், குடி அரசு - சொற்பொழிவு - 30.10.1938 

Add comment


Security code
Refresh

Share this post

Submit to FacebookSubmit to Google PlusSubmit to TwitterSubmit to LinkedIn

புரட்சி மொழிகள்

"பார்ப்பான், சூத்திரன், பறையன் என்கிற ஜாதி அமைப்பு இருக்கிற வரையில் இந்த நாட்டில் ஒரு இஞ்ச் அளவுகூட முன்னேற்றம் காண முடியாது என்று உறுதியாகக் கூறுவேன்" - பெரியார்

தொடர்புக்கு

Periyar web version
கைப்பேசி: +919787313222
மின்னஞ்சல்:[email protected]

To Get Latest Articles

Enter your email address: