தேசாபிமானம், தேச பக்தி என்பவைகள் சுயநலச் சூட்சி என்றும், தனிப்பட்ட வகுப்பு மக்கள் தங்கள் வகுப்பு நலத்துக்கு ஆக பாமர மக்களுக்குள் புகுத்தப்படும், ஒரு (வெறி) போதையென்றும் பல தடவை நாம் சொல்லி வந்திருக்கிறோம்.

மற்றும் "தேசாபிமானம் என்பது காலிகளுக்கு ஏற்பட்ட கடைசி ஜீவனமார்க்கம்" என்று மேனாட்டு அறிஞர் ஒருவர் கூறிய ஆப்த மொழி என்றும் பல தடவை எடுத்துக்காட்டி இருக்கிறோம்.

இவற்றை எந்த ஒரு தேசபக்தனும், தேசாபிமானியும் இதுவரை மறுக்கவே இல்லை என்பதோடு இவ்வாப்த வாக்கியங்கள் நிறைந்த ஆங்கிலப் புத்தகங்கள் பாடப் புத்தகங்களாகவும் வைக்கப்பட்டு வந்திருக்கின்றன.

இனியும் யாருக்கு ஆவது இவற்றில் சந்தேகங்களிருக்குமானால் இன்றை அபிசீனியா, இத்தாலி யுத்த மேகங்களையும், இடியையும், மின்னலையும் பார்த்தால் கண்ணாடியில் முகம் தெரிவதுபோல் விளங்கும். மற்றும் தேசாபிமான விஷயமாயும், தேசங்களைக் காப்பாற்றும் விஷயமாயும் பல தேசக் காவலர்கள் ஏற்படுத்திக் கொண்டிருக்கிற சர்வதேச பாதுகாப்புச் சங்கத்தின் யோக்கியதையைப் பார்த்தாலும் தெரியும்.

இளைத்தவனை வலுத்தவன் கொடுமைப்படுத்துவதும்,

ஏமாந்தவனைத் தந்திரசாலி ஏமாற்றுவதும்தான் இன்று ஆஸ்திகர் களுடைய கடவுள்களின் இரண்டு கண்களாகவும், தேச பக்தர்கள், தேசாபிமானிகள் என்பவர்களின் ஜீவநாடியாகவும் இருந்து வருகின்றன.

இந்த இரண்டு காரியங்களுக்கு ஆகத்தான் அதாவது இம்சித்தல், ஏமாற்றுதல் ஆக இரண்டு காரியங்களுக்கு ஆகவும் அவை நிரந்தரமாகவும், ஒழுங்காகவும், பத்ததியாகவும் நடைபெறுவதற்கு ஆகவேதான் உலகில் கடவுள், மதம், மோட்சம், நரகம், சாஸ்திரம், புராணம், அரசு, பிரதிநிதித்துவம், சட்டசபை, சட்டம், போலீசு, நீதிபதி, சிறைக்கூடம், சத்தியம், நீதி, ஒழுக்கம், ஒழுங்குமுறை, யோக்கியம், பரிசுத்தம், பெரியவர் வாக்கு, மகாத்மாக்கள் சேவை, தெய்வத் தன்மை பொருந்தியவர்கள் அவதாரம் என்பன போன்ற சர்க்கரை பூசிய பாஷாணங்கள் இன்று உலகில் கற்பிக்கப்பட்டு இருந்து செல்வாக்குப் பெற்றோ பெறாமலோ காப்பாற்றப்பட்டு வருகின்றன.

ஜப்பான் சைனாவோடு போர் தொடுத்தபோது ஜப்பானுக்கு அதன் வியாபாரப் பொருள் விற்பதற்கு நாடுகள் இல்லை. அதற்குப் போதிய துறைமுகமில்லை. மற்ற நாடுகளைப் போல் அதற்கு குடியேற்ற நாடு இல்லை என்பது போன்ற காரணங்கள்தான் வெளிப்படையாகவே சொல்லப்பட்டன.

இத்தாலி அபிசீனியா மீது போர் தொடுப்பதற்கும் இந்தக் காரணங்கள் தான் இன்று முக்கியமாகச் சொல்லப்படுகின்றன. பிறகு பிறத்தியாரை ஏமாற்ற ஏதோ மொண்டிச் சாக்குகள் பஞ்சாயத்தில் பேசப்படுகின்றன.

சர்வதேசப் பாதுகாப்புச் சங்கத்தில் யுத்தத்துக்கு சம்பந்தப்பட்ட நாடுகள் போக மற்ற நாட்டு அங்கத்தினர்களோவெனில் உலகத்துக்கோ தங்களுக்கோ சரியென்று பட்டதை வெளியில் சொல்லவே மயங்குகின்றார்கள்.

காரணம் என்னவென்றால் யுத்தத்தில் சம்பந்தப்பட்டு வலுவில் தாக்க முற்பட்ட நாடுகள் மற்ற பிரநிநிதிகளைப் பார்த்து, "உங்களுக்கு மாத்திரம் வியாபாரத்துக்குப் பல நாடுகள் இருக்கின்றன. நீங்கள் மாத்திரம் உங்கள் தேசமல்லாமல் வேறு பல தேசங்களை குடியேற்ற நாடாகவும் அனுபவிக் கிறீர்களே அது மாதிரி எங்களுக்கும் வேண்டாமா?" என்று கேட்க ஆரம்பித்தால் தலைகுனிய வேண்டியவர்களாய் இருக்க வேண்டி இருப்பதால் "நான் நோகாமல் அடிக்கிறேன் நீ ஓயாமல் அழு" என்று சொல்ல வேண்டியதாய் விட்டன. சர்வதேச சங்கம் என்பது கண்டித்து உண்மையான எண்ணத்தோடு இத்தாலியைப் பார்த்து ஒரு உறுமல் உறுமி இருக்குமானால், இன்று இத்தாலி வாலை ஒடுக்கிக் கொண்டு அடங்கி இருக்கும்.

ஜப்பான் சைனா சண்டையின் போதும், ஜப்பான் இஷ்டம் ஒரு அளவுக்கு பூர்த்தியான பின்பே சர்வதேச சங்கம் மிரட்ட ஆரம்பித்தது.

அதுபோலவே இத்தாலியின் உள் எண்ணம் பூர்த்தி ஆன பின்புதான் சர்வதேச சங்கம் மிரட்டும் போல் இருக்கிறது.

பொதுவாகவே சர்வதேச சங்கத்தை நாம் ஒரு உண்மையான உலகப் பாதுகாப்புச் சங்கம் என்று சொல்ல முடியவில்லை.

அதை வலுத்தவர்கள், தந்திரக்காரர்கள் பாதுகாப்புச் சங்கம் என்றுதான் சொல்ல வேண்டும்.

யோக்கியமான ஒரு சர்வதேச பாதுகாப்புச் சங்கம் இருக்க வேண்டு மானால் அது உலக, எல்லா தேசங்களுக்கும் ஒவ்வொரு பிரதிநிதியைத் தெரிந்தெடுத்து, அந்தப் பிரதிநிதிகள் அடங்கிய சபைக்கு உலக அரசியல், ராணுவம் ஆகியவை முழுவதையும் ஒப்படைத்துவிட்டு, இன்று தனித் தனி ராஜாவாகவோ சர்வாதிகாரியாகவோ இருப்பவர்களுக்கு ஜீவானாம்சம் கொடுத்து உட்கார வைத்து அச்சபைக்கு தலைவர்களாகத் தேசம், ஜாதி, மதம், கடவுள் செயல் என்கின்ற குறுகிய நோக்கமற்று உலகம் எல்லாம் ஒரு தேசமாகவும், மக்கள் எல்லாம் ஒரே (மனித) ஜாதியாகவும் கருதுபவராகவும்,

உலக சொத்துக்கள் எல்லா மக்களுக்கும் சொந்தமானது என்கின்ற சகோதர உணர்ச்சி உள்ளவராகவும் உள்ளவரைத் தலைவராகப் போட்டு ஆட்சி நடத்தப்படுமானால் அது உண்மையான சர்வதேச பாதுகாப்புச் சங்கமாக இருக்கலாம்.

35 கோடி மக்கள் உள்ள இந்தியாவுக்கும், 45 கோடி மக்கள் உள்ள சைனாவுக்கும் (கிட்டத்தட்ட உலக ஜன சமூகத்தில் சரி பகுதி உள்ள தேசங்களுக்கு) இன்று சர்வதேச சங்கத்தில் இருக்கும் பிரதிநிதிகள் யார் என்பதும் அவர்கள் இந்த தேசங்களில் ஏற்பட்ட நெருக்கடிகளுக்கு என்ன உதவி செய்தார்கள் என்பதும், சர்வதேச சங்கத்தின் நீதியான ஆக்ஷியில் இவ்விரு தேச மக்களும் திருப்தியாய் கவலை இல்லாமல் மானத்தோடு வாழுகின்றார்களா என்பதும் கவனித்துப்பார்த்தால் இன்றைய சர்வதேச பாதுகாப்புச் சங்கத்தின் யோக்கியதை தானாகவே விளங்கும்.

ஆகவே சர்வ தேசாபிமானச் சங்கத்தின் யோக்கியதையே இப்படி இருக்கும்போது, இனி தனித்தனி தேசாபிமான சங்கத்தின் யோக்கியதையும் அச்சங்கத்தால் ஏற்பட்ட தேசப் பாதுகாப்பு யோக்கியதையும் எப்படி இருக்கும் என்பதைப் பற்றி நாம் அதிகம் வர்ணிக்க வேண்டியதில்லை என்றே சொல்லுவோம்.

இந்திய தேசாபிமானம், தேசபக்தி என்பது இன்று ஒரு சாதாரண மனிதராகிய காந்தியாரிடம் அதாவது மகாத்மா என்பவரிடம் மக்கள் வைத்திருக்கும் வைக்கும் பக்தி அபிமானம் ஆகியவற்றைப் பொருத்தே இருக்கிறது.

எவனாவது காந்தியாரை முட்டாள் என்று சொல்லிவிட்டாலோ அல்லது அவர் நம்மைப் போல சாதாரண மனிதர்தான் என்று சொல்லி விட்டாலோ அதுவே இன்று எந்த மனிதனையும் தேசத்துரோகி என்றும், தேசாபிமானமற்றவர்கள் என்று சொல்லி விடுவதற்கும் பரீக்ஷிப்பதற்கும் போதுமான கருவியாய் இருக்கிறது.

இன்று இந்தியாவில் உள்ள தேசாபிமானம் பணச்செலவினாலும், பார்ப்பனப் பிரசாரத்தாலும் ஏற்படுவதே ஒழிய மற்றபடி மக்கள் சமூகத்துக்கு பொதுவாக உள்ள ஏதாவது ஒரு குறையையோ தேவையையோ உத்தேசித்து ஏற்பட்டதல்ல.

பார்ப்பான் தன்னை மனித சமூகத்தில் இருந்து பிரித்துக் கொண்டு தான் மாத்திரமே மேல் ஜாதிக்காரன் என்றும், மற்றவர் தனக்கு தொண்டு செய்யவே கடவுளால் பிறப்பிக்கப்பட்டவர்கள் என்றும் சொல்லுகிறவன், பணக்காரர்களாய் முதலாளிகளாய் இருக்கிறவர்களோ அவர்களுக்கும் அதுபோலவே தாங்கள் மற்ற சாதாரண மக்களிடம் இருந்து விலக்கப் பட்டவர்கள் என்றும், மற்ற மக்களிடம் தமக்கிஷ்டமான வேலை வாங்கிக் கொண்டு தமக்கிஷ்டமான கூலி கொடுக்கவே கடவுள் தங்களை சிருஷ்டித்துத் தமக்கு செல்வத்தைக் கொடுத்து மற்ற மக்களைத் தொழில் செய்யச் சிருஷ்டித்து இருக்கிறார் என்றும் கருதிக் கொண்டிருக்கிறவர்கள்.

இவ்விரண்டு பேருக்கும் உள்ள வித்தியாசமெல்லாம் பார்ப்பான் கூலி கொடுக்காமல் வேலை வாங்கிக் கொள்ள உரிமையுள்ளவன் என்பதும், பணக்காரன் ஏதாவது கூலி கொடுத்து வேலை வாங்க வேண்டும் என்பதும், தவிர மற்றப்படி மற்ற ஜனங்களைவிட தாங்கள் மேலானவர்கள் என்பதிலும் இந்நிலை கடவுளால் அளிக்கப்பட்டது என்பதிலும் வித்தியாசமான அபிப்பிராயமில்லவே இல்லை.

இப்படிப்பட்ட இந்த இரண்டு கூட்டத்தாரும் சேர்ந்துதான் இந்தியாவின் தேசாபிமானத்துக்குக் கர்த்தாக்களாய் இருக்கிறார்கள்.

எப்படி என்றால் பணக்காரன் பணத்தை பல லட்சக்கணக்காய் கொடுக்கிறான், பார்ப்பான் தந்திரத்தை பிரயோகிக்கிறான். இருவரும் சேர்ந்து கூலிகளைப் பிடித்து தேசாபிமானப் பிரசாரம் நடத்தி அதற்கு செல்வாக்கை உண்டாக்கி விடுகிறார்கள்.

ஆகவே இந்த இரண்டு கூட்டத்தார்களாலும் இவர்களுடைய கூலிகளாலும் நடத்தப்படும் தேசாபிமானம் பாமர மக்களுக்குப் பயன்படுமா அல்லது இந்த மூன்று கூட்டத்தையும் வெளியாக்கி அவர்களை ஒழிக்க முயற்சிக்கும் "தேசத் துரோகம்" பாமர மக்களுக்கு பயன்படுமா என்பதை அறிஞர்கள் யோசிக்க வேண்டும்.

இன்று நம்முடைய பொது ஜனங்கள் அல்லது பாமர ஜனங்கள் என்பவர்களின் யோக்கியதை நாம் அறியாததல்ல. அவர்கள் ஆண்களில் 100க்கு 90 தற்குறிகள் பெண்களில் 100க்கு 98 தற்குறிகள்.

அதோடு மாத்திரமல்லாமல் 100க்கு 50 பேர்களுக்கு மேல் ஜீவனத்துக்கு வேறு எவ்வித மார்க்கமும் இல்லாமல் எந்தக் காரியத்தையும் செய்தாவது ஜீவனம் நடத்த வேண்டும் என்கின்ற கவலையும் பசிப்பிணியும் உள்ளவர்கள். எனவே இந்த நாட்டில் நன்மை தீமை, யோக்கியன் அயோக்கியன், சுயநலக்காரன் பொதுநலக்காரன், சூட்சிக்காரன் உண்மையானவன் என்கின்ற தன்மைகளைக் கண்டுபிடிக்கச் சரியான அறிவும் யோக்கியதையும் பொதுமக்களுக்கு எப்படி உண்டாகும்?

ஆகவே, யாரோ ஒரு சில நபர்கள் தான் உண்மையாகவும் கவலையாகவும், உழைக்கக் கூடியவர்களாகவோ உண்மையை எடுத்துச் சொல்லக் கூடியவர்களாகவோ கிடைக்கலாம். ஆனால் அவர்கள் பொது ஜனங்களால் மகாத்மா என்றோ, தேசாபிமானி என்றோ தேச பக்தர் என்றோ தேசியவாதி என்றோ கருதப்படக் கூடியவர்களாய் இருக்க முடியாது என்பதோடு அவர்கள் "தேசத் துரோகியாயும், மதத் துரோகியாயும், நாஸ்திகர்களாயும்" தான் இருக்க முடியும்.

அதோடு மாத்திரமல்லாமல் பொதுஜனங்களால் வசவு கேட்கவும் துன்புறுத்தப்படவும் வேண்டியவர்களாகவும் கூட இருக்கக் கூடும்.

எப்படி இருந்தாலும் முடிவில் "தேசத் துரோகிகள்" எனப்படுபவர் களும் நாஸ்திகர்கள் என்னப்படுபவர்களும் தான் வெற்றி பெறுவார்களே தவிர அவர்கள் தான் வெற்றி பெற்றாக வேண்டுமே தவிர மற்றபடி இந்த ஜால வித்தையான தேசபக்தி வெற்றியடையவோ மக்களுக்குப் பயன்படவோ போவதில்லை என்பது உறுதி.

தோழர் பெரியர் -குடி அரசு - தலையங்கம் - 29.09.1935

Add comment


Security code
Refresh

Share this post

Submit to FacebookSubmit to Google PlusSubmit to TwitterSubmit to LinkedIn

புரட்சி மொழிகள்

"பார்ப்பான், சூத்திரன், பறையன் என்கிற ஜாதி அமைப்பு இருக்கிற வரையில் இந்த நாட்டில் ஒரு இஞ்ச் அளவுகூட முன்னேற்றம் காண முடியாது என்று உறுதியாகக் கூறுவேன்" - பெரியார்

தொடர்புக்கு

Periyar web version
கைப்பேசி: +919787313222
மின்னஞ்சல்:[email protected]

To Get Latest Articles

Enter your email address: