சென்னை மந்திரிசபையினர், நவம்பர் மாதத்தில் கொண்டுவரப் போகிறோம் என்று சொல்லி, இப்போது பொதுமக்கள் கருத்தறிய வெளியிட்டிருக்கும் சென்னை விவசாயிகள் மசோதாவையே தைரியமான மசோதா என்று கூறுகிறோம். இப்படி ஒரு மசோதா கொண்டு வந்து சட்டமாக்கினால்தான், உண்மையில் உணவு நெருக்கடியை ஒழித்துக்கட்ட முடியும் என்கிற முடிவுக்கு வந்ததானது, மந்திரிசபையினரின் தைரியத்தை மட்டுமல்ல, இப்போதைய நிலையில் பிரச்சனைக்கு எது பரிகாரம் என்பதையும் ஓரளவு காட்டுகிறது.

முதலில் மசோதாவின் அடிப்படையை – சாராம்சத்தைக் குறிப்பிடுவோம்.

1. (சென்னை மாகாணத்தில்) பயிரிடப்படாமல் தரிசு நிலங்களாகப் போட்டுவிடுவதை அனுமதிக்க முடியாது. 2. உணவுப் பொருள் விளைவிக்க வேண்டிய நிலத்தில், வியாபார லாப நோக்கத்தோடு வேறு பயிர்கள் பயிரிடுவதை அனுமதிக்க முடியாது. நிலங்களில் இத்தகைய விதைகளையே, இன்ன வகையான பயிரையே சாகுபடி செய்யவேண்டும் என்பதைச் சர்க்கார் வரையறுக்கும். 3. ஒரு நிலத்தின் சாகுபடியில் போதிய திறமை காட்டப்படவில்லை என்றால், திறமை இல்லாதவர் கையை விட்டு நிலத்தின் நிர்வாகத்தை மாற்றவும் - நிலத்தையே சுவாதீனப்படுத்திக் கொள்ளவும் சர்க்காருக்கு உரிமையுண்டு.

இந்த மூன்று திட்டங்களை அடிப்படையாகக் கொண்டே, இந்த மசோதா தயாரிக்கப்பட்டிருக்கிறது. இந்தத் திட்டங்களைப் பார்க்கும் போது, எந்த நோக்கத்தோடு இந்த மசோதா கொண்டுவரப்பட்டிருக்கிறது என்பதை விளக்க வேண்டியதில்லை. உழவுத் தொழிலையே முக்கியமான பெருந்தொழிலாகக் கொண்டு நாட்டில் பெரும்பான்மையான மக்கள் இந்தத் தொழிலில் ஈடுபட்டிருந்துங்கூட, வாழ்க்கைக்கு ஜீவாதாரமான உணவுப் பொருளுக்கு, பிறர் தயவுக்குக் கைகட்டி நின்றே, கெஞ்சிக் கூத்தாடியே வாழ்ந்தாக வேண்டுமென்கிற, பரிதாபகரமான - வெட்கப்பட வேண்டிய இழிநிலை இல்லாதொழிய வேண்டும்.

அதாவது, நமக்குத் தேவையான உணவை நாமே உற்பத்தி செய்துகொள்ள வேண்டும் என்பதைத் தவிர, வேறு எந்த நோக்கமும் இல்லை என்பது வெளிப்படை. இந்த மசோதா, எந்த நோக்கத்தோடு கொண்டுவரப்படுகிறதோ, அந்த நோக்கம் ஈடேறிவிடுமா? இந்த ஒரு கேள்வியைத் தான் மசோதாவைச் சீர்தூக்கிப் பார்ப்பவர்கள் முதல் கேள்வியாக எடுத்துக்கொள்ள வேண்டும். பிரச்சனை, உடனடியாகத் தீர்க்கப்படவேண்டிய பிரச்சனை என்பதை ஒப்புக்கொள்ளக் கூடிய எவரும், இந்தக் கேள்வியைத் தவிர வேறு எந்தக் கேள்விக்கும் முதலிடம் தரமாட்டார்கள் என்பது நிச்சயம்.

இந்த மசோதவிற்கு உண்டாகியிருக்கும் எதிர்ப்புகளை நோக்கும்போது, மசோதாவின் அடிப்படைத் திட்டங்களை ஒப்புக்கொண்டுதான், ஒவ்வொருவரும் மசோதா நிறைவேறக்கூடாது என்று குறைகூறுகிறார்கள். அடிப்படையை ஒப்புக்கொள்வது உண்மை என்றால், மசோதாவனது “இந்த இந்த வகையில் இப்படித் திருத்தப்பட வேண்டும்” “இந்தப் பிரிவுகளை நீக்கிவிட வேண்டும்” என்கிற முறையில் திருத்தம் சொல்வதுதான் நியாயமா? மசோதவையே தலைமுழுகிவிட வேண்டும் என்று முழக்கமிடுவது நியாயமா? எதிர்ப்பவர்கள் சொல்லும் காரணம் எல்லாம் இரண்டுதான். ஒன்று விவசாயிகளுக்குத் தேவையான உதவியோ, விவசாய முன்னேற்றத்திற்கு வேண்டிய விஞ்ஞான அறிவையோ, சர்க்கார் இதுவரை வழங்கி வரவில்லை. மற்றொன்று, மசோதாவை அமலுக்குக் கொண்டுவர சர்வாதிகாரப் போக்கைச் சர்க்கார் கடைப்பிடிப்பதாயிருந்தால், லஞ்ச ஊழல் பெருகி, விவசாயிகளுக்குத் தொல்லையும் தொந்தரவையும் தான் கொடுக்கும். ஆகவே மசோதாவையே கைவிட்டு விடவேண்டும் என்கின்றனர்.

நம்நாட்டு விவசாயிகளுக்கு விஞ்ஞான முறையில் வளர்ச்சியில்லை என்பதும், எத்தனையோ ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் உள்ள நிலைமையிலேயே நம் நாட்டு விவசாய அறிவு இருந்து கொண்டிருக்கிறது என்பதையும் யாரும் மறுக்க முடியாது.

விவசாயிகளுக்குத் தேவையான உதவியைச் சர்க்கார் செய்வதில்லை என்கிற குறைபாடு நூற்றுக்கு நூறு உண்மை. அதிலும் இப்போதைய சர்க்காருக்கு, அப்படி உதவி செய்வதற்கான தகுதியேயில்லை என்பதையும், இப்படிப்பட்ட அரசியல் அமைப்பில் யாராயிருந்தாலும் விவசாயிகளுக்குத் தேவைப்பட்ட பொருளை வழங்கிவிட முடியாதென்பதையும் ஒப்புக்கொண்டு ஓமந்தூராரே கூறுகிறார்.

அவர் பிரதமராயிருந்த போது, விவசாயத் தேவைக்கு 4,000 டன் இரும்பும், உருக்கும் கேட்டதற்கு மத்திய சர்க்கார் 5000 டன் இரும்புதான் கொடுத்தார்களாம்.

அதிலும் ஒருபாதி உபயோகத்திற்கே லாயக்கில்லாததாம். உபயோகப்படக்கூடிய இரும்பிலும், விவசாயத்திற்கு அதைப் பயன்படுத்தாமல் வீடு கட்டும் காரியங்களுக்குப் பயன்படுத்தப்பட்டது என்று முறையிடுகிறார். மேலும் வண்டிப் பட்டாக்கள் சம்பந்தமாக 6 தடவை மத்திய சர்க்காருக்கு எழுதினேன். பண்டிதருக்குக்கூட எழுதிப் பார்த்தேன் பயனில்லை என்று கதறுகிறார்.

தென்னாடு என்றால் செவியை மூடிக் கையைக் கட்டிக்கொண்டு விடும் மத்திய சர்க்காரை எஜமானர்களாக கொண்டிருக்கும் அமைப்பில், தென்னாட்டு மக்களுக்குத் தேவையானதைச் செய்யமுடியாது என்பதைத்தானே இந்த முறையீடும் கதறலும் உணர்த்துகின்றன? சட்டம் அமலாக்கும் முறையில், இப்போதை அமைப்பில் லஞ்ச ஊழல்தான் பெருகும் என்பதையும் நாம் மறுக்கவில்லை. பெருகுவதற்கும் காரணம் என்ன? காரணத்தைக்கண்டு - அல்லது தெரிந்து கொண்டிருக்கும் காரணத்தையல்லவா ஒழிக்கவேண்டும் என்றுதான் கேட்கிறோம். ஆனால் இப்போதைய பார்ப்பனிய - பனியா அடிமை சர்க்காருக்கு, விவசாயிகளுக்கு விஞ்ஞான அறிவைப் புகட்டவோ, தேவையான விவசாயப் பொருள்களை வழங்கவோ, தம்மைச் சேர்ந்தவர்கள் - அதிகாரிகளின் லஞ்ச ஊழலைப் போக்கவோ, திறமில்லை - திடமில்லை என்று வெளிப்படையாகக் கூறுவார்களானால் நாம் ஏற்கத் தயார்.

அதைச் சொல்வதற்கு அஞ்சிக்கொண்டு அல்லது அதை மறைக்க வேண்டுமென்று எண்ணிக்கொண்டு மசோதாவையே கைவிட்டுவிட வேண்டுமென்பதில் என்ன அர்த்தம் என்றுதான் கேட்கிறோம். எனவே, தேவையான மசோதா; ஆனால் சென்னை சர்க்காரால் செயல்படுத்த முடியாத மசோதா, என்பதை வற்புறுத்திக் கூறுகிறோம். ஆனால் உணவு நெருக்கடி தீர, கவர்னர் ஜெனரல் கலப்பை பிடித்துக் காட்டும்போது, நம் சென்னை மந்திரிகள் இதென்ன பித்தலாட்டம் என்று கன்னத்தில் அறைவது போல், உணவு நெருக்கடி தீரவேண்டும் என்றால் இன்னன்ன முறைகளையல்லவா கையாளவேண்டும் என்று சொல்லுவது மாதிரியில், இந்த மசோதாவை வெளியிட்டிருப்பதைப் பார்க்கும்போது இதை “தைரியமான மசோதா” என்று சொல்லாமல் வேறு எப்படிச் சொல்வது?

குடிஅரசு - தலையங்கம் - 30.07.1949

Add comment


Security code
Refresh

Share this post

Submit to FacebookSubmit to Google PlusSubmit to TwitterSubmit to LinkedIn

புரட்சி மொழிகள்

"பார்ப்பான், சூத்திரன், பறையன் என்கிற ஜாதி அமைப்பு இருக்கிற வரையில் இந்த நாட்டில் ஒரு இஞ்ச் அளவுகூட முன்னேற்றம் காண முடியாது என்று உறுதியாகக் கூறுவேன்" - பெரியார்

தொடர்புக்கு

Periyar web version
கைப்பேசி: +919787313222
மின்னஞ்சல்:pwversion@gmail.com

To Get Latest Articles

Enter your email address: